பக்கங்கள்

வியாழன், 27 ஏப்ரல், 2023

பனகல் அரசர் பி.ராமராய நிங்கார்- லண்டன் தொட்டி ஆஸ்பத்திரி

பனகல் அரசர் பி.ராமராய நிங்கார் தோற்றம் : 9.7.1866 மறைவு: 16.12.1928

2

பனகல் அரசரின் உண்மையான பெயர் பி.ராமராய நிங்கார். இவரின் பூர்வீகம் ஆந்திரப் பிரதேசம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள “பனகல்லு” என்னும் ஊராகும். இருந்தாலும் இவருடைய பெயர் ராஜா ஆஃப் பனகல். இவர் 1866ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் நாள் காளஹஸ்தியில் பிறந்தார். இவர் 1892ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. (வேதியியல்) பட்டம் பெற்றார். பின்னர் சட்டம் மற்றும் தெலுங்கில் எம்.ஏ. பட்டம் பெற்றார். பம்மல் சம்பந்த முதலியார் இவரது நெருங்கிய நண்பர் ஆவார். இவர் நல்ல படிப்பாளி, அறிவாளி, வசதி நிறைந்த ஜமீன்தார்,செல்வாக்கு நிறைந்தவர். ஜஸ்டிஸ் பிரமுகர்களில் ஒருவர். இவர் கல்வி, பொதுப் பணித்துறை ஆகியவற்றில் அநேக சீரமைப்புகளைச் செய்தார். டிசம்பர் 1920 முதல் ஜூலை 1921 வரை மதராஸ் மாகாணத்தில் நீதிக்கட்சியின் சார்பாக மந்திரியாக இருந்தார். ஜூலை 1921 முதல் செப்டம்பர் 1926 வரை பனகல்அரசர் மதராஸ் மாகாணத்தின் முதல்வராகஇருந்தார். இவர் ஆட்சியில் அமலுக்கு வந்த முக்கியமான சட்டத்திற்கு “ஹிந்து ரிலீஜியஸ் எண்டோமெண்ட் ஆக்ட்” என்று பெயர். இவர் கீழ்ப்பாக்கத்தில் "காலேஜ் ஆஃப் இந்தியன் மெடிசன்” என்ற (நாட்டு)வைத்தியமுறைக் கல்லூரி அமைக்க உறுதுணையாக இருந்தார். இவர் நாட்டுக்குச் செய்த பணிகளைக் கவுரவிக்கும் முறையில் பிரிட்டிஷ் அரசு இவருக்கு கே.சி.அய்.இ. (ரி.சி.மி.ணி) நைட் கம்பானியன் ஆஃப் இண்டியன் எம்ஃபயர் என்ற விருதை அளித்தது. இவர் டிசம்பர் 16, 1928இல் இயற்கை எய்தினார்.


"லண்டன் தொட்டி ஆஸ்பத்திரி"

3

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி தற்போதுள்ள இடம் ஹைடி பார்க் தோட்டம் (Hyde Park Garden). இது, மதராஸ் மாகாண பிரதமராக இருந்த பனகல் அரசருக்கு (1921-1926), சொந்தமான இடம். இந்த இடம் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி வருவதற்கு முன்பு இந்திய மருத்துவப் பள்ளியாக இயங்கியது. ஸ்டான்லி மருத்துவமனையை கஞ்சித்தொட்டி ஆஸ்பத்திரி என்பதுபோல், இது ஒரு நேரத்தில் `லண்டன் தொட்டி ஆஸ்பத்திரி' என்று அழைக்கப்பட்டது. ஏனெனில், இந்த இடம் ஒரு காலத்தில் லாண்டன்ஸ் தோட்டம் (Landon’s Garden) என்று அழைக்கப்பட்ட இடம் - இதுவே, பிறகு லண்டன் தொட்டி என மருவி அழைக்கப்பட்டது. (Madras Miscellany, p.738)  
(ஆதாரம்: டாக்டர் சு.நரேந்திரன் எழுதியுள்ள “காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும்“ என்ற நூலிலிருந்து. பக்கம் 226)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக