எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (88) மதமாற்றத்தை எதிர்த்த பாரதி!
நேயன்
இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுவதை பாரதி வன்மையாகக் கண்டித்தார். மற்ற மதங்களை வெறுத்ததோடு, இந்துக்கள் மதம் மாறுவதையும் கண்டித்த பாரதி மதவெறியின் உச்சத்திற்கே சென்று, இந்து மதத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் கூறினார்.
“இந்த மாதம் முதல் தேதி, சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முந்நூறு பேரைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகிறது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத்தக்கது…
ஆம். ஹிந்துக்கள் வருத்தப்படத்தக்க செய்திதான் அது. ஹிந்துக்களுடைய ஜனத்தொகை நாளுக்கு நாள் குறைபட்டு வருகிறது. கவிதையிலுள்ள மலைப்பாம்பு போல வாலில் நெருப்புப் பிடித்தெரியும்போது தூங்கும் வழக்கம் இனி ஹிந்துக்களுக்கு வேண்டாம். விழியுங்கள். ஜனத்தொகை குறையும்போது பார்த்துக் கொண்டே சும்மா இருப்போர் விழித்திருக்கும்போது தூங்குகிறார்-கள். அவர்கள் கண்ணிருந்தும் குருடர்’’ என்றார்.
மற்ற மதங்களை வெறுத்த பாரதி இந்து மதத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்றார். இந்து மதவெறி கொண்டு கருத்து-களைக் கூறினார்.
“இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலச் செய்து விட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப் பட்டால் அவன் ராஜாங்கம் முதலிய சகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை.
எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலை நிறுத்தும் தர்மம் சிறந்த-தென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்து விட வேண்டும். இதற்குரிய உபாயங்களைச் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன்.’’
“இந்திரன், அக்கினி, வாயு, வருணன் என்ற மூர்த்திகளே வேதத்தில் முக்கியமானவை. பின்னிட்டு இந்த மூர்த்திகளைத் தாழ்ந்த தேவதைகளாக மதிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த அலங்கோலங்களெல்லாம் தீர்ந்து, ஹிந்து மதம் ஒற்றுமை நிலையெய்தி, ஹிந்துக்கள் ஒற்றுமையும் வைதீக ஞானமும் எய்தி, மேம்பாடு பெற்று பூமண்டலத்தின் ஆசார்ய பதவி கொண்டு வாழ வேண்டுமாயின் அதற்கு நாம் கையாள வேண்டிய உபாயங்கள் பின்வருவன” என பாரதி கூறுகிறார்.
“வேதம், உபநிஷத்துகள், புராணங்கள் இவற்றை இக்காலத்தில் வழங்கும் தேச பாஷைகளில் தெளிவாக மொழி பெயர்க்க வேண்டும்.
புராணங்களில் தத்தம் தேவர்களை மேன்மைப்படுத்தும் அம்சங்களையும், மேற்படி பொதுவேதக் கொள்கைகளாகிய தவம், உபாஸனை, யோகம் முதலியவற்றை விளக்கும் அம்சங்களையும் மாத்திரமே ப்ராமணமாகக் கொண்டு, இதர தேவ தூஷணை செய்யும் அம்சங்களையும் பிராமணமில்லாதன என்று கழித்துவிட வேண்டும்.
வேதத்தின் உண்மைக் கருத்தை உணர்ந்-தோரும் ஸமரஸ ஞானிகளுமான பண்டிதர் மூலமாக நாடு முழுவதும் புஸ்தகம், பத்திரிகை, உபந்யாஸங்கள் முதலியவற்றால் பிரமாண்டமான பிரச்சாரத் தொழில் நடத்த வேண்டும். ஹிந்துக்களே, பிளவுண்டு மடியாதீர்கள்! வேதத்தின் பொருளை உணர்ந்து மேம்பட்டு வாழ வழி தேடுங்கள்’’ என்றார்.
மேலும், இந்துமதம் ஜாதியைக் காக்கின்ற மதமாக இருந்தாலும் அந்த மதத்தால் பல கேடுகள் வந்தாலும், அது ஏழ்மைக்கும் வறுமைக்கும் காரணமாய் அமைந்தாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இந்து மதத்தையும் அதன் சாஸ்திரங்களையும் நாம் கட்டாயம் காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் நாம் அழிந்தே போவோம் என்கிறார்.
“ஹிந்துக்களுக்குள்ளே இன்னும் ஜாதி வகுப்புகள் மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை. அதனால் தொல்லைப் படுவோமேயன்றி அழிந்து போய் விட மாட்டோம். ஹிந்துக்-களுக்குள் இன்றும் வறுமை மிகுதிப் பட்டாலும் பெரிதில்லை. அதனால் தர்ம தேவதையின் கண்கள் புண்படும். இருந்தாலும் நமக்குச் சர்வ நாசம் ஏற்படாது. ஹிந்து தர்மத்தைக் கவனியாமல் அசிரத்தையாக இருப்போ-மேயானால் நமது கூட்டம் நிச்சயமாக அழிந்து போகும். அதில் சந்தேகமில்லை’’ என்கிறார் பாரதியார். 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி சுதேசமித்திரன் ஏட்டில் பாரதியார் உலகம் முழுவதும் ஹிந்து தர்மத்தைப் பரப்ப வேண்டும் என எழுதியுள்ளார்.
“வாரீர் நண்பர்களே, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஹிந்து தர்மம் பரவும்படிச் செய்ய வேண்டுமானால் அதற்கு இதுவே மிகவும் ஏற்ற தருணம். ஆஹா, ஸ்வாமி விவேகானந்தரைப் போலப் பத்துப் பேர் இப்போது இருந்தால் இன்னும் ஒரு வருஷத்துக்குள் ஹிந்து தர்மத்தின் வெற்றிக் கொடியை உலகமெங்கும் நாட்டலாம்…. சண்டை காலந்தான் நமக்கு நல்லது (முதல் உலகப்போர் 1914 முதல் 1918 வரை நடைபெற்றது. அந்தச் சமயத்தில் தான் பாரதி இதை எழுதியுள்ளார்).
இவ்விஷயத்தை ஆழ்ந்து யோசனை பண்ணி இங்கிருந்து வெளிநாடுகளுக்கு நூற்றுக்-கணக்கான பிரசங்கிகளை அனுப்பும்படி ராஜாக்களையும், ஜமீன்களையும், செட்டியார்-களையும், மடாதிபதிகளையும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.’’
சண்டை காலந்தான் நமக்கு நல்ல காலம், மதத்தை வெளிநாடுகளில் நிலைநாட்ட இதுவே ஏற்ற தருணம் என்கிறார் பாரதியார். அவரைப் பின்பற்றித்தான் இராம கோபாலன் போன்றோர் “மூன்றாம் உலகப்போர் மூளுகிறது என்று நினைத்துக் கொள்வோம். அந்த வேளையில் ஆசிய நாடுகள் தங்களைக் காத்துக் கொள்ள ஒன்று பட்டு நிற்க வேண்டி வரும். அப்போது இயல்பாகவே பாரதம் ஆசியக் கூட்டமைப்பின் தலைமை ஏற்கும். அந்த நிலையில் அகண்ட பாரதமோ, அதற்குச் சமமான நிலவரமோ உதயமாவது சாத்தியம்” என எழுதியுள்ளார் போலும்
மேலும், “இப்பொழுது நம்முடைய தேசத்தில் இருக்கும் தாழ்ந்த ஜாதியார்களையெல்லாம் கிறிஸ்துவர்கள் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு வருகிறார்கள். இதுதான் நம்முடைய குடியைக் கெடுக்கக் கோடாலியாய் இருக்கும்’’ என்கிறார் பாரதியார்.
(தொடரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக