பக்கங்கள்

வியாழன், 13 அக்டோபர், 2022

பாரதி மீசை வைத்தது ஜாதியை மறுக்கவா (81)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (81)

ஆகஸ்ட் 1-15,2021

பாரதி மீசை வைத்தது ஜாதியை மறுக்கவா

நேயன்

“எனக்கும் ஒரு வள்ளுவப் பையனுக்கும் ஸ்நேஹம். அவனுடைய கோயில் அம்மன்மீது நான் பாட்டுக் கட்டிக் கொடுத்தேன். அவன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு.’’

இந்து மதத்தைக் காப்பதற்காகப் பார்ப்பனர்கள் மற்றவர்களுக்குப் பூணூல் அணிவிப்பது வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சி. இதையேதான் பாரதி செய்துள்ளார். ஆரிய சமாஜம் இதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

பாரதி மீசை வைத்து பிராமண கலாச்சாரத்தைத் தகர்த்து, ஜாதியை ஒழிக்கப் பாடுபட எண்ணுகிறார் என்று நினைக்கலாம். ஆனால், அவர் மீசை வைத்தது ஏன்?

“வேத பூமியாகிய ஆரிய வர்த்தத்தில் பிராமணர்களில் மீசை இல்லாமலிருப்பது சாஸ்திர விரோதமென்று பாவிக்கிறார்கள். அங்கு ஒருவன் மீசையைச் சிரைத்தால் அவனுடைய நெருங்கிய சுற்றத்தாரில் யாரேனும் இறந்து போனதற்கடையாளமாகக் கருதப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்பு நான் ஸ்ரீகாசியில் ஜய நாராயண கலாசாலை என்ற இங்கிலீஷ் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து வாசிக்கப்போனேன். நான் தமிழ் நாட்டிலிருந்து சென்றவனாதலால் தமிழ்நாட்டுப் பிராமணரின் வழக்கப்படி அடிக்கடி முகச் சவரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் படித்துக் கொண்டிருந்த பிள்ளைகள் என்னை நோக்கி மிகவும் ஆச்சரியப்பட்டனர்.

எப்போது பார்த்தாலும் இவன் மீசையை சிரைத்து விட்டு வருவதன் காரணம் யாதென்று அவர்களுக்குள்ளேயே பலநாள் ஆலோசனை செய்து பார்த்தார்கள். அவர்களுக்கொன்றும் புலப்படவில்லை. கடைசியாக என்னையே ஒருவன் கேட்டுத் தீர்த்தான். ‘உங்கள் குடும்பத்தில் யாரேனும் வாரம் தவறாமல் செத்துப் போய்க் கொண்டிருக்கிறார்களா?’ என்று என்னிடம் வினவினான். அவன் இங்ஙனம் கேட்டதின் காரணத்தை அறிந்து கொண்டு, “அப்படி யில்லையப்பா! தமிழ்நாட்டில் பிராமணர் மீசை வைத்துக் கொள்ளும் வழக்கமில்லை என்று தெரிவித்தேன்’’ என்று பாரதி கூறியுள்ளார். பாரதி காசியில் படித்ததால் வடநாட்டு ஆரியர்களின் கலாச்சார முறையைப் பின்பற்றி மீசையை வைத்துக் கொண்டார் என்பதே உண்மை.

சென்னை எழும்பூரில் ஸ்பர்டேங்க்ல் சாலையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில்  டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் பஞ்சமர் மாநாட்டில் 7.10.1917 அன்று பேசும்போது பார்ப்பனர்களை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

இதுகுறித்துப் பாரதி எழுதுவதைப் பார்ப்போம்.

“சென்னைப் பட்டினத்தில் நாயர், கக்ஷிக் கூட்டமொன்றில், பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிகையில் வாசித்தோம்.’’

“என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும் வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அடே பார்ப்பனனைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் அவமதிப்பாகத்தான் நடத்துகின்றார்கள். எல்லோரையும் அடிக்க பறையரால் முடியுமா?’’

டாக்டர் நாயரின் ஸ்பர்டேங்க் உரையைப் படித்துப் பார்த்தால் அதில் அவர் பார்ப்பனர்களை அடியுங்கள் உதையுங்கள் எனக் கூறியதாகத் தெரியவில்லை. அவருடைய கூட்டம் கேட்டுவிட்டு வந்த சிலர் ஆத்திரமுற்று ஒரு சில பார்ப்பனர்களை அடித்ததாகவே வைத்துக் கொள்வோம். சென்னையில் உள்ள பார்ப்பனரை அடித்தால் புதுவையில் உள்ள பாரதிக்கு ஏன் கோபம் வர வேண்டும்?

“பாரத தேசத்தில் முற்காலத்திலே பாரத ஜாதி முழுமையின் அறிவுக்குப் பொறுப்பாளியாகப் பிராமணர் என்னும் பெயருடைய ஒரு வகுப்பினர் இருந்ததாகப் பழைய நூல்களிலே காணப்படுகிறது. அந்தப் பிராமணர் தமது கடமைகளைத் தவறாது நடத்தியிருப்பார்களானால் மற்றக் குலத்தவரும் நெறி தவறியிருக்க மாட்டார்கள். ஒரு தேசத்திற்கு ஏற்படும் உயர்வு தாழ்வுகளுக்கு அத் தேசத்திலுள்ள பிராமணர்களே பொறுப்பாளிகள்’’. 

                     – பாஞ்சாலி சபத விளக்கக் குறிப்புகள்.

அதேபோல், ஆரிய வேத சாஸ்திரங்களை உயர்த்திப் பிடித்து அவற்றைப் பரப்பத் தீவிரங்காட்டினார்.

பாரதியாருக்கு ஆரியவுணர்ச்சி அளவிறந்து இருந்ததுடன் வேதங்களே இந்திய நாட்டின் உயர்வுக்கு அடிப்படையானவை என்னும் மூடக் கொள்கையும் மிகுதியாகவிருந்தது. வேதங்களைப் பழிப்பவர்களை ‘வெளித்திசை மிலேச்சர்’ என்று இழித்தும் அயன்மைப்படுத்தியும் கூறுகின்றார்.  மற்றும்,

“தெள்ளிய அந்தணர் வேதம்’’ – என்றும்,

“ஓதுமினோ வேதங்கள்

ஓங்குமினோ! ஓங்குமினோ!’’ என்றும்,

“பன்னரும் உபநிடத நூலெங்கள் நூலே

பார்மிசை யேதொரு நூல்இது போலே?’’ என்றும்,

“நாவினில் வேத முடையவள் கையில்

நலந்திகழ் வாளுடை யாள்’’ என்றும்,

“அவள்; வேதங்கள் பாடுவாள் காணீர் – உண்மை

வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்’’ என்றும்,

“வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை

மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே!’’ என்றும்,

“மீட்டுமுனக் குரைத்திடுவேன் ஆதிசக்தி

வேதத்தின் முடியினிலோ விளங்கும் சக்தி!’’ என்றும்,

“வேதமுடைய திந்த நாடு – நல்ல

வீரர் பிறந்திந்த நாடு;

சேதமில் லாத ஹிந்துஸ் தானம் – இதைத்

தெய்வமென்று கும்பிடடி பாப்பா!’’ என்றும்,

அவர் வேதப் பெருமைகளாகக் கூறுபவை யெல்லாம் ஆரியத்தின் பெருமைகளைப் பறைசாற்றவே கூறியவையாகும். வேதங்களை மட்டுமின்றி ஆரிய நூல்கள் அனைத்தையும் பாராட்டும் வகையில்,

“அன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம்

               ஆணிமுத்துப் போன்றமணி மொழிகளாலே

பன்னிநீ வேதங்கள், உபநிடதங்கள்,

               பரவுபுகழ்ப் புராணங்கள், இதிகாசங்கள்

இன்னும்பல் நூல்களிலே இசைத்தஞானம்

               என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்?’’

எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலைநிறுத்தும் தர்மம் சிறந்ததென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்து விட வேண்டும். இதற்குரிய உபாயங்களைச் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன்.

“இந்திரன், அக்கினி, வாயு, வருணன் என்ற மூர்த்திகளே வேதத்தில் முக்கியமானவை. பின்னிட்டு இந்த மூர்த்திகளைத் தாழ்ந்த தேவதைகளாக மதிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த அலங்கோலங்களெல்லாம தீர்ந்து, ஹிந்து மதம் ஒற்றுமை நிலையெய்தி, ஹிந்துக்கள் ஒற்றுமையும் வைதீக ஞானமும் எய்தி, மேம்பாடு பெற்று பூமண்டலத்தின் ஆசார்ய பதவி கொண்டு வாழ வேண்டுமாயின் அதற்கு நாம் கையாள வேண்டிய உபாயங்கள் பின்வருவன’’ என பாரதி கூறுகிறார்.

1. “வேதம், உபநிஷத்துகள், புராணங்கள் இவற்றை இக்காலத்தில் வழங்கும் தேச பாஷைகளில் தெளிவாக மொழி பெயர்க்க வேண்டும்.

2. புராணங்களில தத்தம் தேவர்களை மேன்மைப்படுத்தும் அம்சங்களையும், மேற்படி பொதுவேதக் கொள்கைகளாகிய தவம், உபாஸனை, யோகம் முதலியவற்றை விளக்கும் அம்சங்களையும் மாத்திரமே ப்ராமணமாகக் கொண்டு, இதர தேவ தூஷணை செய்யும் அம்சங்களையும் பிராமணமில்லாதன என்று கழித்துவிட வேண்டும்.

3. வேதத்தின் உண்மைக் கருத்தை உணர்ந்தோரும் ஸமரஸ ஞானிகளுமான பண்டிதர் மூலமாக நாடு முழுவதும் புஸ்தகம், பத்திரிகை, உபந்யாஸங்கள் முதலியவற்றால் பிரமாண்டமான பிரச்சாரத் தொழில் நடத்த வேண்டும். ஹிந்துக்களே, பிளவுண்டு மடியாதீர்கள்! வேதத்தின் பொருளை உணர்ந்து மேம்பட்டு வாழ வழி தேடுங்கள்.’’

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக