தமிழறிஞர்கள்
பன்மொழிப் புலவர்
கா.அப்பாதுரையார்
மறைவு: 26.5.1989
தந்தை பெரியாரின் சீடர், திராவிடர் இயக்கத்தின் தூண்களில் ஒருவர்.
திராவிட இயக்கத்தோடு அப்பாதுரையார் மிகவும் நெருக்கமாக ஆனதற்குப் புரட்சிக்கவிஞர் முக்கிய காரணமாவார்.
‘விடுதலை’, ‘லிபரேட்டர்’ ஏடுகளுடன் அப்பாதுரையார் அவர்களுக்கு நெருக்கம் அதிகமாகும்.
‘செந்தமிழ்ச் செல்வம்’, ‘கலைமாமணி’ விருதுகள் தமிழ்நாடு அரசால் இவருக்கு அளிக்கப்பட்டன.
5.6.1983 அன்று சென்னை பெரியார் திடலில், ‘சங்கராச்சாரி யார்?’ என்ற தலைப்பில் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அன்று அக்கூட்டத்திற்கு அப்பாதுரையார் தலைமையேற்று உரை நிகழ்த்தினார். அதில் திடுக்கிடும் ஓர்அரிய தகவலை வெளியிட்டார். ‘‘ஆதிசங்கரர் கடைசியாக எழுதிய நூல் ‘மனேசாப் பஞ்சகம்’ என்பதாகும். அதில் ஒரு சுலோகம் கடவுளை எதிர்ப்பது. அதன் காரணமாக ஆதிசங்கரர் உயிரோடு வைத்துப் புதைத்துக் கொல்லப்பட்டார்’’ என்ற தகவலைக் கூறினார். (‘விடுதலை’ 15.6.1983)
அப்பாதுரையார் அவர்கள் பற்றி ‘அறிவுச் சுரங்கம் அப்பாதுரையார்’ என்னும் அரிய நூலை ‘முகம்’ மாமணி எழுதியுள்ளார். அதனைப் பாராட்டி பேராசிரியர் வெள்ளையன் பகுத்தறிவு இலக்கிய அறக்கட்டளை சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ரூ.10 ஆயிரம் பரிசளித்தார்.
வீரத் தமிழன்னை
டாக்டர் தருமாம்பாள்!
மறைவு: 21.5.1959
டாக்டர் தருமாம்பாள் சித்த வைத்தியத்தில் தேர்ந்த மருத்துவர்; தஞ்சை கரந்தையில் பிறந்தவர் (1890) இவரது பொது நலத் தொண்டைப் பாராட்டி ‘வீரத் தமிழன்னை’ என்ற பட்டம் ஒரு விழாவில் டாக்டர் அ.சிதம்பரநாதன் அவர்களால் வழங்கப்பட்டது (1951).
சிறந்த சீர்திருத்தவாதி, பெரியபாளையத்தில் வேப்பந்தழை உடுத்தி பெண்கள் நிர்வாணமாகக் கோயிலை வலம் வருவதைத் தடுக்க நேரில் சென்று பிரச்சாரம் செய்தவர்.
மொழிப் போரில் முதன் முதலில் பெண்கள் சிறைக் கோட்டம் நுழைந்தது 1938ஆம் ஆண்டு டாக்டர் தருமாம்பாள், தலைமையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், பட்டம்மாள் பாலசுந்தரம், மலர்முகத்தம்மையார், சீதம்மாள் (டாக்டர் தருமாம்பாள் மருமகள்) மூன்று வயதுடைய மங்கையர்க்கரசி, ஒரு வயதுடைய நச்சியார்க்கினியன் (குழந்தை) ஆகியோர் சிறைப்பட்டனர்.
காவல்துறை அதிகாரி (தாய்மார்களைப் பார்த்து): நீங்கள் இவ்விடத்தைவிட்டு அகலுங்கள்!
தாய்மார்கள்: முடியாது; இந்தி ஒழியும் வரை இவ்விடத்தை விட்டுப் போக மாட்டோம்!
காவல்துறை அதிகாரி: அப்படியானால் சிறைச் சாலைதான்.
தாய்மார்கள்: அழைக்கட்டுமே! அதற்குத்தானே காத்துக் கிடக்கிறோம்.
கைது செய்யப்பட்டு சிறைக் கோட்டம் சென்றனர். ஆறு வாரம் கடுங்காவல் தண்டனை.
தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களுக்குத் தோன்றாத் துணையாக இருந்தவர். சென்னை மாணவர் மன்றத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று ஒன்பது ஆண்டுகள் தாங்கிப் பிடித்தவர்;
சென்னை தங்கசாலையை ‘தருமாம்பாள் சாலை’ என்று மாற்றியவர் முதல் அமைச்சர் கலைஞர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக