காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே!
இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நேற்று (21.4.2019 - கிறித்துவர்களது ஈஸ்டர் விழா நாளான அன்று) இலங்கையில் சர்ச்சுகளிலும், இரண்டு ஓட்டல்களிலும் குண்டுவெடித்து, 290 பேர் உயிரிழந்துள்ளனர்; 500 பேர்களுக்குமேல் காயம் என்ற உள்ளத்தை உலுக்கும் அதிர்ச்சி செய்தி மீளாத் துயரத்தை அகிலத்திற்குத் தந்துகொண்டுள்ளது.
இதற்கான குற்றப் பின்னணிகள் குறித்து மிக முக்கியமாக விசாரணை செய்யப்பட்டு, உண்மைகள் வெளியாக்கப்பட வேண்டும்.
பின்னணி என்ன? மிரட்டலா - மதவெறியா?
ஈழத் தமிழர்கள் மிகமிக மெல்ல மறுவாழ்வு நோக்கிச் செல்லும் இந்தக் காலகட்டத்தில், இப்படி ஒரு கொடூர நிகழ்வு, திட்டமிட்டு நடத்தப் பெறு வது, சிறுபான்மைச் சமுகத்தினரை மிரட்டவா? மதவெறியா? அச்சுறுத்தலா? அல்லது சிங்கள அரசியல் போட்டியின் விளைவா? என்று பல கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று! இறந்தவர்களில் பெரும்பாலும் சிறுபான்மையினரும், தமிழர்களுமேயாவர் என்பதும் கவனத்துக்குரியதே!
எப்படியிருப்பினும், நாகரிக மனித சமுகம் இதனை ஏற்கவே ஏற்காது.
மதவாதம் அங்கே வேறு வடிவத்தில் அதன் கோரப் பற்களுக்கு இரை தேடியது உலகறிந்த உண்மை!
இதனைப்பற்றிய முழு உண்மைகளும், காரணமும் கண்டறியப்படவேண்டும்.
உயிரிழந்தோருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்; குடும்பத்தினருக்கு ஆறுதல்!
உயிர்கள் என்பவை பகுத்தறிவாளர்களுக்கு யாதும் உயிரே, 'யாவரும் மனிதர்களே' என்பதுதான். மிகுந்த ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்
சென்னை
22.4.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக