வீ.குமரேசன்
தான் செய்திடும் பணிகளால் கிடைத்திடும் பலன்கள் தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் கிடைத்திட வேண்டும் என்ற மனப்போக்கு பரவலாக மிகப் பலரிடம் உள்ளது. இப்படி ஒவ்வொருவரும் தனக்கு மட்டும் பலன்கள் கிடைக்க வேண்டும் என நினைக்கத் தொடங்கி விட்டால், மானுட இயக்கமே வெகுவாகச் சுருங்கிவிடும். முன்னேற்றம் தடைப்பட்டு விடும். அந்தந்த நிலன் சார்ந்த _ மக்கள் சார்ந்த நினைப்பே மேலோங்கி மற்றவர்களைப் பகைவர்களாகப் பார்க்கும் நிலை உருவாகிவிடும். மனித சமுதாயம் நாகரிகத்தில் முன்னேறி பல்வேறு பரிமாணங்களை அடைந்ததற்கு, ‘தான் _ தன்னைச் சார்ந்தோர்’ எனும் எண்ணம் பெரிதாகத் தலைதூக்காமல் இருந்ததே காரணம். ஒவ்வொரு பகுதி சார்ந்து, அந்த மக்கள் சார்ந்த வளர்ச்சி _ அவர்தம் முன்னேற்றம் எனும் நிலைகள் நிலவினாலும் அதற்கும் அப்பாற்பட்டு மனித குலத்தையே ஒன்றாகப் பார்க்கும் மனப்போக்கும் நிலைக்க வேண்டும்; நீடிக்க வேண்டும். இத்தகைய மனப்போக்கு கொண்டவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்து வந்த முன்னோர்கள் என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சங்கத் தமிழ் இலக்கியம்,
“யாதும் ஊரே யாவரும் கேளிர்’’
என உலகளாவிய பார்வையுடன் வலியுறுத்தியது. இத்தகைய கருத்தாக்கத்தில் இலக்கியம் தோன்றிட, அதற்கு முன்னரே பன்னெடுங் காலமாக, அத்தகைய நினைப்பு நிலவியிருக்க வேண்டும். தனிநபர் அடிப்படைத் தேவைகள், வசதிகள் நிறைவேறிய பின்னர் பரந்துபட்ட சிந்தனை, நோக்கத்துடன் வாழ்ந்திட மனிதர்கள் பழக்கப்பட வேண்டும்.
மற்றவர்க்கும் பயனளிக்கும் வகையில் தனது செயல் பழக்கப்படும் நிலையில், தனது செயலுக்கான பாராட்டு கிடைத்திட பலர் முயலுகின்றனர். செய்திடும் செயலைப் பொறுத்து, அதன் பயன்படும் தன்மை அடிப்படையில் பாராட்டு கிடைக்கப் பெறும். கிடைக்கும் காலத்தைப் பொறுத்த அளவில் மட்டும் எதிர்பார்ப்புக்கும், நிகழ்வுக்கும் இடைவெளி நிலவிடும். சிலருக்கு கிடைக்கப் பெறும் பாராட்டு, போற்றுதல் அவர் வாழ்ந்த காலத்தில் கிடைக்காது. மறைந்து, பல காலம் கழித்து அத்தகைய பெருமக்களின் செயல், பொதுநலப் பங்களிப்பு போற்றப்பட்டிருக்கின்ற வரலாறு பல உண்டு. எடுத்துக்காட்டுக்கு ஓர் அறிவியல் சாதனை:
பாராட்டு கருதா அறிவியல் ஆராய்ச்சிப் பணி
இன்று மரபணு பற்றிய அறிவியல் வளர்ச்சி மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உயிர் மரபுக்கு அடிப்படையான மரபணுவியலின் தந்தை எனப் போற்றப்படுகின்றவர் கிரிகார் ஜோகான் மெண்டல் (Gregor Johann Mendel - 1822-1884) எனும் ஆஸ்திரியா நாட்டைச் சார்ந்த கிறிஸ்துவ பாதிரியார். கணிதவியலாளர், தட்பவெப்பநிலைய ஆய்வாளர், உயிரியலாளர் என பல தளங்களில் வித்தகராக விளங்கினார். தொடக்கத்தில் தான் சேவையாற்றிய தேவாலயத் தோட்டத்தில் பட்டாணிச் செடிகளை வளர்த்து ஒவ்வொரு தலைமுறையிலும் எப்படி எப்படி அந்தப் பயிர் புறமாற்றம் அடைகிறது என்பதை தனது குறிப்பேட்டில் எழுதி வந்தார். நுண்ணோக்கி (Microscope) கருவி கண்டுபிடிக்கப்படாத காலம் அது.
அவர் ஒரு செடியிலிருந்து உருவான விதையின் மூலம் முன்னதிலிருந்து அடுத்தது என பல தலைமுறைகளை அடுத்தடுத்து தொடர்ந்து உருவாக்கி மரபணு (Gene) பற்றிய தனது விளக்கத்தை ஆய்வறிக்கையின் மூலம் அறிவியல் இதழில் வெளியிடுகிறார். பின்னாளில் அந்த ஆய்வறிக்கைதான் மரபணு பற்றிய அடிப்படைக் கோட்பாடாக அமைந்தது. ஆனால், மெண்டல் அவரது ஆய்வின் முடிவினை வெளியிட்டபொழுது, அதுபற்றி யாருமே _அறிவியல் அறிஞர்கள் மத்தியிலேயே பெரிதாக கவனிக்கவில்லை. தனது ஆய்வின் முடிவினை உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை எனும் நினைப்பில் வாழ்ந்து மறைந்தார்.
அவர் மறைந்து சில ஆண்டுகளுக்குப் பின்னர் மெண்டல் (1900) செய்து முடித்த அதே ஆய்வுப் பணியினை ஹியூகோ டிவிரிஸ் (Hugo Devries), கார்ல் காரன்ஸ் (Carl Correns), எரிக் வொன் ஷெர்மாக் (Erich von Ischermak) ஆகிய மூன்று உயிரியல் அறிஞர்கள் மேற்கொள்கின்றனர். அவர்களது ஆய்வின் முடிவும், மெண்டல் என்ன ஆய்ந்து அறிந்தாரோ அதே வகையில் வந்தது. ஆனால், அந்த மூன்று அறிஞர்களுக்கும் மெண்டல் செய்த ஆய்வுப் பணி பற்றி எதுவும் தெரியாது. தங்களது ஆய்வின் முடிவினை, மெண்டலின் ஆய்வு வந்த அதே அறிவியல் இதழில் வெளியிட அவர்கள் முனைகிறார்கள். அப்பொழுதுதான் மெண்டலின் ஆய்வு முடிவுகள் அந்த அறிவியல் இதழில் வெளிவந்ததை அறிகின்றனர். மெண்டல் கண்டறிந்த அறிவியல் உண்மையினைத்தான், தாங்களும் கண்டுபிடித்துள்ளோம் என்று கூறி மெண்டலுக்கு உரிய அங்கீகாரத்தினை அந்த மூன்று அறிவியலாளர்கள் பெற்றுத் தருகிறார்கள். அந்த நிலையில்தான் மெண்டலின் ஆய்வு முடிவின் பெருமையை உலகம் புரிந்துகொள்கிறது. ஆனால், அந்தப் பாராட்டைப் பார்க்க மெண்டல் அப்பொழுது உயிருடன் இல்லை. ஆனால், மரபணு பற்றிய தனது ஆய்வின் மூலம் இன்றைக்கும் போற்றுதலுடன் வாழ்ந்து வருகிறார்; உலகம் முழுவதும் அறிவியல் அறிஞர்களால் போற்றப்பட்டு வருகிறார். ஆனால், மெண்டல் அவர்கள் பாராட்டை எதிர்பார்த்து தனது அறிவியல் ஆய்வினை மேற்கொள்ளவில்லை என்பதுதான் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.
எதிர்பாராமல் கிடைத்த பாராட்டு:
பாராட்டை எதிர்பார்க்காமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆற்றிடும் செயல்களுக்கு ‘பாராட்டு’ என்பது, சரியானவர்களிடமிருந்து, உரியவர்களிடமிருந்து தானாகவே வந்த நிகழ்வுகள் ஏராளம். ஏற்றுக்கொண்ட எந்தப் பணியினையும் அக்கறையும், முழுமையான ஈடுபாடும் கொண்டு செய்திடுபவருக்கு _ அவரது பணிக்கு ‘பாராட்டு’ என்பது தானாகவே _ இயல்பாகவே வந்துவிடும். அப்படிப்பட்ட பாராட்டால் கிடைத்திடும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. செய்த பணிக்கான கடின உழைப்பு, ஏற்பட்ட சோர்வு கணப்பொழுதில் அந்த எதிர்பாராத பாராட்டால் மறைந்துவிடும்.
சிலபல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த நமது கண் முன்னே வாழ்ந்து மறைந்த பெருமக்கள் வாழ்வில் நடைபெற்ற பல நிகழ்வுகள் இத்தகைய ‘பாராட்டுக்கு’ அடையாளமாகத் திகழ்கின்றன.
மறைந்த எழுத்தாளர் தமிழக அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியாராகப் பணியாற்றிய அ.கி.மூர்த்தி மொழிபெயர்ப்புத் துறையில் முத்திரை பதித்தவர்.
அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றிய அவர் பாடப் புத்தகங்களைத் தாண்டி எளிய தமிழில் அறிவியல் புத்தகங்களை எழுதி வெளிக் கொணர்ந்தவர். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் சரளமாக, இயல்பாக மொழிபெயர்ப்பு செய்யும் ஆற்றல் மிக்கவர். அவர் உருவாக்கிய ஆங்கிலம் _ ஆங்கிலம் _தமிழ் அகராதி (வெற்றி அகராதி _மணிவாசகர் பதிப்பகம்) அவருடைய நுண்மாண் நுழை புலத்தை புலப்படுத்திடும். அறிஞர் அண்ணா அவர்கள்மீது அளவிடமுடியாத பற்றுக்கொண்டவர். அண்ணாவின் எழுத்துகள் பலவற்றை தேடிச் சேகரித்து பதிப்பித்தவர். அரைமணி நேரம் பேசினாலும் அண்ணாவைப் பற்றிக் குறிப்பிட்டு அவருடைய பெருமையைப் பற்றிப் பேசுவதை இயல்பாகக் கொண்டவர்.
அண்ணா அவர்கள் கருத்துச் செறிவுடனும், சரளமாகவும், மொழிப் புலமையுடனும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசிடும் _ எழுதிடும் ஆற்றல் நிறைந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். அண்ணா அவர்கள் எழுதிய தமிழ்க் கட்டுரை ஒன்றைப் படித்து மகிழ்ந்த ஏ.கே.மூர்த்தி அவர்கள், அது ஆங்கிலத்தில் இருந்தால் எப்படி இருக்கும், பரவலாகப் போய்ச் சேருமே என நினைத்து அவரே அந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விட்டார். ஆங்கிலக் கட்டுரை அவருக்கு நிறைவாக இருந்தது. அந்தக் கட்டத்தில் அறிஞர் அண்ணா, மூர்த்தி அவர்களது ஊருக்கு ஒரு கூட்டத்தில் பேச வந்திருந்தார். அண்ணாவைச் சந்தித்து தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அண்ணாவின் தமிழ்க் கட்டுரையைக் காட்ட வேண்டும் என ஆசைப்பட்டார். மிகுந்த முயற்சி எடுத்து அண்ணாவைச் சந்தித்து மொழிபெயர்ப்புக் கட்டுரையைக் காட்டினார். நிதானமாக கட்டுரை முழுவதையும் படித்துவிட்டு அண்ணா சொன்னாராம்...
“நான் எனது கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதினால் எப்படி எழுதுவேனோ அப்படியே எனது இயல்பில் ஆங்கிலக் கட்டுரை உள்ளது’’ எனச் சொல்லி, அ.கி.மூர்த்தி அவர்களைப் பாராட்டினாராம் அண்ணா. தனது மொழிபெயர்ப்புப் பணிக்கு அண்ணாவின் பாராட்டைவிட உயர்ந்தது எதுவுமில்லை. நான் எதிர்பாராத பாராட்டை, அண்ணா எனக்களித்துவிட்டார் என பெரிதும் மகிழ்ந்தார் அ.கி.மூர்த்தி.
பாராட்டை எதிர்பார்க்காமல் பணிபுரிவதில் ஏமாற்றத்திற்கு இடமே இல்லை. அதுபோலவே ‘அங்கீகாரம்’ என்பது வேண்டிப் பெறுவதல்ல; தானாக வரவேண்டும்; செய்திடும் பணி _ பொதுப்பணி அத்தகைய சிறப்புக்குரியதாக அமைதல் வேண்டும். அத்தகைய எதிர்பார்க்காமல் கிடைத்த ‘அங்கீகாரம்’ பற்றி அடுத்த இதழில் பேசுவோம்!
(தொடரும்...)
உயர்ந்த அங்கீகாரம் வேண்டி பணி ஆற்றுவோம்
இளைஞர்கள், பாராட்டை எதிர்பாராமல் பொதுப் பணியாற்ற வேண்டும் என்கிற நிலையிலிருந்து செய்யக்கூடிய பணியில் ஈடுபாடு, அதன் சிறப்பறிந்து பணியாற்றும் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும். அப்படிப்பட்ட பணிகளில் அங்கீகாரத்தை அதற்கு உரிய தகுதியானவர்களிடம் பெற வேண்டும் என்கிற முறையில் பணியாற்றுவதில் தவறில்லை. செய்கின்ற பொதுப்பணியின் உயர்வுத் தன்மை குறித்து நமக்கு நாமே அறிந்து உணர்ந்திருப்பதோடு, அந்தப் பணி உரிய வகையில் முடிக்கப்பட்டுள்ளதா என்பதை அத்தகைய பணிகளை முடித்த முன்னோடிகள், அதன் தன்மை அறிந்தவர்களின் பாராட்டைப் பெறும் எண்ணத்துடன் கடமை ஆற்றுவதில் தவறில்லை. அப்படிப்பட்ட பாராட்டு என்பது கேட்டுப் பெறுவதல்ல. செய்து முடிக்கின்ற தன்மை அறிந்து உரியவர்கள் இயல்பாகப் பாராட்டும் நிலையில் அந்தப் பாராட்டே அங்கீகாரம் எனும் உன்னத நிலையினை அடைந்துவிடும்.
தமிழ்த்திரை உலகில் நடிப்புத் துறையில் மாபெரும் ஆற்றலாளராக விளங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஏற்றுக்கொண்ட கதைப் பாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது நடிப்பில் மெருகு ஏற்றிக் கொள்ளும் வல்லமை அவரது கலைத்துறைப் பயணத்தின் தொடக்கத்திலிருந்தே அவரிடம் இருந்தது. சத்ரபதி சிவாஜி பாத்திரத்தை அறிஞர் அண்ணாவின் படைப்பான ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ எனும் நாடகத்தில் அந்தக் கலைஞன், வி.சி.கணேசன் என்னும் தனது இயற்பெயருடன் நடித்தார். அந்த நாடகத்தைப் பார்க்க தந்தை பெரியார் அழைக்கப் பட்டிருந்தார். நாடகத்தை ரசித்துப் பார்த்த தந்தை பெரியார், நாடக இடைவேளையில் மேடையேறி கலைஞர்களைப் பாராட்டிப் பேசுகையில், -”எங்கே அந்த இளைஞன் - சத்ரபதி சிவாஜியாக நடித்தவர்? - மிக அற்புதமாக நடித்தார்; சிவாஜியாகவே மாறிவிட்டார்’’ என பாராட்டினார். அத்தகைய பாராட்டைப் பெற்றதால் ‘வி.சி.கணேசன்’ என்ற அந்தக் கலைஞன் ‘சிவாஜி கணேசன்’ என அழைக்கப்பட்டார். திரைத்துறையில் தந்தை பெரியார் சூட்டிய அடைமொழியுடன் கூடிய பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. பின்னர் அவர் ஏற்று நடிக்காத கதைப் பாத்திரங்களே இல்லை எனும் நிலையில், அவருக்கு அறைகூவலாக ஒரு வேடம் வந்தது. அதுதான் அவர் நடித்த ‘கப்பல் ஓட்டிய தமிழன்’ திரைப்படம். செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் அவர்களுடைய வரலாற்றைக் காட்டும் படம். அந்தத் தலைவரின் பாத்திரத்தில் நடிக்கவேண்டிய வாய்ப்பு சிவாஜி கணேசன் அவர்களுக்குக் கிடைத்தது.
மிகவும் கடினமாக உழைத்து கவனமாக நடிக்க வேண்டிய பாத்திரம் அது. அதுவரை பல்வேறு வரலாற்றுப் பாத்திரங்களை ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, உள்பட நடித்து அவர் பெயர் பெற்றார். அந்த வரலாற்றுப் பாத்திரங்கள் அனைத்தும் காலத்தால் பல தலைமுறைகளுக்கு முந்தியது. அந்தக் கதைப் பாத்திரங்களை உயிருடன் பார்த்த யாரும் திரைப்படம் வெளிவந்த பொழுது வாழும் நிலையில் இல்லை. எனவே, ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்கு தனது கற்பனையில் உன்னதம் ஊட்டி சிவாஜி கணேசனால் நடிக்க முடிந்தது. அதனால் பரந்துபட்ட பாராட்டுதலையும் அவர் பெற்றார். ஆனால், வ.உ.சி. பாத்திரம் அப்படிப்பட்டதல்ல; வ.உ.சி. அவர்களைப் பார்த்தவர்களும், அவருடன் பழகியவர்கள் பலரும் அப்பொழுது வாழ்ந்து கொண்டிருந்தனர். வ.உ.சி.யை சிவாஜி நேரில் பார்த்ததும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் வ.உ.சி. பாத்திரத்தை பலரிடமும் கேட்டறிந்து, உணர்ந்து கடுமையாக உழைத்து அந்தத் திரைப்படத்தில் நடித்தார். படம் வெளிவந்து ரசிகர்களின் பாராட்டுதலைப் பெற்றது. அந்தப் பாராட்டுகளால் மனநிறைவு அடையவில்லை அந்த மாபெரும் கலைஞன், அதற்கும் மேலே தனது நடிப்புக்கு அங்கீகாரம் வேண்டும் எனும் உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது.
வ.உ.சி. அவர்களின் மகன், ‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படம் வெளிவந்த பொழுது அதைப் பார்த்து விட்டுக் கூறினாராம்; வ.உ.சி.யாக சிவாஜி நடித்ததைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, “எனது தந்தையை நேரில் பார்ப்பதுபோல இருந்தது’’ என மனம் உருகி மகிழ்ந்தாராம். பார்த்தவருக்கு மனமகிழ்வு. ஆனால், சிவாஜி அவர்களுக்கு அவர் ஏங்கிக் கொண்டிருந்த அங்கீகாரமாகவே வ.உ.சி. அவர்களது மகனார் கூறியது இருந்தது. தனது நடிப்புக்கு அங்கீகாரமாக பல விருதுகள் பெற்றிருந்தாலும் அந்த மாபெரும் நடிப்பு மேதை, வ.உ.சி. மகனார் கூற்றையே விருதாக நினைத்து மனமகிழ்வு, மனநிறைவு பெற்றாராம்.
தாம் ஏற்றுக் கொண்ட பணியில், தொழிலில் அங்கீகாரம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இயல்பாக எதிர்பாராத ஒருவரிடமிருந்து பெறும் பாராட்டு உயர்ந்த அங்கீகாரமாக மாறிவிடும். அப்படி ஒரு நிகழ்வு கவிஞர் கண்ணதாசன் வாழ்வில் நடந்தது. கருத்தியல் ரீதியாக கண்ணதாசன் அவர்களைப் பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும், அவரது கவிதை புனையும் ஆற்றல், எளிமையான பாடல் வரிகளைப் போற்றாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. கவிஞர் கண்ணதாசனைப் பாராட்டி பல கவிஞர்கள், தமிழறிஞர்கள், படித்துப் பட்டம் பெற்ற ஆய்வறிஞர்கள் பேசியிருக்கிறார்கள்; எழுதியிருக்கிறார்கள்; அவரைப் போற்றிக் கவிதையும் புனைந்திருக்கிறார்கள். இருப்பினும் கண்ணதாசனுக்குப் பிடித்தது-முதன்மையாக, பெருமைக்கு உரியதாக நினைத்தது ஒருவருடைய பாராட்டைத்தான். தான் படிக்காவிட்டாலும், கல்வியின் அவசியம் கருதி குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க பள்ளிக் கூடங்கள் பலவும் திறந்த கல்விவள்ளல் காமராசர் அவர்களிடம் கிடைத்த பாராட்டே அது!
ஒரு சமயம் கவிஞர் கண்ணதாசனைப் பாராட்டிட கவிஞர்கள் பலர் சேர்ந்து ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிட கல்விவள்ளல் காமராசர் அவர்களையும் அழைத்திருந்தார்கள். நிகழ்ச்சியில் பாராட்டுக் கவிதை மழைகள்-இலக்கண மரபுகளுடன், இலக்கண மரபுகளை மீறியும் கவிஞர்களால் வடிக்கப்பட்டன. புதுமையான சொற்படைப்புகள் ஏராளமாக, தமிழறிஞர்களைச் சிந்திக்கத் தூண்டும் வகையில் இருந்தன. அனைத்தையும், தன்னை பாராட்டும் நிகழ்ச்சி என்பதால் மரபு கருதி கண்ணதாசன் அமைதியாக அனைத்துக் கவிஞர்கள் பாராட்டுப் படைப்புகளையும் கேட்டு கவனித்துக் கொண்டிருந்தார். நிறைவாக காமராசர் எழுந்து பேசத் தொடங்கியதும் பாராட்டிய கவிஞர்கள், கண்ணதாசன் உள்பட மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். கவிஞர்கள் நடத்திய பாராட்டுக் கூட்டம். காமராசர் முறையாக பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காதவர் எப்படிப் பாராட்டிப் பேசப் போகிறார் என்கிற ஓர் எதிர்பார்ப்பு! கண்ணதாசனின் அரசியல் உள்பட பல தளங்களிலும் அவரது, சிறப்புகளை தனக்கே உரிய சொல்லாடலில் பாராட்டிப் பேசிவிட்டு, கவிஞர்கள் நடத்திடும் பாராட்டு என்பதால் தானும் கவிதை போல ஒன்றை கண்ணதாசன் அவர்களைப் பற்றிக் கூறினாராம்.
“காட்டுக்கு ராஜா சிங்கம்
பாட்டுக்கு ராஜா கண்ணதாசன்”
காமராசரின் பாட்டுக் கவிதையைக் கேட்டதும் அரங்கமே கைதட்டி மகிழ்ந்தது. சம்பிரதாயமாக மற்ற பாராட்டுதல்களைக் கவனித்துக் கொண்டிருந்த கண்ணதாசன் மகிழ்ச்சி - நெகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டாராம். கவிதை உலகில் தமிழ்ப் புலமை வாய்ந்த பலரின், அறிஞர்களின் பாராட்டுகளுக்கிடையே நெகழ்ச்சியான, பள்ளிக்கூடப் படிப்பை நிறைவு செய்யாத காமராசரின் வரிகளைக் கேட்டு, தனது படைப்புகளுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக நினைத்து கண்ணதாசன் மகிழ்ந்தாராம். பலமுறை காமராசரால் தனக்குக் கிடைத்த அங்கீகாரத்தை நண்பர்கள், நலம் விரும்பிகள் பலரிடமும் பல நேரங்களில் பகிர்ந்து கொண்டார்.
உயர்ந்த அங்கீகாரம் என்பது எப்படியெல்லாம் உரியவர்களிடமிருந்து கிடைக்கிறது; இந்த வகையில்தான் கிடைத்திடும் என்றில்லாமல், நினைத்துப் பார்க்க முடியாமல் அழுத்தமான அங்கீகாரம் பலருக்கு தாம் செய்த பணிகளுக்காகக் கிடைத்திருக்கிறது. இளைஞர்கள் நினைக்கலாம், சிவாஜி கணேசன், கண்ணதாசன் ஆகியோருக்குக் கிடைத்த அங்கீகாரம் ஒவ்வொருவருக்கும் கிடைக்குமா? முதலில் அப்படிப்பட்ட திறமைகள் எல்லாரிடமும் இருக்குமா? எளியவர்கள், துறைசார்ந்த புலமை இல்லாதவர், அந்தத் துறைபற்றிய பணிகளிலிருந்து ஒதுங்கி இருப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்குமா? போன்ற வினாக்கள் பெரும்பாலானவர்கள் மனதில் எழுவது இயல்பே. சொல்லக்கூடிய செய்தியில் உள்ள ஆர்வம், நேர்மை, சொல்லக்கூடியவற்றைத் தயக்கமின்றிக் கூறும் துணிச்சல் பலருக்கு பல நேரங்களில் பாராட்டையும், அங்கீகாரத்தையும் அளித்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வினை தொடர்ந்து பேசுவோம்.
(தொடரும்...)
வீ.குமரேசன்
- உண்மை இதழ், 1-15.3.21
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக