பக்கங்கள்

புதன், 12 டிசம்பர், 2018

பாரதியின் உண்மை முகம்

பாரதியார் தன்னுடைய சுயசரிதையைக் ‘கனவு’ என்ற தலைப்பில் 1910இல் வெளியிட்டுள்ளார். இதில் இவருடைய இளமைக் காலத்தில் தன்னுடைய தந்தைக்கு வறுமை நிலை வந்ததைக் கூறும்போது கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

பார்ப்பனக் குலம் கெட்டழிவு எய்திய
பாழடைந்த கலியுகம் ஆதலால்
வேர்ப்ப வேர்ப்ப பொருள் செய்வதொன்றையே
மேன்மை கொண்ட தொழில் எனக்கொண்டனன் (1)

எனக் கூறுகிறார். பார்ப்பனர்கள் உடல் வியர்க்க வேலை செய்யக்கூடாது என்பது மனு தர்மத்தின் விதி. இந்தப் பாழாய்ப் போன கலியுகத்தில் தன்னுடைய தந்தை வியர்வை சிந்திப் பொருள் சேர்க்க வேண்டிய நிலைக்கு ஆளாக நேர்ந்தது என்று உளம் நொந்து கூறுகிறார்.

‘சமூகம்’ என்ற தலைப்பில் பாரதி நால்வருணத்தை மிகவும் வலியுறுத்திப் பாடுகிறார்:

வேதம் அறிந்தவன் பார்ப்பான் - பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்
பண்டங்கள் விற்பவன் செட்டி
பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி
நாலு வகுப்புமிங்கு ஒன்றே - இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி (2)

இங்குப் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் முதலிய நால்வருணங்கள் இருக்க வேண்டும் என்கிறார் பாரதி. நால்வருணம் அழிந்தால் மனித இனமே அழிந்து விடும் என்கிறார். அப்படியானால் பார்ப்பானுக்கு என்றைக்கும் சூத்திரன் உழைத்துப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்; பார்ப்பான் கோவில் பூசை செய்து விட்டு நோகாமல் சாப்பிட வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்.

‘கண்ணன் என் தந்தை’ என்ற பாடலிலும் பாரதி நால்வருணத்தைக் கெடுத்து விட்டார்களே எனக் கூறி வருந்துகிறார்.

நாலு குலங்கள் அமைத்தான் - அதை
நாசம் உறப்புரிந்தனர் மூடமனிதன் (3)
என்கிறார்.

பாரதி தமிழகத்தில் வாழ்ந்தாலும் வடவரின் ஆரியக் கலாச்சாரத்தை விரும்பினார் என்பதைப் பின்வரும் பாடல் மூலம் அறிய முடிகிறது:

வேள்விகள் கோடி செய்தால் - சதுர்
வேதங்கள் ஆயிரம் முறைப்படித்தால்
மூளும் நற்புண்ணியந்தான் (4)

பாரதியின் பாடல்களில் சில பார்ப்பனர்களைக் கண்டிப்பது போலத் தோன்றும். அவற்றைப் படித்து விட்ட அறிஞர்களில் சிலர், பாரதி பார்ப்பனர்களை எப்படியெல்லாம் கண்டிக்கிறார் பாருங்கள் என்று கூறிப் பெருமைப்பட்டுக் கொள்ளுவதோடு, பாரதியைப் பார்ப்பன எதிர்ப்பாளர் எனக் காட்ட முனைகின்றனர். உண்மையில் பாரதி அந்த எண்ணத்தோடு தான் அப்படிப் பாடினாரா என்பது ஆய்வுக்குரியதாகும்.

எடுத்துக்காட்டாக,

‘ஸ்வதந்திரப் பள்ளு’ என்ற பாடலில் பாரதி பின்கண்டவாறு எழுதுகிறார்:

பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே- வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே (5)

இந்தப் பாடலைப் பாரதி பள்ளர்கள் களியாட்டம் ஆடுவதாகக் கருதி இயற்றியுள்ளார். எனவே பாரதி மகிழ்ச்சியோடுதான் இப்பாடலை இயற்றியுள்ளார் என எண்ணத் தோன்றும். பாரதியின் இப்பாடலுக்கு மயங்காத தமிழ் அறிஞர்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இந்தப் பாடலை இவர் மகிழ்ச்சியோடு பாடவில்லை என ‘இந்தியா’ ஏட்டின் உரிமையாளர்களில் ஒருவரான மண்டயம் சீனிவாசன் கூறுகிறார்.

“எம்மிடம் பாரதியார் அடிக்கடி வருவதுண்டு. எது பாடினாலும், தான் விசேஷமாக எது எழுதினாலும், என்னிடத்தில் அதை முதலில் வந்து காட்டாமல் இருக்க மாட்டார். நான் என்ன வேலையாயிருந்தாலும் அதைச் சட்டை செய்யாது, தனியிடத்திற்கு அழைத்துப் போய் அதைப் படித்துக் காட்டுவார். அவருடைய ‘பூபேந்திர விஜயம், சுதந்திரப் பள்ளு, ஞானரதம்’ முதல்பகுதி இவைகளை அவர் ஆவேசத்தோடு படித்துக் காட்டியது எனக்கு இப்பொழுதும் ஞாபகமிருக்கிறது.

‘பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே’ என்ற பாட்டில் தாழ்ந்த நிலைமையில் கிடக்கும் பார்ப்பானை ஏன் பழிக்கிறீர் என்று நான் கேட்டதற்கு, நான் பழிக்கவில்லையே, அவன் அந்த உயர்ந்த நிலைக்கு அருகனல்ல, தாழ்ந்து கிடக்கிறான் என்று தானே நானும் சொல்கிரேன் என்றார்” (6) எனப் பாரதியின் பார்ப்பன நண்பரே கூறியுள்ளார்.

அதைப் போல ‘பேராசைக்காரனடா பார்ப்பான்’ என்ற பாடல். இந்தப் பாடலைப் படித்தவுடன் பாரதி பார்ப்பனர்களை எவ்வளவு கடுமையாகச் சாடுகிறார் எனத் தோன்றும். இந்தப் பாடலை முழுமையாகப் படித்துப் பார்த்தால் தான் இதன் பொருள் நன்கு விளங்கும். பாரதி தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வாளராக இருந்தபோது எழுதப்பட்டது இப்பாடல். அப்போதெல்லாம் பார்ப்பனர்கள் மட்டும் தான் காவல்துறையில் பணியாற்றினார்கள். நம்மவர்களால் சாதாரணக் காவலர் வேலையில் கூடச் சேர முடியாத காலம் அது.

காவல்துறையில் பணியாற்றிய பார்ப்பனர்கள் பாரதிக்குச் சில துன்பங்களை விளைவித்து வந்தனர். (ஆதாரம்: பாரதி-காலமும் கருத்தும்; ஆசிரியர்: தொ.மு.சி.இரகுநாதன்) எனவேதான் பாரதி இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.

நாயும் பிழைக்குமிந்தப் பிழைப்பு - ஐயோ
நாளெல்லாம் சுற்றுதலே உழைப்பு
பாயும் கடிநாய்ப் போலிசுக் - காரப்
பார்ப்பனுக் குண்டிதிலே - பிழைப்பு

பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்
பெரியதுரை என்னினுடல் வேர்ப்பான்
யாரானாலும் கொடுமை இழைப்பான் - துரை
இம்மென்றால் நாய்போல உழைப்பான்.

முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் சொல்வார்
மூன்றுமழை பெய்யுமடா மாதம்
இந்நாளில் பொய்மைப் பார்ப்பார் - இவர்
ஏதும் செய்தும் காசுபெறப் பார்ப்பார் (7)

இப்பாடல் மூலம் பாரதி உணர்த்துவது என்ன? வேதம் ஓதும் பார்ப்பானை உயர்த்திப் போற்றும் பாரதி வெள்ளையனிடம் போலீசாக இருக்கும் பார்ப்பனர்களை மட்டுமே கண்டிக்கிறார். பார்ப்பான் மற்றவர்களால் அய்யர் என்று அழைக்கப்பட வேண்டும் என்பதே பாரதியின் உட்கிடக்கை என்பது இதன் மூலம் புலனாகிறது.

பாரதி புதுவையில் இருந்தபோது கனகலிங்கம் என்ற ஆதித்திராவிடருக்குப் பூணூல் மாட்டி விட்டு, “உன்னை இன்று முதல் பார்ப்பான் ஆக்கி விட்டேன்” என்று கூறினார். இதனால் பாரதி ஒரு சாதி ஒழிப்பு வீரர் என்று பலரும் கருதுகின்றனர். கனகலிங்கம் என்பவர் வள்ளுவர் சாதியைச் சேர்ந்தவர். வள்ளுவர்கள்தான் ஆதித்திராவிடர்களின் வீடுகளுக்குப் புரோகிதம் செய்யச் சொல்வார்கள். பறைச்சேரிக்குப் பார்ப்பனர்கள் செல்வதில்லை. பார்ப்பனர்கள் மேல்சாதியினர் வீடுகளில் செய்யும் சடங்குகளைப் பறைச்சேரியில் வள்ளுவர்கள்தான் செய்வார்கள்.

எனவேதான் பாரதி கனகலிங்கம் என்ற வள்ளுவனுக்குப் பூணூல் மாட்டி விட்டு, ‘உன்னைப் பார்ப்பான் ஆக்கிவிட்டேன்’ என்று கூறியுள்ளார். கனகலிங்கம் வள்ளுவந்தான் என்பதை பாரதியே உறுதிப்படுத்தியுள்ளார். “எனக்கும் ஒரு வள்ளுவப் பையனுக்கும் ஸ்நேஹம். அவனுடைய கோயில் அம்மன் மீது நான் பாட்டுக் கட்டிக் கொடுத்தேன். அவன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு” (8)

இந்து மதத்தைக் காப்பதற்காகப் பார்ப்பனர்கள் மற்றவர்களுக்குப் பூணூல் அணிவிப்பது வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சி. இதையேதான் பாரதி செய்துள்ளார். ஆரிய சமாஜ்யம் இதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. ஆதி திராவிடர்கள் பிற மதங்களுக்கு செல்லாமல் இருப்பதற்காகச் செய்யப்படும் செயல் இது. இதை எப்படிப் புரட்சிகரமானச் செயலாகக் கருத முடியும்?

நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் இந்த
நாட்டினில் இல்லை; குணம் நல்ல தாயின்
எந்தக் குலத்தினரேனும்; உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம். (9)

என்று பாரதி பாடியுள்ளதால், பாரதிக்குச் சாதி உணர்வு இல்லை எனப் பலர் கருதுகின்றனர். பாரதி நந்தனை ஏன் உயர்வாகப் பாடினார் என்றால், நந்தன் ஒரு பார்ப்பன அடிமை என்பதாலேயே. தில்லை நகருக்கு வந்தவன் ஊருக்குள் கூட நுழையவில்லை. பல நாட்கள் தில்லை நகரின் எல்லையிலேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். தீட்சிதர்கள் கனவில் சிவன் தோன்றி நந்தனைத் தீக்குளிக்கச் செய்து அழைத்து வரும்படி கூறியதாக நந்தனிடம் கூறி தீக்குளிக்கச் செய்தனர். நந்தன் தீயில் இறங்கிச் செத்தான். ஆனால் அவன் பார்ப்பன வடிவம் பெற்றுச் சிவனடி சேர்ந்ததாகப் பார்ப்பனர்கள் கதை கட்டி விட்டார்கள்.

நந்தன் புரட்சிகர குணமேதுமின்றி, பார்ப்பனர்கள் சொல்லியபடியெல்லாம் செய்ததால் தான் பாரதி நந்தனைப் புகழ்கிறார். குணத்தினால் ஒருவன் மேல்சாதி ஆக முடியாது என்று பாரதிக்குத் தெரியாதா என்ன? பாரதி மனுநீதி முதலான சாஸ்திரங்களை ஆழமாகப் படித்தவர். பாரதி நந்தனைப் பார்ப்பான் எனப் புகழ்வது ஒரு வஞ்சகமே. பாரதியின் சமகாலத்தில் இயக்கம் நடத்திய அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா ஆகியவர்களைப் பற்றி ஒரு வரி கூட எழுதவில்லையே, ஏன்? அதற்குப் பதிலாக நந்தனையும் சாமி சகஜானந்தரையுமே பாரதி ஆதித்திராவிடர்களுக்கு வழிகாட்டிகளாகக் காட்டுகிறாரே, ஏன்?

பாரதி மீசை வைத்துக்கொண்ட காரணத்தினால் கூட சிலர் இவர் பார்ப்பனர்களுக்கு எதிர்ப்பாக மீசை வைத்துக் கொண்டதாக நம்புகின்றனர். ஆனால் உண்மை அப்படி இல்லை. பாரதியே கூறக் கேட்போம்:

“வேத பூமியாகிய ஆரிய வர்த்தத்தில் பிராமணர்களில் மீசை இல்லாமலிருப்பது சாஸ்திர விரோதமென்று பாவிக்கிறார்கள். அங்கு ஒருவன் மீசையைச் சிரைத்தால் அவனுடைய நெருங்கிய சுற்றத்தாரில் யாரேனும் இறந்து போனதற்கடையாளமாகக் கருதப்படுகிறது. பல வருஷங்களுக்கு முன்பு நான் ஸ்ரீகாசியில் ஜயநாராயண கலாசாலை என்ற இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து வாசிக்கப் போனேன். நான் தமிழ்நாட்டிலிருந்து சென்றவனாதலால் தமிழ்நாட்டுப் பிராமணரின் வழக்கப்படி அடிக்கடி முகச்சவரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் படித்துக் கொண்டிருந்த பிள்ளைகள் என்னை நோக்கி மிகவும் ஆச்சர்யப்பட்டனர்.

எப்போது பார்த்தாலும் இவன் மீசையை சிரைத்து விட்டு வருவதன் காரணம் யாதென்று அவர்களுக்குள்ளேயே பலநாள் ஆலோசனை செய்து பார்த்தார்கள். அவர்களுக்கொன்றும் புலப்படவில்லை. கடைசியாக என்னையே ஒருவன் கேட்டுத்தீர்த்தான். ‘உங்கள் குடும்பத்தில் யாரேனும் வாரம் தவறாமல் செத்துப் போய்க் கொண்டிருக்கிறீர்களா?’ என்று என்னிடம் வினவினான். அவன் இங்ஙனம் கேட்டதன் காரணத்தை அறிந்து கொண்டு, “அப்படியில்லையப்பா! தமிழ்நாட்டில் பிராமணர் மீசை வைத்துக் கொள்ளும் வழக்கமில்லை என்று தெரிவித்தேன்” (10) என்று பாரதி கூறியுள்ளார். பாரதி காசியில் படித்ததால் வடநாட்டு ஆரியர்களின் கலாச்சார முறையைப் பின்பற்றி மீசையை வைத்துக் கொண்டார் என்பதே உண்மை.

சென்னை எழும்பூரில் ஸ்பர்டேங்க் என்னுமிடத்தில் டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் பஞ்சமர் மாநாட்டில் 7.10.1917 அன்று பேசும்போது பார்ப்பனர்களை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். இதுகுறித்துப் பாரதி எழுதுவதைப் பார்ப்போம்.

“சென்னை பட்டினத்தில் நாயர் கஷிக் கூட்டமொன்றில், பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிகையில் வாசித்தோம்.” (11)

“என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அடே பார்ப்பனனைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் அவமதிப்பாகத் தான் நடத்துகின்றார்கள். எல்லோரையும் அடிக்க பறையரால் முடியுமா?” (12)

டாக்டர் நாயரின் ஸ்பர்டேங்க் உரையைப் படித்தால் அதில் அவர் பார்ப்பனர்களை அடியுங்கள் உதையுங்கள் என்று கூறியதாகத் தெரியவில்லை. அவருடைய கூட்டம் கேட்டுவிட்டு வந்த சிலர் ஆத்திரமுற்று ஒரு சில பார்ப்பனர்களை அடித்ததாகவே வைத்துக் கொள்வோம். சென்னையில் உள்ள பார்ப்பனரை அடித்தால் புதுவையில் உள்ள பாரதிக்கு ஏன் கோபம் வர வேண்டும்? பாரதி 20.11.1918 வரை புதுவையில் இருந்தார். டாக்டர் நாயர் பஞ்சமர் மாநாட்டில் பேசியது 7.10.1917 இல். பெரியார் சொல்லுவாரே, “கன்னியாகுமரியில் உள்ள பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால் காஷ்மீரிலுள்ள பார்ப்பானுக்கு நெறிகட்டிக் கொள்ளும்” என்று. அது பாரதிக்கு இங்கு முற்றிலும் பொருந்தி விடுகிறது.

ஆரியர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன என்பதை பாரதி ஆய்வு செய்து எழுதுகிறார். “ஆரியராகிய நாம் ஏன் வீழ்ச்சி பெற்றோம்? நமது தர்மங்களை இழந்ததினால். அறிவை அபிவிருத்தி செய்தல், பல்லாயிர வகைப்பட்ட சாஸ்திரங்கள் அதாவது அறிவு நூல்களைப் பயிற்சி செய்து வளர்த்தல், தர்மத்தை அஞ்சாது போதனை செய்தல் முதலிய பிராமண தர்மங்களையும், வீரத்தன்மையை பரிபாலித்தல் முதலிய ஷத்திரிய தர்மங்களையும் வியாபாரம் கைத்தொழில் என்ற வைசிய, சூத்திர தர்மங்களையும் நாம் சிதைய இடங்கொடுத்து விட்டோம்... இதுவே நமது வீழ்ச்சிக்குக் காரணம்” (13)

பாரதி தன் கதைகளில் கூட, பார்ப்பனச் சாதியின் உயர்வைப் பற்றியே கூறுகிறார். ‘பிராயச்சித்தம்’ என்ற கதையில் சாதிகெட்ட பார்ப்பனனைச் சாதியில் சேர்க்க ரூ.50,000 செலவு செய்யும்படிக் கூறி கதையை முடிக்கிறார். அக்கதையின் சுருக்கம் வருமாறு:

“ஆங்கிலம் படித்த ராமச்சந்திரய்யர் என்பவர் வெளிநாடு சென்று மேரி குட்ரிச் என்ற வெள்ளைக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வருகிறார். இங்கு வந்தவுடன் அந்த வெள்ளைக்காரப் பெண் நம்ம ஊர் பார்ப்பனப் பெண்களைப் போலவே ‘மடிசார்’ புடவை கட்டிக்கொள்கிறாள். தன் பெயரையும் ஸீதாதேவி என்று மாற்றிக் கொள்கிறாள். நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு அசல் பார்ப்பனப் பெண் போலவே மாறிவிட்டாள். அவன் கடல் கடந்து வந்ததினாலும், வேறு இனத்துப் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாலும், அவனை மீண்டும் பிராமணர் சாதியில் சேர்க்க அவ்வூர் பார்ப்பனர்கள் மறுக்கிறார்கள். அப்போது மாஷாபூப் தீஷிதர் என்பவர், “பிராம்ஹணா மமதேவதா! (பிராமணர் எனக்குத் தெய்வம்) என்று ஸ்ரீமந் நாராயணனே சொல்லுகிறார்; அப்படியிருக்கையில் யாரும் பிராமணப் பதவியிலிருந்து நழுவக் கூடாது, நழுவினாலும் மறுபடியும் சேர்ந்து கொள்ள வேண்டும்” என்கிறார். இக்கதையின் முடிவில், ரூ.50,000 செலவு செய்து (ப்ராயச் சித்தம்) சாதி கெட்ட பார்ப்பனரான ராமச்சந்திர தீட்சிதரைப் பார்ப்பன சாதியில் சேர்த்துக் கொள்வதாகக் கதை முடிகிறது. (14)

பாரதியார் தன்னுடைய கடைசிக் காலத்தில் எழுதிய கதை ‘சந்திரிகையின் கதை’. இக்கதை முழுவதையும் எழுதி முடிக்கும் முன்பே அவர் இறந்து விட்டார். இக்கதையில் சுப்புசாமி கோனாருடைய மகள் மீனாட்சியின் மீது கோபால் அய்யங்காருக்கு காதல் ஏற்படுகிறது. அந்த அய்யங்கார் இடையர் வீட்டிற்கு வந்து பெண் கேட்கிறார். அதற்கு அந்தக் கோனார், ‘நான் சாஸ்திரங்களில் நம்பிக்கையுடையவன். சூத்திரச் சாதியைச் சேர்ந்தவன் நான். என்னுடைய பெண்ணைப் பிராமணருக்குக் கலியாணம் செய்து கொடுப்பதனால் எனக்குப் பாவம் வந்து சேரும். எனவே எனக்கு இதில் சம்மதம் இல்லை’ என்கிறார். இதைக் கேட்ட கோபால் அய்யங்கார் ‘நிஜமான பிராமணன் பிராமண குலத்தில் மாத்திரமின்றி மற்ற நான்கு வர்ணங்களிலும் பெண்ணெடுக்கலாமென்று சாஸ்திரம் சொல்லுகிறது. இந்த விஷயத்தில் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், என்னிடத்தில் தமிழில் மனு ஸ்மிருதி இருக்கிறது. உங்களிடம் அந்த நூலைக் காட்டுகிறேன். அதை நீங்களே வாசித்துப் பாருங்கள்’ என்கிறார். (15)

இக்கதையின் மூலம் பார்ப்பனர்கள் எந்தச் சாதியில் வேண்டுமானாலும் பெண் எடுக்கலாம் என்பதைப் பாரதி மனுநீதியை ஆதாரம் காட்டி முடிக்கிறார். ஆனால் பார்ப்பனப் பெண்களைப் பிற சாதியில் திருமணம் செய்விக்கப் பாரதி எதிர்ப்பாகவே இருந்துள்ளார் என்பதைப் பின்வரும் சான்று மூலம் அறியலாம்.

“பாரதி கடையத்தில் வாழ்ந்த காலத்தில் ஒருநாள் பாரதியும், நாராயணப் பிள்ளையும் கலப்புத் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று நாராயணப் பிள்ளை, ‘பாரதி நாம் இருவரும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் பழகி வருகிறோமே! உங்கள் மகள் சகுந்தலா பாப்பாவை என் மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால் என்ன?’ என்று கேட்டார். பாரதி சற்று உஷ்ணமாகவே, ‘கலப்பு மணத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்குமேயானால், நீங்கள் முதலில் உங்கள் மகனுக்கு ஒரு பறை அல்லது சக்கிலியப் பெண்ணைத் தேடித் திருமணம் செய்து வையுங்கள். அதன்பிறகு பாப்பா திருமணத்தைப் பற்றிப் பேசலாம்’ என்றார். பிள்ளையும் பாரதியும் கடுமையான வாதப்பிரதிவாதம் செய்தார்கள். முடிவில் பாரதி விடுவிடு என்று தம் வீடு போய்ச் சேர்ந்தார். அப்போது காலை 11 மணி இருக்கும்.

நாராயணப்பிள்ளை செல்வந்தரானதால் அவரது நடவடிக்கைகளைப் பற்றி விமர்சிக்க ஊரார் பயப்படுவார்கள். மனைவியை இழந்த அவர், ஊர்க்கோவில் அர்ச்சகரான ஒரு பிராமணரின் மனைவியைத் தன் வீட்டில் வைத்துப் பராமரித்து வந்தார். அந்த அர்ச்சகரும் நிர்ப்பந்தம், லாபம் இரண்டையும் கருதி அதைப் பொருட்படுத்தாமல் இருந்தார். வீட்டுக்கு வந்த பாரதி மனம் நொந்து திண்ணையில் அமர்ந்திருந்தார். அச்சமயம் அந்த அர்ச்சகர் தெரு வழியே போனார். பாரதி திண்ணையிலிருந்து குதித்து அர்ச்சகரிடம், “உன் போன்ற மானங்கெட்டவர்களின் செய்கையால் தானே நாராயணப் பிள்ளை என்னைப் பார்த்து அக்கேள்வி கேட்கும்படி ஆயிற்று” என்று சொல்லி அவர் கன்னத்தில் பளீரென்று அறைந்து விட்டார்.

அர்ச்சகர் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி நாராயணப் பிள்ளையிடம் முறையிட்டார். நாராயணப் பிள்ளைக்குக் கட்டுக்கடங்காத ஆத்திரம் ஏற்பட்டது. தன் வேலையாள் ஒருவனை அனுப்பி பாரதியின் மைத்துனர் அப்பாத்துரையை வரச் சொன்னார். பதறிப்போய் விரைந்து வந்த அப்பாத்துரையிடம் இன்று இரவுக்குள் பாரதியை கடையத்தை விட்டு வெளியேற்றாவிட்டால், ஆட்களை ஏவி அவரை இரவே தீர்த்துக் கட்டிவிடப் போவதாக எச்சரித்தார் பிள்ளை. பாரதி வீட்டில் ஒரே குழப்பம். முடிவில் பாரதியையும் அவர் குடும்பத்தையும் சென்னைக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். விடியற்காலை நாலு மணிக்கு வரும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரசுக்குக் கூடக் காத்திராமல், பிற்பகல் 2.30 மணிக்கு வரும் செங்கோட்டை பாசஞ்சரில் அவசர அவசரமாக மூட்டை முடிச்சுகளுடன் அவரை ஏற்றி அனுப்பினார்கள்.

பாரதி புறப்பட்டு வரும் செய்தி சுதேசமித்திரன் ஆசிரியர் ஏ.ரங்கஸ்வாமி அய்யங்காருக்கும், நண்பர் வக்கீல் எஸ்.துரைசாமி ஐயருக்கும் தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது. இது 1920 நவம்பர் மாதம் நடைபெற்றது.” (16) எனப் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ள ரா.அ.பத்மநாபன் கூறியுள்ளார்.

பாரதி சென்னைக்கு வந்தது கூட ஒரு விபத்துதான். அரசியல் நடத்த அவர் சென்னைக்கு வரவில்லை. பார்ப்பனப் பெண்ணை கீழ்ச்சாதிக்காரன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது, பார்ப்பன ஆண் எந்த சாதிப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதுதான் அவரின் கருத்தாக உள்ளது.

பாரதியார் ‘ஞானரதம்’ என்ற கதையில் நால்வருணத்தை வலியுறுத்தியுள்ளார். “ஜனங்களுக்கு ஏற்படக்கூடிய துன்பங்களுக்கெல்லாம் அறிவின்மையே காரணமாதலாலும், அந்த அறிவின்மை ஏற்படாமல் பாதுகாப்பதே பிராமணன் கடமையாதலாலும் பிராமணர்களே பொறுப்பாளிகளாவார்கள். ஜனங்களுக்குள் சூத்திர தர்மம் குறைந்து போனால், அப்போது பிராமணர் சூத்திர தர்ம போதனையே முதல் தொழிலாகக் கொண்டு நாட்டில் உண்மையான சூத்திரர்களை அதிகப்படுத்த வேண்டும். ஷத்திரிய தர்மத்திற்கும், பிராமண தர்மங்களுக்கும் ஊனம் நேரிடுமாயின் ஜன சமூகம் முழுவதுமே ஷீணமடைந்து போய்விடும்” (17) என்கிறார்.

இந்த உலகத்தில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் தீர 1917இல் பாரதி கூறும் வழி என்னவென்றால் மீண்டும் நால்வருணம் தோன்ற வேண்டும் என்பதே:

“கலியுகம் ஐயாயிரம் வருஷத்துக்குப் பிறகு ஒரு புதுயுகம் பிறக்கும். அதுதான் கலியுகத்துக்குள்ளே கிருதாயுகம். அப்போது இந்த உலகமே மாறும். அநியாயங்களெல்லாம் நொறுங்கித் தவிடு பொடியாகி விடும். நாலு குலம் மறுபடியுமேற்படும். அந்த நாலு குலத்தாரும் வெவ்வேறு தொழில் செய்து பிழைத்தாலும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்ய மாட்டார்கள். அன்பே தெய்வமென்று தெரிந்து கொள்வார்கள். அன்பிருந்தால் குழந்தையும் தாயும் ஸமானம்; ஏழையும் செல்வனும் ஸமானம். அப்போது மாதம் மூன்று மழை நேரே பெய்யும், பஞ்சம் என்ற வார்த்தையே இராது. தெற்குத் தேசத்தில் பிராமண குலத்தில் கபில முனிவரும் அகப்பேய்ச் சித்தரும் திரும்பி அவதாரம் செய்வார்கள், அவர்கள் ஊரூராகப் போய் ஜனங்களுக்குத் தர்மத்தைச் சொல்லி ஜாதி வழக்கை எல்லாம் தீர்த்து வைப்பார்கள். அப்போது தர்மம் நிலை பெறும்.” (18)

1919 ஜுன் மாதம் பாரதி கடையத்தில் இருந்தபோது அவர் மகள் தங்கம்மாவிற்குத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணத்திற்கு முன் தினம் வரை பாரதிக்கு இச்செய்தி தெரியாது. மறுநாள் காலை திருமணம் நடக்க வேண்டும். பாரதியின் மைத்துனர் அப்பாத்துரைக்கு தூக்கமே வரவில்லை. விடியற்காலை 4 மணிக்குத் தங்கை செல்லம்மாளை அழைத்துக் கொண்டு பாரதியிடம் சென்று, ‘இன்று உன் மகள் திருமணம். நீ வந்து தாரை வார்த்து உன் பெண்ணைக் கன்னிகாதானம் தர வேண்டும்’ என்றார். பாரதியும் மகிழ்ச்சியுடன் சரி என்றார்.

அங்கேயே அவசர அவசரமாக வெந்நீர் தயாராயிற்று. பாரதி ஸ்நானம் செய்து, அழகாகப் புத்தாடை அணிந்து கிரமமான முறையில் மணப்பந்தலுக்கு வந்தார். வழக்கமான தலைப்பாகை கோட்டு இன்றி, நெற்றியில் பட்டையாக விபூதி அணிந்து, பளிச்சென்ற பூணூலுடன் பஞ்ச கச்சக் கோலத்தில் அவரைக் கண்டோர் வியந்து மகிழ்ந்தனர். அதை விட ஆச்சரியம் தந்தது அவர் ஸம்ஸ்கிருத மந்திரங்களை அழுத்தந் திருத்தமாக அர்த்தபுஷ்டியுடன் உச்சரித்துப் பக்திச் சிரத்தையுடன் கிரியைகளை நடத்தியதாகும்.” (19)

கடைசிக் காலத்தில் எல்லோருக்கும் பூணூல் அணிவிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார். அவர் கூறுவதைப் பாருங்கள்:

“ஸ்வாமி விவேகானந்தர் சொல்லியபடி, எல்லோரையும் ஒரேயடியாக பிராமணர்களாக்கி விட முடியுமென்பதற்கு நம்முடைய வேத சாஸ்திரங்களில் தக்க ஆதாரங்களிருக்கச் செய்து விட்டால் நல்லதென்பது என்னுடைய அபிப்ராயம். எந்த ஜாதியாகயிருந்தாலும் சரி, அவன் மாம்ஸ பஷணத்தை நிறுத்தும்படிச் செய்து அவனுக்கு ஒரு பூணூல் போட்டுக் காயத்ரி மந்திரம் கற்பித்துக் கொடுத்து விட வேண்டும்.” (20)

மேற்கண்ட சான்றுகளினால் பாரதிக்கு இளமையில் காசியில் படித்த காலந்தொட்டு கடைசிக்காலம் வரையிலும் பார்ப்பன இன உணர்வு மேலோங்கி இருந்தது என்பதை அறியலாம்.

அடிக்குறிப்பு:

1. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ., ப.311
2. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ., ப.371
3. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ., ப.566
4. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ., ப.233
5. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ., ப.83
6. வ.உ.சி.யும் பாரதியும் (தொ.ஆ.) இரா.வெங்கடாசலபதி, ப.141
7. பாரதி புதையல் பெருந்திரட்டு, ப.22
8. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.395
9. பாரதியார் கவிதைகள், ப.277
10. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.29
11. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம்
12. பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.394
13. பாரதி புதையல் பெருந்திரட்டு, ப.458
14. மேற்படி நூல், ப.115-123
15. பாரதியார் கவிதைகள், வானதி பதிப்பகம், ப.219
16. சித்திரபாரதி, ரா.அ.பத்மநாபன், ப.164
17. பாரதியார் கவிதைகள், ப.72,73
18. பாரதி தமிழ், பெ.தூரன், வானதி பதிப்பகம், ப.244,245
19. சித்திரபாரதி, ரா.அ.பத்மநாபன், ப.148
20. பாரதியார் கட்டுரைகள், ப.401

(வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ நூலின் மூன்றாம் அத்தியாயம்)

வெளியீடு: தமிழ்க் குடியரசு பதிப்பகம்
14/12, மியான் முதல் தெரு,
சேப்பாக்கம், சென்னை - 600 005
பேசி: 9444321902

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக