எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (91)

ஜனவரி 1-15,2022

பெண்ணுரிமையும் பாரதியும்!

நேயன்

பாரதி முரண்பாடுகளின் மொத்தம் என்பதை முன்னமே சொல்லியுள்ளோம். அதிலும் பெண்ணுரிமை குறித்து பாரதி இரண்டு உச்சத்திற்கு சென்றுள்ளார். ஒன்று முற்போக்கின் உச்சம். மற்றது பிற்போக்கின் உச்சம்.

முரண்பாடு என்பது பரிணாமம் பெற்றிருப்பின் அது ஏற்கப்படக்கூடியது. ஆனால், பாரதி தொடக்க காலத்தில் அதி தீவிரமாகப் பெண்ணுரிமை பேசிவிட்டு, பின் தலைகீழாக மாறி எழுதுகிறார். அதுதான் சந்தர்ப்பவாதம்; அறிவு வயப்படாமல், உணர்ச்சி வசப்பட்டு கருத்துகளைக் கூறும் பக்குவமின்மை.

பெரியார், பாரதிதாசன் இவர்களின் தொடக்க காலத்திற்கும், அதன்பின் இறுதிக் காலம் வரை அவர்கள் பெற்றிருந்த புரட்சிப் பரிணாமத்திற்கும் ஓர் ஏற்றமான வளர்ச்சி நிலை இருந்தது.

ஆனால், பாரதி தொடக்கக் காலத்தில் முற்போக்கும் எழுச்சியும் கொண்டு எழுதிவிட்டு, பிற்காலத்தில் முரண்பாடுகளும், பிற்போக்குச் சிந்தனைகளையும் கொண்டு எழுதினார்.

“1904 முதல் 1906 வரை “சக்கரவர்த்தினி’’ என்ற பெண்களுக்கான இதழுக்கு பாரதி ஆசிரியராக இருந்தார். அக்காலத்தில் அவர்,

“பரிபூரண ஸமத்துவம் இல்லாத இடத்தில், நாம் ஆண் மக்களுடன் வாழ மாட்டோம்! என்று சொல்லுவதானால் நமக்கு நம்முடைய புருஷராலும், புருஷ சமூகத்தாராலும் நேரத்தக்க கொடுமைகள் எத்தனையோயாயினும், எத்தன்மை உடையன வாயினும் நாம் அஞ்சக் கூடாது. சகோதரிகளே! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; தர்மத்திற்காக இறப்போரும் இறக்கத்தான் செய்கிறார்கள். பிறரும் இறக்கத்தான் செய்கிறார்கள், ஆதலால் சகோதரிகளே! பெண் விடுதலையின் பொருட்டாகத் தர்ம யுத்தம் தொடங்குங்கள்! நாம் வெற்றி பெறுவோம்’’ எனப் பாரதி பெண் விடுதலைக்காகப் பாடுபட பெண்களை அழைக்கிறார்.

மேலும் பாரதி,  “நான் எல்லா வகைகளிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மத முண்டானால் உன்னுடன் வாழ்வேன் இல்லாவிட்டால், இன்று இராத்திரி சமையல் செய்ய மாட்டேன்; எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போட மாட்டேன்; நீ அடித்து வெளியே தள்ளினால் ரெஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதை விட்டு வெளியேறவும் மாட்டேன் என்று கண்டிப்பாகச் சொல்லிவிடவும் வேண்டும்.”

பெண்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமானால் அதற்கு ஆண்கள்தான் ஒழுங்காக இருக்க வேண்டும்.

“அடப் பரம மூடர்களே! ஆண்பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் பதிவிரதைகளாக எப்படி இருக்க முடியும்? பதிவிரதயத்தைக் காப்பாற்றும் பொருட்டாக ஸ்திரீகளைப் புருஷர்கள் அடிப்பதும், திட்டுவதும், கொடுமை செய்வதும் எல்லையின்றி நடைபெற்று வருகிறது.’’

“எண்ணிறந்த ஸ்திரீஹத்தி புரிந்து, இத்தேசத்துக்கெல்லாம் அழிக்க முடியாத பெரும் பழி கொடுத்த ஸதி தஹனமென்னும் அரக்கனை மிதித்துக் கொல்லும்படியாக முதலிலே துக்கப்பட்ட ராம் மோஹனரின் திருவடியை நாம் மறந்துவிட்டால் நமக்கு உய்வுண்டாமா? எனப் பெண்களிடம் கேட்கிறார் பாரதியார்.

அது மட்டுமல்ல, ஸதியில் எரிக்கத் தயார் நிலையில் சுடுகாட்டில் இருந்த ஒரு இராசபுத்திரப் பெண்ணை (அக்பர் ஆட்சியில் சதிக்குத் தடை இருந்தது எனப் பாரதி குறிப்பிட்டுள்ளார்), ஒரு முகமதிய வாலிபன் அந்த இராச புத்திரர்களைக் கொன்று அந்தப் பெண்ணை மீட்டுச் செல்கிறான்; அந்த முசுலிம் வாலிபனுக்கும், அந்த இராசபுத்திரப் பெண்ணுக்கும் காதல் மலர்ந்து, திருமணம் நடப்பதாகத் துளஸிபாயி என்னும் கதையின் வாயிலாகவும் உடன்கட்டை ஏறுதலை பாரதி எதிர்த்தார்.

1906 மேற்கண்டவாறு உடன்கட்டை ஏறுதலைக் கண்டித்து எழுதிய பாரதி, பின்னாளில் உடன்கட்டை ஏறுதலை ஆதரிப்பவராக மாறி விடுகிறார்.

1910 பிப்ரவரியில் ‘கர்மயோகி’ இதழில் பாரதி எழுதியதாவது:

“நமது பூர்வகாலத்து ஸ்திரீகளில் பிராண நாதர்களைப் பிரிந்திருக்க மனமில்லாமல், உடன்கட்டையேறிய ஸ்திரீகள் உத்தமிகளாவார்கள். இனி, எதிர்காலத்திலே தர்மத்தின் பொருட்டாகவே வாழ்ந்து அதற்காகவே மடிந்து இதன் மூலமாகத் தமது நாயகர்களுடைய ஆத்மாவுடன் லயப்பட்டு நிற்கும் ஸ்திரீகளே மஹா ஸ்திரீகளாவார்கள்” என்று உடன்கட்டை ஏறுதலை ஆதரிப்பவராக மாறிவிடுகிறார்.

தொடக்கக் காலத்தில் பாரதியார் குழந்தை மணத்தை எதிர்த்தார். கலப்புத் திருமணங்களை ஆதரித்தார். பெண்கள் விவாகரத்து செய்து கொள்வதையும் ஆதரித்துள்ளார். ஏன், பெண்கள் திருமணத்தை விரும்பவில்லை என்றால் திருமணமே செய்து கொள்ளாமல் கூட விட்டு விடலாம் என்று கூறியவர், பிற்காலத்தில் தன் கருத்துகளைச் சிறிது சிறிதாக மாற்றிக் கொள்கிறார்.

கற்பு நிலை யென்று சொல்ல வந்தால் – இரு

கக்ஷிக்கும் அஃது பொதுவில் வைப்போம்

வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்

வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம் (கும்மி)

இவ்வாறு பெண் விடுதலைக் கும்மிப் பாடலை இயற்றிய பாரதிதான் பின்னாளில்,

“ஸாவித்திரி, ஸீதை, சகுந்தலை முதலிய பெண்களின் சரிதைகளைக் கேட்கும் போது, இத்தகையோர்களுக்கு இம்மாதிரி மனப்போக்கு எவ்விதம் ஏற்பட்டதென்று நினைத்து நினைத்து மிகுந்த ஆச்சரியமுண்டாகிறது. இம்மாதிரியான கற்புடைமை. இத்தேசத்துப் பெண்களுக்கு என்றும் ஒரு சிறந்த புவனமாக விளங்கி நின்றமை நமது நாட்டிற்கே ஒரு பெருமை ஆகும்’’ என பழைய சனாதன பெண்ணடிமை முறைகளை ஆதரிக்கிறார்.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் பெண்ணடிமை நிலையை கற்பின் அடையாளமாகப் பிழைபடக் காட்டுகிறார் பாரதி.

1909 ‘ஆகஸ்ட் இந்தியா’ இதழில், ஒழுக்கம் உள்ள பெண்களைப் பற்றிப் பாரதி கூறும் போது, “ஓ இந்தியனே! சீதை, சாவித்திரி, தமயந்தி இவர்களும், இன்னும் இவர்களைப் போன்ற ஸ்திரீ ரத்தினங்களும் உன் பெண்மணிகளாவர். ஒழுக்கத்திற்கு அவர்களை நமக்கு முன்மாதிரியாக வைத்துக் கொள்ளலாம்’’ என்கிறார்.

இன்னும் பிற்காலத்தில் 1920 மே மாதத்தில் தேசியக் கல்வி’ என்ற தலைப்பில் பாரதி எழுதும் போது பெண்கள் விவாகரத்து செய்து கொள்ளக்கூடாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார். அதுகுறித்து அவர், “காதல்  விடுதலை வேண்டுமென்று கூறும் கக்ஷியொன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சிற்சில பண்டித் பண்டிதைகளால் ஆதரிக்கப்படுகிறது. அக்னி சாக்ஷி வைத்து உனக்கு நான் உண்மை, எனக்கு நீ உண்மை என்று சத்யம் பண்ணிக் கொடுப்பதும், மோதிரங்கள் மாற்றுவதும், அம்மி மிதிப்பதும், அருந்ததி காட்டுவதும் முதலிய சடங்குகளெல்லாம் அனுபவத்தில் சஹிக்கத்தக்க அல்லது சஹிக்கத் தகாத பந்தங்களாகவே முடிகின்றன வென்றும், ஆதலால் அவற்றை இஷ்டப்படி அப்போதைக்கப்போது மாற்றிக் கொள்ளுதலே நியாயமென்றும், இல்லாவிட்டால் மனுஷ்ய ஸ்வதந்திரமாகிய மூலாதாரக் கொள்கைக்கே ஹானி உண்டாகின்ற தென்றும், ஆதலால் விவாகம் சாச்வபந்தம் என்று வைத்தல் பிழையென்றும் மேற்படி கக்ஷியார் சொல்லுகிறார்கள்.

ஆனால் தேசியக் கல்வியைக் குறித்து ஆராய்ச்சி செய்கிற நாம், மேற்படி விடுதலைக் காதற் கொள்கையை அங்கீகாரம் செய்தல் சாத்தியமில்லை…. விடுதலைக் காதலாகிய கொள்கைக்கும் மண வாழ்க்கைக்கும் பொருந்தாது’’ என்கிறார் பாரதி.

(தொடரும்…)