பக்கங்கள்

வியாழன், 3 நவம்பர், 2016

தேசிய உணர்ச்சி


20-11-1932, குடிஅரசிலிருந்து...
தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலகப் பொது மக்கள், அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையாய் இருந்து வரும் மக்கள் தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்திற்கும் வாழ்விற்கும் போதிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் ஒரு உண்மையை மறைப்பதற்கும் மற்றும்  அப்படிப்பட்ட கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்குப் பரிகாரம் தேடுவதை தடை படுத்தவும் ஆங்காங்குள்ள செல்வந்தர்களால் அதிகாரப் பிரியர்களால் சோம்பேறி வாழ்க்கை சுபாவிகளால் கற்பிக்கப்பட்ட சூழ்ச்சியாகும். தேசியம் என்பதும்  மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது.
தேசம் என்றால் எது? உலகப் பரப்பு அய்ந்து கண்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு கண்டத்திற்கும் பல தேசங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தேசத்திற்கும் பல மாகாணங்கள் இருக்கின்றன, ஒவ்வொரு  மாகாணத்திற்கும் பல ஜில்லாக்களும், மற்றும் பல உட்பிரிவுகளும் இருக்கின்றன.
இவைத் தவிர ஒவ்வொரு கண்டத்திலும், தேசத்திலும் மாகாணத் திலும் பல மாதிரியான பிறவிகளும், பண ஜாதிகளும், பல பாஷைகளும் பல மதங்களும் பல உட்பிரிவுகளும், பல பழக்க வழக்கங்களும் இருக்கின்றன. இவை அவரவர்களுக்கு தெய்வக் கட்டளை என்றும் மதக் கட்டளை என்றும் தேசியக் கொள்கை என்றும் தங்கள் வாழ்நாளில் எப்பொழுதும் மாற்ற முடியாது என்றும் இவைகளில் எதையும் காப்பாற்ற உயிர் விட்டாவது முயற்சிக்க வேண்டும் என்றும் கருதிக்  கொண்டிருப்ப தாகும். இவற்றின் பயனாய் மக்கள் ஒருவருக்கொருவர் வேற்றுமை உணர்ச்சி கொண்டிருப் பதை நன்றாய் பார்க்கின்றோம்.
அன்றியும் உலகத்தில் உள்ள தேசம் முழுவதிலும் உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி, ஏழை - பணக்காரன், கீழ் நிலை - மேல் நிலை கஷ்டப்படு கின்றவன் - கஷ்டப்படுத்துகிறவன் முதலிய கொடுமைகள் இருந்தும் வருகின்றன. இவற்றுள் என்ன கொள்கை மீது எப்படிப்பட்ட மக்கள் எவ்வளவு விஸ்தீரணத்தை பிரித்துக் கொண்டு தங்களுக்கென தனித்ததேசம் தேசியம் என்ற ஒன்றைச் சொல்லிக் கொள்ளுவது என்பது எனக்குப் புரியவில்லை.
நமது தேசம் என்று எந்த விஸ்தீரணத்தையும் தன்மையையும் தனிப் படுத்திக் கொண்டு பேசினாலும், அதிலுள்ள தன்மைகள் என்னென் னவோ, அதிலுள்ள மனிதர்களின் நிலை என்னென்னவோ, அதுதான் மற்ற எந்த தேசம் என்பதிலும் நாடு என்பதிலும் இருந்து வருகிறது. நாம் குறிப்பிடும் தேசத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றவர்களாகவும்,
தாழ்மைபடுத்தப்பட்டவர்களாகவும் இருந்து வருகின் றார்களோ அவ்வளவு நிலையில் தான் மற்ற தேசத்தார் என்கின்ற மக்களும் இருந்து வருகிறார்கள். நம்முடைய தேசம் என்பதிலுள்ள எந்த விதமான மக்களின் துயரம் நீக்கப் பாடுபடுகின்றோம் என்கின்றோமே அந்த விதமான துயரம் கொண்ட மக்கள் அன்னிய தேசம் என்பதிலும் இருந்துதான் வருகின்றார்கள். நம்முடைய தேசியம் என்பதிலேயே எந்தவிதமான மக்கள் சோம்பேறிகளாகவும் சூழ்ச்சிக் காரர்களாகவும்,
அரசாங்க செல்வவான்களாகவும் ஆதிக்கக்காரர் களாகவும், குருமார்களாகவும் இருந்து பெரும்பான்மையான பொது ஜனங்களைப் பல சூழ்ச்சிகளால் அடக்கி ஆண்டு அடிமைகளாக்கி பட்டினி போட்டு வதைத்து தாங்கள் பெருஞ்செல்வம் சேர்த்து வாழ்ந்து சுகபோகம் அனுபவித்து வருகின்றார்களோ அதுபோலத்தான் அன்னிய தேசம் என்பதிலும் சிலர் இருந்து அந்நாட்டு பெரும் பான்மையான மக்களைக் கொடுமைப்படுத்தி வருகின்றார்கள். இந்த நிலைமையில் என்னக் கொள்கையைக் கொண்டு எந்த லட்சியத்தைக் கொண்டு உலகப் பரப்பில் ஒரு அளவை மாத்திரம்  பிரித்து தேசாபிமானம் காட்டு வது என்று கேட்கின்றேன்.
-விடுதலை,11.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக