இத்தாலி ஒரு மாஜினியையும் ஒரு கேரிபால்டியையும் பெற்றதுண்டு. ஜெர்மனி ஒரு மார்க்ஸையும், ப்ரான்ஸ் ஒரு ரூஷோவையும், ரஷியா ஒரு லெனினையும், அமெரிக்கா ஒரு லிங்கனையும் பெற்றதுண்டு. ஆனால், அவர்களது சூழ்நிலைகளும், சந்தர்ப்பங்களும் வேறு. அவர்களைப் போல் நம் திராவிட நாட்டில் ஆயிரம் கேரிபால்டிகள் தோன்றியிருந்தால்கூட, இவ்வாரியம் அவர்கள் அத்தனை பேரையும் அழித்திருக்கும் காந்தியாரின் வருணாசிரமப் பிரசாரத்தை எதிர்த்தோ, ஆரிய நயவஞ்சகச் சூழ்ச்சிகளை எதிர்த்தோ, அல்லது நம்மவர்களின் உடைமையிலுள்ள பிரீதியையும் எதிர்த்தோ, அவர்களால் ஒரு நாள் கூட ஜீவித்திருக்க முடியாது. பகுத்தறிதல் பாவம் என்று நினைத்திருந்த மக்களிடையே, அவர்கள் பிறந்தார்களில்லை. மோட்ச நரகத்தைக் காட்டி மோசடி செய்யும் மக்களிடையே அவர்கள் பிறந்தார்களில்லை. ஆகவேதான், அவர்கள் விரைவில் வெற்றி கண்டார்கள். ஆனால், நம் பெரியார் பிறந்த இடமோ அப்படிப்பட்டதல்ல. அவனன்றி ஓரணுவும் அசையாது காண் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்த மக்களிடையே பிறந்தார் இவர். கடவுளை வணங்காமலிருந்தால் கயமை, சாஸ்திரங்களைத் தகர்த்தால் நாத்திகம், புராணங்களை நம்பாமல் இருத்தல் நரகத்திற்கு வழி செய்து கொள்ளல், அயோக்கிய அன்னக் காவடிப் பார்ப்பனர்கள்தான் இந்நாட்டின் பூதேவர்கள் என்று நம்பியிருந்த மக்களிடையே பிறந்தார் நம் பெரியார். அப்படி வாழ்ந்த நம்மைப் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்படி செய்து, ஆதாரங்கள் பல காட்டி நம்மைத் தலைநிமிர்ந்து நடக்கும்படி செய்தார் நம் பெரியார்.
17.01.1948- குடிஅரசிலிருந்து...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக