புலவர் செ.ராசு
சமண சமயமும் பவுத்த சமயமும் வடஇந்தியாவில் வைதீகப் பிடியிலிருந்து மக்கட் சமூகத்தை மீட்கத் தோன்றியவை. பவுத்தத்தை விட சமணம் முற்பட்டது.
சமண சமயம் மவுரியப் பேரரசன் சந்திரகுப்தன் காலத்தில் (கி.பி.322_298) பத்திரபாகுவின் (கி.மு.327_297) சீடர் விசாகாச்சாரியார் தலைமையில் வந்த சமணர்களாலும், பவுத்த சமயம் அசோகர் (கி.மு.268_232) காலத்தில் மகேந்திரர் அவர் உதவியாளர் அரிட்டராலும் தமிழகம் புகுந்தது என்பர்.
சமணமும் பவுத்தமும் சமயப் பணியோடு அக்கறையுடன் சமூக நலப் பணிகளும் செய்ததால், தமிழ் மக்களைக் கவர்ந்தது. சமண சமயத்தில் மிகக் கடினமான கட்டுப்பாட்டுடன் பின்பற்றக்கூடிய விதிகள் இருந்தாலும், நான்கு தானங்கள் மிகவும் வற்புறுத்தப்பட்டன. அவை: 1. அன்னதானம், 2. ஔஷத தானம், 3. அபய தானம், 4. சாத்திர தானம் என்பன. சமணப் பள்ளிகளில் அன்னமும், மருந்தும் (ஔஷதம்) அளிக்கப்பட்டன. பகையால், நோயால், இயற்கைச் சீற்றத்தால் நலிவுற்றவர்களுக்கு அபய தானமாகப் பல அஞ்சினான் புகலிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. அவை அபயம், ரட்சை, ஆசிரயம் என்றும் பெயர் பெற்றன.
பவுத்த சமயமும், பசி, நோய் தீர்ப்பதை முதன்மையாகக் கொண்டது. பசியையும் ஒரு பிணியாகவே பவுத்தம் கூறியது. பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக என்று பவுத்தக் காப்பியம் மணிமேகலை கூறுகிறது.
மேற்கண்ட செயல்களால், சமணமும் பவுத்தமும் தமிழக மக்களைக் கவர்ந்தன.
தமிழகப் பவுத்த சமயப் பெரிய அறிஞர்கள் போதி தர்மர், புத்த தத்தர், தின்னாகர் போன்றவர்கள் தமிழக எல்லை கடந்து சமயப் பணி புரிந்தனர்.
மக்கள் மட்டுமல்ல பல்லவ, பாண்டிய அரசர்களும் சமண, பவுத்த சமயத்தை ஆதரிக்கத் தொடங்கினர். பல்லவ மகேந்திர வர்மன் (கி.பி.610_630) கூன் பாண்டியன் என்ற நெடுமாறன் நெடுஞ்சடையன் (கி.பி.640_680) ஆகியோர் சமணம் தழுவினர். கொங்குப் பகுதியை ஆண்ட இரட்டர், கங்கர் சமணத்துக்குப் பேராதரவு தந்தனர்.
சமயப் போர்
வைதீகக் காவலர்களான சைவர்களும், வைணவர்களும் தாங்கள் தோற்றுவித்துக் கட்டிக்காத்த வருணாசிரம தர்மமும், சாதி _ பிறப்பால் கற்பித்த ஏற்றத்தாழ்வு படிநிலையும் சமண சமயத்தின் மூலக் கொள்கையான பிறப்பொக்கும் என்ற கருத்துப் பரவலால் அழிவதைக் கண்டு பொறுக்காமல் வெகுண்டெழுந்தனர். தங்களுக்குள் பல வேறுபாடுகள் இருந்தாலும் சமண _ பவுத்த எதிர்ப்புப் போரில் சைவர்களும் வைணவர்களும் ஒன்றாக இணைந்தனர்.
மூவர் தேவாரப் பதிகங்களில் சமணக் கொள்கை எதனையும் எதிர்க்க இயலாமல் சமணர்களை இழித்துப் பேசுவதையே காணுகின்றோம்.
”கையில் உண்ணும் கையர் (கயவர்)”
”நின்று உண்ணும் கள்ளர்”
”அழிவு இல் அரம்பர் மிண்டர்”
என்பன தேவாரத் தொடர்களில் சில. ஒரு படி மேலே சென்று இறைவன் சமணப் பெண்களைக் கற்பழிக்க அருளல் வேண்டும் என்று சம்பந்தர் பாடினார்.
திருமங்கையாழ்வார் நாகப்பட்டினம் பவுத்தப் பள்ளியைக் கொள்ளையடித்த பொருளால் திருவரங்கம் கோயில் திருப்பணிகள் செய்தார்.
தொண்டரடிப் பொடியாழ்வார்
வெறுப்பொடு சமண முண்டர் விதியில் சாக்கியர்களை
தலையை அறுப்பதே சருமங் கண்டாய் அரங்கமா நகர் உளானே
என்று கொலை வெறியோடு படினார்.
தண்டியடிகள் நாயனார் சமணர்கள் அஞ்சி ஓடும்படி விரட்டி அவர்கட்குரிய பல பாழிகளையும் பள்ளிகளையும் இடித்துவிட்டுத் திருவாரூர்க் குளத்தை விரிவுபடுத்தியதாகப் பெரிய புராணம் கூறுகிறது. பல தந்திர உபாயங்கள் செய்து சமண அரசர்களைச் சைவர்களாக மாற்றினர். பல சமணப் பள்ளிகளைச் சிவலயமாக்கினர்.
தலைவெட்டிய சமண சிற்பங்கள்
சமணர்களை விரட்டியபின் பிற்காலக் கொங்கு நாட்டில் தலைவெட்ட சமணர்கள் இல்லாததால் சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் பிற சிலைகளையும் தலையைத் துண்டித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, பருத்திப் பள்ளி, தேவண்ண கவுண்டன் கிடையூர் போன்ற ஊர்களில் தலையற்ற சமண தீர்த்தங்கர் சிலைகள் காணப்பட்டன. கொல்லிமலையிலும், தேவண்ண கவுண்டன் கிடையூரிலும் தலையைத் தேடி எடுத்து பொருத்தி வைத்துப் படம் எடுக்கப்பட்டது. பருத்திப் பள்ளியில் தலை கிடைக்கவில்லை. பருத்திப் பள்ளி கிணற்று மேட்டில் தலையற்ற தீர்த்தங்கர சிற்பம் இன்றும் காணப்படுகிறது.
விஜயமங்கலத்தில் தலையற்ற அம்பிகா சிற்பம் காணப்படுகிறது.
கொங்கு நாட்டில்
கொங்கு நாட்டைப் பொறுத்த வரையில் கி.பி. 14ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை சமணம் தன் செல்வாக்கை இழக்காமல் இருந்தது. அதாவது, சோழர், பாண்டியர், ஒய்சளர் ஆட்சி வரை.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மறவபாளையம் அப்பரமேயர் கோயிலின் உள்ள கொங்குச் சோழர் கல்வெட்டில் சமணர்களுக்குத் தீங்கு இழைப்பது பாவம் என்று கூறப்பட்டுள்ளது.
மறு சென்மத்துக்கும் யேழெட்டுச் சமணரைக் கொன்ற
பாவத்திலேயும் கங்கைக் கரையில் காராம் பசுவையும் கொன்ற பாவத்திலேயும் போகக் கடவராகவும்
என்பது கல்வெட்டுப் பகுதி.
திருப்பூர் மாவட்டம் சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீவேசுவரர் கோயிலில் உள்ள வீரபாண்டியனின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் சிவன் கோயில் கொடையில் அங்குள்ள சமணக் கோயிலில் திருப்பணியும் பூசையும் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
குறக்குத்தளி ஆளுடைய நாயனார் கோயில் தானத்தாருக்கு
இந்நாயனார் திருப்போரால் சமணசந்தி யுள்ளிட்ட
வெஞ்சனங்கட்கும் திருப்பணிக்கும் திருநாளுக்கும்
திருநாமத்துக் காணிக்கும் தந்தோம்
என்பது கல்வெட்டுப் பகுதி.
அவினாசி வட்டம் சேவூர் வாலீசுவரர் கோயில் ஆவணம் ஒன்றில் அவ்வூர்த் தலைவர் சமணக் கோயிலிலும் வழிபட்ட விபரம் கூறப்பட்டுள்ளது.
சிவத்தலம் விட்டுணுத்தலம், குமாரசமித் தலம், அமணீசுவர சுவாமித் தலம் வணங்கிக் கொண்டு வருகையில்
என்பது ஆவணப் பகுதியாகும்.
கொங்குச் சமணக் கோயில்கட்கும், கொங்கு நாட்டுச் சமணர்கட்கும் சமய அடிப்படையில் தோன்றிய விஜயநகர அரசுக் காலத்திலும், வைணவ சமயம் சார்ந்த மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் சமண கோயில் செல்வாக்கு இழந்து,இ சமணர் வெளியேற்றமும் ஏற்பட்டது.
(தொடரும்)
- உண்மை இதழ், ஜூன் .15- 30 .19
25.01.1988 அன்று ஜெயவர்த்தனா இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு ஜெயவர்த்தனாவின் கொடும்பாவி உருவப் பொம்மை எரிக்கப்பட்டது. தோழர்கள் சாரை சாரையாகக் கைது செய்யப்பட்டனர். மேலும், என் தலைமையில் பெரியார் திடலிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஊர்வலமாகப் புறப்பட்டு ஜெயவர்த்தனாவே ஒழிக என்று முழக்கப்பட்டு கழகத் தோழர்கள் வந்தபோது, திடீரென்ற போலீசு கழகத் தோழர்கள் மீது தடியடி நடத்தியது. இதனைத் தடுக்க நான் கூட்டத்தின் நடுவில் புகுந்து தடுக்க, என் மீது அடித்து அடிபட்டு, தரையில் விழுந்து என் கால் காயம் ஏற்பட்டது. உடனே கழகத் தோழர்கள் என்னைக் காப்பாற்ற சுற்றி வளைத்துக் கொண்டனர். பின்பு தோழர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் திடீரென்று இப்படி நடந்துகொண்டது ஏதோ உள்நோக்கத்தோடு எங்கள் மீது தடியடி நடத்தியது. அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த அமைச்சர் முத்துசாமி தடியடி சம்பவத்தை முன்னிட்டு தோழர்களிடத்திலும் என்னிடத்திலும் மன்னிப்புக் கோரினார்.
இலங்கை அதிபர் ஜெயவர்தனுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்டரல் ரயில் நிலையத்தில் ஆசிரியர் தலைமையில் மறியல் செய்யும் கழகத்தினர்.
இந்த தடியடி சம்பவத்திற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் அவர்களது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார்கள்.
- உண்மை இதழ், ஜூலை, 1 -15 .2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக