எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (103) :பாவலரேறு பெருஞ்சித்திரனார் பார்வையில் பாரதி
நேயன்
இந்திய நாடு அனைத்தையும் பாரத நாடு என்று சொல்வதைவிட ஆரிய நாடு என்று சொல்வதில் தான் அவர்க்குப் பெருமையிருந்-திருக்கின்றது. உண்மை அப்படியிருந்து அவ்வாறு அவர் சொல்லிப் பெருமைப்பட்டிருந்-தாலும் தாழ்வில்லை. ‘அவர் உண்மையைத்-தானே சொன்னார்; அதைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்’ என்று கேட்கலாம். அவர் உண்மையல்லாத ஒன்றை உண்மைபோல் பலமுறை பன்னிப் பன்னிப் பேசியிருக்கின்றார். இப்படிப் பாடல்களைப் பாடுவதாலும் பலமுறை சொல்வதாலும் வரலாற்று உண்மை-களையே மறைக்க முயற்சி செய்துள்ளார். நாடற்ற ஆரியர்களுக்கு இந்நாடு உரிமை-யுடையது என்றால், இந்நாட்டையே பிறந்தகமாகக் கொண்ட தமிழர்களுக்கு எந்த நாடு உரிமையுடையது? தமிழ்நாடு என்பதாகவே ஒரு நாடு இருப்பதாக அவர் நினைவு கொள்ளவில்லை. இந்திய நாட்டில் அடங்கிய பத்தொன்பது திரவிட நாட்டுப் பகுதிகளும் ஆரியர்களுடையனவே என்று வல்லடி வழக்கு நடத்தியிருக்கின்றார்.
‘ஆரியர்’ என்பது பெருமைக்காகச் சொல்லப் பெற்றதாகத் தெரியவில்லை. இந்திய நாட்டின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு இந்தியா முழுமைக்கும் ஒரு பெயர் சொல்ல வேண்டுமே என்றுங் கூட அந்தப் பெயரைச் சொன்னதாகத் தெரியவில்லை. உண்மையிலேயே அவர்தம் இனப் பெருமையை நிலைநாட்டவே அவ்வாறு சொல்லியிருக்கின்றார். இன்னொருவர்க்குச் சொந்தமான ஒரு வீட்டை அல்லது பொதுவான ஒரு சாவடியை ஒருவன் தன் வீடு என்று சொன்னாலும் தாழ்வில்லை; தன் இனத்தாருடைய வீடு என்று சொல்வானானால், அவன் தன் இனத்தார்க்கு அதன் பெருமை அனைத்தும் வந்து சேர வேண்டும் என்று நினைக்கின்றவனா இல்லையா? இதை எவரேனும் மறுக்க முடியுமா? இந்நாட்டை ஆரிய நாடாகக் கருதியதை, அவர் பொது நோக்கங்கொண்டு சொன்னது என்பது, பித்தலாட்டமும் புரட்டுமாகும். வருங்காலத் தமிழ்க் குமுகாயத்தை இனி இவ்வாறெல்லாம் ஏமாற்ற முடியாது. மேலும் அவர் கூறியதைக் கவனியுங்கள்.
“ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!”
“வீரியம் ஒழிந்து மேன்மையும் ஒழிந்து, நம்
ஆரியர் புலையருக் கடிமைகள் ஆயினர்”
“பிச்சைவாழ் வுகந்து பிறருடைய ஆட்சியில்
அச்சமுற்றி ருப்போர் ஆரியர் அல்லர்’’
“மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும்
ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன்”
ஆரியரை இந்தியாவுக்கே உரிமையாக்கி, இந்தியாவை ஆரியர்க்கே உரிமையாக்கிப் பேசும் உணர்ச்சி பாரதியாரிடம் நிறைய இருந்திருக்-கின்றது. ஆரியர் என்றால் அவர்களிடம் ஒரு தனித்தன்மை, சிறப்பு, எல்லாருக்கும் உயர்வான ஒரு தேவப் பெருமை இவையெல்லாம் இருப்பனவாகக் கற்பனை செய்து கொள்ளும் மனநிலை அவர் பாடல்களில் ஒலிக்கின்றது. இந்தியப் பண்பாடு, நாகரிகம் , வீரம், சமயம் முதலிய அனைத்துப் பண்புகளையுமே அவர் ஆரியமாகப் பார்க்கின்றார். அப்பண்புகள் குறைந்தவரை அவர் ஆரியரினும் தாழ்ந்தவராகப் பேசுகின்றார்.
“ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர்
யாரிவண் உளர்? அவர் யாண்டேனும் ஒழிக!”
“ஆரியர் இருமின் ஆண்களிங் கிருமின்;
வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்!”
_ என்று பலவாறாக ஆரியர்களையே _ அல்லது அவரைச் சார்ந்தவர்களையே இந்நாட்டுக் குடிமக்களாக எண்ணிக் கொண்டு அவர் யாக்கும் வரிகள் இங்குள்ள எல்லாப் பிரிவினர்களையும் இழிவு செய்வனவாகும். வரலாற்றடிப்படையில் இந்நாட்டுக்கு உரிமை-யான ஓரினம் உண்டென்னும் ஒரு கருத்தை அவர் அடியோடு மறுப்பனவாகவே இவ்வரிகள் அமைகின்றன.
தமிழ்மொழியைப் பாராட்டுகையிலும், அஃது ஆரியச் சார்பு உடையதனால்தான் பெருமை கொண்டு விளங்குகின்றது என்னும் பொருள்படவே எழுதுகின்றாரே தவிர, அதன் தனித் தன்மை, பழைமைச் சிறப்பு, தாய்மை நிலை, வளமைக் கொழிப்பு முதலியன நிறைந்திருக்கும் தன்மையை அவர் ஒப்புக்-கொள்வ-தில்லை. ஆதிசிவன் பெற்ற தமிழை ஆரிய மைந்தன் அகத்தியன்தான் சிறப்புறச் செய்தான் என்பது பாரதியார் கருத்து. ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தது கி.மு. 1500இலிருந்து 2000க்குள் எனக் கூறலாம். அவர் தென்னாடு வந்தது அதற்குப் பின்னர்தான். அக்காலத்திற்கு முன்பே தமிழ் மிகவும் சிறப்புற்று விளங்கியிருந்தது. அவர்கள் தென்னாடு வந்த பின் அஃதாவது கடைக் கழகக் காலத்திற்குப் பின்னர்தான் தமிழ் மொழி, தமிழ் நாகரிகம், தமிழர் பண்பாடு முதலிய யாவும் சிதையத் தொடங்கின. இவர்கள் கூறிப் பெருமைப்படும் சமசுக்கிருத மொழி அதன் பின்னர்தான் செயற்கையாக உருவாக்கப்-பெற்றது. இந்த வரலாற்று நிலைகளை யெல்லாம் உணராமல் அல்லது உணர்ந்தும் ஒப்புக்கொள்ளாமல் அல்லது ஒப்புக்கொண்டும் அவற்றை அடியோடு மறைக்கின்ற முயற்சியில் தமிழ்த்தாய் உரைப்பதாகப் பாரதியார் இப்படி எழுதுகிறார்.
“ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்”
அகத்தியர் அகத்தியம் என்னும் இலக்கணத்-தையும் நாரதர் பஞ்ச பாரதீயம் என்னும் இசைத்தமிழ் இலக்கண நூலையும் இயற்றியது உண்மைதான். தமிழில் ஏற்கனவே இருந்த நூல்களை ஒட்டியும் தழுவியுமே அந்நூல்கள் எழுதப் பெற்றன. அவ்வாறு செய்தது தம் ஆரியக் கருத்துகளைத் தமிழ்மொழியின் மூல நூல்களான இலக்கண நூல்களிலேயே நுழைத்தற்கு வேண்டியே தவிர, தமிழை வளர்க்க வேண்டியன்று. இம்முயற்சி இக்காலத்தும் நடந்து வருகின்ற வெளிப்-படையான முயற்சியாகும். தஞ்சை ‘சரசுவதி மகாலில்’, பழைய ஓலைச் சுவடிகளைப் பெயர்த்தெழுதுகின்ற முயற்சியில், இவ்வாறு பழந்தமிழ்ச் சுவடிகளினின்று வடமொழியில் பெயர்க்கப் பெற்றபின், அச்சுவடிகளையே அழித்துவிடுகின்ற இரண்டகச் செயல் இன்றும் நடந்துவருவதாக அங்கிருந்து பணியாற்றிய புலவர்களே அறிவிக்கக் கேட்டிருக்கின்றோம். இந்தக் கொடுமை மாந்தன் நிலாக் கோளில் இறங்கிய காலத்தும் துணிவாகவும் சூழ்ச்சியாகவும் நடைபெறுகின்றதெனில் அக்காலத்தில் நடைபெற்றிருக்க முடியாதென்று ஒரு கருத்துக் குருடனும் ஒப்பமாட்டான். மேலும் உ.வே.சா. போலும், பாரதியார் போலும் தமிழ்த்திறமும் ஈடுபாடும் கொண்டவர்கள் வாயிலிருந்தே இத்தகைய கருத்து வருவதற்கு வேறு பக்க வலிவுகளே தேவையில்லை.
அவ்வாறு அகத்தியர் போன்ற ஆரிய முனிவர்கள் தமிழ் இலக்கணம் செய்த பின் தான் தமிழ்மொழி ஏற்கனவே உயர்ந்து விளங்கிய ஆரிய மொழியான சமசுக்கிருதத்-திற்கு நிகராக விளங்கியதாம். பாரதியார் கருத்திது. நம்புபவர்கள் எத்தனையோ பேர் இருப்பர்.
“ஆன்ற மொழிகளி னுள்ளே – உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்”
_ என்பது அவர் கூற்று. இப்படி எழுதப் பாரதியார் வரலாறு தெரியாதவராக இருக்க வேண்டும்; அல்லது வரலாற்றை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
பாரதியாருக்கு ஆரியவுணர்ச்சி அளவிறந்து இருந்ததுடன் வேதங்களே இந்திய நாட்டின் உயர்வுக்கு அடிப்படையானவை என்னும் மூடக் கொள்கையும் மிகுதியாகவிருந்தது.
“தெள்ளிய அந்தணர் வேதம்” – என்றும்,
“ஓதுமினோ வேதங்கள்
ஓங்குமினோ! ஓங்குமினோ!” – என்றும்,
“பன்னரும் உபநிடத நூலெங்கள் நூலே
பார்மிசை யேதொரு நூல் இது போலே?” – என்றும்,
“நாவினில் வேத முடையாள் – கையில்
நலந்திகழ் வாளுடை யாள்” – என்றும்,
“அவள்; வேதங்கள் பாடுவாள் காணீர் – உண்மை
வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்’ – என்றும்,
“வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே!” – என்றும்,
“மீட்டு முனக் குரைத்திடுவேன் ஆதிசக்தி
வேதத்தின் முடியினிலோ விளங்கும் சக்தி!” – என்றும்,
“வேதமுடைய திந்த நாடு – நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு;
சேதமில் லாத ஹிந்துஸ் தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!” – என்றும்,
அவர் வேதப் பெருமைகளாகக் கூறுபவை யெல்லாம் ஆரியத்தின் பெருமைகளைப் பறை சாற்றவே கூறியவையாகும். வேதங்களை மட்டுமின்றி ஆரிய நூல்கள் அனைத்தையும் பாராட்டும் வகையில்,
“அன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம்
ஆணிமுத்துப் போன்ற மணி மொழிகளாலே
பன்னிநீ வேதங்கள், உபநிடதங்கள்,
பரவுபுகழ்ப் புராணங்கள், இதிகாசங்கள்
இன்னும்பல் நூல்களிலே இசைத்தஞானம்
என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்?”
_- என்று பலவாறாக உண்மைக்கு மாறாகக் கட்டி உரைப்பது அவர் ஆரிய மதி மயக்கத்தினின்று விடுபடவில்லை என்பதையே காட்டுவதாகும்.
(தொடரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக