சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இந்தியாவை பீடித்துக் கொண்டிருக்கும் நூற்றாண்டு கால நோய் சாதி
நூல்: இந்தியாவை பீடித்துக் கொண்டிருக்கும்
நூற்றாண்டு கால நோய் சாதி
ஆசிரியர்: பொன்னீலன்
வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை -05
தொலைபேசி: 97907 06549 / 97907 06548
விலை: ரூ.120.
ஆதி வேர்களைத் தேடி
மனித சமூகங்களுக்கு முன்நோக்கிப் பாயும் ஆற்றலைத் தருகின்ற மூல ஆதாரங்களில் முக்கியமான ஒன்று சமூக வரலாறு. புதிய வரலாறு படைக்கச் சமூகங்கள் எந்த அளவுக்கு முன்னோக்கிப் பாய்கின்றனவோ, அந்த அளவுக்கு முனைப்பாக அவை தன் வரலாற்றையும் பின்னோக்கித் தேடுகின்றன. தன்னை ஒரு குடும்பமாக, ஒரு சாதியாக, ஒரு இனமாக, ஒரு மொழியாக, ஏதோ ஒரு வகையில் அடையாளப் படுத்துகிற மனிதர், அந்த எல்லையற்ற இருள்வெளியில் முடிந்த மட்டும் வெளிச்சத்தைப் பாய்ச்சிப் பின்நோக்கி நடக்கிறார்.
வரலாறு எல்லையில்லாமல் இறந்த காலத்துக்குள் நீண்டுக் கிடக்கிறது. மண்ணின் பரிணாமம் என்று தொடங்கியதோ, அன்றே உயிரின் பரிணாமமும், அதன் ஒரு சிறப்புக் கூறாகிய மனிதரின் பரிணாமமும் தொடங்கிவிட்டது. இந்தப் பரிமாணங்களின் இருள் படிந்த ஆழங்களுக்குள் செல்வதற்கு மனிதருக்கு இலக்கியம், மொழி, பண்பாடு, கல்வெட்டுகள், அகழ்வாய்வுகள், வாய்மொழி இலக்கியங்கள் போன்றவை பயன்படுகின்றன.
இருள்வெளியில் தடம் துலக்கும் இந்தப் பயணம் மிக மிகச் சிக்கலானது. சிறிய கவனக் குறைவு கூட பயணத்தின் திசையை மாற்றிவிடும். கணுக்கணுவாக வளர்ந்து வந்திருக்கும் இந்த மனித குல வரலாற்றில், நெடுந்தூரம் போய், பயனுள்ள தகவல்களைத் திரட்டி வருகிறவர்கள் வெகு சிலரே.
இந்தியா ஜாதிகளின் நாடு. ஏற்றத்தாழ்வான ஜாதிகள் ஆயிரக்கணக்காக உள்ள நாடு. ஆதிக்கமும் அடிமைத்தனமும் நீக்கமற நிறைந்த நாடு. இவை பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும், பண்பாட்டிலும், ஊடுருவிப் புரையோடிப் போன நாடு. இவைகளால் வரலாறு பொய்மை மலிந்து, பல பகுதிகள் மறைந்து தொடர்ச்சியற்றுத் துண்டு துண்டாய்க் கிடக்கும் நாடு.
மனித குலம் ஒரே இடத்தில் தோன்றி பல இடங்களுக்குப் படர்ந்தது என்று கொண்டாலும், பல இடங்களில் அவை தனித் தனியாகத் தோன்றிப் படர்ந்தவை என்று கொண்டாலும், ஆதியில் அவை சமத்துவ சமூகங்களாகச் சுதந்திரமாக வாழ்ந்தவைகளே, சுரண்டலும் ஒடுக்கு முறைகளும் இடைக்காலத் தீமைகளே.
ஆனால், சுரண்டலாலும், ஒடுக்கு முறைகளாலும் சமூகத்தின் மொத்த செல்வங்களையும், சந்தோஷங்களையும் அபகரித்துச் சுகமாக வாழ்கின்ற சமூகங்கள், இந்தச் சுரண்டல்களையும் ஏற்றத் தாழ்வுகளையும் நிரந்தரமானவை என்றும், மாற்ற முடியாதவை என்றும், காட்டுவதற்குக் கடுமையான முயற்சிகள் தொடர்ந்து செய்து வருகின்றன.
மேல்நிலைச் சமூகங்கள் ஒடுக்கப் பட்டவர்களை, சுரண்டப்பட்டவர்களை பொருளாதார ஆதாரங்களிலிருந்து அந்நியப் படுத்துகின்றன. கல்வியிலிருந்து அன்னியப் படுத்துகிறார்கள். பண்பாட்டு நுகர்வு களிலிருந்து அன்னியப்படுத்துகிறார்கள். மொத்தத்தில் மனிதருக்கு வளர்ச்சியும், மேன்மையும் தருகின்ற எல்லாவற்றிலுமிருந்து அவரை ஒதுக்கி ஒடுக்குகிறார்கள். புருஷாவின் முகத்தில் பிறந்தவன் பிராமணன் என்றும், புஜத்தில் பிறந்தவன் சத்திரியன் என்றும், இடுப்பில் பிறந்தவன் வைசியன் என்றும், பாதத்தில் பிறந்தவன் சூத்திரன் என்றும், பஞ்சமனோ புருஷவிலிருந்தே பிறக்காதவன் என்பதால் மனிதனிலே சேர்க்கத் தகுதியில்லாதவன் என்றும் கதை கட்டியிருக்கிறார்கள்.
தொடர்ந்து இவர்களால் எழுதப்பட்டு வரும் வரலாறுகளும் கதைகளும் இந்த அடிமைத்தனங்களை உறுதி செய்யும் வகையிலேயே உள்ளன. இவர்கள் அறியப்பட்ட வரலாறு முழுவதையும் தங்களுடைய உயர்வுக்கும், ஒடுக்கப்பட்டோரின் இழிவுக்கும் இசைவான முறையில் விளக்கி வியாக்கியானம் செய்கிறார்கள். அடித்தள மக்களின் உயர்வுக்குரிய கூறுகளையெல்லாம் தங்களுடையதாகத் திரித்து எடுத்துக் கொள்ளுகிறார்கள். திருத்தத்துக்கு உட்பட மறுப்பவர்களை, மறுப்பவைகளை அழித்து ஒழித்து விடுகிறார்கள். தங்கள் இருப்பைக் கேள்விக்கு உட்படுத்தும் சொற்களையும், சொற்றொடர்களையும் நீக்கி விடுகிறார்கள் அல்லது மாற்றி விடுகிறார்கள்.
இப்படி வரலாற்றில் செய்யப்பட்டுள்ள படுகொலைகளும், மாறாட்டங்களும் கணக்கில் அடங்காதவை. இதனால் தங்களைப் பற்றி உயர்வாக எண்ணுவதற்குக் கூட அஞ்சி நடுங்குகிறார்கள் அடித்தள மக்கள். ஒரு காலத்தில் தாங்கள் மதிப்பாக வாழ்ந்தது பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையோ ஆதாரங்களையோ நேருக்கு நேர் சந்தித்தால்கூட அச்சம் கொண்டு விலகி ஓடி விடுகிறார்கள். ஆதிக்கச் சாதியில் பிறந்த நேர்மையானவர்கள்கூட இவற்றைச் சந்தேகத்தோடு பார்க்கிறார்கள். அதிலும் குறிப்பாகக் கடந்த சில நூற்றாண்டு காலமாக வரலாற்றில் செய்யப்பட்டிருக்கும் குளறுபடிகள், தகீடு தத்தங்கள் பயங்கரமானவை, ஒடுக்கப்பட்ட மக்களின் பழைய வரலாறுகளையே நிரந்தரமாக அழித்து ஒழிக்கக் கூடியவை.
இதனால் நம் வரலாற்றுச் சிந்தனையே மழுங்கி விட்டது. பல சாதிகள் பண்டைக் காலத்தில் இல்லாதவை போலவும், இடைக்காலத்தில் திடீர் திடீரென்ற பூமி வெடித்துப் புறப்பட்டவை போலவும் தோற்றமளிக்கின்றன. இது மாய்கை.
பூமியில் இன்றிருக்கும் மனிதர்கள் அத்தனை பேருக்கும், அத்தனை சாதிக்கும் வயது ஒன்றுதான். மனிதகுலம் என்று தோன்றியதோ அன்றிலிருந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் அத்தனை பேரும்.
ஆற்றலும் தன்மானமும் உள்ள வரலாற்றாளர்கள், ஒடுக்கப்பட்ட சாதி அல்லது இன வரலாற்றின் இன்றைய இழிவுகளைத் தாண்டிய பழைய சுதந்திர நிலைமைகளை வரலாற்றுப் புதைகுழிகளிலிருந்து மீட்டெடுக்க முயலுகிறார்கள். தங்கள் ஆற்றலுக்குத் தக்கவாறு இதை நன்றாகவோ அல்லது மோசமாகவோ செய்கிறார்கள். இடைக்காலத்தில் ஒடுக்கப்பட்ட ஜாதிகளான தேவர், பரவர், கோனார், நாடார், அரையர், மன்னர், பறையர், ஈழவர், புலையர், ஒட்டர் இன்னும் எத்தனையே ஜாதியைச் சார்ந்த அறிஞர்களும், உண்மை தேடும் வரலாற்றாளர்களும் இம்மாதிரித் தேடல் _துலக்கல்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்தத் தேடல்களில் தங்களுக்குத் துணையாகப் பழமரபுக் கதைகள், வாய்மொழி வரலாறுகள், மொழி அமைப்புகள், நாட்டுபுறக் கதைகள் தங்கள் தெய்வங்களின் கதைகள், பழக்க வழக்கங்கள், இவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள். வரலாறு அவர்கள் வழியாக மேலும் துலக்கம் பெறுகிறது.
இந்தச் சூழலில் வைத்துத்தான் டாக்டர் இமானுவல் அவர்கள் எழுதிய ராபர்ட் எல் ஹாட்கிரேவ் ஜீனியரின் “தமிழ்நாட்டு நாடார்கள்’’ என்னும் நூலுக்கான விமர்சனம் என்னும் நூலை மதிப்பிட வேண்டியிருக்கிறது. முனைவர் இமானுவல் இலக்கியத் துறையினரோ, வரலாற்றுத் துறையினரோ, பண்பாட்டுத் துறையினரோ அல்ல. பெட்ரோலியத் துறை என்னும் தொழில்நுபட்பத் துறையில் முனைவர் பட்டம் பெற்று உயர் பதவி வகித்த ஒரு முன்னாள் உயர் அதிகாரி அவர். அலுவலக ரீதியாக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்யவும், தங்கியிருக்கவும் தனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பை அருமையாகப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார் இவர். இந்த ஆய்வுக்குத் தூண்டுகோலாக அமைந்தது ராபர்ட் எல் ஹாட் க்ரேவ் ஜீனியர் எழுதிய ‘தமிழக நாடார்கள்’ என்னும் சமூக வரலாற்று நூல்.
இந்த நூல் 1969இல் வெளிவந்தபோது பலர் பலவிதமான கருத்துகளைச் சொன்னார்கள். அதில் ஒரு கருத்து: இந்த இந்திய அரசியலில் 60களில் பிற்பகுதிகளில் மிகப் பெரும் சக்தியாக உயர்ந்தவர் காமராசர். இந்திய அரசியலில் பின்தங்கிய சமூகங்களில் இருந்து ஒருவர் இவ்வளவு ஆற்றல் மிக்கவராக உயர்ந்தது அப்போதுதான்.
இந்தியப் பொது அரங்கிலும், அதைவிட முக்கியமாக உலக அரங்கிலும், அவர் ஒரு தீவிர இடதுசாரியாக மதிப்பிடப்பட்டார். நேருவின் ஜனநாயக சோஷலிசச் சிந்தனையின் முகமாக அன்று அவர் கருதப்பட்டார்.
1966இல் என்று நினைக்கிறேன். அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் தங்கள் நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்ய அவரை அழைத்தன. ஒரு கட்சித் தலைவர் என்ற நிலையில், எதிர் எதிர் முகாம்களாக அன்று செயல்பட்ட இரு வல்லரசுகளாலும் அழைக்கப்பட்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரர் அவரே. அவரோ அமெரிக்காவின் அழைப்பைத் தள்ளி வைத்துவிட்டு ரஷ்யாவுக்குப் போனார்.
