பக்கங்கள்

திங்கள், 17 அக்டோபர், 2022

ஆங்கில ஆட்சியை ஆதரித்த பாரதி! (எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை) (85)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (85)

அக்டோபர் 1-15,2021

ஆங்கில ஆட்சியை ஆதரித்த பாரதி!

நேயன்

1920டிசம்பர் 1 ஆம் தேதியன்று பாரதியார் ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் ‘திராவிடக் கக்ஷி’ என்ற தலைப்பிலே ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஆரியர் _ திராவிடர் என்பதெல்லாம் பொய் என்றும், கிறித்துவப் பாதிரிகள் இந்து மதத்தை அழிக்க இக்கதைகளைக் கட்டி விட்டதாகவும் கூறுகிறார்.

அன்று பாரதி கூறிய இந்தக் கருத்தைத்தான் இன்றைய ஆர். எஸ். எஸ். காரர்களும் வேதவாக்காகக் கொண்டுள்ளனர். பாரதி தன் ஜாதிக்கு உயர்வு வேண்டும் என்கிற போது மூச்சுக்கு முந்நூறு தரம் ஆரியர் வீரத்தைப் பற்றிப் பேசுகிறார். அதற்கு எதிர்ப்பாகத் திராவிடர்கள் கட்சியைத் தொடங்கியவுடன் ஆரியர் _ திராவிடர் போராட்டம் பொய்க்கதை என்றும் கிறித்துவப் பாதிரிகளின் தூண்டுதல் என்றும் கதை அளக்கிறார்.

பாரதிக்குத் திராவிடர் இயக்கத்தின் மீது எவ்வளவு வெறுப்பு இருந்தது என்பதை, அவர் நண்பர் ஆர்.சீனிவாசவரதன் கூறுவதன் மூலம் அறிய முடிகிறது. அவர் 1920இல் திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு மாகாண காங்கிரசு மாநாட்டுக்குச் சென்று விட்டுத் திரும்புகையில் கடயத்தில் பாரதியைச் சந்தித்த போது நடந்த சம்பவம் இது.

“பாரதியிடம் அவ்வூர் அன்பர்கள் சிலர் வந்தனர். நடந்த சம்பாஷணையிலிருந்து அவர்கள் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் போலத் தோன்றிற்று.

அன்பர்களே! ஆரியர்களுக்கு முன்னால் திராவிடர்கள்; அவர்களுக்கு முன்னால் ஆதித் திராவிடர்கள்; அதற்கு முன் இருந்தது மிருகங்கள்; ஜீவராசிகள். அவை வாழ்ந்த இடத்தை வெட்டித் திருத்தி வீடு கட்டிப் பயிர் செய்து நாம் வாழ்கின்றோம். அவை உரிமை கொண்டாடினால் அனைவரும் அவைகளிடம் விட்டு விட்டுப் போக வேண்டியதுதான்’’ என்று பாரதி கூறினார் என்கிறார்.

தமிழர்கள் இந்தியாவின் பூர்வீக குடிகள்; ஆரியர்கள் வந்தேறிகள் என்ற அப்பட்டமான உண்மையை ஏற்க மனமின்றி, இப்படிப்பட்ட பித்தலாட்ட வாதம் செய்கிறார் பாரதி.

டாக்டர் டி. எம். நாயர் ‘ஜஸ்டிஸ்’ இதழில் திராவிடருக்குத் தனிநாடு கொடுக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். அதைக் கிண்டலடித்துப் பாரதி கூறியது இது. இப்படிப்பட்ட பாரதியைத்தான் நம்மில் பலர் போற்றுகிறார்கள் என்பது வேதனையாக உள்ளது.

திராவிட இயக்கத்தின் தலைவர்களைத் தேச விரோதிகள் என்கிறார் பாரதியார். “டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கக்ஷியார் என்ற போலிப்பெயர் புனைந்த தேச விரோதிகளுக்கு நான் சார்பாகி ஆர்ய பாஷா விரதம் பூண்டு பேசுகிறேன் என்று நினைத்து விடலாகாது’’ என்று கூறுகிறார் பாரதியார். டாக்டர் நாயர், தியாகராய செட்டியார் போன்றவர்களெல்லாம் 1916 வரையில் காங்கிரசில் இருந்தவர்கள்தான். அதில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைத் கண்டு சகிக்க முடியாமல் தான் 1916இல் திராவிடர் இயக்கத்தைத் தொடங்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். டாக்டர் நாயர் சுயநலமே இல்லாதவர் என்பதைப் பாரதியே 1906இல் எழுதியுள்ளார்.

1906ஆம் ஆண்டு சென்னை நகராட்சி உறுப்பினர்களில் இருந்து ஒருவரைச் சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். அன்று 32 உறுப்பினர்கள் வந்திருந்தனர். அவர்களில் நால்வர் போட்டியிட்டனர். முதல் முறை ஓட்டு வாங்கிய விவரம்:

டாக்டர் டி.எம்.நாயர் -_ 10

பி.எம்.சிவஞான முதலியார் _ 10

ஸர் வி.ஸி. தேஸிகாச்சாரி _ 6

சர்.பிட்டி தியாகராய செட்டியார் _ 5

கூடுதல் _ 31

16 ஓட்டுக்குமேல் வாங்கினால்தான் ஒருவராவது சட்டமன்றத்திற்குச் செல்ல முடியும். எனவே தியாகராய செட்டியார் தாமாகவே போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். இரண்டாம் முறை ஓட்டுகள் பெற்ற விவரம்:

டாக்டர் டி எம். நாயர் _ 14

பி.எம். சிவஞான முதலியார் _ 11

ஸர். வி.ஸி. தேஸிகாச்சாரி _ 7

கூடுதல் _ 32

சபைத் தலைவர், குறைவாக ஓட்டு வாங்கிய தேசிகாச்சாரியாரை விலகிக் கொள்கிறாரா என்றார். அவர் விலக மறுத்துவிட்டார். இதேநிலை நீடித்தால் மாநகராட்சியின் சார்பாக ஒருவரும் சட்டமன்றம் செல்ல முடியாது. எனவே, டாக்டர் டி. எம். நாயர் அதிக வாக்குகள் பெற்றும், தான் போட்டியிலிருந்து விலகிவிட்டார். அந்த நேரத்தில் பாரதி எழுதியதாவது:

“தக்க சமயத்தில் டாக்டர் நாயர் விலகிக் கொள்ளாவிட்டால் சரியான மெஜாரிட்டி (16 வோட்டு) எவருக்கும் கிடைக்காமல் கார்ப்பரேஷன் மெம்பர் சட்டசபையில் இருப்பதற்கே இடமில்லாமல் போயிருக்கும். அதனால் கார்ப்பரேஷனுக்குப் பெருத்த அவமானம் ஏற்பட்டிருக்கும். அந்த அவமானம் ஏற்படாமல் தடுத்த பெருமை டாக்டர் நாயருக்கே உரித்தாகும். என்ற போதிலும் மிகவும் தகுதி பெற்றவரும் அதிக வோட்டுகள் பெற்றவருமாகிய டாக்டர் நாயர் விலகிக் கொண்டமை மிகுந்த வருத்த முண்டாக்குகிறது.’’

இப்படி 1906இல் டாக்டர் நாயரைப் பற்றிப் பெருமையாக எழுதிய பாரதி 1917இல் டாக்டர் நாயரைத் தேசவிரோதி என்று எழுதுகிறார் என்றால் என்ன காரணம்? திராவிடர்கள் தனி இயக்கம் தொடங்கி விட்டார்களே என்ற ஆத்திரம்தானே! வேறு என்ன காரணம் இருக்க முடியும்? 1916 காலக் கட்டத்தில் பாரதி பெரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரரா என்ன? இல்லையே! நீதிக்கட்சி தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில் 1916 டிசம்பர் 26இல் பாரதி, ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் ஆங்கிலேயர் வெளியேற வேண்டாம் என்றுதானே எழுதியுள்ளார்!

“எல்லா ஜாதியாரும் சீட்டுப் போட்டுப் பிரதிநிதிகள் குறிக்க வேண்டும். அந்தப் பிரதிநிதிகள் சேர்ந்ததொரு மஹாசபை வேண்டும். ராஜ்யத்தில் வரவு- _ செலவு உள்பட எல்லா விவகாரங்களும் மேற்படி மஹாசபையார் இஷ்டப்படி நடக்க வேண்டும். அவ்வளவுதான், மற்றபடி, ஆங்கிலேயர் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை’’ என்கிறார் பாரதி. 1916ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயர் வெளியேற வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்ன பாரதி நீதிக்கட்சித் தலைவர்களைத் தேசவிரோதிகள் என்று கூறுவது பார்ப்பனச் ஜாதிவெறி ஒன்றைத் தவிர வேறென்ன?

நீதிக்கட்சி அமைச்சரவை அமைந்த போது அதையும் கிண்டலாகவும், குத்தலாகவும் எழுதுகிறார் பாரதி.

“புதிய யுகம் வரப்போகிறது; மாண்டேகு ஸ்வராஜ்யக் குட்டி போடப் போகிறார் என்று சத்தம் போட்டதெல்லாம் கடைசியாக வெங்கட்ட ரெட்டி, ஸுப்பராயலு ரெட்டி, ராமராயனிங்கார் என்ற மூவரும் நம்முடைய மாகாணத்துக்கு மந்திரிகளாக வந்திருக்கிறார்கள் இஃதென்ன விநோதம்’’ என்கிறார் பாரதியார்.

பாரதியார் டிராம் வண்டியில் செல்வது போலவும் எதிரிலே இரண்டு பேர் உரையாடுவது போலவும் ஒரு கற்பனைச் சித்திரம் வரைந்துள்ளார். அதிலே ஒரு முதலியார் கூறுவதாகப் பாரதி எழுதுகிறார்: “பிராமணர்கள் வந்தால் அதிகமாக ஆங்கிலேய உத்தியோகஸ்தருக்கு அடிமைப்பட மாட்டார்கள். எனவே, ஜனங்களுக்குக் கொஞ்சம் நியாயம் கிடைக்கும். மற்றக் கூட்டத்தார் இன்னும் சரியாகப் படிக்கவில்லை.’’

கலாசாலை மாணாக்கராகிய ஒரு அய்யர் கூறுவதாகப் பாரதி எழுதுவதாவது:

“பிராமணரைத் தவிர வேறு ஜாதியாரை நியமிப்பதில் பிராமண துவேஷம் ஒன்றையே பெருங்கடமையாகவும் பரம தர்மமாகவும், ஜன்ம லக்ஷ்யமாகவும் நினைக்கிறவர்களை விட்டு, இதர ஜாதியாரிலும் பிராமண துவேஷ மில்லாதவர்களையே லார்ட் வில்லிங்டன் நியமித்திருக்க வேண்டும்’’ என்றார்.

(தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக