பிறந்த நாள்: 15.07.1876
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படக் கூடியவர் மறைமலை அடிகள்.- ஆரியத்தின் கடும் எதிரி! இந்து மதம் வேறு; தமிழர் சமயம் வேறு என்பதில் உறுதியாக இருந்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் 1933 திசம்பர் 23, 24 ஆகிய நாள்களில் தமிழ் அன்பர் மாநாடு நடைபெற்றது.
அம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு மறைமலை அடிகளார் அவர்களுக்கு கே.வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் 22.12.1933 இல் தந்தி ஒன்றை அனுப்பினார். அதற்கு மறைமலை அடிகள் அளித்த பதில்தான் மிகமிக முக்கியமானது. கடிதங்கள், அழைப்புகள், தந்தி ஆகியவற்றிற்கெல்லாம் உங்களுக்கும், டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, தூய தமிழை வளர்க்க விரும்பாத எந்தத் தமிழ்க் கூட்டத்திலும் கலந்துகொள்வதற்கு எமது மனம் இடந்தரவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். பண்பட்ட பழைய மொழிகளெல்லாவற்றிலும் தமிழ்மொழி ஒன்றுதான் இன்னும் தன் பண்டை நலஞ் சார்ந்த புகழோடு வாழ்கின்றது. பிற மொழிக் கலப்பு அதன் தூய தன்மையினைக் கெடுக்குமென்றும், அதன் வளர்ச்சியினை குன்றச் செய்யும் என்றும் யாம் உறுதியாக நம்புகின்றோம். ஆதலால் எமது தனித்தமிழ்க் கொள்கையினைக் கடைபிடிக்காத உங்களுடைய மகாநாட்டிலே கலந்துகொள்ள முடியாமையினைப் பொறுத்துக் கொள்வீர்களாக! என்று பதில் எழுதியவர் தான் நமது போற்றுதலுக்கும், மதிப்புக்கும் உரிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் அவர்கள். சுவாமி வேதாசலம் என்ற தம் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டவர்.
தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமி ழில் பெயரைச் சூட்டும் உணர்வு கிளர்ந்தெழட்டும்! அதுதான் அந்தப் பெருமகனாருக்கு தமிழர்கள் காட்டும் உண்மையான மதிப்பாகும்.
- உண்மை இதழ், ஜூலை, 1- 15 .2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக