கி. வீரமணிக்கு "ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி சமூகநீதி விருது"
பி.எஸ்.ஏ.சுவாமி அவர்கள் ஆந்திர மாநிலத்தின் தலைநகர்அய்தராபாத்தில் உயர் நீதிமன்ற நீதிபதியாக சிறப்புடன் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தந்தை பெரியார் தமிழ்நாட்டு அரசியலில் நுழையாமலேயே மாபெரும் சமூக நீதி விழிப்புணர்வு இயக்கத்தைக் கட்டிக் காத்ததுபோல் ஆந்திர மாநிலம் முழுவதும் செய்ய எண்ணி, தன்னுடைய ஓய்வுக்காலத்தில் தனி வேன் மூலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டவர். புதுடில்லியில் சமூக நீதிக்கான வழக்குரைஞர்கள் அமைப்பு ஒன்றையும் ஒரு அறக்கட்டளை (டிரஸ்ட்)யாகப் பதிவு செய்து, அதன் சார்பில் மாநாடுகள், கருத்தரங்குகளை நடத்தியவர். 24.7.2008 அன்று உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார்.
பி.எஸ்.ஏ.சுவாமியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவர் செய்த பல சமூக, கல்விப் பணிகளைத் தொடர நினைத்தனர் அவரது குடும்பத்தினர். ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ.சுவாமி டிரஸ்ட் என்ற ஒன்றை நிறுவினர். மேலும் அவர் நடத்திய தெலுங்கு வார ஏடான மனப்பத்திரிகாவில் எழுதிய முக்கியமான கட்டுரைகளைத் தொகுத்து “A Journey Into The Thoughts Of Justice B.S.A Swamy’’ என்ற தலைப்பில் நூலாக வெளியிடவும் முடிவு செய்தனர்.
மேலும், ஆண்டுதோறும் இந்த அறக்கட்டளையின் சார்பில் தகுதிவாய்ந்த பிரமுகர்களை அழைத்து சிறப்புச் சொற்பொழிவு நடத்தவும், ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி சமூக நீதி விருது என்ற ஒன்றினை அத்துறையில் குறிப்பிடத்தக்க அளவு தொண்டு செய்த ஒருவருக்கு வழங்கிப் பெருமைப்படுத்தவும் அறக்கட்டளை நிருவாகத்தினர் முடிவுசெய்தனர்.
திரு. காக்கி மாதவராவ் அய்.ஏ.எஸ். (ஓய்வு) தலைமையில் 24.7.2011 காலை 11.30 மணியளவில் விழாவானது ஆந்திராவில் சாலைப் போக்குவரத்துக் கலாபவனில் தொடங்கியது.
ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ.சுவாமி பெயரால் அமைந்த விருதினை (முதல் விருது) திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அளிக்க முடிவு செய்தனர். மிகப் பிரமாண்டமான முறையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.இராமசாமி சமூக நீதி என்ற தலைப்பில் அருமையான சொற்பொழிவு நடத்தினார். சுவாமி அவர்களும் வீரமணி அவர்களையே குறிப்பிடுவார். எனவே, அவரைத் தேர்வு செய்தது பாராட்டிற்குரியது என்று குறிப்பிட்டார்.
அடுத்து, சட்டமேதை பேராசிரியர் ரவிவர்ம குமார் பேசும்போது, வீரமணி அவர்களின் தொடர் போராட்டங்கள் இல்லாவிட்டால் மண்டல் குழு பரிந்துரை செயலாகி இருக்காது. ஜாதி அடிப்படையில் சென்சஸ் எடுப்பதற்கு முதலில் டில்லியில் குரல் கொடுத்து இன்றுவரை பாடுபட்டு வருகிறார். கருநாடகாவில் ஆரம்ப வகுப்புக் குழந்தைகளுக்கு கீதையைப் பாடமாக வைத்துள்ளனர். பா.ஜ.க. அரசிற்கு எதிர்ப்புத் தெரிவித்த நாங்கள் கி.வீரமணி எழுதிய கீதையின் மறுபக்கம் என்ற ஆங்கில நூலைப் பயன்படுத்தினோம். பல அரிய தகவல்களை அதில் கொடுத்துள்ளார் என்றெல்லாம் பாராட்டினார்.
திராவிடர் கழகத் தலைவர் அவர்களை மேடையின் முன்புறம் ஒரு தனி நாற்காலியில் அமரவைத்தனர். சால்வை போர்த்தி, மாலை அணிவித்து, விருதுபற்றிய விளக்கத்தை ஆங்கிலத்தில் திரு. சுதாகர் படித்ததும் நீதியரசர்கள் பட்டயத்தை வழங்கியபோது எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தி வாழ்த்தினர். விருதுடன் ரூ.25,000/_ காசோலையை பி.எஸ்.ஏ.சுவாமி அவர்களின் மகள் சவிதா குமார் வழங்கினார்.
நன்றி உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர், இந்த 25,000/- ரூபாயுடன் இயக்கத்தின் சார்பில் 25,000/- ரூபாய் தந்து, தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்கு வந்து அதில் உள்ள கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ.சுவாமி அவர்களின் பெயரால் ஒரு நினைவு அறக்கட்டளை அமைத்து ஆண்டுதோறும் சமூக நீதி பற்றிய சொற்பொழிவு, கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். மேலும், இந்த அறக்கட்டளைக்கு நன்கொடை கொடுக்க விரும்புபவர்கள் கொடுக்கலாம் என்றும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக