பக்கங்கள்

வியாழன், 3 நவம்பர், 2016

புரட்சி என்றால் என்ன?


18-12-1932, குடிஅரசிலிருந்து..
.
புரட்சி என்றால் என்ன? அது பயப்பட வேண்டிய விஷயமா? என்பதைப் பற்றி சற்றுயோசித்துப் பார்ப்போம்.
சாதாரணமாக ஒரு மனிதன் ஒரு இடம் விட்டு மற்றொரு இடத்திற்குப் போவதற்குத் தரையில் ஒரு மணிக்கு 3 -மைல் வீதம் நடந்து கொண்டிருந்த நிலைமை மாறி, ஒரு மணிக்கு 400 மைல் ஆகாயத்தில் பறக்கும் படியான நிலையை அடைய யோசிப்பானேயானால் நடக்கும் விஷயத்தில் அது ஒரு, பெரிய பிரம்மாண்டமான புரட்சியேயாகும்.
இந்தப்படியான புரட்சியில் வெற்றி பெற்ற ஒருவன் ஆகாயத்தில் 1 மணிக்கு 400 மைல் பறக்கும் போது 3 மைல் வீதம் நடையிலேயே இருக்கிற ஒருவன் அதிசயப் பட வேண்டியதுதான். ஆனால் பயப்படுவதற்கு இதில் ஒன்றும் இல்லை. இதனால் யாருக்கும் எவ்விதக் கெடுதியும் இல்லை. எந்த ஒரு காரியத்தையும் மனிதன் அவனுடைய வெகு நாளைய பழக்கம், வழக்கம், நம்பிக்கை ஆகியவைகளுக்கு விரோதமாக ஆக்க முயற்சித்தால் அதைப் புரட்சி என்று தான் சொல்லுவார்கள்.
ஆனால், அதனால் அனுகூலம் அடைக்கின்ற வர்கள் காரியம் என்று சொல்லிப் புகழவும், அதனால் தீமையடைகின்றவர்கள் அதைக் கெட்ட காரியம் என்று சொல்லி இகழவும், சரியான முறையில் எதிர்க்க சக்தி இல்லாதவர்கள் தப்பர்த்தம் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அதன் மூலம் எதிர்ப்பு ஏற்படச்  செய்வார்கள். ஆனால், மனித சமுகத்தில் புரட்சி என்பது மிகச் சாதாரணமாய் இருந்து காரியத்தில் நடைபெற்று தான் வருகின்றது. மனிதனுக்கு முற்போக்கு அறிவும், அக்கறையும்.
ஏற்பட ஏற்பட புதிய புதிய உணர்ச்சிகள் தோன்றத் தோன்ற மாறுதல்கள் என்கின்ற புரட்சிகள் உண்டாக்கிக் கொண்டே தான் இருக்கும். புரட்சிகள் என்றால் என்ன? ஒரு விஷயம் அதன் பழக்க வழக்க நிலையில் இருந்து மாற்றம் அடைவதும் அதிலும் அது அடியோடு தலை கீழ் நிலை அடையும் படி மாற்றமடைவதுமேதான் புரட்சி என்று சொல்லப் படுவதாகும்.
அந்தப்படி  இப்போது நம் கண்முன்னாலேயே எவ்வளவோ புரட்சிகளைக் காதால் கேட்டு விட்டோம் கண்ணால் பார்த்து விட்டோம்.
ஒவ்வொரு  புரட்சியிலும் எந்தெந்த  தேசம் பூமிக்குள் போய் விட்டது? எந்த சமூகம் பூண்டற்றுப் போய் விட்டது மாறுதலேற்படும்போது சற்று தடபுடலாய் மக்கள் மிரளுவதும் சிறிது நாளானவுடன் அது இயற்கையாய் ஆகிவிடுவதும், பிறகு அதிலிருந்து மற்றொரு புரட்சி ஆரம்பிப்பது சகஜந் தானே.
சாதாரணமாக அரசியல் துறையில் ஏற்பட்ட புரட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். நமது நாட்டில் அரசர்களெல்லாம் கடவுள் அவதாரங்களல்லவா, கடவுள் அம் சங்களல்லவா? கடவுள் அருள் பெற்றவர்களல்லவா?  கடவுள் கடாட்சம் பெற்றவர் களல்லவா? இது தானே அரசனைப் பற்றிய நமது சாஸ் திரங்கள் என்பவைகளிலும், புராணங்கள் என்பவையிலும் சொல்லப்பட்ட சத்திய வாக்கு? சமீப காலம் வரை நாம் அரசரை விஷ்ணு அம்சம் என்று சொல்லிக் கொண்டிருக்க வில்லையா?
அரசன் கடவுள் அவதார அம்சம் என்பதாகக் கூறிக் கொண்டும் புராணங்கள் படித்துக் கொண்டும் இருக்கவில்லையா? இன்றும் பலர் அம்மாதிரி படித்துக் கொண்டிருக் கிறார்களா? இல்லையா? ஆனால் நாம் இப்போது என்ன சொல்லுகிறோம்? மனித சமூகத்திற்கு அரசன் எதற்கு? என்று கேட்கும் நிலைமைக்கு வந்து விடவில்லையா? எங்களுக்கு ஒரு சக்கரவர்த்தியோ அரசனோ இருப்பது எங்கள் சுய மரியாதைக்கு குறைவு என்று சொல்ல வந்து விட்டோமா? இல்லையா?
ராஜபக்தி, ராஜ வாழ்த்து, அடிமைத் தனம் என்று சொல்ல வந்து விட்டோமா? இல்லையா? அந்தப்படியே பல தேசங்களில் அரசர்கள் ஒழிந்தும் விட்டார்களா? இல்லையா? ஆகவே, அரசியல் துறையில் இது ஒரு பெரிய புரட்சியா? இல்லையா? என்று உங்களைக் கேட்கின்றேன். இந்த புரட்சியில் என்ன ஆபத்து வந்து விட்டது? எந்த தேசம் மண்ணில் புதைந்து விட்டது யார் வாய்வெந்து போய் விட்டது? யார் தலைபோய் விட்டது, அரசர்கள் ஒழிக்கப்பட்ட தேசம் நெருப்புப் பற்றி எரிந்து விட்டதா?
அல்லது பாலை வனமாகி விட்டதா? சுமார் 40, 50 வருஷங்களுக்குமுன் அரசாங்கத்தைக் குறை கூறவோ  மாற்றவோ நம் நாட்டில் யாராது கருதியிருப் பார்களா என்று யோசித்துப் பாருங்கள். எந்தப் புராணத்திலாவது, சாத்திரத்திலாவது அரசன் வேண்டாம் என்று சொன்ன தாகப் பார்த்திருக்கிறோமா? இன்று எப்படி தைரியமாய்ச் சொல்ல வந்து விட்டோம்? இது ஒரு பெரிய புரட்சியா அல்லவா என்று யோசித்துப் பாருங்கள்.
இதுபோலவே மக்களில் ஒரு சாராரை பூதேவர்கள் (இந்த உலகக் கடவுள்கள்) என்றும் மற்றொரு சாராரை கண்ணினாலும் பார்க்க முடியாதவர்கள் என்றும், சண்டா ளர்கள் என்றும் கருதியிருந்தோமா? இல்லையா? இதற்கு வேத சாஸ்திர புராண ஆதாரங்கள் கடவுள் வாக்குகள் இருக்கின்றது என்று சொல்லி பூதேவர்கள் காலில் விழுந்து கும்பிட்டும் சண்டாளர் களை தெருவில் நடக்க விடாமல் துரத்தி அடித்தும் வந்தோமா இல்லையா? ஆனால் இன்று அவர்களைத் தெருவில் மாத்திரம் அல்லாமல் கோவி லுக்குள் கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று சொல்லு கின்றோமா? இல்லையா? இப்படிச் சொல்லுகின்றவர்கள் மகாத்மா என்று அழைக்கப் படுகிறார்களா இல்லையா?
மற்றும் இம்மாதிரி சண்டாளர்கள் கண்ணுக்கே தென் படக் கூடாது,  கிட்டவே வரக்கூடாது  என்று  இருந்த தெல்லாம் போய் இப்போது அவர்கள் பக்கத்தில் போய் உட்கார ஆள் மேல் ஆள்கள் போட்டிப் போட்டு அய் யங்கார், சாஸ்திரிகள், ராவ்ஜீக்கள், பண்டார சன்னதிகள், பட்டக்காரர்கள் ஆளுக்கு 10 ஆயிரம் 15 ஆயிரம் ரூபாய்கள் (தேர்தல்களில்) செலவு செய்து அந்த தானங்களை அடைய முயற்சிக் கிறார்களா இல்லையா?
சமூக வழக்கங்களில் 10 வயது பெண்ணை கட்டிக் கொடுக்கா விட்டால் பெற்றோர்கள் நரகத்துக்குப் போய் விடுவார்கள்.  பெண்ணும் விபசார தோஷத்திற்கு ஆளாய் விடும் என்று கூறிய வேத சாஸ்திரங்களையும் ரிஷிகள் வாக்கியங் களையும் பழக்க வழக்கங்களையும், குப்பையில் தள்ளிவிட்டு 14 வயதான பிறகு பெண் ருதுவான பிறகு தான் கல்யாணம் செய்ய வேண்டும் இல்லா விட்டால் தண்டனை அடைய வேண்டும் என்று சொல்லி சட்டம் செய்து விட்டோமா இல்லையா? எனவே, இவைகள் எல்லாம் சமூகப் புரட்சியேயாகும். இதனால் யாருக்கு என்ன ஆபத்து வந்து விட்டது? யார் என்ன கஷ்டப்படுகிறார்கள்?
ஆகவே அரசியல் துறையிலும் சமூகத் துறையிலும் எவ்வளவு புரட்சிகள் செய்ய முன் வந்து விட்டோம். செய்து விட்டோம். இவைகள் எவ்வளவு சர்வ சாதாரணமான விஷயமாகவும் மிகவும் ஞாய மானதாகவும், அறிவுடை மையாகவும், மக்கள் சமுகத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாகவும் கருதப் படுகின்றது என்பதைக் கவனித்துப் பாருங்கள்.

உள்ள கோவில்கள் போதாதா?

05.02.1933 - குடிஅரசிலிருந்து.. 

இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில் கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற்குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒண்ணரை லட்சம் ரூபாய் செலவு செய்து ஒரு புதுக் கோயில் கட்டி அதில் ஆதிதிராவிடர்களை அனுமதித் திருக்கிறார்களாம்.
இதை தேசியப் பத்திரிகைகள் போற்று கின்றன. இது என்ன அக்கிரமம்? எவ்வளவு முட்டாள் தனம்? என்பதை பார்க்க வேண்டுகிறோம். பழைய கோவில்களில் ஆதித்திராவிடர்களை விடவில்லையா னால் அதற்காக புதுக்கோவில்கள் கட்டுவது பித்தலாட்ட மான காரியமல்லவா? தீண்டப் படாதவர்களுக்குக் கோவில் பிரவேசம் மறுப்பது உயர்வு தாழ்வு பேதத்தைக் காட்டுவதாய் இருக்கின்றதே என்று சொன்னால் அதற்கு பதில் புதுக் கோவில் கட்டி அவர்களுக்குப் பிரவேச மளித்து விட்டால் உயர்வு தாழ்வு ஜாதி வித்தியாசம் ஒழிந்து விடுமா? என்று கேட்கின்றோம்.
தேசியம் என்ற பித்தலாட்டச் சூழ்ச்சி என்று ஆரம்ப மானதோ அன்று முதல் இன்று வரை  தேசியத் தலைவர் முதல், வாலர்கள் வரையில் ஒவ்வொரு விஷயத்திலும் இந்தமாதிரியான சூழ்ச்சிகளும், பித்தலாட்டங்களுமே நடைபெற்று மக்களையும் முழுமூடர்களாக்கிவருகின்றது. என்றுதான் இந்த புரட்டுகளும், கேடுகளும் ஒழியுமோ?


தந்தை பெரியார் பொன்மொழி
கரைபுரண்டு போகும் சீர்திருத்த வெள்ளத்தை நாம் ஒரு புறமாகத் திருப்பி விட்டுப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கருதுவதெல்லாம் வெறும் மாறுபாட்டுக்காக மாறவேண்டு மென்றில்லாமல் பகுத்தறிவுக்கும், தன்மானத்திற்கும், வாழ்க் கை நலத்திற்கும் ஏற்ற முறையில் அச்சீர்திருத்த வெள்ளம் புறப்பட்டுப் பழைய குப்பைக் கூளங்களையும், துர்நாற்றத் தையும் அடித்துக் கொண்டு போவதுடன் மேடு பள்ளங்களையும் நிரவிக் கொண்டு போக வேண்டும்.
-விடுதலை,11.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக