பக்கங்கள்

திங்கள், 20 மே, 2019

படத்திறப்பு விழாவினால் பலன் என்ன?

10.01.1948 - குடிஅரசிலிருந்து....

நாம் உருவப்படத் திறப்புவிழா நடத் துவது என்பது பூஜை செய்யவோ, தேங்காய் பழம் ஆராதனை செய்து விழுந்து கும் பிட்டுப் பக்தி செய்து நமக்கு வேண்டியதைக் கோரிப் பிரார்த் தனை செய்யவோ, நாம் செய்த செய்யும் பாவத்தை மன்னிக்கும்படி கேட்கவோ அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளு கிறேன். அப்படிப்பட்ட சக்தி இருப்பதாகக் கருதிக் கூட நாம் எந்தப் படத்திறப்பு விழாவும் செய்வதில்லை. மற்றும் எப்படிப்பட்ட படத்திற் கும் பூஜை செய்யும்படியோ, கோவில்களிலோ தேர், ரதம், விமானம், சப்பரம் ஆகிய வை களிலோ வைத்து ஊர்வலம், ஆராதனை செய்யும்படி காலித்தனம் செய்வதற்கோ ஆகவும் அல்ல. ஆனால் மற்ற எதற்கு என்றால் மனித சமுக நலனுக்குச் சுயநல மில்லாமலும், மற்றவர்களிடமும் எவ்விதக் கூலியோ, புகழோ, பிரதிப் பிரயோஜனமோ பெறாமலும், தன் முயற்சியால் தன் பொரு ளால் தன் பொறுப்பென்று கருதித் தொண் டாற்றி வந்த பெரியார்களின் குணாதிசயங் களையும், தொண்டையும் எடுத்துச் சொல் வதன் மூலம், மற்றும் பலரும் அக்காரி யத்தைப் பின்பற்ற வேண்டும். பின்பற்ற மாட்டார்களா? என்பதற்காகவேதான் மனித சமுக நலனுக்குப் பிரதி பிரயோஜனம், கூலி இல்லாமல் மக்கள் பாடுபட வேண்டும் என்கின்ற மேலான குணத் தைப் பிரசாரம் செய்வதற்கு ஒரு சாதனமாகவே தான் இக்காரியத்தைச் செய்கிறோம்.

தியாகர், பனகாலின் சிறப்புகள்


நாம் அடிக்கடி தியாகராயர் - நாயர், பனகால் அரசர், நடேசன் முதலியவர்கள் படத்திறப்பு விழா செய்கின்றோம். எதற்காக? அவர்களது கொள்கை எண் ணம், தொண்டு ஆகியவைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத் தானே. மற்றபடி இவர்கள் எல்லாம் ஆழ்வார்கள், நாயன்மார்கள், பல தேசியத் தலைவர்கள் என்பவர்களைப் போன்று, மக்களுக்கு மோட்சம் காட்டும் பக்தியைப் பற்றிப் பிரசாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றி புகழ் பெற்றவர்களோ, செத்த பின் கடவு ளானவர்களோ, கடவுளுடன் - கலந்தவர் களோ அல்ல. பாமரர்களிடம் பேரும் புகழும் பெற்ற மகான்களுமல்ல. தங்களைக் கோவிலிலும், பூஜை வீட்டிலும் வைத்துப் பூஜிக்கும்படியான மாதிரியில் நடந்து கொண்டவர் களுமல்ல. அவர்கள் வெகு தைரியமாய்ப் பழைய பழக்க வழக்கங் களையும், மூட மக்களிடமும், சுயநலச் சூழ்ச்சிக்காரர் களிடமும் மிகவும் செல் வாக்குப் பெற்று இருக் கும் பழைய கொள் கைகளையும், உணர்ச்சிகளையும் தகர்த் தெறிந்து மக்களுக்குச் சமத்துவ உணர்ச்சி யையும், மனிதத் தன்மையையும் உதிக்கப் பாடுபட்டவர்கள். அப்படிப் பாடுபட்ட எவரும் அவர்களது வாழ்நாள்களில் கஷ்டப்பட்டும் பாமர மக்களால் தூற்றப் பட்டும் துன்பப் படுத்தப்பட்டவர் களு மாகவே இருப்பார்கள்.

நிகழ்காலம் நிந்திக்கும்


எதிர்காலம் ஏற்கும்


உதாரணமாக, கிரீஸ் தேசத்துச் சாக்ரடீஸ் என்பவர் எந்தக் காரியத்தையும் அறிவால் ஆராய்ச்சி செய்து பார்க்கவேண்டும் என்று சொன்னதற்காக விஷம் கொடுத்துக் கொல்லப் பட்டார். கவுதம புத்தர் என்பவர் ஆரியப் புரட்டுகளை எதிர்த்ததற்காக எவ்வளவோ கஷ்டப்பட்டார். யேசு கிறிஸ்து விக்கிரகாராதனை, கோவில் பூஜை முதலிய வைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ததற் காக சித்திரவதை செய்து கொல்லப்பட்டார். முகமது நபி அநேக மூடப்பழக்க வழக்கங் களையும், பல தெய்வ உணர்ச்சியையும் பெண் கொடுமையையும் எதிர்த்துப் பல நல்ல கொள்கைகளைப் பிரச்சாரம் செய்த தற்காகப் பல சங்கடப் படுத்தப்பட்டார். அப்படிப்பட்டவர்களும், மற்றும் அது போன்ற பல புதிய அபிப்பிராயம் சொன் னவர்களும், அவர்களது ஆயுள் காலத்தில் இதுபோல் எவ்வளவு துன்பப் படுத்தப்பட்டு, எவ்வளவு கஷ்டப்படுத்தப்பட்டு, எவ்வளவு தொல்லைப்படுத்தப்பட்டு இருந் தாலும், இன்று அவர்கள் கோடானுகோடி மக்களால் அவர்களது அபிப்பிராயங்களோடு மதிக்கப் படுகிறார்கள். கோடிக்கணக்கான பேர் களால் பின்பற்றப்படுகிறார்கள். அது போலவே தான் முன் கூறப்பட்ட பெரியார் களும், நாங்களும் இன்று எங்கள் அபிப் பிராயங்கள் எவ்வளவுதான் வெறுக்கப்பட்ட போதிலும், பாமர மக்களாலும், சுயநலச் சூழ்ச்சிக்காரர்களாலும் எவ்வளவுதான் வெறுக்கப்பட்டுத் தொல்லைகள் விளைவிக் கப்பட்டு அல்லல் பட்டாலும், பிற்காலத்தில் எங்கள் தொண்டு மக்களுக்கு மிக்க பயன் தரக் கூடியதாயும், பாராட்டக் கூடியதாயும் மக்களை ஞான வழியில் நடத்தக் கூடியதாயும் இருக்கும் என்கின்ற நம்பிக்கை உடையவர்களாகவே இருக்கிறோம். இல்லா விட்டால் இவ்வளவு தொல்லைகளுடன் எங்களுக்கு எவ்விதத் திலும் சுயநலமற்ற இந்தத் தொண்டைப் பெரும் பான்மையான மக்களுடைய இவ்வளவு வெறுப்பிற் கிடையில் துணிந்து ஆற்ற முனைந்திருக்க மாட்டோம்.

புகழப்பட்டோர் கண்ட பயன்


நாங்கள் பாமர மக்களால் வெறுக்கப் படுவதினாலேயே எங்கள் தொண்டின் மேன்மையை உணருகிறோம். பாமர மக்கள் மதித்துப் பக்தி செலுத்தி புகழும் படியாக நடந்து கொண்டவர்களுடைய எப்படிப்பட்ட தொண்டும், அபிப்பிராயமும் அவர்களது வாழ்நாளுக்குப் பின் பயன் பட்டதாக எங்களுக்கு ஆதாரமே கிடைக்க வில்லை. அப்படிப்பட்டவர்களால் மனித சமுகம் திருத்தப்பாடு அடைந்ததாக எவ்வித ருஜுவும் இதுவரை கிடைத்த தில்லை நாம் அறிய ஒரு காலத்தில் திலகர் புகழப் பட்டார். பெசண்ட் அம்மையார் புகழப் பெற்றார், காந்தியும் புகழப் படுகிறார். சரித்திரத்தில் எத்தனையோ ஆச்சாரி யர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சுவாமிமார்கள் எனப்பட்ட எத்தனையோ பேர் புகழப்பட்ட தாகவும் பார்க்கிறோம். இவர்களில் பலர் தெய்வீகம் கற்பிக்கப் பட்டார்கள். பலர் தெய்வங்களாகவும் கருதப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களாலெல்லாம் ஒரு காதொடிந்த ஊசியளவு பயன் மக்களுக்கு ஏற்படுகிறதா? ஏற்பட்டதா? ஏற்படும் என்கின்ற குறியாவது காண்கின்றதா? இவர்கள் எல்லாம் புராணங் களுக்கும் புதிய உரை எழுதுகிற உரையா சிரியர்கள் போல் தோன்றிப் பாமரர் களுடைய பக்திக்கும், பூஜைக்கும், பாராட்டு தலுக்கும் ஆளாகி முட்டாள்தனத்துடனும் அல்லது பாமர மக்களை ஏமாற்றிப் பொய்ப் புகழ் பெற்று வருகின்றோமே என்கின்ற உணர்ச்சியுடனும் தானே செத்தார்கள் சாகின்றார்கள், சாகப் போகின்றவர்கள் என்று சொல்ல வேண்டியிருக்கிறதே தவிர, கண் கண்ட பயன் என்ன என்று பாருங்கள்?

தொல்லைபட்டோரால்


தோன்றிய நன்மை


இன்று உண்மையில் மனித சமுகத்திற்கு ஏதாவது புதிய மாறுதல், உணர்ச்சி அல்லது புரட்சிகரமான சுதந்திரம், விடுதலை, சமத் துவம், சுயமரியாதை என்பதான உணர்ச்சி தோன்றி இருக்குமானால், அவை அனைத் தும் ஒரு காலத்திலோ, நேற்றோ, இன்றோ கல்லடிபட்டுக் கொல்லப்பட்டு, கையடிப் பட்டு, தொல்லைபட்டு உயிர் துறந்த, உயிர் வாழ்கின்ற - வெறுக்கப்பட்ட மக்களா லேதான் என்பது ஆராய்ந்து பார்க்கின்ற எவருக்கும் சுலபத்தில் புலப்படும்.

அப்பேர்ப்பட்டவர்கள் எல்லாம் மக்களின் தன்மை உயரவேண்டுமென்று கருதித் தொண்டாற்றியவர்களே ஒழிய, மக்கள் தங்களைப் போற்றிப் புகழ்ந்து பூசிக்க வேண்டுமென்று கருதியவர்கள் அல்ல. ஆதலால் அப்பெரியவர்களை ஞாபகப்படுத்தி, அவர்கள் தன்மையை மற்ற மக்கள் உணர்ந்து அம்மாதிரியான உள்ளம் பெற்று சமுகத்துக்குத் தொண்டாற்ற முற்பட வேண்டும் என்பதற்காகவே, அவர்களது உருவப்படத்திறப்பு விழாக்கள் என்ற பெயர் வைத்து இவற்றை எடுத்துக்கொள் கிறோம்.

-  விடுதலை நாளேடு, 18.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக