நினைவு நாள்: 27.06.1962
தேவதாசிகள் குலத்தில் பிறந்து அக்குல மங்கையரின் ஏற்றத் தாழ்வுகளை அறிந்து அவர்களின் குறைநீக்க தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் மூவலூரார். தந்தை குடும்பச் சுமை தாங்காமல் ஓடிவிட்டார். தாய் குழந்தையை வளர்க்கப் போதுமான வருமானம் இல்லாததால் 10 ரூபாய்க்கும் ஒரு பழம் புடவைக்கும் ஒரு தாசிக்கு குழந்தை இராமாமிர்தத்தை விற்றுவிட்டார். இதுதான் அம்மையாருடைய இளமைக்கால வரலாறு. திண்ணைப் பள்ளிக்கூட கல்வியறியும், சமுதாயம் தந்த இழிநிலையும், புரட்சிகர சிந்தனைகளும், தந்தை பெரியாரின் நட்பும் அம்மையாரின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்து, தான் சார்ந்த சமுதாயத்தின் இழிவு நீக்கப் போராடும் துணிவைத் தந்தது.
தன்மான இயக்கத்தை தந்தை பெரியார் 1925இல் துவக்கியபோது அதில் இணைந்து விதவை மணம் நிறைய அளவில் நடைபெற முயற்சிகள் மேற்கொண்டார். குழந்தை மணம் நடைபெறுவதைத் தடுத்தார். தேவதாசிக் குலப் பெண்களை அத்தொழிலில் இருந்து மீட்கும் பணியில் முனைப்போடு செயல்பட்டார். முத்துலெட்சுமி ரெட்டி “தேவதாசி ஒழிப்பு சட்ட வரைவை’’ சட்டமன்றத்தில் 1928இல் கொண்டுவர பின்புலமாக இருந்தார். “தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’’ எனும் நூலினை எழுதி தாசி குலத்தின் இழிவை விளக்கி அதில் ஈடுபட்டவர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
13.12.1938 சென்னை ஒற்றைவாடை அரங்கில் அம்மையாரின் வழிகாட்டலில் பெண்கள் மாநாடு கூடி தந்தை பெரியாருக்கு ‘பெரியார்’ எனும் பட்டத்தை அளித்து இனி தமிழ்நாட்டில் ‘பெரியார்’ என்றே அனைவரும் அழைத்திட வேண்டும் என்கிற நிலையை ஏற்படுத்திய பெண்களில் ஒருவர். கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல்வராகி அம்மையார் பெயரில் ஏழைப் பெண்களுக்கு “இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம்’’ கொண்டுவந்து பல்லாயிரக்கணக்கான பெண்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளார்கள்.
வாழ்க மூவலூர் மூதாட்டியார் புகழ்!
-உண்மை இதழ், ஜூன், 16 -30 .19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக