எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (104)
பாரதி – யார்?
நேயன்
“சாதிகள் இல்லையடி பாப்பா’’ என்று பாரதி பாடியதை எடுத்துக்காட்டி போற்று-வோர் உண்டு.
பாரதிக்கு முன், காலத்தால் முந்தியும் கருத்தால் ஓங்கி வளர்ந்த வள்ளலார் பாடியதை யார் புகழ்ந்துரைக்கிறார்கள்? வள்ளலார் 1865ஆம் ஆண்டிலேயே ‘சமரச சுத்த சன்மார்க்க சங்கம்’ நிறுவியவர், அவர் பாடுகிறார்.
“சாதியு மதமுஞ் சமயமுந் தவிர்த்தேன்
சாத்திரக் குப்பையுந் தணந்தேன்’’ என்றும்,
“கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலா மண்மூடிப் போக” என்றும்,
கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
கூட்டமுமக் கூட்டத்தே கூவுகின்ற கணியுங்
கள்ளமுறு மாக்கலைகள் காட்டியபல் கதியுங்
காட்சிகளுங் காட்சிதரு கதியுங் கடவுளுரு யெல்லாம்
பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
பிள்ளையெனக் கொண்டு பிள்ளைப் பெயரிட்ட பதியே
என்றும்,
நால்வருண மாச்சிரம மாச்சார முதலா
நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே
மேல்வருணந் தோல்வருணங் கண்டறிவாரிலை நீ
விழித்திதுபா ரென்றெனுக்கு விளம்பியசற் குருவே
என்றும் சாடிய வள்ளலாரைப் பற்றிப் புகழ்வதற்கு யாரும் முன் வருவதில்லை. பதினெண் சித்தர்கள் பாடிய பாடல்க-ளெல்லாம் மூடநம்பிக்கைகளையும், முடைநாற்றம் வீசும் கடவுள் கதைகளையும் வெறுத்து ஒதுக்குவதை யாரும் நினைவூட்டுவதில்லை. “சாதிகள் இல்லையடி பாப்பா’’ என்று பாடிய பாரதி,. அவர்களுக்கு மூலமாக விளங்கும் நால் வருணத்தைப் போற்றுகிறான்.
“நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே – செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி’’
என்று பாடுகிறான். நான்கினில் ஒன்று குறைந்தால் மானிடச் சாதியே செத்து மடியும் என்கிறான் பாரதி.
அய்யா அவர்கள்தான் கூறுவார், “ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி’’ என்று பாடுகிறானே, ஆயிரம் சாதிகள் இருந்தால் ஆயிரம் பிளவுகள் இருக்கின்றன என்று பொருள்.
அப்போது அந்நியன் புகாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பானா?’’ என்று.
எனவே, நான்கு வகுப்பும் இருக்க வேண்டும். நான்கு வகைத் தொழிலையும் பரம்பரையாய் செய்ய வேண்டுமென்றால் அந்தப் பாரதியை சாதி ஒழிப்புக்குப் பாடியவன் என்று எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?
“பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன்
பார முனக் காண்டே’’ – என்றும்
தோட்டங்கள் கொத்திச் செடிவளர்க்கச் சொல்லி
சோதனை போடாண்டே
காட்டு மழைக்குறி தப்பிச் சொன்னா லென்னைக்
கட்டியடி யாண்டே
ஆண்டே – கட்டியடி யாண்டே’’
எனப் பாடுகிற பாரதி ஆச்சாரியாருக்கு முன் குலத் தொழில் பற்றிப் பாடியவன் என்றுதான் கூறவேண்டும். விதிக்கு விளக்கமளிப்பதைப் போல வேறொரு பாட்டில் குறிப்பிடுகிறான்.
“மரத்தினை நட்டவன் தண்ணீர் – நன்கு
வார்த்தே ஓங்கிடச் செய்வான்’’
என்று இது மட்டுமா?
பக்தியினாலே-இந்தப்
பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ”
என்றும் பாடுகிறான்.
“ஆயிரம் தெய்வத்தைத் தேடும் அறிவிலிகாள்” என்றவன்,
காட்டு வழிதனிலே – அண்ணே
கள்ளர் பயமிருந்தால் – எங்கள்
வீட்டுக் குடிதெய்வம் – தம்பி
வீரம்மை காக்குமடா!’’ என்றும்,
“வெள்ளைக் கமலத்திலே-அவள்
வீற்றிருப்பாள்-புகழேற்றிருப்பாள்” என்றும்,
மாகாளி, மகாசக்தி இன்னபிற தெய்வங்களையும்
பாடி மகிழ்கிறான். காடனை, மாடனை
வெறுத்த பாரதி அக்கார அடிசிலுக்குரிய தெய்வங்களைப்
புகழ்ந்து ஏற்றுகிறான்.
வேள்விகள் கோடி செய்தால்-சதுர்
வேதங்க ளாயிரமுறை படித்தால்
மூளு நற்புண்ணியார் தான்-வந்து
மொய்த்திடும் சிவணியில் விளங்கி நிற்கும் என்றும்,
“ஆதிசிவன் பெற்று விட்டான்-என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்’’ என்றும்,
பார்ப்ப னக்குலங் கெட்டழி வெய்திய
பாழ டைந்த கலியுக மாதலால்
வேர்ப்ப வேர்ப்பப் பொருள் செய்வ தெண்ணியே
மேன்மை கொண்ட தொழிலெனக் கொண்டன’’
என்றும் தம் சுயசரிதையில் பாடியவன் “பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே’’ என்று பாடியிருப்பது மனநோய்ப் புலவன் என்பதை நிரூபித்துக் காட்டுகிறது.
உண்ணச் சாதிக் குறக்கமும் சாவுமே
நண்ணு றாவணம் நன்கு புரிந்திடும்
எண்ண ரும்புகழ்க் கீதையெனச் சொலும்
பண்ண மிழ்தத் தருள்மழை பாலித்தே’’
என்று கண்ணன் பாட்டில் கீதையின் அருள்மழையைப் பாடுவதால் “சதுர்வருணம்’’ (நால் வகைச் சாதி) போற்றும் கீதையை ஏற்றுக் கொள்ளுகிறேன் என்பதை பாரதி ஒப்புக்-கொள்ளுகிறான்.
எந்த நாடு (தேசம்) விடுதலை பெற விழைகிறான் பாரதி தெரியுமா?
“எங்கள் ஆரிய பூமியெனும் பயிர்
மங்களம் பெற நித்தலும் வாழ்விக்கும்’’ என்றும்,
“பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
அய்யுற வின்றிக் களித்திருப் பாரவர்
ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்” என்றும்,
“வேதம் முடையதிந்த நாடு-நல்ல வீரர்
பிறந்த திந்த நாடு” என்றும்,
“வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே
நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்’’
என்றும் பாடிய பாரதி இந்துமதம் பற்றியும் பாடுகிறான்.
புத்தமுதாம் ஹிந்துமதப் பெருமை தனைப்
பாரறியப் புகட்டும் வண்ணம்
தந்து புகழ் வளப்பாண்டி நாட்டினிற்
காவைக் குடியூர் தனிலே சால”
என்று சனாதன மதத்தையே போற்றுகிறான். எனவே, பாரதி யார்? என்று வினவினால் பாரதி சாதியைச் சாடுவது போல் நான்கு வருணம் போற்றியவன்.
அவன் ஆயிரம் தெய்வங்களை வெறுத்தது போல் பாடி ஆரியக் கடவுள்களைப் புகழ்ந்து பாடியவன்.
உயர்வு தாழ்வு கூடாது என்று பாடியவன் சாதிக்கு வித்திடும் கீதையைப் போற்றுகிறான். வேதத்தையும், வேள்விகளையும் போற்றுகிறான். இவைதாம் தமிழர்கள் ‘தன்மானம்’ இழக்கக் காரணமாக இருந்தவை. இவற்றைப் போற்றுகின்ற பாரதி என்ற பார்ப்பான் எப்படி ‘தன்மானம்’ பற்றி தமிழர்களுக்குப் பாடினான் என்று கூறமுடியும்?
எனவே, பாரதி ஓர் இந்துமதப் பற்றாளன். அவன் பாடிய பாடல்கள் ஆரிய பூமியையும், கீதை உபதேசத்தையும் கொண்டிருப்பது வெள்ளிடைமலை.
பாரதி சாடியதாக எவரேனும் எண்ணினால் ‘வஞ்சப் புகழ்ச்சி’ அணிகொண்டு பாடியிருக்கிறான் எனக் கொள்ள வேண்டும்.
ஆரியத்தின் அடிவருடிகள் விழா எடுக்கலாம். அதற்காகப் பகுத்தறிவுவாதிகளைச் சாடுவது இருக்கும் இடத்திற்கு அழகல்ல.
இவை பற்றித்தான் இராவண காவியம் பாடிய பெரும் புலவர் குழந்தை அவர்கள் காவியத்தின் ஓரிடத்தில் பாடுகிறார்.
“நீறு பூத்த நெருப்பன தீயரை
வேறு பார்த்து விலக்கிவை யாதுநற்
சோறு பார்த்துச் சுவைத்துண வைத்ததாற்
கூறு பார்த்துத் தமிழரைக் கொன்றனர்”
என்று தெளிந்து பாடியதை வள்ளுவனும் “செப்பின் புணர்ச்சி போல்’’ எனும் உவமையால் சுட்டுகிறான்.
செப்பின் புணர்ச்சிபோல் உள்ள அயலரின் செப்பிடு வித்தையை உணரும் நாள் எந்நாளோ அந்நாளே பாரதி_யார்? என உணரும் நாளாகும். பாரதி மட்டுமன்றி இன்றைய ஆட்சிச் சாரதியும் உள்ளடக்கம்.
– தஞ்சை ஆடலரசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக