பக்கங்கள்

புதன், 1 மே, 2019

பக்தி படுத்தும் பாடு!

பக்தியின் பெயரால்  16 வயது சிறுவன் உயிரிழப்பு
சாமியார் உள்பட 2 பேர் கைது
கண்ணமங்கலம்,ஏப்.22, திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த படவேடு அருகே ராமநாதபுரத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சுமதி. விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து  வருகிறார்கள். இவர்களது மகன் தனநாராயணன்(16), 10ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கோயில், கோயில்களாக சென்று வழிபாடு  செய்தும், தியானத்தில் இருந்தும் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அரிகிருஷ்ணன் மகனுக்கு மனநலன் பாதித்திருக்கலாம் என்று கருதி வேலூர் மருத்து வமனைக்கு அழைத்து வந்தாராம். மருத்துவர்கள், சிறு வனுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அனுப்பி யுள்ளனர். தனநாராயணன்  தன்னை யாராவது துறவியிடம் அழைத்து சென்றால் சரியாகிவிடும் என்று கூறினாராம்.
அதன்படி அவரை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள சாமியார் ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளார். அவரிடம் தனிமையில் பேசிவிட்டு வந்தது முதல் தனநாராயணன் தனது வீடு, விவசாய நிலத்தின் அருகில் உள்ள கிணறு  பகுதியில் தியானம் செய்து வந்தாராம்.  இந்நிலையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி தனநாராயணன் கிணற்றடியில் கிருஷ்ணரின் உருவப்படத்தையும், தனது உருவத்தையும்  வரைந்து விட்டு கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.
தகவல்  அறிந்த தீயணைப்பு  வீரர்கள் விரைந்து வந்து தனநாராயணனை உடலை 3 மணி நேரத்துக்கு பின்னர்  மீட்டனர்.  அப்போது அந்த வழியாக வந்த சாமியார் ஒருவர் அங்கு விரைந்து வந்து சிறுவனின் நாடியை பிடித்து பார்த்து,  யோகநிலையில்  (நீரில் அமர்ந்தபடியே) ஜலசமாதியாகிவிட்டார் என்று கூறியதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.  இதையடுத்து பள்ளம் தோண்டி உறைகள் வைத்து குழியில் விபூதி நிரப்பப்பட்டு தனநாராயணன் சடலத்தை பத்மாசன நிலையில் அடக்கம் செய்தார்களாம்.   சுமார் ஒரு மாதம் ஆன நிலையில் இதுகுறித்து சந்தவாசல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் விசாரணை: இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியும் விசாரணை நடத்தினார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறுகையில், ‘சிறுவனின் பெற்றோரை விசாரணைக்கு  அழைத்துள்ளோம்’ என்றார்.
சாமியார் உள்பட இருவர் கைது: படவேடு அருகே ஜலசமாதி அடைந்த 16 வயது சிறுவனின் உடலை தோண்டி எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காலை 9 மணியளவில் சிறுவனின் உடலை தோண்டி எடுத்து உடற்கூராவுக்கு உட்படுத்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். சிறுவன் நீர்சமாதி அடைந்த விவகாரம் தொடர்பாக சாமியார் பழனி மற்றும் லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோயில் தங்கத் தேர் பீடம் உடைந்து
பக்தர்மீது விழுந்ததால் படுகாயம்
திருவண்ணாமலை, ஏப்.22, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் வேண்டுதலுக்காக தங்கத்தேர் இழுத்து சென்றபோது, தேர் உச்சியிலிருந்து பீடத்துடன் கலசம் உடைந்து கீழே விழுந்ததில் ஒருவர் படுகாயம்  அடைந்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தின் அனுமதி பெற்று, நேர்த்திக்கடனுக்காக கட்டண தொகையை செலுத்தி பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து  வருகின்றனர். சுமார் 16 அடி உயர தங்கத்தேர் கடந்த 2006இல்  ரூ. 87 லட்சம் மதிப்பில் புதிதாக வடிவ மைக்கப்பட்டது. நேற்று பக்தர்கள் குழுவினர் தங்கத்தேர் இழுத்து நேர்த்திகடன் செலுத்த வந்தனர். அதன்படி காலை 9.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேருக்கு 3ஆம் பிரகாரத்தில் உள்ள கொடிமரம் அருகே பூஜை செய்து  வழிபட்டனர்.பின்னர், அங்கிருந்து தேரை இழுத்தனர். சுமார் 30 அடி தூரம் வந்தநிலையில், சம்மந்த விநாயகர் சன்னதி எதிரே, திடீரென தங்கத்தேரின் உச்சியில் இருந்த தங்க கலசம் பீடத்தோடு உடைந்து கீழே விழுந்தது.


அப்போது, தேர்  அருகே நின்றிருந்த வேட்டவலம் சாலை பசுங்கரையை சேர்ந்த மணிவண்ணன் (26) என்பவர் மீது கலசம் விழுந்து அவர் படுகாயம் அடைந்தார்.  உடனடியாக அவருக்கு கோயிலில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.  கீழே விழுந்த பீடத்துடன் கூடிய கலசத்தை கோயில் ஊழியர்கள் உடனடியாக  எடுத்து சென்று துணி சுற்றி அறையில்  வைத்து பூட்டினர்.  பின்னர் பவனி முடிந்ததும் அவசர, அவசரமாக தேர் நிறுத்தப்படும் அறைக்கு இழுத்து சென்று வைத்து அனைத்து கதவுகளையும் அடைத்து, பக்கவாட்டு ஜன்னல்களை துணிகளை கொண்டு மறைத்து வைத்தனர். தங்கத்தேரின் உச்சியிலிருந்த கலசம் சரியாக பொருத்தப்படாமல் கழன்று கீழே விழுந்ததா? அல்லது கேபிள் ஒயர் தடுத்ததால் உடைந்து விழுந்ததா? என்பது உடனடியாக தெரியவில்லை.
- விடுதலை நாளேடு, 22.4.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக