பக்கங்கள்

செவ்வாய், 23 மார்ச், 2021

ஜீவனோபாயம்


சு.அறிவுக்கரசு

ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் வேரூன்றிய நேரம் ஒட்டுண்ண¤ ஆரிய இனமான பார்ப்பனர்கள், இங்கிலீஷ் மொழியைப் படிக்கத் தொடங்கினர். எழுத்தாளர் “கல்கி” கிருஷ்ணமூர்த்தி “அலை ஓசை” எனும் பெயரில் சமூக நாவல் ஒன்றை எழுதியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலில் இடம்பெற்ற, பார்ப்பனர்கள் ஜெர்மன் மொழி படிக்கத் தொடங்கியதைக் குறிப்பிட்டிருப்பார். இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் ஜெர்மனியின் ஹிட்லர் வெற்றி பெற்ற போது, சில நாடுகள் சண்டையிடாமல் சரணடைந்தன. அப்போது உலகம் முழுமையும் ஹிட்லரின் ஆதிக்கத்தில் வந்துவிடுமென்ற கருத்து - பீதி பரவியது. உடனே மயிலாப்பூர் பார்ப்பனர்கள் ஜெர்மன் மொழி கற்றுக்கொண்டால் ஹிட்லர் அரசாங்கத்தில் பணி செய்யலாம் என்கிற எண்ணத்தில் படிக்கத் தொடங்கினார்கள் என்று எழுதியிருப்பார். பார்ப்பனரான அவரே பார்ப்பனரைக் கிண்டல் செய்து எழுதினார். என்றாலும் அது பார்ப்பனரின் வாழ்வு முறையைத் தெளிவாக படம்பிடித்து காட்டியதை யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில்தான் பார்ப்பனர் ஆங்கிலேயர் ஆட்சியில் கொடிகட்டிப் பறந்தனர். அவர்களில் ஓர் ஆள் தஞ்சை மாவட்டம் வலங்கைமான் ரைட் ஆனரபிள் வி.எஸ்.சீனிவாசா சாஸ்திரி என்பார். ஆங்கிலேயரை விட அருமையாகவும் சரியாகவும் ஆங்கில மொழியை பேசுபவர் என்று பார்ப்பனர்கள் பூரிப்புடன் கூறுவர். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் முதல்வர் ஏ.ஏ.ஹால் என்பவர் சில சொற்களை உச்சரித்த முறை தவறு என்று இவர் சொன்னாராம். சரியான உச்சரிப்பு தானென்று முதல்வர் கூறினாராம். ஆங்கில அகராதியை வைத்து சரிபார்த்தபோது சீனிவாச சாஸ்திரி கூறியதுதான் சரி என நிரூபணம் ஆனதாம். டி.என். ஜகதீசன் என்பார் எழுதிய நூலின் எட்டாம் பக்கத்தில் இச்செய்தி உள்ளது. ஆனாலும் இந்தப் பார்ப்பனர்கள் தமிழ் மொழியைச் சரிவரப் பேச மாட்டார்கள். சமஸ்கிருதம் கலந்து பேசத்தான் தெரியும். சமஸ்கிருதமாவது சரியாகத் தெரியுமா என்றால் கிடையாது. பெயரளவுக்கு மட்டுமே தெரியும். ஆனால் இங்கிலீஷ் மட்டும் எப்படி? அதுதான் சோறு போடுகிறது. அது அவாளுக்கு ஜீவனோபாயம். (பிழைக்கும் வழி)

பி.எஸ்.சிவசாமி அய்யர் 1914இல் சென்னைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பேசும்போது, சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்றார். எதற்காக என்றால், அதில்தான் ஹிந்து மதத்தத்துவமும், கோட்பாடுகளும் பதிவாகி உள்ளனவாம். எனவே ஒவ்வொரு ஹிந்துவும் சமஸ்கிருதம் படிக்க வேண்டுமாம். அவர் படித்தாரா? ஆங்கிலேயர் ஆட்சி என்பதால் இங்கிலீஷில் சட்டம் படித்து விட்டு லட்சம் லட்சமாய்ச் சம்பாதித்தார் என்பதுதானே வரலாறு! தமிழ் அறிவு கொஞ்சமும் இல்லாத அவர் தமிழைப் பற்றிக் குறை கூறினார். சமஸ்கிருதம் பெற்றெடுத்தது என்றார். தமிழில் “கமலாம்பாள் சரித்திரம்“ எனும் புனைகதை எழுதிய ராஜம் அய்யர், மரத்தின் இலை, தழைகளிடையே தலைத்தூக்கும் மலர் போன்றது சமஸ்கிருதம் என்றார். (கமலாம்பாள் சரித்திரம் நூல் பக்கம் 15) இந்நூல் 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. “சூத்திர மொழியான தமிழ் மொழியை தன்னால் பார்ப்பனரல்லாதார் போல் பேச இயலாது” என ஒத்துக் கொண்டவர். (மேற்கண்ட நூலின் பக்கம் 19) தமிழில் நாவல் எழுதினார். ஜீவனோபாயம் (பிழைக்கும் வழி) என்பதல்லாமல் வேறென்ன? ஷெல்லியையும், சேக்ஸ்பியரையும் படித்த நான் (சுப்பிரமணிய) பாரதியை கவிஞர் என ஏற்க மாட்டேன்” என்று எழுதியவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி. 1941இல் தமிழ் இசைக்காக போராட்டம் நடத்திய செட்டி நாட்டரசர், பெரியார் முதலியோருடன் சேர்ந்து போராடியவர் இவர். அப்போது முத்து கிருஷ்ணய்யர் என்பவர் ஒரு கடிதம் எழுதினார். “தமிழர் என்றும் தமிழ் மக்கள் என்றும் யாரை நீங்கள் உங்கள் பத்திரிகையில் எழுதுகிறீர்கள்? உங்களையே பார்ப்பனரல்லாதார்” என்று நினைக்கிறார்கள் சிலர். ஏனென்றால், நீங்கள் தமிழ் இசை பற்றி பேசியும் எழுதியும் வருகிறீர்கள். தமிழிசை இயக்கம் என்பது பார்ப்பனரல்லாதாரின் இயக்கம் என்றே அவர்கள் கருதுகிறார்கள். ஆகவே “கல்கி” ஏடு பார்ப்பனருக்கு எதிரான ஏடு என்று நினைக்கின்றனர். என் சந்தேகத்தை நிவர்த்தி செய்து சரியான விளக்கத்தை தரவும்“ என்று அக்கடிதத்தில் எழுதியுள்ளார் (மா.சு.சம்பந்தம் எழுதிய “தமிழ் இதழியல் வரலாறு” - 1987, பக்கம் 92-93) என்றால் என்ன பொருள்? கல்கி கிருஷ்ணமூர்த்தி பார்ப்பனராக இருந்தபோதிலும், தமிழ் மொழிக்காக பரிந்து பேசியதால் அவரைக் கேள்வி கேட்டனர். அவரது பிறப்பு பற்றி கேள்வி கேட்டனர் என்றால் இத்தகைய பார்ப்பனத் தனத்திற்கு என்ன பெயர்? “வடமொழியால் வாழா நாய்கள்” என்ற புரட்சிக் கவிஞர் போல் சாட வேண்டும், தானே!

1879இல் வெளிவந்த, தமிழின் முதல் நாவல் “பிரதாப முதலியார் சரித்திரம்“ மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதியது. அதில் ஒரு காட்சி - வழக்கு மன்றம் போய் வழக்கு விசாரணையில் கலந்துகொண்டு திரும்பிய காட்சியை விவரிக்கும்போது, குருடன் நாடகம் பார்க்கப் போனது போலவும், செவிடன் சங்கீதம் கேட்கப¢போனது மாதிரியும் இருந்தது என்று வரும். நாவல் எழுதியவரே முன்சீப் (நீதிபதி) வேற்று மொழியில் விசாரணை நடந்ததைக் குறிப்பிட்டார். ஞானாம்பாள் எனும் கதாபாத்திரம் பேசும்போது, “இங்கிலீஷ் படித்தவரை இங்கிலாந்துக்கு அனுப்பலாம், பிரெஞ்ச் படித்தவரை ஃபிரான்ஸ் அனுப்பலாம் .லத்தினும், சமஸ்கிருதமும் படித்தவர்களை எங்கு அனுப்புவது? இந்த மொழிகளைப் பேசும் மக்களுக்கு சொந்த நாடே கிடையாதே! பெயரில்லாத தீவு எதற்காகவாவது துரத்தத்தான் வேண்டும் போலிருக்கு” என்று கூறும் மக்கள் மொழி ஒன்றாகவும் ஆட்சிமொழி வேறாகவும் அமைந்திருந்த அவலத்தை எடுத்துக் காட்டும் வரிகள். அதே அவலம் இன்னும் நீடிக்கும் அவலம். நீதிமன்றத்தை விடுங்கள். “கடவுள்” என்கிறார்களே, அதனைத் தாய்மொழியில் வழிபட விடுகிறார்களா, பார்ப்பனர்கள்? 1970இல் கலைஞர் முதல்வராக இருந்தபோது தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றபோது பார்ப்பனர்கள் எதிர்த்தார்களே! தேவ பாஷையில் செய்யவேண்டும் என்றார்களே! அதுவும் “ஜீவனோபாயம்“ தானே!

மக்களின் மொழி தெரியாத கடவுளை வெளியேற்ற வேண்டும், ஒழிக்க வேண்டும் என்றவர் பெரியார்! மொழிப் பற்றுக் கொண்ட பக்தர்கள் யோசிக்க வேண்டும்.

“பயங்கர பார்ப்பனர்கள்” எனப் பொருள்படும் The Dynamic Brahmins எனும் நூலை பி.என்.நாயர் என்பார் எழுதினார், 1959இல், பக்கம் 78-79களில் அவர் “சமூகத்தைக் கட்டுப்படுத்திடப் பார்ப்பனர்களின் செயல்முறை என்ற வகையில் சமஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டது. கலாச்சாரத் துறையில் அவர்கள் வெற்றி பெற்றவர்களாகி விட்டனர்” என்றே குறிப்பிட்டுள்ளார். தம் மொழியைக் கொண்டு பிறர் மொழிகளை மதிப்பிழக்கச் செய்துவிட்டனர். அந்த மொழிச் சொற்களைக் கலந்து பேசுவது பெருமை தரத்தக்கது என அடிமையாக்கப்பட்ட பெரும்பான்மையினர் கருதும் சூழலை உருவாக்கிவிட்டனர்.

இம்முயற்சிக்குப் பார்ப்பனர்கள் பக்தியை பயன்படுத்தினர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சிலர் செய்த பக்தி இலக்கியங்கள் இப்படுபாதகத்தைச் செய்தன. மணியும் பவழமும் கலந்தாற்போன்ற அழகு தமிழ் என்றனர். மணிப்பிரவாளம் என்றனர். பார்ப்பனரல்லாதார் ஏமாந்தனர். ஏமாற்றப் பட்டுள்ளோம் என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே அறிந்தனர். கலப்படத் தமிழைத் தூய்மை செய்ய முயற்சிகள் எடுத்தனர். தனித்தமிழ் இயக்கம் நடத்தினர். மறைமலை அடிகள் தொடங்கிப் பாவாணர் பெருஞ்சித்திரன் உட்பட்டோர் உழைத்தனர். ஓரளவு வெற்றி பெற்றனர். என்றாலும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் சமஸ்கிருதம் மீண்டும் ஆதிக்கம் பெற்றிடும் நிலை. இப்படி வரும் என எதிர்பார்த்த தீர்க்கதரிசி - தொலைநோக்காளர் - பெரியார் 1927இல் எச்சரித்தார். அந்த ஆபத்து வந்தேவிட்டது.

மண்ணுக்குரிய மக்கள் ஹிந்து மதத்தவரின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹிந்து மதத்திற்கே உரிய கெடுதலான ஜாதிப் பிளவுகள் அவர்கள் மீதும் திணிக்கப்பட்டன. ராஜராஜ சோழன் காலத்தில் இடங்கை ஜாதிகள் என்றும் வலங்கை ஜாதிகள் என்றும் பிரிக்கப்பட்ட ஜாதிகளுக்குள் மோதல்கள் நடைபெறுவதும் அடங்குவதும் வாடிக்கையாகிவிட்டது. டாக்டர் அம்பேத்கர் கூறியதுபோல, ஜாதிகளின் தொகுப்பே ஹிந்து மதம். ஜாதி அமைப்பு குலைந்தால் ஹிந்து மதமே குலைந்து போகும், எனவே மதம் பற்றி கவலைப்படுவோர் யாரும் ஜாதி பற்றிப் பேசுவதில்லை. ஜாதி, மத விஷயங்களில் தலையிடுவதில்லை என 1858இல் அளித்த வாக்குறுதியை மீற ஆங்கில அரசும் தயாராக இல்லை. எனவே பார்ப்பனரல்லாத பெரும்பான்மையினருக்குக் கோவிலுக்குள் செல்லவோ, வழிபடவோ தடை விதித்திருந்தனர் பார்ப்பனர்கள். கோயில் நுழைவுக் கோரிக்கை எழுந்தபோது பார்ப்பனர்களுடன் சேர்ந்து பார்ப்பனரல்லாதாரும் எதிர்ப்பு காட்டினர். பார்ப்பனர்களுடன் சேர்ந்த பார்ப்பனரல்லாதார் சற்சூத்திரர்கள் என்று பெயர் பெற்றனர். சூத்திரர் எனும் சொல்லுக்கு மனு சாஸ்திரம் கூறும் பல பொருள்களில் தாசிபுத்திரன் என்பதும் ஒன்று. எனவே, சற்சூத்திரன் என்றால் நல்ல தாசிப்புத்திரன் என்று தானே பொருள்படும்?

இத்தகையக் கேவலத்தை ஜரிகை அங்கவஸ்திரமாக அணிந்துகொண்ட பார்ப்பனரல்லாதாரின் பரிதாப நிலையைப் பார்த்தீர்களா? பார்ப்பனரின் அடிமைகளாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட பார்ப்பனரல்லாதாரின் செயலால்,  மொழி அழிந்தது. பண்பாடு கெட்டது. உரிமைகள் பிடுங்கப்பட்டன. வெறும் ஜடப்பொருளாக, உயிர் இருந்தும் உணர்வோ, உணர்ச்சியோ அற்ற பிண்டங்களாக பார்ப்பனரல்லாதார் ஆக்கப்பட்டு விட்டனர். அரசியல், பதவி, அதிகாரப் பதவி எல்லாம் பெற்றிருந்தாலும் சமுதாயத்தில் சூத்திரனாக, பஞ்சமனாக கேவலப்படுத்தப்படும் நிலை தான் இன்றளவும். அதனை மாற்ற வேண்டும். பறையர் எனும் சொல்லைவிட சூத்திரன் எனும் சொல் அசிங்கமானது என பெரியார் கூறியதைக் கருத்தில் கொண்டு அதை ஒழிக்கப் பாடுபடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக