எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (105)

2022 ஆகஸ்ட் 01-15 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை

யார் புரட்சிக்கவி?
பாரதியா? பாரதிதாசனா?
என்ற தலைப்பில் ஜெ.இராமதாஸ் எம்.ஏ.பி.எல்., அவர்கள் விடுதலையில் எழுதியவை:
நேயன்


தந்தை பெரியாரின் படையில்…
பெரியாரின் பெரும் படையில் பல திறத்தினர் பங்கு கொண்டனர். ஆண், பெண், முதியோர், இளைஞர், பாமரர், பணக்காரர், படித்தோர், படியாதோர் அனைவரையும் அவ்வியக்கம் தன்பால் ஈர்த்தது. கல்லூரி கண்ட பலபேர்களைத் தன்வயப்படுத்தியது. கவிஞர் பலரை உருவாக்கியது. அந்தப் படை வரிசையில் முன்னணியிலிருந்தவர்கள், தளபதியாகத் திகழ்ந்தவர்கள் அறிஞர் அண்ணாவும், பாவேந்தர் பாரதிதாசனும் இவர்கள் ‘உலா’வை ‘மூவர் உலா’ எனக் குறிப்பிட்டது அன்றைய தமிழ்நாடு; சாக்ரட்டீஸ், பெர்னாட்ஷா, ஷெல்லி எனக் கூறி மகிழ்ந்தனர், மக்கள்.
பெரியாரின் புரட்சிக் கருத்துகளை இயற்றமிழ், நாடகத் தமிழில் ஏற்ற மிகச் செய்தவர் அறிஞர் அண்ணா. ‘பா’ அமைத்து பண்ணிசைத்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். இன்று பெரியாரின் வழியிலே பல பேராசிரியர்கள், பட்டதாரிகள், ஆற்றல் படைத்த இளைஞர்கள் பணிபுரியக் காண்கிறோம். நாட்டிற்கு நல்வாய்ப்பு ரூசோ, வால்டேர், கார்க்கி எழுத்துகள் பயன்பட்டது போன்று.

மதவாதிகள் நடுங்கினர்
பெரியாரின் தொண்டு மதவாதிகளைக் கலக்கியது. கலக்கியது, மட்டுமல்லாமல் உள்துறை சீர்திருத்தமும், செய்யத் தூண்டியது. (Interior Reformation) அதன் பலன் தான் தெய்வீகப் பேரவை. காவி கட்டிய குன்றக்குடி அடிகளாரின் சீர்திருத்தப் பேச்சுகள். “திருப்பாவை _ திருவெம்பாவை கூட்டு, ஜாதியில்லை, தீண்டாமை இல்லை என்ற பேச்சு அரசியல் சட்டங்கள், பட்டை, கொட்டை, பூச்சு மறைந்தது. ‘கண்டு முட்டு’ ‘கேட்டு முட்டு’ பறந்தது.

புரட்சிக்கவிஞர்
பாவேந்தர் காலத்திற்கு முற்பகுதியில் தோன்றிய மற்றொரு தமிழ்க்கவி பாரதியார் _ சுப்பிரமணிய பாரதி இவர் காலத்தில் தான் சூழ்நிலைக் குழந்தை பிறந்த இடம், வாழ்ந்த காலம் இவற்றின் பயனாய் உருவானவர். காந்தியத்தில் தோய்ந்த தேசியக் கவி, தமிழ்நாட்டின் முந்தைய கவிஞர்களிலிருந்து மாறுபட்டவர் இலகு தமிழில் பண்ணிசைத்தவர். பாமரருக்குப் புரியும்படி பாடினார். கவிதை புனைந்தார். ஆனால், இவரைப் புதுமைக் கவி என்றோ, புரட்சிக்கவி என்றோ கூறவியலாது. மேலே கூறிய புரட்சி விளக்க அளவுகோலைக் கொண்டு நோக்கினால் பாரதி, தேசியக் கவி. பழைய கள்ளை புதிய மொந்தையில் ஊற்றியவர் _ சனாதனி _ ஆரிய மதக் காவலர் _ பழமை விரும்பி. பல கடவுள் மதம், சாஸ்திரம், புராணம், மூடபழக்க வழக்கங்கள் மாறக் கூடாது. ‘சதுர்வர்ணம் _ மாயாவாதம்’ நீடிக்க வேண்டுமென்ற எண்ணம் படைத்த மிகப் பிற்போக்குவாதி.

பச்சைப் பார்ப்பனர்
புதுமைக் கருத்துகளுகெல்லாம் புரட்சி எண்ணங்களுக்கெல்லாம் பழைய முலாம்பூசி பாடி மகிழ்ந்த கவி _ வேதத்தில் _ ஆரிய மதத்தில் அசையாத நம்பிக்கையுடையவர். எனவேதான் பெரியார் அவர்கள் ‘பார்ப்பான் புத்தி போகாது’ என்பார்கள். ‘ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வைத்த பச்சைப் பார்ப்பனர், புதுமை புரட்சி எண்ணங்கள் மிளிர்வதை இலகு தமிழில் கவிதை பாடி அணை போட்டுத் தடுக்க முயன்றவர்.

முற்போக்கு பேசும் பார்ப்பனர்கள்!
இதைப் படித்தவுடன் பலருக்கு அய்யமேற்படலாம். ஏதோ கதைப்பதைப் போல் தோன்றலாம்! ஆனால், அத்துணையும் உண்மை!! அவரது பாடலிலிருந்து அசைக்க முடியாத ஆதாரத்துடன் எடுத்தியம்பலாம். அவருடைய வாதம் எதிர்மறை வாதம் (Negative approach) சட்டத்தில் ஆண் யாரென்றால் பெண் அல்லாதவர்கள் என்றும், பெண் யாரென்றால் ஆண் அல்லாதவர்கள் என்றும் கூறுவது போலிருக்கும். யாருக்கும் புரியாது! படிக்கப் படிக்கக் குழம்பும்! வழவழா கொழ கொழ வெண்டைக்காய் அத்தனையும் எப்படியும் பொருள் கொள்ளலாம். ஆனால், மிகப் பரவலான கருத்துகள் பழமை விரும்பியாக இருக்கும். காலநிலைக்கேற்ப பூதக்கண்ணாடி வைத்துத் தேட வேண்டிய அளவில் புதுமைக் கருத்து தூவப்பட்டிருக்கும். அறிஞர் அண்ணா கூறியதுபோல் முற்போக்கு பேசும் பார்ப்பனர் மிக ஆபத்தானவர்கள். காலத்திற்கேற்ப முறையை மாற்றிக்கொண்டவர்கள்.
பாரதியாரின் நூல் தலைப்பில் எல்லாம் பழமைப் புழு நெளியும். மூடநம்பிக்கை முடைநாற்றம் வீசும், புரையோடிய சமுதாயத்துக்கு புனுகு பூசப்பட்டிருக்கும். பாரதி பிரசுராலயத்தார் தோத்திரப் பாடல்கள் ஏழாம் பதிப்புக்கு எழுதிய முன்னுரை ஒன்றே போதும் பாரதியாரை யார் என்று புரிந்துகொள்ள. “பக்தி மலர்ந்த நம் பரத கண்டத்தில் தங்கள் இஷ்ட தெய்வங்களுக்கு பாமாலை சூட்டுவது புலவர்களின் இயற்கைக் குணமாகும். பாரதியாரும் இந்துக்கள் சாதாரணமாக வணங்கும் எல்லாத் தெய்வங்களைப் பற்றியும் பாடல்கள் இசைத்துள்ளார்.’’

பாரதி எழுதிய நூலின் தலைப்புகள்: தேசியகீதம், பாஞ்சாலி சபதம், சுயசரிதை, தோத்திரப் பாடல்கள், விநாயகர் நான்மணிமாலை (அதுவும் புதுவை மனக்குளப் பிள்ளையார்) கண்ணன் பாட்டு. பிற பாடல்கள் தலைப்பு: ஸ்ரீநிவேதிதா தேவியின் துதி, கவிதாதேவி அருள் வேண்டல், ராதைப்பாட்டு, வள்ளிப்பாட்டு, அக்னிக்குஞ்சு சாதாரண வருஷத்து தூமகேது, ஸ்ரீசுப்பராம தீக்ஷிதர் இரங்கற்பா, குரு கோவிந்த ஸம்ஹ விஜயம், சக்தி, கிருஷ்ண தோத்திரம் ஜெகத்சித்திரம் புரிகிறதா இப்போது பாரதி-யார் என்று? இங்கிலாந்து நாட்டு மன்னரை வரவேற்ற பாடலுமுண்டு என்று கூறுவர்! நான் கண்ட அளவிலே எந்தக் கருத்தைச் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களோ, அந்தக் கருத்துகளுக்கு ‘பா’ அமைத்தார். விலை போகும் சரக்காகத் தயாரித்தார். எதிர்நீச்சல் போட்டவர் அல்லர். ஒரு குறுகிய இந்து மதக் கண்ணோட்டத்தில் கவிதை புனைந்தவர். புதுமைக் கருத்துகளுக்கு பழமைத் தத்துவம் புகட்டும் ‘மோசடி’ என்ற மன்னிக்க முடியாத குற்றத்துக்குத் தன்னை ஆளாக்கிக் கொண்டவர்.

அவரது பாட்டுகளில் சில…
அவரது பாக்களில் சிலவற்றைக் கூறி அவரது உள்ளக்கிடக்கையை வெளிக்கொணர முயல்கிறேன். சிந்தியுங்கள். சிந்தை தெளிவு பெறுங்கள். ‘இலக்கிய ஆசிரியன் படிப்பவன் உள்ளத்தில் என்ன சிந்தனையைக் கிளறுகின்றானோ அதனைக் கொண்டே அவன் மதிப்பிடப் பெறுகின்றான்’’ என்கிறார் மாத்யூ அர்னால்டு.“Poets are judged by the frame of mind they induce”- Mathew Arnold.
சில பாடல் வரிகள்:
“விதியேவாழி _ விநாயகா வாழி
பிறைமதிசூடிய பெருமான் வாழி
சக்தி தேவி _ சரணம் வாழி’’
“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரதநாடு..
யாகத்திலே தவவேகத்திலே _ தனி யோகத்திலே பல போகத்திலே
ஆகத்திலே தெய்வ பக்தி கொண்டார் தம்
அருளினிலே யுயர் நாடு’
‘உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவுமிஃகை யெமக்கிலை யீடே
“நாவினில் வேத முடையவள் _ கையில்
நலத்திகழ்வாறுடையாள்தனை’’
“வேதங்கள் பாடுவள் காணீர் –
உண்மை வேல் கையிற்பற்றிக் குதிப்பாள்’’
ஓதருஞ் சாத்திரங் கோடி -_
உணர்த் தோதி யுலகெங்கும் விதைப்பாள்’’
(தொடரும்…)