எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (102)

2022 மற்றவர்கள் ஜூன் 16-30

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பார்வையில் பாரதி
நேயன்

பாட்டுத் துறையில் பாரதியார் ஒரு பார்ப்பனர் என்பதற்காகவே எப்படி அளவிறந்து போற்றப் பெறுகிறார் என்பதை கொஞ்சம் சொல்லித்தான் ஆகல் வேண்டும். அவர் பாட்டுத் திறமை மிகவும் பொதுவானதே. அவருக்கிருந்த கற்பனையாற்றலை வேண்டு-மானால் ஒருவாறு சிறப்பாகச் சொல்லலாம். ஆனால், கற்பனையாற்றல் இருப்பவர்-களெல்லாரும் பாத்திறன் பெற்றிருப்பார்-களென்று சொல்ல முடியாது. பாவலன் ஒருவனுக்கு இருக்க வேண்டிய திறமையுள் கற்பனைத் திறனும் ஒன்று. ஆனால் பாத்திறன் என்பது ஒருவன் கற்றுள்ள இலக்கிய நூல்களையும் அவனுக்குள்ள மொழிப் பயிற்சியையும் சொல்லாற்றலையும், இயற்கை யீடுபாட்டையும் உலகியலறிவையும், மெய்யுணர்ச்சியையும் பொறுத்து அமைவது. கற்பனைத்திறன் பொதுவாக எல்லாரிடத்தும் இருக்கும். மொழிப் பயிற்சியோ, சொல்லாற்றலோ, உலகியலறிவோ, மெய்யுணர்ச்சியோ, இலக்கியப் பயிற்சியோ எல்லாரிடமும் இருக்கும் என்று சொல்ல முடியாது. அவை பயிற்சியினாலும் கல்வியினாலுமே கைவருவனவாகும். இயற்கை ஈடுபாடோ சூழலால் அமைவதாகும்.
பாரதியாரிடம் கற்பனையாற்றலும் அதை வெளிப்படுத்தும் உணர்ச்சியும் ஓரளவு இருந்தன என்று சொல்லலாமே தவிர, மொழிப் பயிற்சியும், சொல்லாற்றலும், இலக்கியப் பயிற்சியும் அவ்வளவு மிகுந்திருந்தனவாகச் சொல்ல முடியாது. உலகியலறிவும், மெய்யுணர்ச்சியும் அவ்வளவு சிறப்புற விளங்கியிருந்தன என்றும் பாராட்ட முடியாது. இயற்கை ஈடுபாடும் ஓரளவே இருந்தது, ஆனால் அவர் கம்பனுக்கும் மேல், இளங்கோவுக்கும் மேல் பாராட்டப் பெறுவதன் நோக்கமெல்லாம் அவர் ஒரு பார்ப்பனர் என்பதைத் தவிர வேறு இருக்க முடியாது. பாட்டுத்திறத்தில் பாரதிதாசன் அவரைப் பலவகையிலும் வென்றிருக்கின்றார். ஆனால் அவர் ஒரு தமிழர்; அதுவும் தன்மான எழுச்சியுள்ள தனித்தமிழர் என்பதற்காகவே ஆரியப் பார்ப்பனராலும் நம் வீடணத் தமிழர்களாலும் அழுத்தி வைக்கப் பெற்றுள்ளார்.
தமிழ் இலக்கிய வுலகில் கம்பனைப் போல் கற்பனை வளம் படைத்தவர்களைக் காணமுடியாது. இளங்கோ போல் மொழி வளம் மிக்கவர்களும் அருமையே. ஆனால், கம்பனுக்கு விழா எடுப்பது போல் பாரதியாருக்கும் விழா எடுப்பது, போட்டி போட்டுக் கொண்டு செய்யும் ஓர் இன எழுச்சி ஈடுபாடே யொழிய, இலக்கியச் சிறப்பான ஒரு செயலன்று. தேசியப் பாவலர் என்பதில் வேறு ஆரியச் சூழ்ச்சி புதைந்து கிடக்கிறது.

கம்பனுக்கு விழா எடுப்பதிலுங்கூட ஆரியப் பார்ப்பனர்க்கே மிகுந்த அக்கறையுண்டு என்பதும் இன்னொரு வேடிக்கை. அவன் இராமாயணத்தை எழுதினான் என்பதே அவன் பாராட்டப் பெறுவதற்குத் தலையாய ஒரு கரணியம். ஏனெனில், இராமாயணத்தில் தான் வேறு எந்த நூலையும் விடத் தமிழர் இழிவு செய்யப் பெற்றுள்ளனர். அதனால் பார்ப்பனர்க்கு அதில் ஈடுபாடு மிகுதி. இதற்காகவே கம்பனும், ஒரு பார்ப்பனர் என்பதற்காகவே பாரதியாரும் பாராட்டப் பெறுகின்றனர். பார்ப்பான் ஒரு துறையில் உள்ள ஒருவனைப் பாராட்ட வேண்டுமானால் முதலில் அவன் பார்ப்பானாக இருத்தல் வேண்டும்; அல்லது அவன் ஒரு பார்ப்பன அடிமையாகவேனும் இருத்தல் வேண்டும். இவ்விரண்டு தகுதியும் ஒருவனிடம் இல்லையானால் அவன் பனைமர உயரத்தவன் என்றால் குட்டையன் என்பான்; பரந்த முடித் தலையன் ஆனாலும் மொட்டையன் என்பான்.
பாரதியாரின் பாட்டு ஆராய்ச்சியைப் பிறிதொருகால் பார்ப்போம். இக்கால் அவர் தமிழைப் பற்றி மிகச் சிறப்பாகப் பாடியிருக்-கின்றார்; தமிழ்மொழிக்கு மிகப்பெருமை சேர்த்திருக்கின்றார் என்று தமிழர்களே பாராட்டுகின்றனரே, அந்தப் பாராட்டில் எந்த அளவு உண்மை உள்ளது என்பதை மட்டும் பார்ப்போம். அவர் தமிழ் உரைநடை இது.
“ஸூர்யோதயத்திலேயும் ஸூர்யாஸ்தமனத்திலும் வானத்தில் நடக்கும் இந்திரஜாலக் கட்சியில் க்ஷணந்தோறும் புதிய புதிய விநோதங்கள் மாத்திரமேயன்றி இன்னுமொரு விசேஷமுண்டு”
– பாஞ்சாலி சபத விளக்கக் குறிப்புகள்
இவ்வாறான ஒரு நடையைப் பாரதியார் எழுதினால் என்ன? யார் எழுதினால் என்ன? இதனால் தமிழ்மொழிக்கு ஆக்கம் ஏற்படும் என்று எவராவது சொல்லமுடியுமா? தம் வடமொழி கலந்த நடை, ‘நம்மவர்க்குப் பிரியந் தருவதாகும்” என்று வேறு பாரதியார் குறிப்பிடுகின்றார். அவர் கண்ணோட்டத்தில் இவ்விந்திய நாடும் இங்குள்ள மக்களும் எவ்வாறு கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பின்வரும் உரையால் அறியலாம்.
“பாரத தேசத்தில் முற்காலத்திலே பாரத ஜாதி முழுமையின் அறிவுக்குப் பொறுப்பாளி-யாகப் பிராமணர் என்னும் பெயருடைய ஒரு வகுப்பினர் இருந்ததாகப் பழைய நூல்களிலே காணப்படுகிறது. அந்தப் பிராமணர் தமது கடமைகளைத் தவறாது நடத்தியிருப்பார்-களானால் மற்றக் குலத்தவரும் நெறி தவறியிருக்க மாட்டார்கள். ஒரு தேசத்திற்கு ஏற்படும் உயர்வு தாழ்வுகளுக்கு அத்தேசத்-திலுள்ள பிராமணர்களே பொறுப்பாளிகள்”
– பாஞ்சாலி சபத விளக்கக் குறிப்புகள்
மேலே காட்டப்பெற்ற இரு குறிப்புகளே பாரதியார் தமிழ் மொழியைப் பற்றியும் தமிழ் இனத்தைப் பற்றியும் என்ன கருத்துக் கொண்டிருந்திருக்கின்றார் என்பதைத் தெளிவாகக் காட்டப் போதுமான சான்று-களாகும். ‘ஒரு நாட்டின் அறிவு வளர்ச்சிக்கு உயர்வு தாழ்வுகளுக்கும் ஆரியப் பார்ப்பனர்கள் தாம் பொறுப்பாளிகள்’ என்றால் மானமுள்ள எந்தத் தமிழன் அவரை வெறும் பாட்டுத் திறனுக்காகவோ கற்பனைத் திறனுக்காகவோ பாராட்டுவான்? தன் மொழியைப் பற்றியும் இனத்தைப் பற்றியும் நாட்டைப் பற்றியும், அவை யழிக்கப் பெற்ற வரலாறு பற்றியும் அவை புதுப்பிக்கப் பெற வேண்டிய முயற்சி பற்றியும் சிறிதும் கவலை கொள்ளாத ஆரிய அடிமைகளே அவரை ஒரு பாவலர் என்பதற்காகப் பாராட்டுவார்கள். வெறும் பாவலர் என்பதற்காகப் பாராட்டுப் பெற வேண்டியவர்கள் நம் இனத்தில் ஏராளம்! தடுக்கி விழுந்ததற் கெல்லாம் பாட்டு உண்டு. இங்கே, தமிழ் இலக்கியங்களில் உள்ள பாட்டுச்செறிவு போல் வேறு இந்திய மொழிகள் எவற்றிலும் அன்றும் இல்லை; இன்றும் இல்லை. பாவலர்களுக்குப் பஞ்சம் என்றும் இருந்ததில்லை . எனவே, அதற்காகப் பாரதியாரைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டிய தேவையும் நமக்கு இல்லை.
பாவலன் ஒருவனால் எதிர்காலத்திற்குக் கிடைத்த கருத்துகள் எவை? அவற்றால் அந்த மொழிக்கும், மக்களுக்கும், அந்நாட்டுக்கும் வந்து சேரும் பயன்கள் எவை? – என்பன பற்றித்தான் நாம் கவலைப்பட வேண்டுமே தவிர, ஒருவர் ஒரு பாவலர் என்பதால் மட்டுமே நமக்குப் பெருமை வந்து விடப் போவதில்லை.
பாரதியாரின் உள்ளம் ஆரியர்க்காக எண்ணிய உள்ளம்; அவர் இந்த நாட்டை ஆரிய நாடு என்பதனாலேயே பெருமை கொள்வதாக அவர் பாடல்கள் தெரிவிக்கின்றன. பின்வரும் பாடலடிகளைப் பாருங்கள்.
“பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்
ஆரிய நாடு என்று அறி”
“முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடை வில்? – எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவிநல்
ஆரிய ராணியின் வில்”
“சித்த மயம் இவ் வுலகம்; உறுதிநம்
சித்தத்தில் ஓங்கி விட்டால் – துன்பம்
அத்தனை யும் வெல்ல லாமென்று சொன்னசொல்
ஆரிய ராணியின் சொல்”
-“எம்மை ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள் ஆரிய தேவி”
-“வீரிய வடிவம் – என்ன
வீரிய வடிவம் – இந்த
ஆரியன் நெஞ்சம், அயர்ந்ததென் விந்தை!”
“எங்கள் ஆரிய பூமி”
“ஆரிய பூமியில் நாரிய ரும்நர
சூரிய ரும்சொலும் வீரிய வாசகம்”
“உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே”
“ஆதிமறை தோன்றியதால் ஆரியநா டெந்நாளும்
நீதிமறை வின்றி நிலைத்த திருநாடு”
_ எப்படி? பாரதியாருக்கு இது தமிழ் நாடாகவோ இந்தியாவாகவோ படவில்லை. அப்படிப்பட்டாலும் அவருக்குச் சொல்ல விருப்பமில்லை.
(தொடரும்…