இந்தச் சூழலில்தான் அவரைத் திட்டமிட்டு அரசியல் அரங்கிலிருந்து ஒதுக்கித் தள்ளும் முயற்சிகள் நடந்தன. இந்த முயற்சிகளின் அமெரிக்க வனகப்பட்ட வடிவமே ஹாட்க்ரேவின் புத்தகம் என்று பரவலாகப் பேசப்பட்டது. இந்திய ஆட்சித் தலைவர்களை உருவாக்கிய காமராசர், கறுப்பு காந்தி என்று வருணிக்கப்பட்ட காமராசர், பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ பதவியில் அமர்வதற்கு வருக என்று பல தலைவர்களால் அழைக்கப்பட்ட காமராசர் ஒரு சோசலிசச் சிந்தனையாளர். அவர் முகத்தைச் சிதைக்க அன்றைய வலதுசாரிகள் முயன்றனர். அதற்கு அவர்களுக்குப் பல ஆயுதங்கள் தேவைப்பட்டன. அதில் ஒரு கூர்மையான ஆயுதமே காமராசர் தீண்டத்தகாத கள்ளிறக்கும் ஜாதியில் பிறந்தவர் என்ற பிரச்சார ஆயுதம். இந்திய சமூகச் சூழலில் இந்த ஆயுதம் எவ்வளவு வலிமையானது என்பது இந்தியர்களை விட அமெரிக்க ஆதிக்க சக்திகளுக்குத் தெளிவாகத் தெரியும்.
கள்ளிறக்கும் தீண்டத்தகாத ஜாதிக்காரர் காமராசர் என்ற கருத்தை வலியுறுத்த ஏராளமான ஆதாரங்களை ஹாட்கிரேவ் திரட்டித் தந்திட இந்த நூலில் தொடக்கத்திலிருந்து இறுதி வரை கடுமையாக முயன்றிருக்கிறார். இந்நூல் தமிழ்நாட்டு நாடார்களைப் பற்றிய முழுமையான விரிவான நூல் அல்ல. கன்னியாகுமரி மாவட்ட நாடார்கள், அதேபோல் வட தமிழ் நாட்டு நாடார்கள் இந்த நூலில் விரிவான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
1. நாடார்கள் அல்லது சாணார்கள் பனையிலிருந்து கள் இறக்கும் ஒரு அருவருப்பான ஜாதி.
2. சமூக நிலையில் இந்துக்களால் தீண்டப்படாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்ட ஜாதி.
3. இந்த ஜாதிக்குத் தனக்கென்று சொல்லத்தக்க வரலாறோ பண்பாடோ இல்லை. சீர்திருத்த கிறிஸ்தவத்தால் முன்னுக்கு வந்த ஜாதி இது.
4. அதனுடைய பாவனைகள் அருவருக்கத்தக்கவை.
5. வியாபாரத்திலும் இவர்கள் நேர்மையானவர்கள் அல்ல.
19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் நாடார் ஜாதியிடையே பணியாற்றிய மேற்கத்திய கிறிஸ்தவப் பாதிரியார்கள் தங்கள் தொண்டின் மதிப்பை மிகைப்படுத்துவதற்காகவும், மேற்கத்திய உலகின் கவனத்தைத் தங்கள் பால் திருப்புவதற்காகவும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், குறிப்புகள் மற்றும் அரச ஆவணங்கள் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டது இந்த நூல். தமிழ்நாட்டு ஆதிக்க ஜாதியினரின் மதிப்பீடுகளை அளவுகோலாகக் கொண்டது. வரலாற்றின் ஆழங்களில் எதையும் தேடாது. விரிவான கள ஆய்வு செய்யப்படாமல், மேலேழுந்த வாரியாக எழுதப்பட்டது. நாட்டார் வழக்காற்றியல் தரவுகள் கூட பயன்படுத்தப்படவில்லை இதில்.
நாடார்களின் வீரர் கதைகள், சாமி கதைகள், இன உற்பத்திக் கதைகள், வரலாற்றுக் கதைகள், எவற்றையும் அவர் பரிசீலிக்கவில்லை. வலங்கை நூல், சின்ன நாடான் கதை, சிதம்பர நாடான் கதை, பிச்சைக்காலன் கதை, பொன்னணைந்த சுவாமி கதை போன்ற கதைகளெல்லாம் நாடார்களின் சமூக வரலாற்றுக் கதைகள், முத்தாரம்மன் கதை, பெருமாள்சாமி ஊடாகவும் இவர்களின் சிக்கலான சில வரலாற்று முடிச்சகளைக் கண்டு கொள்ள முடியும். தமிழ்நாட்டில் பரவலாகக் கிடைக்கும் பட்டையங்கள், செப்பேடுகள் போன்றவற்றிலிருந்தும் பல விஷயங்களைத் திரட்டிக் கொள்ள முடியும். இவ்வாறு சிரமப்பட்டு பல இடங்களில் துணுக்குத் துணுக்காகக் கிடைக்கும் விபரங்களைப் பொறுக்கி எடுத்து, நீண்ட வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதுதான் வரலாற்றாளனின் கடமை.
நாடார்களைப் பொறுத்தவரையில் பனை, பனை சார்ந்த வாழ்வு, பனை சார்ந்த பொருளியல் உற்பத்திகள், பனை சார்ந்த பண்பாட்டியல் உருவாக்கங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் ஏராளமாகக் கிடைக்கின்றன. ஒரு காலத்தில் ஆசியா முழுவதிலுமே மிக அதிகமாக நிறைந்திருந்த மரம் பனை. இவைகளின் ஊடாகப் பனை சார்ந்த வரலாற்றைத் துலக்க முடியும். அதேபோல் இன்னும் முக்கியமான அடையாளம் ஜாதிப் பெயர். நாடார்களைப் பொறுத்த வரையில் பல பெயர்கள் ஒரு பொது அடையாளத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.
நாடான், சான்றோன், சாணான், சாணு, காவரா, கிராமணி, இண்டிகா இன்னும் எத்தனையோ கிளைப் பெயர்களில் இச்சாதி அழைக்கப்படுகிறது. 1901 திருவாங்கூர் குடி கணக்கு எடுப்பின்போது திருவாங்கூர் நாடார் ஜாதியில் 39 பிரிவுகள் இருந்ததாகப் பதிவுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரிவுகளில் பலர் இன்று வேறு வேறு ஜாதிகளில் இணைந்துள்ளனர். இந்த பெயர்களின் வழியாகவும் வரலாற்றின் இருள் குகையில் இவர்களின் தடங்களைத் தேட முடியும்.
அடுத்து இவர்களின் சாமிகள், பத்தரகாளி அல்லது பனங்காளி இவர்களுடைய ஆதி தெய்வம். அதே போல முத்தாரம்மன், இசக்கி, சுடலைமாடன் ஆகியவைகளும் இவர்களுடைய தெய்வங்கள். இந்தத் தெய்வங்களின் கதைகள் ஊடாகவும், வரலாறுகள் ஊடாகவும் இவர்களின் வரலாற்றின் முக்கியமானப் பகுதிகளைக் கண்டடைய முடியும். இதற்கு மேலே கல்வெட்டுகள். இந்திய ஜாதிகள் சமயங்களின் வரலாறுகளைத் தொகுக்க நாம் பின்பற்ற வேண்டிய புது முறை இது.
இந்த முறைகளில் முயன்றால் வரலாறு அற்று, வேர்கள் இற்று, பாசிகள் போல் மண்ணின் மேற்பரப்புகளில் மிதந்து கொண்டிருக்கும் பல சமூகங்களின் வரலாறுகளைக் கண்டடைய முடியும். தொகுத்துத் திரட்டவும் முடியும். அப்படித் திரட்டும்போதுதான் அந்தந்த இனங்கள் இன்றுள்ள உள்முக ஒடுக்கங்களிலிருந்து விடுபட்டு கம்பீரமாக நிமிர முடியும். சமூக விடுதலையில் இந்த அம்சம் மிக மிக முக்கியமானது. ஒவ்வொரு ஜாதியும் மொத்த மனித குலத்தில் யாருக்கும் குறைவில்லாத அருமையான வரலாற்றை உடையது. என்பதுதான் உண்மை. இந்த உண்மையை மெய்ப்பிக்கும் வேகத்துடனும் பன்முக ஆற்றல் என்னும் கைவிளக்குடனும் வரலாற்றுச் சுரங்கத்தினுள் மின்னும் ஒவ்வொன்றின் உள்ளும் புதைந்திருக்கும் செய்தியை வெளிப்படுத்தும் கருவிகளுடனும் மேலும் மேலும் இறங்குவதே வரலாற்று ஆய்வாளனின் கடன்.
சமீபத்தில் சேலம் போயிருந்தபோது, ஒட்டர் சமூகத்தைச் சார்ந்த சில இளைஞர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். ஒட்டர்கள் தமிழ்நாட்டில் மிக மிகக் கடுமையான உழைப்புகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களைக் கொண்ட சமூகம். கல்லுடைத்தல், கிணறு தோண்டுதல், சாலை அமைத்தல், வீடு கட்டுதல் போன்ற கடுமையானப் பணிகளில் ஈடுபட்டு வருபவர்கள் அவர்கள். அந்த இளைஞர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது வியப்பான தகவல்கள் பலவற்றைச் சொன்னார்கள். மத்திய இந்தியாவிலுள்ள அவ்து என்ற நாட்டை ஆண்டு கொண்டிருந்த இனம் தங்கள் இனம் என்றும், வட இந்திய மன்னர்களை நீண்ட காலம் தெற்கே வரவிடாமல் தடுத்துக் கொண்டிருந்த இனம் அது என்றும், அவர்கள் சொன்னபோது வியப்படைந்தேன்.
இந்த நாட்டில் மட்டுமல்ல, எந்த நாட்டிலும் ஆட்சி மட்டுமே செய்த தனி இனம் என்று ஒரு இனம் இருக்க முடியாது. உழைப்பாளிகள் இருப்பார்கள். வியாபாரிகள் இருப்பார்கள். போர் வீரர்கள் இருப்பார்கள். பூசாரிகள் இருப்பார்கள். ஆட்சியாளர்களும் இருப்பார்கள். அடிமைப்பட்ட இனம், ஆட்சி செய்யும் இனம் என்ற விசயங்களெல்லாம் இடைக்காலத்தவை. படையோடும் பெரிய நிர்வாக அமைப்போடும் ஆக்கிரமிப்பாளர்கள் தோன்றியதோடு தோன்றியவை. இடைக்காலச் சங்கதிகள் தொடக்கத்தில் எல்லா இனங்களுமே தம்மைத் தாமே ஆண்டு கொண்ட இனங்கள்தான். இதை ஏதாவது ஒரு வகையில் தெளிவுபடுத்தி விட்டால் போதும், அந்த இனத்தின் ஆன்மா ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ போல விரியத் தொடங்கி விடும். இந்தத் திசையை நோக்கி இறந்த காலங்களின் இருள் அடுக்குகளின் ஊடாகப் பயணம் செய்யும் வரலாற்றாளர்களை மனித குல விடுதலையாளர் என்ற வரிசையில் வைத்து போற்றிப் புகழ வேண்டும்.
இமானுவல் அவர்கள் முதல் அம்சமாக பனை சார்ந்த தொழில்கள், பனங்கள் என்ற திசை வழியில் தன் ஆய்வை மேற்கொள்கிறார்கள். இடைக்காலத்தில் தீட்டுப் பொருளாக வைதீகர்களால் இழிவுபடுத்தப்பட்ட இதே கள் பண்டையத் தமிழகத்தில் தெய்வங்களுக்குப் படைக்கப்படும் பொருளாகவும், மன்னர்களிலிருந்து மக்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பானமாகவும் போற்றப்பட்டது. சேரனின் காவல் மரம் பனை. அவன் அன்றாடம் அணியும் மாலை பனம் பூ மாலை. சோழர்கள் போர் மேல் செல்லும்போது, படை வீரர்களில் ஒரு பிரிவினர் நுங்கும், இன்னொரு பிரிவினர் பனம்பழச்சாறும், மூன்றாவது பிரிவினர் சுட்ட பனங்கிழங்கும் சாப்பிடுவது ஒரு சடங்காக இருந்தது என்று தெளிவுபடுத்துகிறார் நூலாசிரியர் (பக்கம் 107). அது மட்டுமல்ல, வட இந்தியாவிலும் வேத காலத்திலிருந்து வேதச் சடங்குகளிலும், உயர்ந்த சபைகளிலும் அமிர்தம் என்ற பெயரிலும், சோமபானம் என்ற பெயரிலும், மது என்ற பெயரிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது இந்தக் கள்ளே என்பதற்கும் ஆதாரங்கள் தருகிறார்.
இரண்டாவதாக பனங்காளியாகிய பத்ரகாளியின் வரலாறு, அவள் வளர்த்த 7 மக்களின் கதை, அவர்களுக்கும் சோழ மன்னனுக்கும் ஏற்பட்ட முரண், அதன் விளைவுகள் என்ற திசையில் ஆய்வுகளை நிகழ்த்துகிறார். இதற்கு ஆதாரமாக நாடார் உற்பத்தி பற்றிப் பேசும் ஏட்டுச் சுவடியான ‘வலங்கை நூலை’ விரிவாகப் பயன்படுத்துகிறார்.
வரலாற்றில் நாடார்கள் பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கல்வெட்டுச் சான்றுகள், சமஸ்கிருத பேரகராதி, பாலி மற்றும் இதர மொழி இலக்கியங்கள் ஆகிய ஏராளமான சான்றுகளை ஆதாரங்காட்டி நிறுவுகிறார். நாடார் ஜாதியின் பல்வேறு பெயர்கள் வழியாக வரலாற்று அடுக்குகளுக்குள் தடம் தேடிச் செல்லுகிறார்.
பொனீசியர்கள் என்பவர்கள் இந்தியாவில் தென்கோடியில் கி.மு.400க்கு முன்னே வாழ்ந்த பனை சார்ந்த மக்கள். இவர்கள் கடல் வழியாக பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளோடு வியாபாரம் செய்தவர்கள்.
அந்த மக்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர்கள் இவர்களே. இந்தச் செய்தியெல்லாம் ஹரடோட்டஸ் எழுதிய வரலாற்று நூலிலிருந்து எடுத்து தருகிறார்.
ஆய்வாளரின் ஆய்வு முடிவுகள் தமிழ் சமூகத்தின், அதனிலும் விசாலமாக திராவிட சமூகத்தின் முடிவுகள் இன்று கண்ணுக்கு தெரியும். நாடார் என்ற கிளையின் வழியாக ஆதி வேர்களைத் தேடி இறங்குகின்றன. இந்தத் தேடலில் அவர் திராவிட ஜாதிகளின் அல்லது தமிழ் ஜாதிகளின் ஆதிவேர் ஒன்றாக இருக்கிறது என்று கண்டடைகிறார். இந்த உண்மையை அவர் தமிழன் அல்லது திராவிடனின் ஆதிவேர் நாடார் வேறே என்று விளக்குகிறார். ஆனால் அவரே இன்னொரு பாதையில் சென்று நாடார்களைத் தமிழ் மரபுக்கு, அல்லது திராவிட மரபுக்குச் சம்பந்தமில்லாத சத்திரியராகவும் காணுகிறார். அதன் மறுதலையாக, சத்திரிய மரபினோர் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் எல்லாரையும் நாடாராகக் காணுகிறார். இது முரண்.
இந்திய மண்ணில் சகந்திரமான பூர்விகக் குடிகள் ஒரு ஆதி வேரிலிருந்து கிளைவிட்டு வளர்ந்தன எனக் கருதுவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. ஆனால், கிளைவிட்டு வளர்ந்த பிறகு அவற்றின் தனித் தன்மைகளை அங்கீகரிப்பதும் அவற்றின் தனி வாழ்வைத் துலக்குவதும் வரலாற்றாளரின் தவிர்க்க முடியாத கடமையாகிவிடுகிறது.
இம்மாதிரி ஆதி வேர்களைத் துலக்க முயற்சிகள் எடுக்கும்போது, வளர்ச்சியின் ஒவ்வொரு கணுவிலும் கிளைகளும் பிசிறுகளும் இடுப்பதை வரலாற்றாளர் காணுவார். இந்த பிசுறுகளை உள்முகமாகப் பார்க்கும்போது இவற்றின் தனித்தன்மைகள் கண்ணிலிருந்து மறைந்து போக, நாம் தேடுகின்ற ஒன்று மட்டுமே மிச்சமாக நிற்கும்.
இன்னும் அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் இதர கூறுகளின் ஊடாகவும் நாடார்களைத் தேடுகையில், குறுக்கும் நெடுக்குமாக தட்டுப்படுகின்ற இதர வேர்களையும் அவற்றின் தனித்தன்மைகளையும் இனங் கண்டு அடையாளப்படுத்த முயன்றிருக்கலாம்.
தென்னிந்திய திராவிட சமூகங்களின், அல்லது தமிழ் சமூகங்களின் மிகப் பெரிய பலவீனம் என்று நான் கருதுவது அவர்களுடைய சத்திரியப் பாவனை. இந்தப் சத்திரியப் பாவனை தெரிந்தோ தெரியாமலோ சமூக வளர்ச்சிக்கு எதிர் நிலையான மனோபாவத்தையும் சாய்வையும் சார்பையும் தந்து விடுகின்றது.
இரண்டு அல்லது மூன்ற நூற்றாண்டுகளாக ஆதிக்க ஜாதிகளால் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் நாடார்கள். இந்தக் கொடுமைகளுக்கும், அடக்கு முறைகளுக்கும், சுரண்டல்களுக்கும் எதிராகக் கடுமையான போராட்டம் நடத்தி மாபெரும் வெற்றிகளை ஈட்டியவர்கள் அவர்கள். இதன் மூலம் தங்கள் தங்கள் அடிமைத் தனங்களிலிருந்து விடுபட பிற ஜாதிகளுக்கத் தெளிவாக வழிகாட்டியவர்கள் அவர்கள். நவீன கால சமூக விடுதலைப் போராட்டங்களின் முன்னோடிகள் என்ற நிலையில் இந்தப் போராட்டத்தை ஒடுக்கப்பட்ட சகல ஜாதியினரின் வெற்றியை ஈட்ட வேண்டிய வரலாற்றுக் கடமைக்குரிய மூத்தவர்கள் அவர்கள். ஆனால், தங்கள் சத்திரிய பாவனைகளால் இவர்கள் இன்று தங்களைப் பல நூற்றாண்டுகள் அடக்கி ஒடுக்கிய ஆதிக்கச் சக்திகளோடு கூச்சமில்லாமல் அணி சேர்ந்து கொண்டு, தாங்கள் யாருடைய விடுதலைக்காகப் போராடக் கடமைப்பட்டவர்களோ அவர்களுடைய விடுதலைக்கு எதிராகவே தங்கள் சக்திகளைச் செலவிடுகிறார்கள். இவர்களைப் போன்றே இன்னும் பல ஜாதிகளும் உள்ளன. வரலாற்றுத் தெளிவும், சமூகக் கடமையும் மிக்க தமிழர்கள் இந்தத் தவறைத் திருத்த எல்லா வகையிலும் முயற்சி செய்ய வேண்டும்.
பூர்வீகத் தமிழர்களில் ஒரு பிரிவு பற்றி, அதன் ஆதிகால வேர்களை நோக்கி திரு.இமானுவேல் அவர்கள் ஆய்வைச் செலுத்தியிருப்பது பாராட்டத்தக்கது. அவருடைய முயற்சிகள் தேடல்கள், தவிப்புகள், மதிப்புக்குரியவை. இந்த முறையியல் வளமானது. வேரிழந்து கிடக்கும் அண்டைச் சமூகங்களின் வேர்களையும் ஆதியை நோக்கித் துலக்க இளம் ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தும். ஆதிக்க உணர்வுள்ள ஆய்வாளர்களால் இன்று வரை அலட்சியப்படுத்தப்பட்டுள்ள வாய்மொழி வரலாற்றுச் செல்வங்களையும், நாட்டார் சமயம் சார்ந்த செய்திகளையும், வரலாற்று ஆய்வுகளுக்கு அவர்களுக்கு பயன்படுத்த உத்வேகம் தரும். ஆதிக்க மனோபாவம் உள்ள ஆய்வாளர்கள் திருத்த அல்லது அழிக்க அல்லது சிதைக்க நினைக்கின்ற அடித்தள மக்களின் வரலாறுகளுக்கு ஆதரவான சான்றுகளைத் தேடவும், துலக்கவும், பதிவு செய்யவும், ஆய்வு மேற்கொள்ளவும் அவர்களைத் தூண்டும்.’’
- உண்மை இதழ், ஜூலை, 16-31.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக