பக்கங்கள்

ஞாயிறு, 6 நவம்பர், 2016

பஞ்சக்கச்சம் கட்டிக்கொண்டு சதுராடும் ஆரியம்!


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8 ஆம் அட்டவணையில் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இதில் எந்த மாநிலத் திலும் பேசப்படாத மொழி ஒன்று உண்டு என்றால், அது சமஸ்கிருதம் மட்டுமே என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.
சமஸ்கிருதம் எங்கே?
இந்தி மொழி - டில்லி, உ.பி., பீகார், அரியானா, ராஜஸ்தான், சத்தீஷ்கர், ஜார் கண்ட், இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் பேசப்படுகிறது.
அஸ்ஸாமி - அஸ்ஸாம் மாநிலத்திலும், அதனை ஒட்டிய வடகிழக்கு மாநிலத்திலும் பேசப்படும் மொழி
வங்க மொழி - மேற்குவங்கம், மற்றும் அஸ்ஸாமில் பேசப்படும் மொழி.
டோகிரி மற்றும் உருது ஜம்மூ-காஷ்மீரில் பேசப்படும் மொழி
குஜராத்தி - குஜராத் மற்றும் வட மகாரஷ்டிராவில் சில இடங்களில் பேசப் படும் மொழி
கன்னடம் - கருநாடகம், மராட்டிய மாநிலத்தின் சிலபகுதிகளில் பேசப்படும் மொழி
கொங்கனி - கோவா மாநிலத்தில் பேசப்படும் மொழி
காஸி - மேகாலயா மாநிலத்தில் பேசப் படும் மொழி
மலையாளம் - கேரளாவில் பேசப்படும் மொழி
மராட்டி - மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பேசப்படும் மொழி
மணிப்பூரி - மணிப்பூர் மாநிலத்தில் பேசப்படும் மொழி
மிசோ - மிசோராம் மாநிலத்தில் பேசப் படும் மொழி
ஒரியா - ஒரிசா மாநிலத்தில் பேசப்படும் மொழி
பஞ்சாபி - பஞ்சாப் மற்றும் அரியா னாவில் பேசப்படும் மொழி
தமிழ்  - தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா வில் பேசப்படும் மொழி
தெலுங்கு மொழி - ஆந்திரா, தெலுங் கானா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் பேசப்படும் மொழி
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வரையறுக்கப்பட்ட இந்திய மக்கள் பேசும் மொழிகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. எந்த இடத்திலும் சமஸ்கிருதம் இல்லை.
இந்திய அளவில் அது பேசப்படுவ தாகக் கூறப்படும் மக்களின் எண்ணிக்கை வெறும் 14,346 ஆயிரம் மட்டுமே. அதுவும் அன்றாட வாழ்க்கையில் பேசுகிறார்கள் என்றுகூட சொல்ல முடியாது. கோவில் களில் அர்ச்சனைகளில், குடமுழுக்குகளில், கல்யாணம், கருமாதி போன்றவைகளில் மந்திரங்களாகச் சொல்லப்படும் அளவுக் குத்தான் சமஸ்கிருதம் ஏதோ இருந்து வருகிறது.
இந்த நிலையில், சமஸ்கிருதத்துக்காக மத்திய அரசு கொட்டி அழும் மக்கள் வரிப் பணமோ கொஞ்சநஞ்சமல்ல!
2014
2014 ஆம் ஆண்டு சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக பல்கலைக்கழகங்களுக்கு ரூ.170 கோடி  ஒதுக்கீடு
சமஸ்கிருத வாரம் கொண்டாட 470 கோடி ரூபாயை 2015 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கியுள்ளது
அய்.நா.வின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தியை அறிவித்தால் அதற் காகச் செலவாகும் சுமார் ரூ.270 கோடியை இந்திய அரசு ஏற்கத் தயாராக இருப்ப தாகவும்; இதில் செலவு ஒரு பொருட்டே அல்ல என்றும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்தார்.
2015
23.7.2015 சமஸ்கிருத மொழிவளர்ச்சிக் காக சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மனிதவளத் துறை அமைச்சகம் ரூ.320 கோடி ஒதுக் கியது.
2015 ஆம் ஆண்டு ஜூலையில் பாங்காக்கில் நடைபெற்ற சமஸ்கிருத மாநாட்டிற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு
பீகார் தேர்தலை ஒட்டி பீகார் மாநிலத் தில் சமஸ்கிருத்தில் சாமியார்களை விட்டு பிரச்சாரம் செய்த பாஜக, தேர்தல் விளம்ப ரங்களை சமஸ்கிருதத்திலேயே கொடுத்தது.
2016
2016 ஆம் ஆண்டு ரூ.70 கோடி ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தான் என்ற சமஸ்கிருத மொழி வளர்ச்சித் துறைக்கு - புதிய ஆய்வு மாணவர்களுக்குத் தேவை யான உதவிகளைச் செய்ய ஒதுக்கியுள்ளது
சமஸ்கிருத வளர்ச்சிக்கென்று வேதிக் போர்ட் என்ற ஒரு தனிப்பிரிவை உரு வாக்கும் திட்டம்.
கேரளாவில் மாணவர்கள் சேர்க்கை யில்லாமல் அய்ந்து சமஸ்கிருதப் பள்ளிகள் மூடப்பட்டன.
சமஸ்கிருத பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு
வட மாநிலங்களில் உருது ஆசிரியர் களுக்கு கட்டாய சமஸ்கிருத பயிற்சி
கேந்திரிய வித்யாலயாக்களில் மூன் றாவது மொழியாக இருந்த ஜெர்மனியைத் தூக்கி எறிந்துவிட்டு, அந்த இடத்தில் சமஸ்கிருதத்தை குடியேற்றியுள்ளார்கள். மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம் சமஸ்கிருத, இந்தி மொழிப் பெயர்கள்தான்.
2014ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை
மோடி அரசின் திட்டங்கள்
1. அடல் பென்சன் யோஜனா
2. பசத் ஊர்ஜா யோஜனா
3. தீன் தயாள் திவ்யாங் புனர்நிவாஜ் யோஜனா
4. கிராம் ஜோதி யோஜனா
5. கிராமின் பந்தனர் யோஜனா
6. ஜனனி சுரக்ஷா யோஜனா
7. யுவாஊர்ஜா யோஜனா
8. கிஷோர் வைக்யஞ்க் ப்ரொஷ்தன் யோஜனா
9. ப்ரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா
10. பிமா யோஜனா
11. ஜீவஜோதி யோஜனா
12. ஜனதன் யோஜனா
13. கிராம் சடக் யோஜனா
14. ராஷ்டிரிய கிரிஷி விகாஷ் யோஜனா
15. ராஷ்டிரிய சுவஸ்திக் விகாஷ் யோஜனா
16. ஷக்சம் யோஜனா
17. சம்பூர்ண கிராம் ரோஜ்கார் யோஜனா
18. ஸ்வபிமான் பாரதி
19. ஸ்வர்ண ஜெயந்தி கிராம்ஸ்வர் ஊர்ஜா யோஜனா
20. ஸ்வலாபமபன்
21.. உதிஷா யோஜனா
22..சுகன்யா சமருத்தியோஜனா
23. ப்ரதான் மந்திரி அவாஜ் யோஜனா
24. அந்தயோதா அன்ன யோஜனா
25. ப்ரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா
26. பிரதான் மந்திரி உஜவல் யோஜனா
27. ஸ்வட்ச் பாரத்
28. நயி நிவாஜ் யோஜனா.
இதற்கிடையே தேர்தல் ஆணையத்தின் மேனாள் ஆணையர் கோபால்சாமி அய்யங்கார் தலைமையில் 13 பேர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு, சமஸ்கிருத வளர்ச் சிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை பத்து ஆண்டு களுக்கான திட்டங் களாம். நாட்டில் எத்தனையோ மொழிகள் இருக் கின்றன. சில அழிவின் விளிம்பில் தொற்றிக் கொண்டுள் ளன.
அந்த மொழி களை உயிர்ப் பிப்பது குறித்தோ, வளர்ப்பது குறித்தோ மத்தியில் உள்ள மோடி அரசுக்கு அக்கறையில்லை. ஏற்கெனவே செத்துச் சுண்ணாம்பாகி விட்ட சமஸ்கிருதத்தை வாழ வைக்கத் திட்டம் தீட்டுகிறார்களாம். (தேவ பாஷையின் கெதியைப் பார்த்தீர்களா).
10 ஆண்டுகளுக்கான சமஸ்கிருத மொழிவளர்ச்சிக்கு என கோபால்சாமி அய்யங்கார் குழு கொடுத்துள்ள அறிக்கையின் ஒரு துளி
சமஸ்கிருத்தை பள்ளிகளில் கற்பிக்கும் போது ஆசிரியர் சமஸ்கிருத்திலேயே பேசவேண்டும். மாணவர்களுக்கு சமஸ் கிருதத்தில் பேசி அதற்கான விளக்கத்தைக் கொடுக்கவேண்டும். பள்ளிக்கூடத்தில் வகுப்பறை, ஆய்வு அரங்கம், விளையாட்டு மைதானம் போன்ற இடங்களிலும் சமஸ்கிருதம் பேசவேண்டும்
மாணவர்கள் பள்ளிகள் மட்டுமல்லாது வெளியிடங்களிலும் சமஸ்கிருதம் பேச வேண்டும். சமஸ்கிருதம் பேசுவதை கேலி செய்தால் அதற்காக கோபப்படாமல் சமஸ்கிருத்தை தொடர்ந்து பேசவேண்டும்
பொதுவிடங்களில் முக்கிய பொருள் குறித்து விவாதிக்கும் போது சமஸ்கிருதத் திலேயே பேசவேண்டும்
சிறு சிறு குறிப்புகளை சமஸ்கிருதத்தில் எழுதப் பழகவேண்டும். பொதுவிடங்களில் (வங்கி, பேருந்து, பூங்கா) சமஸ்கிருதத் திலேயே உரையாடி அதற்கான விளக்கத்தை பிற மொழியில் கூறவேண்டும். எந்த ஒரு விண்ணப்பத்தையும் சமஸ்கிருதத்தில் தந்து அதற்கான விளக்கத்தை பொது மொழியில் தரவேண்டும் என்கிறது அய்யங்கார் குழு.
பள்ளிக் கல்வி, பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி, அறிவியல், சமூகவியல் ஆய்வு உள்பட அனைத்துக் கல்வித் துறை களிலும் சமஸ்கிருதத்தில் பாடத் திட்டங்கள் வகுப்பது, அய்.அய்.எஸ்.இ.ஆர். (Indian Institute of Scientific Education Research) மத்தியப் பல்கலைக் கழகம், என்.அய்.டி., அய்.அய்.டி., அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, அங்கீகரிக்கப்பட்ட தொழில் நுட்பக் கல்லூரிகள் உள்பட  சமஸ்கிருதப் பிரிவுகள் துவக்கப்பட உள்ளன. போர்க்கால வேகத்தில் பார்ப்பனீய மொழி பரப்பப்படு வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
சமஸ்கிருதம், வேதக் கல்வி நிறுவனங் களை நிருவகிப்பதற்கென்றே தனி வாரியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. வேதக் கல்வி வாரியம் (Vedic Education Board) ஒன்று துவங்கப்படுகிறது. இதுகூட கோபால்சாமி அய்யங்கார் குழுவின் பரிந்துரைகளுள் ஒன்றே!
அரியானா மாநிலத்தில் உருது மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சமஸ்கிருதப் பயிற்சி அளிக்கப்பட்டு, உருது மொழி பயிலும் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கற்பிக்கப்பட ஏற்பாடாகி வருகிறது.
‘‘ஆக்ராவில் 2800 துவக்கப் பள்ளி மற்றும் மேனிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் உருதுமொழி ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது. 150 ஆசிரியர்கள் உருது மொழியைக் கற்பித்து வருகின்றனர். அந்த உருது ஆசிரியர்களுக்கு ஆக்ரா நிருவாகம் சமஸ்கிருதப் பயிற்சியை அளித்து வருகிறது.
மக்களைப் பிறப்பின் அடிப்படையில் நான்கு வருணங்களாகப் பிளவுபடுத்தியதும், தமிழில் ஊடுருவி தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளை  சிதைத்து உருவாக்கியதும் பார்ப்பனர்களின் சமஸ்கிருதமே - ‘‘இந்தியாவின் ஆட்சி மொழிக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதமே’’ என்று ஆர்.எஸ்.எஸின் குருநாதரான எம்.எஸ். கோல்வால்கர் ‘ஞானகங்கை’யில்  (Bunch of Thoughts) குறிப்பிட்டுள்ளார். ஆர்.எஸ். எஸின் கையாளாகிய பி.ஜே.பி. மத்தியில் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளதால், சமஸ்கிருதத்தை எல்லா வகையிலும் திணிக்கப் பஞ்சக்கச்சம் கட்டிக் கொண்டு சதுராடுகிறது - எச்சரிக்கை! எச்சரிக்கை!!
தந்தை பெரியார் கைத்தடியைக் கொடுத்துவிட்டுத்தான் சென்றுள்ளார்.


சான்ஸ்கிருதி
இந்துக்கள் என்போர் தம்மளவில் ஒரு தேசமாகவும், (Nation), ஜாதி(Caste) ஆகவும் மட்டுமன்றி, ஒரு பொதுவான சன்ஸ்கிருதி (Sanskitriti) பண்பாட்டிற்கு உரியவர்கள் என்றார் சாவர்க்கர். இந்துக்களின் தாய்மொழி சமஸ்கிருதம்தான் என்றார் அதே சாவர்க்கர்.
இந்த அடிப்படையில்தான் இன்றைய இந்துத்துவா பி.ஜே.பி. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
உண்மையில் இந்தியாவில் பல இனங்கள், பல பண்பாடுள்ள மக்களாகத்தான் வாழ்கிறார்கள்.
இந்து மதத்துக்குள்ளேயே பல முரண்பாடுகள், பல கலாச்சாரம் உள்ளவர்கள், பல மொழிகளைப் பேசக் கூடியவர்களாக இருப்பதை  உணர்ந்தால், சாவர்க்கரின் கூற்று பைத்தியக்காரத்தனமானது - உண்மைக்கு மாறானதே!
-விடுதலை,13.8.16

மகிஷன் ஒரு பவுத்த அரசன்

இந்து புராண புரட்டுகள் மூலம் அசுரனாக்கப்பட்ட மகிஷன் ஒரு பவுத்த அரசன் 

மைசூரு அல்லது மகிஷ மண்டலா ராஜாங்கத்தின் மிகச் சிறந்த ஆட்சியா ளராக இருந்தவர் மகிஷா. புத்தமத கலாச்சாரத்திலும் மரபிலும் வந்த மகிஷா, மனிதநேயத்தையும் ஜனநாயக கொள்கைகளையும் தனது ஆளுமையில் பின்பற்றினார். ஆனால், கர்நாடகத்தின் கலாச்சார மற்றும் அறிவுசார் தலை நகரமான மைசூருவை,
புராணங்கள் மூலம் பார்ப்பன சக்திகள் திட்ட மிட்டே புதைத்தன என்கிறார் பேரா சிரியர் மகேஷ் சந்திர குரு. விரைவில் வெளிவரவிருக்கும் (MAHISHASUR BRAHMANIZING A MYTH) என்ற நூலிலிருந்து இந்த கட்டுரையை ஃபார்வர்டு பிரஸ் வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கம் இங்கே:
மைசூரு, கர்நாடகத்தின் இரண் டாவது மிகப் பெரிய நகரமாக இருக்கிறது. பெங்களூருவிலிருந்து 130 கிமீ தென்கிழக்கில் அமைந்துள்ளது. பண்டைய வரலாற்றில் அசோக அரசரின் காலத்தில் அதாவது கி.மு. 245இல் மைசூர் அல்லது மகிஷூர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவது புத்தமத பட்டமேற்பு விழாவுக்குப் பிறகு, மகாதேவா என்னும் பெயர் கொண்ட புத்தத்துறவியை அசோகர், புத்தமத கொள்கைகளைப் பரப்பி மக்கள் நலன்சார்ந்த அரசை நிறுவும்படி அனுப்பிவைத்தார்.
மகாதேவா, மகிஷா என பின்னர் அழைக்கப்பட்டு, மகிஷ மண்டலா எனும் ராஜ்ஜியத்தை நிறு வினார். கர்நாடகாவின் வடக்குப் பகுதி களில் அசோகரின் சில அரசாணைகள் கிடைத்துள்ளன. மகிஷனின் அரசாட் சிக்கு சான்றாக வரலாற்று நினைவுச் சின்னங்கள், காப்பக ஆவணங்கள் இந்தப் பகுதியில் கிடைத்துள்ளன.
கி.பி. 1399 ஆம் ஆண்டு மைசூரு, யது வம்சம் ஆட்சியின் கீழ் வந்தது. விஜயநகர அரசின் எதிரிகளாக யது வம்சத்தினர் இருந்தனர். மைசூரு மாகாணத்தின் வளர்ச்சியில் அவர்களும் முக்கிய பங்காற்றியுள்ளனர். மைசூரு வின் ராஜாவாக இருந்த பெட்டத காமராஜ உடையார், கி.பி. 1584ஆம் ஆண்டு சிறிய கோட்டை ஒன்றைக் கட்டினார். தனது தலைநகரமாக மைசூருவை மாற்றிய ராஜா, அதை மகிஷாசுர நகர என அழைத்தார். 17 -ஆம் நூற்றாண்டின் காப்பக ஆவணங் கள் பலவற்றில் மைசூரு, மகிஷுரு எனவே குறிப்பிடப்படுகிறது. ராஜா உடையார் தனது தலைநகரை மைசூரு விலிருந்து சிறீரங்க பட்டணாவுக்கு கி.பி. 1610-ஆம் ஆண்டில் மாற்றினார்.
ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் மைசூருவின் சிறந்த ஆட்சியாளர்களாக இருந்தார்கள். ஹைதர் அலி, மைசூரு ராஜாங்கத்தை விரிவுபடுத்தினார். அவருடைய மகன் திப்பு சுல்தான், தனது சர்வதேச தொடர்புகள் மூலம் ராஜாங் கத்தை மேலும் முன்னேற்றினார். இந்தியாவை ஆண்ட பிரிட்டீசாருடன் அவர் எவ்வித சமரசங்களையும் செய்து கொள்ளவில்லை.
ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போரிட்டு 1799-ஆம் ஆண்டு அவர் உயிர் துறந்தார். அவருடைய பெயர் நவீன இந்திய வரலாற்றில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. திப்பு சுல்தான் இறந்த பிறகு, மைசூரு, உடையார்களின் தலைநகராக மீண்டும் உருவானது. பிரிட்டீசார், உடையார்களை  அரி யணை ஏற்றி, தங்களுடைய கூட்டாளி களாக ஆக்கிக் கொண்டார்கள். மைசூரு சுதேசி மாகாணமாக மாறியது.
சிறுநகரமாக இருந்த மைசூரு, நவீன நகரமாக உருமாறியது 2-ஆம் கிருஷ்ண ராஜா உடையார் காலத்தில். 4-ஆம் கிருஷ்ணராஜா உடையார், புதிய கட்டு மானங்களை நிர்மாணித்து, பொரு ளாதாரா ரீதியில் விரிவுபடுத்தி மைசூ ருவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வந்தார். அவர் ஜனநாயகவாதி, மனித நேயம் மிக்கவர், வளர்ச்சியை முன் வைத்த நிர்வாகி. 1947-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடையும் வரையிலும் உடை யார்களின் ஆட்சி இங்கே தொடர்ந்தது. அதன் பிறகு ஒருங்கிணைந்த இந்தி யாவின் அங்கமானது மைசூரு.
பவுத்தத்துக்கும், பார்ப்பனியத்துக்கும் இடையேயான மோதலின் வரலாறே இந்திய வரலாறு என அம்பேத்கர் இந்திய வரலாறு குறித்து சொல்லுவார். பார்ப்பனியம், ஜாதி அமைப்பையும் ஜாதிய ஆதிக்கத்தையும் வலியுறுத்தியது. பவுத்தம், மனிதநேயத்தை அறம் சார்ந்த ஜனநாயகத்தையும் பேசியது. ஆரியர்கள், இந்தியாவின்மீது படையெடுத்து மண்ணின் மைந்தர்களை ஜனநாயக மற்ற முறைகளில் ஒடுக்கினார்கள். அதுபோல, பவுத்த அடித்தளத்தை சிதைத்து பார்ப்பனியத்தை நடைமுறைப் படுத்தினார்கள்.
ஆரியர்களின் புரட் டுகள் மூலம் மண்ணின் மைந்தர் களான, மகிஷா போன்ற ஆட்சியா ளர்கள் தூக்கி எறியப்பட்டார்கள்.
மைசூரு, மகிஷ மண்டலா, மகிஷாசுரநாடு, மகிஷநாடு, மகிஷபுரா என பலப் பெயர்களில் வழங்கப்பட்டது. வேளாண்மையை முதன்மையாகக் கொண்ட மாகாணமாக திகழ்ந்த மகிஷ மண்டலத்தில் எருமைகள் உழவுக்கும், பால் தேவைக்கும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. மைசூரு, எருமைகளின் நாடு எனப் போற்றும் வகையில் எருமையூர் (பேரா.குரு எருமையூரன் என்கிறார், அன் விகுதி மகிஷனை குறிக்கலாம்) என்று அழைக் கப்பட்டது. பவுத்த மற்றும் ஹொய்சால இலக்கியங்களில் மகிஷ மண்டலம் குறித்து ஏராளமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்தக் காலகட் டத்தில் இந்த மாகாணத்தில் ஏராள மான நகரங்கள் இருந்திருக்கின்றன.
பிறப்பில் திராவிடர்களாக இருந்த நாகர்கள், தென் இந்தியாவை ஆண் டனர். பேராசிரியர் மல்லேபுரம் ஜி. வெங்கடேஷ் நாகர்களுக்கும் மகிஷ மக்களுக்கும் தொடர்பிருப்பதை கண்டறிந்திருக்கிறார். நாகர்கள் தங்களுடைய கலாச்சாரம் மதிப்புமிக்கது என்பதை உணர்ந்து ஆரிய ஊடுரு வலைத் தடுக்க போரிட்டார்கள். மானுடவியலாளர் எம் . எம். ஹிராமத், கர்நாடகத்தில் நாகர்கள், மகிஷர்கள் என்ற இரண்டு மிகச் சிறந்த இனங்கள் இருந்ததாகச் சொல்கிறார்.
ஆரியர்கள் புராணங்கள் மூலம், பவுத்த அரசர்களை சிறுமைப்படுத்தி னார்கள். அவர்கள்விட்ட ஒரு புரட்டுதான் இந்தக் கதை: ஒரு மனிதன், எருமையுடன் உறவுகொண்டதால் பிறந்தவனே மகிஷன் என்ற கதை. வரலாற்றாசிரியர் மஞ்சப்ப ஷெட்டி (The palace of mysore - -- என்ற நூலின் ஆசிரியர்)யின் கூற்றுப்படி, மக்களைக் காப்பாற்றும் பொருட்டும், நீதியை நிலைநாட்டும் பொருட்டும் சாமுண்டி என்ற பெண்கடவுள், மகிஷனைக் கொன்றதாக பூசாரிகளே பொய்க் கதையைப் பரப்பினர் என்கிறார். மகிஷன் ஒரு அசுரன் என்பதை வேண்டுமென்றே ஊன்றினார்கள்.
சாமுண்டீஸ்வரிதான் மகிஷனைக் கொன்றாள் என்கிற இந்து புராணக் கதைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை.  மகிஷன் உண்மையில் பவுத்த- பகுஜன் அரசன்; நீதி, சமத்துவத்தின் குறியீடு. ஒரு கையில் வாள் ஏந்தியும் மற்றொரு கையில் பாம்பொன்றை பிடித்திருப்ப தாகவும் உள்ளது மகிஷனின்  உருவம். மகிஷனின் வீரத்தை வாளும், நாகா கலாச்சாரத்தில் பவுத்தம் வலியுறுத்திய இயற்கையின் மீதான அன்பை பாம்பும் குறிக்கின்றன.
நாட்டுப்புறவியல் நிபுணர் காலே கவுடா நாகாவார், தற்போது மைசூரு என வழங்கப்படும்  மகிஷ மண்ட லத்தை மகிஷன் ஆண்டார். அவர் ஓர் உன்னதமான பவுத்த அரசராக இருந்தார். முற்போக்கான நிர்வாகி யாகவும் சமூகத்தின் எல்லா பிரிவினரின் அதிகாரத்தை நிலைநாட்டியவராகவும் இருந்தார். உண்மைகள் திரிக்கப்பட் டன. மக்கள் உண்மைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். இந்து புராணங் கள் மகிஷனை எதிர்மறையாகக் காட் டின. இந்த மாகாண மக்கள் தசரா விழாவை மகிஷ மண்டலத்தின் கீழ் வேறுவிதமாகக் கொண்டாட வேண்டும் என்கிறார்.
பிரபல எழுத்தாளர் (கன்னட) பன்னூர் ராஜா, சாமுண்டி மலை, முன்பு மகாபலேஸ்வரம் என அழைக் கப்பட்டது. இப்போதும் இந்தக் குன்றின் மீது, மகாபலேஸ்வரா கோயில் உள்ளது. யது வம்ச ஆட்சியின் போது சாமுண்டி என இந்த மலை பெயர் மாற்றம்பெற்றது.  பூசாரிகளுடன், ஆட்சியாளர்களும் சேர்ந்துகொண்டு சாமுண்டீஸ்வரி, மகிஷாசூரனைக் கொன்றாள் என்ற கதையைப் புனைந் தார்கள். இது ஆதாரமற்றது; கண்டிக் கத்தக்கது என்கிறார்.முற்போக்கு சிந்தனையாளரும் மகிஷ மண்டலா என்னும் நூலின் ஆசிரியருமான சித்தஸ்வாமி சொல்கிறார்: மகிஷா என்பதே மைசூரு என்பதன் வேர்ச் சொல். அசுரன் என்று எழுதிய குழுவாத எழுத்தாளர்களின் சூழ்ச்சிக்கு அவர் இரையானார். புத்தர் மற்றும் அசோகரின் கொள்கைகளை நடை முறைப்படுத்திய மகிஷா, ஓர் சிறந்த ஆட்சியாளர் என்று சொல்கிறார்.
வரலாற்றை மீட்டெடுத்தல்
மைசூரு மாகாணத்தின் மண்ணின் மைந்தர்கள், மகிஷாசன ஹப்பா (மகிஷனின் விழா) என்கிற பெயரில் இந்த நகரத்தின் வரலாற்றை மாற்றி எழுத ஒன்றிணைந்திருக்கிறார்கள். இந்நகரத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளர் கள் சாமுண்டி மலையில் தசரா கொண்டாட்டங்கள் நடந்து கொண் டிருந்தபோது மகிஷனுக்கு 2015 அக்டோபர் 11,  அன்று விழா எடுத்தோம். இந்நிகழ்வு கர்நாடாக தலித் வெல்ஃபேர் டிரஸ்டின் மூலமும் மேலும் பல முற்போக்கு அமைப்பு களின் துணையுடனும் நடந்தது.
இதில் நூற்றுக்கணக்கான சிந்தனையாளர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர். கர்நாடக தலித் வெல்ஃபேர் டிரஸ்டின் தலைவரான சாந்தராஜு, மைசூரு மக்கள் தங்களுடைய  நகரத்தின் தோற்றம் குறித்து தெளிவாக அறிந்து வரலாற்றின்படி இந்த நகரத்தைத் தோற்றுவித்தவரான மகிஷனுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார். விழாவின் போது மகிஷனின் சிலைமீது சரமாரி யாக கற்களை வீசினார்கள். ஆனால் மண்ணின் மைந்தர்கள் மகிஷனை உயர் விக்கும் வகையில் தசராவைக் கொண்டாடுவார்கள். (ஜூன் 20 பார்வர்டு பிரஸ் வெளியீடு)
யார் இந்த மகேஷ் சந்திரகுரு
இந்தியாவில் தலித் பவுத்தத்தை சேர்ந்த ஒரே இதழியல் பேராசிரியர் தான் மகேஷ் சந்தர குரு. மைசூரு பல்கலைக்கழகத்தில் 30-ஆண்டு களுக்கும் மேல் பணியாற்றி வருகிறார். கர்நாடக பணியாளர் தேர்வாணையம், மத்திய பணியாளர் தேர்வாணையம், யூ.ஜி.சி. குழுக்களிலும் உறுப்பினராக உள்ளார். மகிஷா சூர இயக்கத்தை நடத்தி வருகிறார்.
-விடுதலை,6.8.16

கேள்விகள் இங்கே - பதில்கள் எங்கே?மின்சாரம்



இந்து ஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் இந்து மதத்தைத் தூக்கி நிறுத்த சிலர் புறப்பட்டுள்ளனர். அதில் ஆடிட் டர் குருமூர்த்தி என்பவர் முன்வந்து தோள் தட்டுகிறார். ஊடகங்கள் அவர் கள் கையில் இருப்பதால் பத்திப் பத்தியாக வெளியிடுகின்றன.
அவருக்கு மட்டுமல்ல, அவரைச் சார்ந்த அனைவர்களுக்கும், குருமூர்த்தி போன்றோர் தெரிவித்துவரும் தகவல் களின் அடிப்படையில் சில கேள்விகள் இதோ:
1. ஜாதியை ஒழிக்க முடியாது - இது யதார்த்தம் என்று சொல்லுவதிலிருந்து ஒன்று தெளிவாகி விட்டது. இப்பொழு தெல்லாம் ஜாதியை யார் பார்க்கிறார்கள் என்று நம்மைப் பார்த்துப் பெரிய புத்திசாலி போல கேள்வி கேட்போர் குருமூர்த்தியின் பதில் மூலம் பார்ப்பனர் களின் மனப் போக்கைப் புரிந்துகொள் ளலாம். ஆர்.எஸ்.எஸின் குருநாதரான கோல்வால்கர் சொல்லும் அந்தக் கருத்தைத்தான் இவர்களும் சொல்லு கிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள்!
ஜாதியை ஒழிக்க முடியாது என்று சொல்லுபவர்கள், அதற்கு வக்காலத்து வாங்குபவர்கள் அவர்களின் ஜாதித் தொழிலைத்தான் செய்கிறார்களா? ஆடிட்டராக குருமூர்த்திகள் வேலை பார்க்கலாமா?
பிராமணன் தொழில் பிச்சை எடுத்து உண்பதுதானே. அதனைச் செய்கிறார்களா? சாஸ்திரப்படி பிரா மணன் ஏழையாகத்தான் இருக்கவேண் டும் என்று மறைந்த சீனியர் சங்க ராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறியுள்ளாரே! (தெய்வத்தின் குரல், பாகம் 1, பக்கம் 163) அப்படித்தான் பார்ப்பனர்கள் இருக்கிறார்களா?
பார்ப்பனக் கலாச்சாரப்படி பஞ்ச கச்சம் வைத்துதான் வேஷ்டி கட்டு கிறார்களா - பெண்களும் மடிசார் கட்டுகிறார்களா? ஒரு காலத்தில் மொட்டைப் பாப்பாத்தி என்பார்களே, அந்த நிலை இப்பொழுது உண்டா? உச்சிக் குடுமி வைத்துள்ளார்களா பார்ப் பனர்கள்? பேண்ட், ஷர்ட் போடுவது தான் வைதீக வருணாசிரமத் தர்மமா?
2. தொழில் முனைவுக்கான முக்கிய மான கருவி ஜாதி என்கிறாரே - எந்தப் பொருளில் அப்படிக் கூறுகிறார்? உண்மையைச் சொல்லப் போனால் வறுமைக் கோட்டுக்கும் கீழே இருப் பவர்கள் கீழ் ஜாதி என்று பார்ப்பனீ யத்தால் ஒதுக்கப்பட்ட மக்கள்தானே பெரும்பாலோர்!
‘‘இந்தச் சமூகம் பொருளாதார தேக்கம் அடைந்ததற்கு மனித இனம் பல ஜாதிப் பெட்டிகளுக்குள் (The Water Tight Compartment of Castes)அடைக்கப்பட்டு தொழிலாளர் புழக்கம் (Mobility of Labour) தடைப்பட்டது ஒரு முக்கிய காரணம்’’ என்ற பிரபலப் பொருளாதாரப் பேராசிரியர் ஆர்தர் லூயிஸ், குருமூர்த்திகளைவிட பொருளா தாரத் துறையில் மேதைதானே. (A Theory of Economic Development)
படிப்பிலும், பதவியிலும், பொருளா தாரத்திலும் வளமையில் இருந்த, துணைப் பிரதமராக இருந்த பாபு ஜெகஜீவன்ராம் அவர்களால் காசியில் திறக்கப்பட்ட சம்பூர்னானந்து சிலையை காசிப் பல்கலைக் கழகப் பார்ப்பன மாணவர்கள் கங்கை நீரால் கழுவினார் களே, ஏன்? கீழ்ஜாதிக்காரன், உயர் ஜாதிக்காரன் சிலையைத் திறக்கலாமா என்ற கேள்வியை எழுப்பவில்லையா? ஜெகஜீவன்ராமெல்லாம் மந்திரியானால், எங்களுக்குச் செருப்பு தைப்பது யார் என்று கேட்டார்களா, இல்லையா அந்த உயர்ஜாதி மாணவர்கள்? இந்த நிலை தொடரவேண்டும் என்பதுதான் கோயங்கா வீட்டுக் கணக்குப் பிள்ளை களின் அடக்க முடியாத ஆசை வெறியா?
ஜாதியை ஒழிக்காமல் தீண்டா மையை எப்படி ஒழிக்க முடியும்? சொல்லட்டுமே பார்க்கலாம். ஜாதி காரணமாகத்தானே தீண்டாமை? ஜாதியை ஒழிக்க முடியாது - கூடாது என்று சொல்லுவதன்மூலம் தீண்டா மைக்குப் பராக்குப் பாடும் இந்தப் பேர்வழிகளை பி.சி.ஆர். சட்டத்தின்கீழ் கைது செய்யவேண்டாமா?
3. ஜாதி வித்தியாசங்களில் ஏற்ற தாழ்வுகளும் இருக்கலாம். அதை மீறி வாழத் தெரிந்தவர்தான் உயர்ந்த மனிதர் என்கிறாரே, ஆடிட்டர் குருமூர்த்தி?
இதன் பொருள் என்ன? பார்ப்பான் பார்ப்பான்தான் - பள்ளன் பள்ளன்தான். இந்த ஏற்ற தாழ்வுகளையும் ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் அப்படித் தானே? இந்து ஆன்மிகம் கற்பிப்பது இதனைத்தானே? புரிந்து கொள்வீர் ஒடுக்கப்பட்ட மக்களே!
4. திராவிட இயக்கம், உயர்ஜாதி எதிர்ப்பு இயக்கம் என்கிறாரே, உண் மைதான். அவர் சொல்லுவதிலிருந்து உயர்ஜாதி என்ற ஒன்று இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவில்லையா?
ஒருவன் பிறக்கும்பொழுதே உயர் ஜாதி என்றும், தாழ் ஜாதி என்றும் பிறப்பிக்கப்பட்டான் என்று சொல்லு வதும், அந்த உயர் ஜாதிக்காரனுக்கு அடிமைச் சேவகம் செய்வதுதான் கீழ்ஜாதிக்காரனின் கடமையென்றும் அமைக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில், சமுதாயத்தில் உயர்ஜாதிக்காரனை  எதிர்ப்பதுதானே மனித உரிமையும், அறிவு நாணயமுமான பொதுத் தொண் டாகவும் இருக்க முடியும்?
இந்தத் தொண்டினை திராவிட இயக்கம் செய்வதாக குருமூர்த்தி தன்னை அறியாமலேயே ஒப்புக்கொண் டதற்கு நன்றி!
எல்லாவற்றிலும் ஆதிக்க நச்சு நங்கூரத்தைப் பாய்ச்சி நின்ற பிறவி முதலாளித்துவமான ஆரியத்தை அதன் ஆணிவேர் வரை சென்று தாக்கியதால் ஏற்பட்ட விளைச்சல்தானே பஞ்சமர் களுக்கும், சூத்திரர்களுக்கும், பெண் களுக்கும் இன்று கிடைத்திருக்கும் கல்வியும், உத்தியோக வாய்ப்பும், சிவில் உரிமைகளும். மறுக்க முடியுமா மனுவாதிக் கூட்டத்தால்?
கடைசிப் பூணூலும் (ஜாதி ஆதிக்க துவிஜாதியினர்) பஞ்சகச்சமும் இருக் கும்வரை திராவிட இயக்கத்தின் பீரங்கிப் பிரச்சாரமும், புயல் வேகக் கொள்கைத் ‘தாக்குதலும்’ தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
5. திராவிட இயக்கம் ஜாதி ஒழிப்பு இயக்கம் இல்லை என்கிறாரே?
‘இந்து’ பத்திரிகைக் குடும்பத்தைக் கேட்டுப் பார்க்கட்டும் - ஜாதி ஒழிப்பு வேலையில் திராவிட இயக்கம் ஈடுபட்டதா? இல்லையா? என்பதை. இந்தியாவிலேயே பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடுவதை வெட்க மாகக் கருதும் மாநிலம் தமிழ்நாடு என்றால், அதற்கு எந்த இயக்கம், எந்தத் தலைவர் காரணம்? குருமூர்த்தி பெயருக்குப் பின்னால்கூட - ஜாதி ஒட்டு ஓடி மறைந்துவிட்டதே! அதில்கூட திராவிட இயக்கத்தின் தாக்கம் இருக் கிறதே!
பெயருக்குப் பின்னால் ஜாதி பட்டத்தோடு அறிமுகமானவர்கள்கூட திராவிட இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக ஜாதிப் பட்டத்தைக் கத்தரித்துக் கொண் டார்களே!
6. வேதமும், விவசாயமும், செயலால் ஒன்றிணைந்தது என்று குருமூர்த்தி கூறுகிறாரே, அது சரியா?
விவசாயம்பற்றி மனுதர்ம சாஸ்திரம் என்ன சொல்லுகிறது?
‘‘பயிரிடுதலை மேலான தொழில் என்று சிலர் கருதுகின்றனர். ஆயினும் பெரியோர் அதனைப் பாராட்டு வதில்லை. ஏனெனில், இரும்புக் கொழு நுதியுடைய கலப்பை, மண் வெட்டி இவற்றைக் கொண்டு, பூமியையும், பூமியில் வாழும் சிறிய உயிரினங் களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ?’’ (மனுதர்மம், அத்தியாயம் 10, சுலோகம் 84).
மனுதர்மம் என்றால் என்ன சாதாரணமா? மனு என்ன சொன்னாரோ அது மருந்தாம். பதினெட்டு ஸ்மிருதி களுக்குள் மனுஸ்மிருதிக்கு விரோதமாய் மற்ற பதினேழு சாஸ் திரங்களும் ஒரே வாக்காய்ச் சொல்லி யிருந்தாலும், அது ஒப்புக்கொள்ளத்தக்க தன்று என்பதுதானே இந்து மதத்தின் நிலைப்பாடு!
1921 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் இரு பார்ப்பனர்கள் உழவுத் தொழிலை மேற்கொண்டார்கள், பார்ப்பனர்கள் அவர்களை விலக்கி வைத்தார்கள். அந்தச் சமயம் கும்ப கோணம் சங்கராச்சாரியார் அந்தப் பகுதிக்கு வந்தார். அந்த இரு பார்ப்பனர்களும் சங்கராச்சாரியாருக்குக் காணிக்கை செலுத்த முன்வந்தார்கள். ஆனால், சங்கராச்சாரியாரோ அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
பிழைப்புக்காக உடலால் உழைப்பது என்ற பாவத்தைச் செய்த பிராமணர் களிடமிருந்து தாம் காணிக்கை எதையும் பெற்றுக்கொள்ள முடியாது என்று சங்கராச்சாரியார் கூறிவிட்டாரே! (‘தமிழ்நாட்டில் காந்தி’, பக்கம் - 378).
இதற்கு மேலும் வேதம் - விவசாயம் என்று உதட்டை அசைக்கத் தகுதி உண்டா இந்த அக்கிரகார ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களுக்கு?
(கேள்விகள் இன்னும் உண்டு, எதிர்தரப்பிலிருந்து என்னென்ன வருகின்றன என்று பார்ப்போம்!)
குறிப்பு: ‘சோ’ உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பார்ப்பனர்கள் திருவாளர் குருமூர்த்தியை பார்ப் பன சங்கத்தின் செய்தித் தொடர் பாளராக உருவாக்கி வருவதாக ஒரு செய்தி.
-விடுதலை,6.8.16

வியாழன், 3 நவம்பர், 2016

தேசிய உணர்ச்சி


20-11-1932, குடிஅரசிலிருந்து...
தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலகப் பொது மக்கள், அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையாய் இருந்து வரும் மக்கள் தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்திற்கும் வாழ்விற்கும் போதிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் ஒரு உண்மையை மறைப்பதற்கும் மற்றும்  அப்படிப்பட்ட கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்குப் பரிகாரம் தேடுவதை தடை படுத்தவும் ஆங்காங்குள்ள செல்வந்தர்களால் அதிகாரப் பிரியர்களால் சோம்பேறி வாழ்க்கை சுபாவிகளால் கற்பிக்கப்பட்ட சூழ்ச்சியாகும். தேசியம் என்பதும்  மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது.
தேசம் என்றால் எது? உலகப் பரப்பு அய்ந்து கண்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு கண்டத்திற்கும் பல தேசங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தேசத்திற்கும் பல மாகாணங்கள் இருக்கின்றன, ஒவ்வொரு  மாகாணத்திற்கும் பல ஜில்லாக்களும், மற்றும் பல உட்பிரிவுகளும் இருக்கின்றன.
இவைத் தவிர ஒவ்வொரு கண்டத்திலும், தேசத்திலும் மாகாணத் திலும் பல மாதிரியான பிறவிகளும், பண ஜாதிகளும், பல பாஷைகளும் பல மதங்களும் பல உட்பிரிவுகளும், பல பழக்க வழக்கங்களும் இருக்கின்றன. இவை அவரவர்களுக்கு தெய்வக் கட்டளை என்றும் மதக் கட்டளை என்றும் தேசியக் கொள்கை என்றும் தங்கள் வாழ்நாளில் எப்பொழுதும் மாற்ற முடியாது என்றும் இவைகளில் எதையும் காப்பாற்ற உயிர் விட்டாவது முயற்சிக்க வேண்டும் என்றும் கருதிக்  கொண்டிருப்ப தாகும். இவற்றின் பயனாய் மக்கள் ஒருவருக்கொருவர் வேற்றுமை உணர்ச்சி கொண்டிருப் பதை நன்றாய் பார்க்கின்றோம்.
அன்றியும் உலகத்தில் உள்ள தேசம் முழுவதிலும் உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி, ஏழை - பணக்காரன், கீழ் நிலை - மேல் நிலை கஷ்டப்படு கின்றவன் - கஷ்டப்படுத்துகிறவன் முதலிய கொடுமைகள் இருந்தும் வருகின்றன. இவற்றுள் என்ன கொள்கை மீது எப்படிப்பட்ட மக்கள் எவ்வளவு விஸ்தீரணத்தை பிரித்துக் கொண்டு தங்களுக்கென தனித்ததேசம் தேசியம் என்ற ஒன்றைச் சொல்லிக் கொள்ளுவது என்பது எனக்குப் புரியவில்லை.
நமது தேசம் என்று எந்த விஸ்தீரணத்தையும் தன்மையையும் தனிப் படுத்திக் கொண்டு பேசினாலும், அதிலுள்ள தன்மைகள் என்னென் னவோ, அதிலுள்ள மனிதர்களின் நிலை என்னென்னவோ, அதுதான் மற்ற எந்த தேசம் என்பதிலும் நாடு என்பதிலும் இருந்து வருகிறது. நாம் குறிப்பிடும் தேசத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றவர்களாகவும்,
தாழ்மைபடுத்தப்பட்டவர்களாகவும் இருந்து வருகின் றார்களோ அவ்வளவு நிலையில் தான் மற்ற தேசத்தார் என்கின்ற மக்களும் இருந்து வருகிறார்கள். நம்முடைய தேசம் என்பதிலுள்ள எந்த விதமான மக்களின் துயரம் நீக்கப் பாடுபடுகின்றோம் என்கின்றோமே அந்த விதமான துயரம் கொண்ட மக்கள் அன்னிய தேசம் என்பதிலும் இருந்துதான் வருகின்றார்கள். நம்முடைய தேசியம் என்பதிலேயே எந்தவிதமான மக்கள் சோம்பேறிகளாகவும் சூழ்ச்சிக் காரர்களாகவும்,
அரசாங்க செல்வவான்களாகவும் ஆதிக்கக்காரர் களாகவும், குருமார்களாகவும் இருந்து பெரும்பான்மையான பொது ஜனங்களைப் பல சூழ்ச்சிகளால் அடக்கி ஆண்டு அடிமைகளாக்கி பட்டினி போட்டு வதைத்து தாங்கள் பெருஞ்செல்வம் சேர்த்து வாழ்ந்து சுகபோகம் அனுபவித்து வருகின்றார்களோ அதுபோலத்தான் அன்னிய தேசம் என்பதிலும் சிலர் இருந்து அந்நாட்டு பெரும் பான்மையான மக்களைக் கொடுமைப்படுத்தி வருகின்றார்கள். இந்த நிலைமையில் என்னக் கொள்கையைக் கொண்டு எந்த லட்சியத்தைக் கொண்டு உலகப் பரப்பில் ஒரு அளவை மாத்திரம்  பிரித்து தேசாபிமானம் காட்டு வது என்று கேட்கின்றேன்.
-விடுதலை,11.6.16

புரட்சி என்றால் என்ன?


18-12-1932, குடிஅரசிலிருந்து..
.
புரட்சி என்றால் என்ன? அது பயப்பட வேண்டிய விஷயமா? என்பதைப் பற்றி சற்றுயோசித்துப் பார்ப்போம்.
சாதாரணமாக ஒரு மனிதன் ஒரு இடம் விட்டு மற்றொரு இடத்திற்குப் போவதற்குத் தரையில் ஒரு மணிக்கு 3 -மைல் வீதம் நடந்து கொண்டிருந்த நிலைமை மாறி, ஒரு மணிக்கு 400 மைல் ஆகாயத்தில் பறக்கும் படியான நிலையை அடைய யோசிப்பானேயானால் நடக்கும் விஷயத்தில் அது ஒரு, பெரிய பிரம்மாண்டமான புரட்சியேயாகும்.
இந்தப்படியான புரட்சியில் வெற்றி பெற்ற ஒருவன் ஆகாயத்தில் 1 மணிக்கு 400 மைல் பறக்கும் போது 3 மைல் வீதம் நடையிலேயே இருக்கிற ஒருவன் அதிசயப் பட வேண்டியதுதான். ஆனால் பயப்படுவதற்கு இதில் ஒன்றும் இல்லை. இதனால் யாருக்கும் எவ்விதக் கெடுதியும் இல்லை. எந்த ஒரு காரியத்தையும் மனிதன் அவனுடைய வெகு நாளைய பழக்கம், வழக்கம், நம்பிக்கை ஆகியவைகளுக்கு விரோதமாக ஆக்க முயற்சித்தால் அதைப் புரட்சி என்று தான் சொல்லுவார்கள்.
ஆனால், அதனால் அனுகூலம் அடைக்கின்ற வர்கள் காரியம் என்று சொல்லிப் புகழவும், அதனால் தீமையடைகின்றவர்கள் அதைக் கெட்ட காரியம் என்று சொல்லி இகழவும், சரியான முறையில் எதிர்க்க சக்தி இல்லாதவர்கள் தப்பர்த்தம் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அதன் மூலம் எதிர்ப்பு ஏற்படச்  செய்வார்கள். ஆனால், மனித சமுகத்தில் புரட்சி என்பது மிகச் சாதாரணமாய் இருந்து காரியத்தில் நடைபெற்று தான் வருகின்றது. மனிதனுக்கு முற்போக்கு அறிவும், அக்கறையும்.
ஏற்பட ஏற்பட புதிய புதிய உணர்ச்சிகள் தோன்றத் தோன்ற மாறுதல்கள் என்கின்ற புரட்சிகள் உண்டாக்கிக் கொண்டே தான் இருக்கும். புரட்சிகள் என்றால் என்ன? ஒரு விஷயம் அதன் பழக்க வழக்க நிலையில் இருந்து மாற்றம் அடைவதும் அதிலும் அது அடியோடு தலை கீழ் நிலை அடையும் படி மாற்றமடைவதுமேதான் புரட்சி என்று சொல்லப் படுவதாகும்.
அந்தப்படி  இப்போது நம் கண்முன்னாலேயே எவ்வளவோ புரட்சிகளைக் காதால் கேட்டு விட்டோம் கண்ணால் பார்த்து விட்டோம்.
ஒவ்வொரு  புரட்சியிலும் எந்தெந்த  தேசம் பூமிக்குள் போய் விட்டது? எந்த சமூகம் பூண்டற்றுப் போய் விட்டது மாறுதலேற்படும்போது சற்று தடபுடலாய் மக்கள் மிரளுவதும் சிறிது நாளானவுடன் அது இயற்கையாய் ஆகிவிடுவதும், பிறகு அதிலிருந்து மற்றொரு புரட்சி ஆரம்பிப்பது சகஜந் தானே.
சாதாரணமாக அரசியல் துறையில் ஏற்பட்ட புரட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். நமது நாட்டில் அரசர்களெல்லாம் கடவுள் அவதாரங்களல்லவா, கடவுள் அம் சங்களல்லவா? கடவுள் அருள் பெற்றவர்களல்லவா?  கடவுள் கடாட்சம் பெற்றவர் களல்லவா? இது தானே அரசனைப் பற்றிய நமது சாஸ் திரங்கள் என்பவைகளிலும், புராணங்கள் என்பவையிலும் சொல்லப்பட்ட சத்திய வாக்கு? சமீப காலம் வரை நாம் அரசரை விஷ்ணு அம்சம் என்று சொல்லிக் கொண்டிருக்க வில்லையா?
அரசன் கடவுள் அவதார அம்சம் என்பதாகக் கூறிக் கொண்டும் புராணங்கள் படித்துக் கொண்டும் இருக்கவில்லையா? இன்றும் பலர் அம்மாதிரி படித்துக் கொண்டிருக் கிறார்களா? இல்லையா? ஆனால் நாம் இப்போது என்ன சொல்லுகிறோம்? மனித சமூகத்திற்கு அரசன் எதற்கு? என்று கேட்கும் நிலைமைக்கு வந்து விடவில்லையா? எங்களுக்கு ஒரு சக்கரவர்த்தியோ அரசனோ இருப்பது எங்கள் சுய மரியாதைக்கு குறைவு என்று சொல்ல வந்து விட்டோமா? இல்லையா?
ராஜபக்தி, ராஜ வாழ்த்து, அடிமைத் தனம் என்று சொல்ல வந்து விட்டோமா? இல்லையா? அந்தப்படியே பல தேசங்களில் அரசர்கள் ஒழிந்தும் விட்டார்களா? இல்லையா? ஆகவே, அரசியல் துறையில் இது ஒரு பெரிய புரட்சியா? இல்லையா? என்று உங்களைக் கேட்கின்றேன். இந்த புரட்சியில் என்ன ஆபத்து வந்து விட்டது? எந்த தேசம் மண்ணில் புதைந்து விட்டது யார் வாய்வெந்து போய் விட்டது? யார் தலைபோய் விட்டது, அரசர்கள் ஒழிக்கப்பட்ட தேசம் நெருப்புப் பற்றி எரிந்து விட்டதா?
அல்லது பாலை வனமாகி விட்டதா? சுமார் 40, 50 வருஷங்களுக்குமுன் அரசாங்கத்தைக் குறை கூறவோ  மாற்றவோ நம் நாட்டில் யாராது கருதியிருப் பார்களா என்று யோசித்துப் பாருங்கள். எந்தப் புராணத்திலாவது, சாத்திரத்திலாவது அரசன் வேண்டாம் என்று சொன்ன தாகப் பார்த்திருக்கிறோமா? இன்று எப்படி தைரியமாய்ச் சொல்ல வந்து விட்டோம்? இது ஒரு பெரிய புரட்சியா அல்லவா என்று யோசித்துப் பாருங்கள்.
இதுபோலவே மக்களில் ஒரு சாராரை பூதேவர்கள் (இந்த உலகக் கடவுள்கள்) என்றும் மற்றொரு சாராரை கண்ணினாலும் பார்க்க முடியாதவர்கள் என்றும், சண்டா ளர்கள் என்றும் கருதியிருந்தோமா? இல்லையா? இதற்கு வேத சாஸ்திர புராண ஆதாரங்கள் கடவுள் வாக்குகள் இருக்கின்றது என்று சொல்லி பூதேவர்கள் காலில் விழுந்து கும்பிட்டும் சண்டாளர் களை தெருவில் நடக்க விடாமல் துரத்தி அடித்தும் வந்தோமா இல்லையா? ஆனால் இன்று அவர்களைத் தெருவில் மாத்திரம் அல்லாமல் கோவி லுக்குள் கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று சொல்லு கின்றோமா? இல்லையா? இப்படிச் சொல்லுகின்றவர்கள் மகாத்மா என்று அழைக்கப் படுகிறார்களா இல்லையா?
மற்றும் இம்மாதிரி சண்டாளர்கள் கண்ணுக்கே தென் படக் கூடாது,  கிட்டவே வரக்கூடாது  என்று  இருந்த தெல்லாம் போய் இப்போது அவர்கள் பக்கத்தில் போய் உட்கார ஆள் மேல் ஆள்கள் போட்டிப் போட்டு அய் யங்கார், சாஸ்திரிகள், ராவ்ஜீக்கள், பண்டார சன்னதிகள், பட்டக்காரர்கள் ஆளுக்கு 10 ஆயிரம் 15 ஆயிரம் ரூபாய்கள் (தேர்தல்களில்) செலவு செய்து அந்த தானங்களை அடைய முயற்சிக் கிறார்களா இல்லையா?
சமூக வழக்கங்களில் 10 வயது பெண்ணை கட்டிக் கொடுக்கா விட்டால் பெற்றோர்கள் நரகத்துக்குப் போய் விடுவார்கள்.  பெண்ணும் விபசார தோஷத்திற்கு ஆளாய் விடும் என்று கூறிய வேத சாஸ்திரங்களையும் ரிஷிகள் வாக்கியங் களையும் பழக்க வழக்கங்களையும், குப்பையில் தள்ளிவிட்டு 14 வயதான பிறகு பெண் ருதுவான பிறகு தான் கல்யாணம் செய்ய வேண்டும் இல்லா விட்டால் தண்டனை அடைய வேண்டும் என்று சொல்லி சட்டம் செய்து விட்டோமா இல்லையா? எனவே, இவைகள் எல்லாம் சமூகப் புரட்சியேயாகும். இதனால் யாருக்கு என்ன ஆபத்து வந்து விட்டது? யார் என்ன கஷ்டப்படுகிறார்கள்?
ஆகவே அரசியல் துறையிலும் சமூகத் துறையிலும் எவ்வளவு புரட்சிகள் செய்ய முன் வந்து விட்டோம். செய்து விட்டோம். இவைகள் எவ்வளவு சர்வ சாதாரணமான விஷயமாகவும் மிகவும் ஞாய மானதாகவும், அறிவுடை மையாகவும், மக்கள் சமுகத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாகவும் கருதப் படுகின்றது என்பதைக் கவனித்துப் பாருங்கள்.

உள்ள கோவில்கள் போதாதா?

05.02.1933 - குடிஅரசிலிருந்து.. 

இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில் கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற்குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒண்ணரை லட்சம் ரூபாய் செலவு செய்து ஒரு புதுக் கோயில் கட்டி அதில் ஆதிதிராவிடர்களை அனுமதித் திருக்கிறார்களாம்.
இதை தேசியப் பத்திரிகைகள் போற்று கின்றன. இது என்ன அக்கிரமம்? எவ்வளவு முட்டாள் தனம்? என்பதை பார்க்க வேண்டுகிறோம். பழைய கோவில்களில் ஆதித்திராவிடர்களை விடவில்லையா னால் அதற்காக புதுக்கோவில்கள் கட்டுவது பித்தலாட்ட மான காரியமல்லவா? தீண்டப் படாதவர்களுக்குக் கோவில் பிரவேசம் மறுப்பது உயர்வு தாழ்வு பேதத்தைக் காட்டுவதாய் இருக்கின்றதே என்று சொன்னால் அதற்கு பதில் புதுக் கோவில் கட்டி அவர்களுக்குப் பிரவேச மளித்து விட்டால் உயர்வு தாழ்வு ஜாதி வித்தியாசம் ஒழிந்து விடுமா? என்று கேட்கின்றோம்.
தேசியம் என்ற பித்தலாட்டச் சூழ்ச்சி என்று ஆரம்ப மானதோ அன்று முதல் இன்று வரை  தேசியத் தலைவர் முதல், வாலர்கள் வரையில் ஒவ்வொரு விஷயத்திலும் இந்தமாதிரியான சூழ்ச்சிகளும், பித்தலாட்டங்களுமே நடைபெற்று மக்களையும் முழுமூடர்களாக்கிவருகின்றது. என்றுதான் இந்த புரட்டுகளும், கேடுகளும் ஒழியுமோ?


தந்தை பெரியார் பொன்மொழி
கரைபுரண்டு போகும் சீர்திருத்த வெள்ளத்தை நாம் ஒரு புறமாகத் திருப்பி விட்டுப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கருதுவதெல்லாம் வெறும் மாறுபாட்டுக்காக மாறவேண்டு மென்றில்லாமல் பகுத்தறிவுக்கும், தன்மானத்திற்கும், வாழ்க் கை நலத்திற்கும் ஏற்ற முறையில் அச்சீர்திருத்த வெள்ளம் புறப்பட்டுப் பழைய குப்பைக் கூளங்களையும், துர்நாற்றத் தையும் அடித்துக் கொண்டு போவதுடன் மேடு பள்ளங்களையும் நிரவிக் கொண்டு போக வேண்டும்.
-விடுதலை,11.6.16

செவ்வாய், 1 நவம்பர், 2016

அநீதிக்கு இடம் தரும் கடவுள்



20.11.1932 - குடிஅரசிலிருந்து...
உலக உற்பத்திக்கும் இயற்கை தோற்றங்களுக்கும், நடப்புக்கும் ஏதாவது ஒரு காரணப் பொருள் இருக்க வேண்டாமா என்று கேட்பதின் மூலம் எப்படியாவது ஒரு சக்தி உண்டு என்பதை ஒப்புக் கொள்ளச் செய்து அதிலிருந்தே ஒரு கடவுளைக் கற்பிக்க முயற்சிகள் செய்யப்படுவதையும் அத்தோடேயே  சர்வசக்தி, சர்வ வியாபக கடவுள் நம்பிக்கைக் காரர்கள் திருப்தி அடைந்து விடுவதையும் பிறகு அதை அஸ்திவாரமாக வைத்து பெரிய ஆகாய கோட்டைகள் கட்டு வதையும் பார்த்திருக்கிறேன்.
உலக உற்பத்திக்கும் அதில் காணப்படும் தோற்றங் களுக்கும் நடப்புகளுக்கும் விஞ்ஞானம் என்னும் சைன்சைத் தொடர்ந்து கொண்டே போனால் என்றும் சமாதானம் கிடைக்கலாமானாலும் பிறகு சைன்சுக்கு யார்கர்த்தா என்கின்ற கேள்வியும் பிறக்கும். அதை இதுவரை எந்த அறிவாளியும் கண்டு பிடிக்கவில்லை என்று பதில் சொன்னால் அதுதான் கடவுள் என்று சொல்லி திருப்தி அடைவார்கள்.
அப்படியானால் அந்த கடவுளுக்கு யார் அவர் எப்படி உண்டானார், அவரின் நடவடிக்கைக்கு என்ன காரணம்? என்பதான கேள்விகளை  முன்னைய விஷயங்களுக்குப் போடப்பட்ட கேள்விகளை போலவே, போட்டோமானால் அப்படிபட்ட கேள்வி கேட்க கூடாது என்றும், கடவுளும், சக்தியும் தானாக உண்டான தென்றும் அதற்குக் கால வரை இல்லையென்றும் சொல்லுவார்கள்.
அச்சமாதானத்தால் நாம் திருப்தியடையாவிட்டால் அல்லது இது உங்களுக்கு எப்படி தெரிந்தது என்று கேட்டால் (அல்லது கடவுள் தானாக உண்டாகும் போது இயற்கை தானாக உண்டாகாதா என்று கேட்டால்) உடனே நம்மை நாஸ்திகன் என்று சொல்லி விடுவார்கள். இந்த மாதிரி நிலையில் தான் ஏதோ யூகத்தின் மீது அதுவும் ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டாமா என்கிற யூகத்தின் மீது இது வாயிருக்கலாம் அல்லது அதுவாயிருக்கலாம் என்கின்ற பொறுப்பற்ற நிலையில் கற்பிக்கப்பட்ட ஒரு கடவுள் என்பதைப் பற்றி நாம் சிறிதும் கவலைப்படுவதில்லை.
பொறுப்பு ஏற்றுவது ஆனால் அப்படிப் பட்டதின் மீது மனித வாழ்க்கையின் பொறுப்புகளைச் சுமத்துவதும், அதை வணங்குவதும், தொழுவதும், பிரார்த்தனை செய்வது என்பதும், அதை வணங்கினால் பிரார்த்தித்தால், தொழுதால் அதற்காக நேரத்தையும் அறிவையும் பணத்தையும் செலவு செய்தால் பயன் பெறலாம் என்பதும் பிரதிபலன் உண்டென்பதும் பாவங்கள் மன்னிக்கப்படுமென்பதும், மற்றும் மனிதனால் தன் சுய நலத்திற்காகவும் சோம்பேறி வாழ்க்கை பிரியத்திற் காகவும் பிறர்க்குச் செய்யப்படும் சூழ்ச்சிக்கும் அக்கிரமத் திற்கும் கடவுள் செயலே காரணம் எனச் சொல்லி ஏமாற்று வதைப் பார்த்தால் பிறகு எப்படிப்பட்ட கடவுள் உணர்ச்சி யானாலும் அது எங்கிருந்த போதிலும் அதை அழித்தே தீர வேண்டியிருக்கிறது.
திருடனுக்கும் கடவுள்
அன்றியும் திருடப் போகிற ஒரு திருடன்தான் திருடப் புறப்படு முன் தனக்கு நல்ல திருட்டுக் கிடைக்க வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தித்து விட்டு புறப்படுகிறான். நல்ல திருட்டு கிடைத்தவுடன் அதில் ஒரு சிறு பாகத்தைக் கடவுளுக்கும் அதன் திருப்பணிகளுக்கும் செலவு செய்து கடவுள் உணர்ச்சியை அனுபவிக்கிறான். இது போலவே ஒரு கொலைகாரனும் தான்.
விடுதலை அடையக் கடவுளைத் துதித்து விடுதலை யடைந்த உடன் கடவுளுக்குப் பூசை அபிஷேக முதலியன செய்து நன்றி செலுத்துகிறான். இதுபோலவே சொத்துக்களை வைத்திருக்கும் உடமையாளனும் தனது சொத்துக்களை திருடர்கள் கொள்ளை கொள்ளக் கூடாது என்று கடவுளைப் பிரார்த்தித்து நன்றி செலுத்துகிறான்.
இது போலவே கடவுள் நம்பிக்கை உள்ள சில சோம்பேறிகளும் செல்வவான்களும்  கடவுள் பிரார்த்தனையின் மீதே தங்கள் வியாபாரத்தை நடத்துகின்றார்கள். ஆகவே கடவுள் செயலும் கடவுள் கருணையும் எவ்வளவு ஒழுக்க குறைவுக்கும் அநீதிக்கும் இடம் தருகின்றது என்று பாருங்கள். அவை இதைத் தவிர வேறு எதற்காவது பயன்படுகிறதா என்று பாருங்கள்.
-விடுதலை,3.6.16

உதிர்ந்த மலர்கள்



04.05.1930- குடிஅரசிலிருந்து...

1. பரம் ஆத்மார்த்தம், விதி, அல்லது கடவுள் செயல் என்று சொல்லப்படும் இம்மூன்றையும் அழிக்க தைரியமும், சக்தியும் உடையவர்களே மனிதனுக்கு விடுதலை சம்பாதித்துக் கொடுக்க அருகராவார்கள்.
ராஜ வாழ்த்தும், கடவுள் வாழ்த்தும், மனிதனின் அடிமைத் தனத்திற்கு அஸ்தி வாரக்கல் நடுவதாகும்.

2. திரு. காந்தியவர்கள் தனது சத்தியாக்கிரகம் தோல்வி யுற்றால் இந்தியா விடுதலை பெற கடவுளுக்கு விருப்ப மில்லைபோல் இருக்கின்றது என்று ஒரு வார்த்தையில் ஜனங்களுக்கு சமாதானம் சொல்லிவிடுவார் அல்லது உண்மையில் அப்படியே அவர் நினைத்தாலும் நினைப்பார்.

3. தொட்டதெற்கெல்லாம் கடவுள் செயல், கடவுள் செயல் என்று சமாதானம் சொல்லுகின்றவர்கள், தங்கள் தப்பிதத்தின் காரணத்தை உணராதவர்கள் அல்லது தங்கள் தவறுதல்களை உணர்ந்து அதிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்கின்றவர்கள் ஆவார்.

4. எப்படியோ பல மதங்கள், பல தெய்வங்கள், பல வேதங்கள், பல சமயங்கள் கற்பிக்கப்பட்டாய் விட்டது. அவைகள் ஒவ்வொன்றி லும் மக்களை அடிமைபடுத்தியாய் விட்டது. குரங்குப்பிடியாய் இவற்றைப் பிடித்துக் கொண்டு சமய ஞானம் பேசுகின்றவர்களிடம் காலத்தைக் கழிப்பது வீண் வேலையாகும். மக்கள் மிருகப் பிராயத்திற்குபோய் கொண்டேயிருக்கிறார்கள்.
மண்ணையும் சாம்பலையும் குழைத்துப் பூசுவதே சமயமாய் விட்டது. பார்ப்பனுக்கும் பாளாண்டிக்கும் அழுவதே தர்மமாகி விட்டது.

கூடாஒழுக்கங்களும், அண்டப்புரட்டுகளும், ஆகாயப் புரட்டுகளும் நிறைந்த புராணக் குப்பைகளைத் திருப்பித் திருப்பிப் படிப்பதே காலட்சேபமாகி விட்டது.

ஒழுக்கத்தினிடத்திலும், சத்தியத்தினிடத்திலும் மக்களுக் குள்ள கவலையே அடியோடு போய்விட்டது.
வலிவுள்ளவன் வலிவில்லாதவனை இம்சிப்பதே ஆட்சி யாய் விட்டது.

பணக்காரன் ஏழைகளை அடிமைப்படுத்துவதே முறையாய் விட்டது.

தந்திரசாலிகள் சாதுக்களை ஏமாற்றுவதே வழக்கமாய் விட்டது.

அயோக்கியர்கள் யோக்கியர்களை உபத்திரவப்படுத்துவதே நீதியாகி விட்டது.

வலிவுள்ளவனாகவோ, பணக்காரனாகவோ, தந்திர சாலியாகவோ, அயோக் கினாகவோ இல்லாதவன் வாழ்வதற்கு இந்த உலகத்தில் இடமே இல்லாமல் போய் விட்டது.

இவைகளை சீர்திருத்த ஒரு காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?

இதனால் கலகம் உண்டாகுமானால் அதற்காகப் பின் வாங்க வேண்டுமா?

திருந்தினால் திருந்தட்டும், இல்லாவிட்டால் அழியட்டும் என்கிற இரண்டிலொன்றான கொள்கையிலேயே இறங்கி இருக்கின்றோம். மானங்கெட்ட மத்திய வாழ்வு இனி வேண்டுவதில்லை.

-விடுதலை,29.10.16