ஜனவரி 16-31,2022

பெண்ணுரிமையும் பாரதியும்!

“மண வாழ்க்கை ஒருவனும் ஒருத்தியும் நீடித்து ஒன்றாக வாழாவிட்டால் தகர்ந்து போய்விடும். இன்று ஒரு மனைவி, நாளை வேறு மனைவி என்றால், குழந்தைகளின் நிலைமை என்ன ஆகும்? குழந்தைகளை எப்படி நாம் சம்ரக்ஷணை பண்ண முடியும்? ஆதலால் குழந்தைகளுடைய சம்ரக்ஷணையை நாடி ஏகபத்னிவிரதம் சரியான அனுஷ்டானம் என்று முன்னோரால் ஸ்தாபிக்கப்பட்டது” என்கிறார் பாரதி.

அதாவது குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஒரு பெண் கடைசி வரை ஒருவனோடே வாழ்ந்தாக வேண்டும் என்கிறார்.

பிள்ளைகளுக்காக வேண்டி ஒத்து வராத ஒருவனோடு வாழ்ந்தாக வேண்டும் என்றால், பெண் விடுதலை எப்படி வரும்? பெண்ணுரிமை எப்படி பாதுகாக்கப்படும்?

பிள்ளைகள், கணவன்_மனைவி இருவருக்கும் உரியவர்கள். கட்டாயம் பிரிய நேரிடும்போது, பிள்ளைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்து கொண்டு பிரிய வேண்டும் என்பதுதானே சரியாக இருக்கும்?

மாறாக, பிள்ளைகளுக்காக வாழ முடியாத கணவனோடு வாழ்ந்தே ஆக வேண்டும் என்பது, அந்தப் பெண்ணை வாழ்நாள் முழுக்க துன்பத்தில், இன்னலில், சிக்கலில், உளைச்சலில் தள்ளிவிடுமே! அப்படிப்பட்ட அக்குடும்பச் சூழலில் பிள்ளைகள் வளர்வதும் கேடல்லவா?

ஆனால், என்ன இருந்தாலும், எப்படி இன்னல், கேடு வந்தாலும் அந்த ஆணுடனே அவள் வாழ வேண்டும் என்கிறார் பாரதி.

கணவன்_மனைவி பிரிவை, மண முறிவை, தான் எழுதிய கதைகள் மூலமும் எதிர்க்கிறார் பாரதி.

வறுமையில் வாடும் ஏழைப் பெற்றோர், தங்கள் இளம் வயது மகளை ஒரு வயதான பிராமணனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். முதியவருடன் வாழப் பிடிக்காத அப்பெண், வேறு ஓர் ஆணைத் துணையாகத் தேடிப் போய்விடுகிறாள். இது இந்து கலாச்சாரத்திற்குக் கேவலம் என்று எண்ணிய பாரதி, அப்பெண் கிறித்துவ மதத்திற்கு மாறி விடுவதாகக் கதையைக் கொண்டு போகிறார்.

ஆக, கதையில்கூட, சனாதன தர்மம், இந்து கலாச்சாரம் கெடக் கூடாது, கெட்டுவிட்டதாகக் காட்டக் கூடாது; பெண்ணுரிமை, பெண் விடுதலை வந்துவிடக் கூடாது; அப்படி இந்து கலாச்சாரத்தில் நடப்பதாகக் காட்டிவிடக் கூடாது என்று உறுதியாய் இருந்தார் பாரதி.

தன் இறுதிக் காலத்தில் பாரதி எழுதிய இன்னொரு கதையில், ஓர் இளம் விதவைப் பெண், மறுமணம் செய்துகொள்ள முடிவு செய்து, விஸ்வநாத சர்மா என்பவரை மறுமணம் செய்து கொள்கிறார். ஒன்றரை வருடத்தில் அவருக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது. அவன் குடும்ப வாழ்க்கைக்குத் தகுதியில்லா தவனாகிறான். ஆனாலும், அந்தப் பெண் வாழ்நாள் முழுக்க அவனுக்குப் பணிவிடை செய்தே காலம் கழிக்கிறாள். இது தெய்வீகக் காதல் என்கிறார்.

ஆக, ஒரு பெண் தன் வாழ்வைத் தொலைத்து ஒரு பைத்தியக்காரக் கணவனுக்கு பணிவிடை செய்தே வாழ்ந்துவிட வேண்டும் என்பதுதான் பெண்ணுரிமையா?

மனநலம் பாதிக்கப்பட்டவரை மற்றவர்கள்-தான் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த இளம் பெண் வேறு ஒரு துணையைத் தேடி, தேர்ந்து அவனுடன் வாழ வேண்டியதுதானே அப்பெண்ணின் உணர்வுக்கும், உரிமைக்கும் உகந்ததாக இருக்க முடியும்?

அப்படியில்லாமல், அவள் தன் உணர்வு-களை, விருப்பங்களை அடக்கி, ஒடுக்கி, வாழ்நாள் முழுக்க ஒரு மனநலம் பாதிக்கப்-பட்டவனோடே வேலைக்காரியாய் வாழ்ந்து-விட வேண்டும் என்பதுதான் முற்போக்குச் சிந்தனையா? பெண் விடுதலையா? மனைவிக்குப் பைத்தியம் பிடித்தால், எந்த இளம் வயது ஆணாவது மறுமணம் செய்யாது, அந்த மனநலம் பாதித்த பெண்ணுக்குப் பணிவிடை செய்து காலம் கழிப்பானா?

இவை மட்டுமல்ல, தன் குடும்பத்திலும் பாரதி பெண்ணுரிமைக்கு எதிராகவே நடந்துள்ளார்.

“ஒரு நாள் பாரதி 14 வயதான தமது மூத்த மகள் தங்கம்மாவைத் தம்முடன் கடயத்திலிருந்து அய்ந்து மைலில் உள்ள ஓர் அய்யனார் கோயிலுக்கு வருமாறு உத்தரவிட்டார். அக்கோவில் மலைச்சாரலில் காட்டு நடுவே உள்ளது… தங்கம்மா தயங்கி, வர மறுத்ததால் பாரதிக்குக் கோபம் வந்துவிட்டது. மகள் கன்னத்தில் விரல் பதிய அறைந்துவிட்டார். தடுக்க வந்த மைத்துனர் மீதும், இளைய மாமனார் மீதும் காறி உமிழ்ந்தார்’’ என்று பாரதியை ஆய்வு செய்த ரா.பத்மநாபன் எழுதியுள்ளார்.

பாரதியைக் கண்ணை மூடிக் கொண்டு முற்போக்குவாதியாகக் காட்டும் சிலர் 120 ஆண்டுகளுக்கு முன்பே பாரதி எவ்வளவு முற்போக்காகப் பேசியுள்ளார் என்று அவரது தொடக்க காலக் கருத்துகளை மட்டும் எடுத்துக் காட்டி இறுதிக் காலக் கருத்துகளை மறைத்து விடுகின்றனர்.

பாரதிக்கு முன்பே இந்த மண்ணில் பலர் பெண்ணுரிமை பற்றிப் பேசியுள்ளனர். செயலிலும் காட்டியுள்ளனர்.

1882இல் “இந்து சுயக்கியான சங்கம்’’ என்ற அமைப்பு, விதவைத் திருமணம், ஜாதி மறுப்பு மணம், பெண் கல்வி, பார்ப்பனப் புறக்கணிப்பு போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுள்ளது.

“தத்துவ விசாரிணி, ‘தத்துவ விவேசினி’ ஆகிய ஏடுகளையும் இந்த அமைப்பு நடத்தியுள்ளது. தத்துவ விவேசினி 17.2.1881 இதழில், “பக்குவ காலத்தில் மணம் செய்யாமல் சிறு வயதிலேயே மணத்தை முடித்து யவ்வனப் பருவம் வருவதற்கு முன்னே பெண் காலம் சென்றால் பிள்ளைக்கு மறுவிவாகம் புரியலாமென்றும், பிள்ளை காலம் சென்றால் பெண் மறு விவாகம் புரியப்படாதென்றும் கருதி நமது தேசத்தில் சில வகுப்பார் மறுமணம் செய்யாது வருகின்றனர். இப்படிச் செய்யாதிருந்ததாலுண்டாகிய தீங்குகள் எண்ணிறந்தன…

யவ்வனப் பருவடைந்த பிறகுதான் பெண்களுக்கு விவாகம் செய்யலாமென்றும், கணவரையிழந்த சிறுமியர்களுக்குப் புனர்விவாகம் செய்யலாமென்றும், இடந்தராது போன காரணம் யாதோ! அறிவிற் சிறந்த மகான்களே! யோசியுங்கள்!’’ என்று எழுதியுள்ளது. பாரதிக்கு முன்பே, பு.முனுசாமி நாயகர், அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர், அயோத்திதாச பண்டிதர் போன்றோர் முற்போக்குச் சிந்தனைகளைப் பரப்பி இந்து சனாதனத்தைச் சாடியுள்ளனர்.

தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன் போன்றோர் வாழ்வில் கொள்கை பரிணாமம் பெற்றிருக்கும் இளம் பருவத்திலிருந்த பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை மெல்ல மெல்ல அகன்றிருக்கும். ஆண்டு செல்லச் செல்ல, அவர்கள் சிந்தனைத் தெளிவு பெற்று ஒரு கொள்கை முடிவு எடுத்த பின் அவர்களின் இறுதிக் காலம் வரை அதில் பிறழ்வோ, முரண்பாடோ வந்ததில்லை. மேலும் மேலும் அறிவு, சிந்தனை, இவற்றில் வளர்ச்சியும், முதிர்ச்சியும், செம்மையும் மேம்பாடும் காணப்படும்.

ஆனால், பாரதி தொடக்க காலத்தில் மிக முற்போக்காக முழங்கிவிட்டு பின்னாளில் அதற்கு முற்றிலும் முரணாக மூட, சனாதன, பிற்போக்குக் கருத்துகளை கூறத் தொடங்கினார்.

பாரதியை முற்போக்குவாதியாகக் காட்ட முயல்வோர், அவரது தொடக்க காலக் கருத்துகளைக் கூறிவிட்டு, பிற்காலக் கருத்துகளை மறைத்து விடுகின்றனர். சிலர் சில வரிகளை மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு பாரதியைப் புகழ்கின்றனர். பாரதியார் எப்படிப்பட்டவர் என்பதை அறிய இறுதிக்கால சிந்தனைகளையே எடுத்துக்கொள்ள வேண்டும்.

(தொடரும்…)