சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்
தமிழர் பிளவுபட்ட வரலாறு
பல்லவர் கல்வெட்டில்...
வேதங்களிலும், ஆகமங்களிலும், வித்தைகளிலும் சிறந்த பார்ப்பனர்களுக்கென்று பல சேரிகளும் கட்டப்பட்டன. இவற்றிற்குப் பார்ப்பனச் சேரிகள் அல்லது அக்கிரகாரங்கள் என்பது பெயர். இவற்றில் வதிந்த பார்ப்பன மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அரசர்களும், செல்வர்களும் எண்ணிறந்த மானியங்களைக் கொடுத்தனர். இம் மானியங்களையும், பிற பொருள்களையும் கட்டிக் காக்கப் பார்ப்பனர்களுக்கெனத் தனி ஊராண்மைக் கழகங்கள் ஏற்பட்டன. இவ்வூர்களுக்குக் குடி அல்லது சதுர்வேதிமங்கலம் என்று பெயர். பேரூர்களிலும், நகரங்களிலும் கலை வளர்ச்சிக்காகப் பார்ப்பனர்கள் தங்கியிருந்த இடம் பிரம்மபுரி எனப்பட்டது.
இவர்களுக்குக் கல்வி கற்பிப்பதற்காக நிலம் மானியமாக விடப்பட்டது. கல்வியில் சிறந்தவர்களுக்குப் பட்டவிருத்தி என்ற பட்டமளிக்கப்பட்டது. தனிப்பட்ட சிறந்த கல்வியாளர்களுக்கும் மானியமும், பரிசுகளும் வழங்கப்பட்டன என்பதைப் பல்லவர் செப்பேடுகளிலிருந்து அறிகிறோம்.
பார்ப்பனருக்குச் சலுகைகள் பிரம்மதேயம், தேவதானம் எனப்படும் சிற்றூர்களில் (அக்கிரகாரம்) வசித்த பார்ப்பனர்களுக்கு எத்தகைய வரியும் இல்லை. இவ்வூர்களில் வளர்க்கப்படும் தென்னை மரங்களுக்கு வரி இல்லை. இவற்றில் கள் இறக்கவும் கூடாது. ஆனால், இதையே பார்ப்பனர் அல்லாதார் பயிரிட்டால் இதன் விளைச்சலில் (வருமானத்தில்) பாதியை அரசுக்கு வரியாகக் கொடுக்க வேண்டும். இவர்களின் நிலத்திலுள்ள கழுகு, பனை, தென்னை மரங்கள் வெட்டப்பட்டால் அவற்றின் அடிப்பாகத்தை அரசுக்குக் கொடுக்க வேண்டும்.
சீன நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட அரிய செடியான மருக்கொழுந்தைப் பார்ப்பனர் தவிர மற்ற யாரும் பயிரிடக்கூடாது. அவ்வாறு பயிரிடத் தனியாக அரசிடம் உரிமை பெற வேண்டும். அதற்கான பெரும் தொகையை வரியாகச் செலுத்த வேண்டும். பார்ப்பனரல்லாதார் நீலோற்பலம் (குவளை) நடுவதற்குக் குவளை நடுவரி, மலரை விற்பதற்குக் குவலைக்காணம் ஆகிய வரிகளைச் செலுத்தவேண்டும். செங்கழுநீர்க் கொடியை நடுவதற்கும் இதைப் போலவே வரிகள் செலுத்த வேண்டும். ஆனால், இவற்றைப் பார்ப்பனர் பயிரிட்டால் எத்தகைய வரியும் செலுத்த வேண்டியதில்லை.
நிலவரியைத் தவிர பலதிறப்பட்ட வரிகளைப் பல்லவர் பெற்றனர். அவை காணம், இறை, காயம், சாற்று, பூச்சி, விலை பாடு முதலிய பெயர்களால் அறியப்படுகின்றன. தென்னை, பனை ஆகிய மரங்களிலிருந்து கள் இறக்குவதற்கு ஈழநாட்டிலிருந்து வந்தவர் தனியே செலுத்திய கள் வரிக்கு ஈழப்பூச்சி என்று பெயர். ஆடுமாடுகளை மந்தையாக வைத்திருந்த இடையர்கள் செலத்தியதாகக் கூறப்படும் வரி இடைப்பூச்சி எனப்பட்டது. தென்னை, பனை மரங்களிலிருந்து சாறு இறக்கவும், பனைவெல்லம் செய்யவும், பாக்கு விற்கவும் வரிகள் செலுத்தப்பட்டன. கல்லால் காணம் என்பது கண்ணாலக்காணம் (திருமண வரி) என்றும், கல்லாலமரத்திற்குச் செலுத்தப்பட்டவரியென்றும் கூறுவர். சித்திரமூலம் எனப்படும் செங்கொடி பயிரிடுவோர் செங்கொடிக் காணமும், கருசலாங்கண்ணி பயிரிடுவோர் கண்ணிட்டுக் காணமும் செலுத்தவேண்டும்.
மேற்கூறிய வரிகளைத் தவிர நிமித்தத் தொழிலை மேற்கொண்டோர் (புரோகிதர்) பிராமணராச காணம் என்ற வரியையும், மட்பாண்டம் செய்வோர் குசக்காணம் என்ற வரியையும், தட்டார் தட்டுக்காணத்தையும் செலுத்தினர்.
ஊர்த்தலைவன் மக்களிடமிருந்து பெற்ற அல்லது அரசுக்குச் செலுத்திய வரி விசக்காணம் (வியவன்காணம்) எனப்பட்டது. துணி வெளுப்போர் (வண்ணார்) பாறைக்-காணமும், படகுக்காரர் பட்டிகைக் காணத்தையும், கத்தி செய்வோர் கத்திக் காணத்தையும், திருமுகம் (ஓலை) பெறுவோர் திருமுகக் காணத்தையும் செலுத்தினர். தரகர், வாணிகர், நூல் நூற்போர், துணி நெய்வோர், ஆடை விற்போர், மீன் பிடிப்போர், தரகு செய்வோர், பறையடிப்போர், நெய் விற்போர் முதலியோரும் வரி செலுத்தினர். அறுவடைக் காலங்களில் திறை பெறவரும் அதிகாரிகட்குச் சிறு தொகை படியாகச் செலுத்தப்பட்டது. இது எல்சோறு (நாள்சோறு) எனப்பட்டது. நயன்மை மன்றத்தில் நாயத்தாரால் விதிக்கப்படும் தண்டமும் (மன்றுபடு) அரசுக்கு வருவாயாக அமைந்தது.
சோழர் காலத்தில் திருமணம்
தக்க அகவையில் (வயதில்) மணம் முடிப்பதும், பெண் வீட்டிற்குத் தேடிப்போய் அவளுக்குப் பரியம் - பரிசம் வழங்கி மணம் முடிப்பதும் அக்கால வழக்கமாகும். மாப்பிள்ளை வரிசை (வரதட்சிணை) வழங்கும் வழக்கமில்லை. இஃது ஆரியரின் பண்பாடு; ஆணைத் தேடிப்போய் வரதட்சிணை வழங்குவது ஆரியர் பண்பு. தன் வீரத்திற்கு அறிகுறியாகப் புலிப்பல்லைத் தாலியாக்கி அவளைத் தொடும் உரிமைக்குப் (ஸ்பரிசம் அல்லது தொடுவிலை) பரியம் - பரிசம் கட்டி, ஆடை அணிகலன்களைக் கொடுத்துப் பெண்ணை மணப்பதே பழந்தமிழர் மரபு. பரியத்தை முலைவிலை என்று கழகக்காலத் தமிழர்கள் அழைத்தனர். பெண்கள் பெற்றோரிடமிருந்து நிலங்களைப் பெண்வழிச் செல்வமாகப் (சீதனமாக) பெறுவர். இதில், கணவனுக்கு உரிமையில்லை. பரியம் வழங்கும் வழக்கத்தைத் தமிழரிடமிருந்து கையாண்ட பார்ப்பனர்கள் தங்கள் இனத்தவரால் தண்டனை பெற்றதாக அறிகிறோம்.
திருமணத்தில் பல சடங்குகள் நடந்தன. பன்னீரகவையில் பெண்ணுக்குத் திருமணம் நடக்கும். தீவலம் வருதல், ஓமத்தில் நெற்பொறியிடுதல், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டுதல் ஆகிய சடங்குகளும், பெண்ணைத் தாரை வார்த்துத் தரும் சடங்கும், மணமகள் காலை மணமகன் பாலால் கழுவும் சடங்கும் ஆரியப் பண்பாடு தமிழகத்தில் காலூன்றி நிலைத்த பின்னர் சோழர் காலத்தில் மிகுதியாகப் பின்பற்றப்பட்டன. தொன்மணிகள் பதித்த தாலியும், புலிப்பல் கோத்த பொற்றாலியும் கட்டப்படும். மணமக்களின் கட்டிலைச்சுற்றி எந்திர எழினி என்னும் எந்திரத்தால் இயக்கப்பெற்ற கொசுவலை கட்டப்பெற்றது.
சோழர் காலத்தில் பார்ப்பனர்கள்
சோழர் காலத்தில் பார்ப்பனர் குமுகாயத்தில் அளவிட முடியாத அளவுக்கு ஏற்றம் பெற்றிருந்தனர். பல்லவர் காலத்தில்தான் முதன் முறையாக அயலகத்திலிருந்து பார்ப்பனப் பூசாரிகள் தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்-பட்டு, பிரம்மதேயச் சிற்றூர்களில் குடியமர்த்தப்பட்டுப் பல அரிய சலுகைகள் வழங்கப்-பெற்றனர். தொடர்ந்து இவர்கள் தமிழகத்தில் குடியேறிய வண்ணம் இருந்தனர்.
சோழர் காலத்தில் மன்னர்கள் இவர்களை மண்ணுலகத் தேவர்களாகக் கொண்டு எண்ணிறந்த சலுகைகளை வழங்கினர். இதனால் இவர்கள் தமிழ்க் குமுகாயத்தை ஆட்டிப் படைத்தனர். மன்னர்கள் இவர்களின் ஆணைகளைத் தலைமேற்-கொண்டு நிறைவேற்றினர். கழகக்காலப் பார்ப்பனர் தமிழ் மொழியைத் தவிர வேறுமொழி அறியாதவர்; தமிழ்ப் பண்பாட்டில் ஊறியவர்கள். ஆனால், சோழர்காலப் பார்ப்பனர்கள் அயலவர்; வடமொழியைத் தவிர வேறு மொழியை அறிய மறுத்தவர்கள்; தமிழையும், தமிழரையும் பழித்தே முன்-னேறியவர்கள். கல்விக்கூடங்கள், கோயில்கள், அரண்மனைகள், கொலு மண்டபங்கள் முதலிய எல்லாவற்றிலும் ஆளுமை பெற்று ஆசிரியர்களாகவும், அருச்சகர்களாகவும், புரோகிதர்-களாகவும், வேதப் பாராயணம் செய்வோர்களாகவும் (ஓதுவார்) இடம் பிடித்துக் கொண்ட பார்ப்பனர், மன்னர்களைப் பல வேள்விகளைச் செய்யும்படி தூண்டினர். ஆரியம் தழைப்பதற்கு அயராது உழைத்தனர். இவர்களுக்கு மன்னரேயன்றி மக்களும் பொன்னையும் பொருளையும் பல்வேறு உரிமைகளையும் கொடுத்து ஏமாளிகள் ஆயினர். பார்ப்பனருக்கு வழங்கப்பட்ட ஊர்கள் அக்கிரகாரம், அகரம், சதுர்வேதிமங்கலம், பிரம்மதேயம் என்றெல்லாம் வழங்கப்பெற்றன. இவ்வூர்கள் யாவும் அவர்களின் பொறுப்பிலேயே விடப்பட்டன. அரசனது ஆணைகள் அவற்றினுள் செயல்படவில்லை. இவ்வூர்கள் எல்லா வகைப் பொதுச் சட்ட திட்டங்களினின்றும், வரிகள், கட்டணங்கள், முதலியவற்றினின்றும் விலக்களிக்கப்-பெற்றன. இவ்வூர்ப் பேரவை (மகாசபை) யின் தீர்மானங்களுக்கு அரசனும் பணிந்தான்.
இவ்வாறு ஏற்றம்பெற்ற பார்ப்பனர்கள் தங்களின் உயர்ந்த நிலையைக் காப்பாற்றிக் கொள்ள பல சூழ்ச்சிகளைச் செய்தனர். தமிழையும், தமிழ் நெறியையும் சாய்த்தனர்; தாமே புவியுலகின் தேவர் என்றனர். சமற்கிருதமே தேவமொழியாயிற்று. கோயில்களில் குடியேறிக் கோயிற் செல்வத்தைத் தமதாக்கிக் கொண்டனர். போர்களால் கிடைத்த கொள்ளைப் பொருள்களும், முறையாகக் கொடுக்கப்படும் நிவேதனங்களும், தானங்களும், பொதுமக்களும், பெருஞ்செல்வர்களும், அதிகாரிகளும், அரசமா தேவியரும், அரச குடும்பத்தினரும் வழங்கும் பொருள்களும் கோயிற் சொத்துகளாகக் குவிந்தன. கடவுளுக்கே இவற்றின் கணக்குத் தெரியும்! இவையாவும் பார்ப்பனரின் உல்லாச வாழ்வுக்கும் தமிழரை நசுக்கவும் பயன்பட்டன. அரச குடும்பத்திலேயே பல கோத்திரங்களைக் கற்பித்து தமிழரின் ஒற்றுமையைப் பார்ப்பனர் குலைத்தனர்.
தமிழ்க் குமுகாயம் நுற்றுக்கணக்கான சாதிகளாய்ப் பிளவுண்டது. நெல்லிக்காய்கள் போல் சிதறிய தமிழ்க் குமுகாயம், பார்ப்பனர், தம்மைக் கொள்ளையடித்துச் சுரண்டுவதை மறந்து தமக்குள்ளேயே சாதி சமயம், குலம் கோத்திர வேறுபாடுகளாய்ப் பிரிந்து நின்று தற்கொலை புரிந்து செத்துக் கொண்டிருந்தது. வேளாளருக்கும் கைக்கோலருக்கும் சலுகைப் போர்; வலங்கைக்கும் இடங்கைக்கும் உரிமைப்போர் என உள்ளகப் போர்களில் வெட்டி மடிந்தது. இப் போர்த் தீயை மூட்டிய பார்ப்பனர் அசையாமல் அமர்ந்து செல்வத்தில் புரண்டு இன்பத்தில் ஆழ்ந்து கிடந்தனர்.
சாதி வேறுபாடுகள்
குமுகாயம் ஏற்கனவே எண்ணிறந்த சாதிகளாய்ப் பிரிந்து சிதறுண்டதைக் கண்டோம். ஆரியம் கற்பித்த இப் பிரிவால் வலங்கை, இடங்கை என்று தமிழ்க் குமுகாயம் இருபெரும் கூறுபாடுகளாய்ப் பிரிந்து நின்றது. ஒவ்வொரு பிரிவிலும் 98 சாதிகள் இருந்தன. இவற்றை நிலைப்படுத்தத் தனித்தனியாகத் தொல்கதை (புராணம்) களும் கட்டுக்கதைகளும் எழுதப்-பெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் கலப்பினத்தவரே மிக்குக் காணப்பட்டனர். இவ்விரு பிரிவுகளைத் தவிர வேறு பல சாதிகளும் இருந்தன. பெரும்பிரிவுகளுக்கு உட்பட்டவர்களை அடிப்படையாகக் கொண்டு வலங்கை, இடங்கைக் கோயில்கள், மண்டபங்கள், தேவரடியார்கள் முதலிய பாகுபாடுகள் ஏற்பட்டன. ஆடை, அணிகலன்கள், உணவு முதலியவற்றிலும் வலங்கை இடங்கைப் பாகுபாடுகள் ஏற்பட்டன. இதனால், கோயில் முதல் எல்லாவிடங்களிலும் சாதிப் பூசல்கள் ஏற்பட்டன. குருதி ஓடிற்று; பலர் மாண்டனர். இத்தகைய பூசல்கள் ஒன்றில் சோழ இளவரசன் ஒருவனும் இறந்தான்; பல கோயில்கள் இடித்துத் தள்ளப்பட்டன; சிலைகள் களவாடப் பெற்றன போன்ற செய்திகளையும் கல்வெட்டுகளிலிருந்து அறிகிறோம்.
வலங்கை, இடங்கைச் சாதிகளேயன்றி வேறு சில சாதிப் பிரிவுகளும் இருந்தன. இரதகாரர் என்பது ஒருவகைச் சாதிப் பிரிவு. இவர்கள் தேர்களைச் சமைத்தல், பார்ப்பனரின் வேள்விகளுக்கு வேண்டிய சட்டுவங்கள், தட்டுகள் முதலியவற்றைச் செய்தல் ஆகிய பணிகளைச் செய்தனர். மண்பாண்டங்கள் செய்தலும், மன்னருக்கு மணிமுடிகள் வனைதலும் இவர்களுடைய பணிகளாகவுமிருந்தன. இவர்கள் இவற்றைத் தவிர வேறு தொழில்களைச் செய்யக்கூடாதென்ற விதியும் பார்ப்பனர்களால் விதிக்கப்பட்டது. இவர்கள் அனுலோமர் குலத்தைச் சேர்ந்தவர்கள். அனுலோமர், பிரதிலோமர் குலத்தைவிட உயர்ந்தவர்கள் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.
ஓர் உயர்குலத்துத் தந்தைக்கும், தாழ்குலத்துத் தாய்க்கும் பிறந்தவர்கள் அனுலோமர் எனப்படுவர். தாழ்குலத்துத் தந்தைக்கும், உயர்குலத்துத் தாய்க்கும் பிறந்தவர்கள் பிரதிலோமர் எனப்பட்டனர். சத்திரியத் தந்தைக்கும், வைசியத் தாய்க்கும் பிறந்தவர் மாகிசியர் என்றும், வைசியத் தந்தைக்கும் சூத்திரத் தாய்க்கும் பிறந்தவர் கரணீகர் என்றும் மாகிசியர் தந்தைக்கும் கரணீகத் தாய்க்கும் பிறந்தவர்தாம் இரதகார் என்றும் அறியப்பட்டனர். இவ்வாறு குலங்கள் ஒன்றோ-டொன்று கலக்கும் போது பல புதிய குலங்கள் தோன்றின.
பறையர் என்போர் மேற்கூறிய குலங்களைச் சேராமல் தனித்துத் தனிச் சேரிகளில் வாழ்ந்தனர். அவர்களுக்கென்று தனிச் சுடுகாடுகள் இருந்தன. ஆனால், அவர்களுக்கென்று சொத்துரிமை, குடிமையுரிமை முதலிய யாவும் உண்டு. இவர்கள் ஆவணங்களில் கையெழுத்திட்டால்தான் அவை முழுமை பெற்றதாகும். இவர்களிலும் புல்லுப்பறிக்கிற பறையர், ஊர்ப் பறையர், ஆவுரிக்கும் பறையர் என்று பல பிரிவினர் இருந்தனர். பறையர்கள் பிற-குடிமக்களைப் போலவே கோயில்களுக்கு நிவேதனங்கள் செய்தனர். தீண்டப்படாதவர் சண்டாளர் போன்ற சொற்களால் இவர்கள் அறியப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கதாம். அந்தணர் மிக உயர்ந்த சாதியாகவும், அரிப்பார் மிகத் தாழ்ந்த சாதியாகவும் தமிழ்க் குமுகாயம் இருமுனை (துருவங்) களைப் பெற்றது. (மண்ணரித்துப் பொன்னெடுப்பார் அரிப்பார் எனப்பட்டனர்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக