பக்கங்கள்

வெள்ளி, 14 அக்டோபர், 2022

தமிழை தரம் தாழ்த்தும் பாரதி (எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை) (83)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (83)

செப்டம்பர் 1-15,2021

தமிழை தரம்  தாழ்த்தும் பாரதி

நேயன்

அகத்தியர் போன்ற ஆரிய முனிவர்கள் தமிழ் இலக்கணம் செய்த பின் தான் தமிழ்மொழி ஏற்கனவே உயர்ந்து விளங்கிய ஆரிய மொழியான சமசுக்கிருதத்திற்கு நிகராக விளங்கியதாம். பாரதியார் கருத்திது. நம்புபவர்கள் எத்தனையோ பேர் இருப்பர்.

“ஆன்ற மொழிகளி னுள்ளே – உயர்

ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்”

_ என்பது அவர் கூற்று. இப்படி எழுதப் பாரதியார் வரலாறு தெரியாதவராக இருக்க வேண்டும்; அல்லது வரலாற்றை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். எளிய புலவர்கள் இவ்வாறு உண்மைக்கு மாறாக எழுதினாலும், பாரதியார் போலும் ஓரளவு சிறந்து விளங்கிய தேசியப் புலவர்கள் இவ்வாறு கற்பனைகளை உண்மைபோல் எழுதக்கூடாது. இப்படி எழுதுவதால் வரலாறு சிதைக்கப் பெற்று, உண்மை நிலைகள் உணரக் கூடாமற் போய்விடுகின்றன என்பதை அறிஞர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். பாவலர்களும் இதற்கு நெறிவிலக்கினர் அல்லர். அவர்கள் கற்பனை, வரலாற்றைத் தழுவிய கற்பனையாக இருக்க வேண்டுமே தவிர, வரலாற்றுக்கு மாறான கற்பனையாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அத்தகைய கற்பனைகளால் எதிர்காலம் சிதைக்கப்படும் என்பதை உணர்தல் வேண்டும்.

இனி, தமிழர் தமிழ் மொழி சிறந்தது, உயர்ந்தது என்று பாராட்டிப் புகழ்ந்து எழுதுவதைப் போல், பாரதியாரும் ஆரிய மொழியையும் ஆரிய இனத்தையும் அவ்வாறு எழுதியிருக்கக் கூடாதா என்று சிலர் கேட்கலாம். பாரதியார் அவர் இனத்தையும் மொழியையும் எவ்வளவு உயர்வுக்கேனும் தூக்கட்டும். அதைப்பற்றி எவருக்கும் கவலையில்லை. ஆனால், அதை வரலாறாக்கக் கூடாது. அவர் தூக்கிப் பேசுகின்ற தன்மை இன்னொரு மெய்ப்பாட்டுடன் ஒப்பிட்டுப் பேசப் பெறுகையில் தான் வரலாறு சிதைக்கப் பெறுகின்றது. இந்திய வரலாற்றுச் சிதைவுக்கு ஆரியரின் இந்தக் குழப்ப நிலைகளே கரணியங்கள். அவர்களின் தொன்மங்களிலும், தொல்கதைகளிலும் உள்ள அரசர் பெயர்களில் சிலவும், நிகழ்ச்சிகளில் சிலவும் உண்மையே! ஆனால் அவ்வுண்மையைச் சார்ந்தவாறு பொய்ம்மைகளும் புளுகுகளும் நிரம்பப் படைக்கப் பெற்று அவற்றுள் இணைக்கப் பெற்றுவிட்டன. எனவே, உண்மை எது பொய்யெது என உணரமாட்டாமல் வரலாற்று மயக்கங்களும் குழப்பங்களும் ஏற்பட்டு, மக்களைப் பல்வேறு உணர்ச்சிகளுக்கு உள்ளாக்குகின்றன. மற்ற நாடுகளைவிட இந்தியாவில் இந்நிலைகள் மிகுதி. அதற்குக் கரணியம் ஆரியப் பூசல்களே!

பாரதியாருக்கு ஆரியவுணர்ச்சி அளவிறந்து இருந்ததுடன் வேதங்களே இந்திய நாட்டின் உயர்வுக்கு அடிப்படையானவை என்னும் மூடக் கொள்கையும் மிகுதியாகவிருந்தது. வேதங்களைப் பழிப்பவர்களை ‘வெளித்திசை மிலேச்சர்’ என்று இழித்தும் அயன்மைப்-படுத்தியும் கூறுகின்றார். மற்றும்,

“தெள்ளிய அந்தணர் வேதம்” – என்றும்,

 

“ஓதுமினோ வேதங்கள்

 ஓங்குமினோ ! ஓங்குமினோ!” – என்றும்,

 

“பன்னரும் உபநிடத நூலெங்கள் நூலே

பார்மிசை யேதொரு நூல் இது போலே?”

               – என்றும்,

“நாவினில் வேத முடையவள் கையில்

நலந்திகழ் வாளுளடை யாள்” – என்றும்,

“அவள்; வேதங்கள் பாடுவாள் காணீர் – உண்மை

வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்’ – என்றும்,

 

“வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை

மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே!”

               – என்றும்,

 

“மீட்டு முனக் குரைத்திடுவேன் ஆதிசக்தி

வேதத்தின் முடியினிலோ விளங்கும் சக்தி!”

               – என்றும்,

 

“வேதமுடைய திந்த நாடு – நல்ல

வீரர் பிறந்திந்த நாடு;

 

சேதமில் லாத ஹிந்துஸ் தானம் – இதைத்

தெய்வமென்று கும்பிட்டி பாப்பா!” – என்றும்,

அவர் வேதப் பெருமைகளாகக் கூறுபவை யெல்லாம் ஆரியத்தின் பெருமைகளைப் பறை சாற்றவே கூறியவையாகும். வேதங்களை மட்டுமின்றி ஆரிய நூல்கள் அனைத்தையும் பாராட்டும் வகையில்,

“அன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம்

ஆணிமுத்துப் போன்ற மணி மொழிகளாலே

பன்னிநீ வேதங்கள், உபநிடதங்கள்,

பரவுபுகழ்ப் புராணங்கள், இதிகாசங்கள்

இன்னும்பல் நூல்களிலே இசைத்தஞானம்

என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை                          இந்நாள்?”

_ என்று பலவாறாக உண்மைக்கு மாறாகக் கட்டி உரைப்பது அவர் ஆரிய மதி மயக்கத்தினின்று விடுபடவில்லை என்பதையே காட்டுவதாகும். மேலும் இவரைப் பற்றியும் இவர் எழுதியுள்ள கதைகள் கட்டுரைகள் முதலியவற்றில் உள்ள ஆரியக் கருத்துகள் பற்றியும் இன்னும் பிறரைப் பற்றியும் கூறுவதென்றால் இக்கட்டுரை அளவிறந்து நீளும் என்பதால் இக்கருத்துரைகளை இவ்வளவில் நிறுத்திக் கொள்வோம்.

மொத்தத்தில் நாம் குறிப்பிட வந்தது, ஆரியப் பார்ப்பனர்கள் தமிழ் நிலையிலாயினும் சரி, குமுகாய நிலையிலாயினும் சரி, அரசியல், தொழில், சமயம் முதலிய எந்த நிலைகளிலாயினும் சரி. அக்காலத்திலிருந்து இக்காலம் வரை, தமிழர்களுடன் இரண்டறக் கலந்து உறவாடவில்லை என்பதையும்; அவர்கள் தவிர்க்கவியலாத நிலையில் தமிழ்நாட்டில் தமிழர்களிடையில் தமிழர்-களைப் போன்றே வாழ நேரிட்டாலும், அவர்கள் மனநிலையில் எவ்வகை மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பதையும், அவர்கள் இன்றும் தங்களை உயர்ந்தவர்களாகவும், தங்கள் மொழியையே தேவமொழி அதுவே உலகிற்கு மூலமொழி-யென்று நம்புபவர்களாகவும், அப்படி நம்பச் செய்பவர்களாகவும், அப்படி நம்புகின்ற பிற இனத்தவரையே தாங்கிப் போற்றிக் கொள்பவர்களாகவுமே இருக்கின்றார்கள் என்பதையும்; அந்த நிலைகளுக்கு உ.வே. சாமிநாதர் போலும் தமிழறிஞர்களும், பரிதிமாற்கலைஞர் போலும் தனித்தமிழ் வழிகாட்டிகளும், பாரதியார் போலும் பாவலர்களுங்கூட விலக்கல்லர் என்பதையும் உணர்த்த வேண்டியே ஆகும்.

“ஆரியமென்ற பெரும்பெயர் கொண்டஎம்

அன்னையின் மீது திகழ்

அன்பெனு மென்கொடி வாடிய காலை

அதற்குயிர் தந்திடுவான்

….. …. ….

வீரிய ஞானம் அரும்புகழ் மங்கிட

மேவிய நல் ஆரியரை

மிஞ்சி வளைத்திடு புன்மை…

… … …

வாழிய நல்ஆரிய தேவியின் மந்திரம்

வந்தே மாதரமே’’

இவர் இதே சுதேசமித்திரனில் 1906இல் “எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும்’’ என்ற தலைப்பில்,

“ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது                 போய்ப்

பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே

… … …

வேத உபநிடத மெய்நூல்களெல்லாம் போய்ப்

பேதைக் கதைகள் பிதற்றுவாரிந் நாட்டினிலே!”

எனக் கூறி,

இங்கு “ஆரியர்கள் வாழ்ந்த நாடு அற்புத நாடென்றும், அவர் எழுதிய வேத உபநிடதங்களெல்லாம் மறைந்து போயினவே’’ என்றும் மிகவும் வருத்தப்படுகிறார்.

(தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக