பக்கங்கள்

சனி, 15 ஏப்ரல், 2023

பாரதியின் வழக்குரைஞர்கள்! - எதிர்வினை (99)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (99)

மே 1-15,2022

பாரதியின் வழக்குரைஞர்கள்!

நேயன்

பாரதி காலத்திற்கு முன் வாழ்ந்த வள்ளலார் எவ்வளவு புரட்சிக் கருத்துகளைக் கூறியுள்ளார்!

“கலை உரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப் போக”

“சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்

சாத்திரக் குப்பையும் தணந்தேன்”

“இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை

இருவாய்ப்புப் புன்செயல் எருவாக்கிப் போட்டு

மருட் சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம

வழக்கம் எலாம் குழிக்கொட்டி மண்மூடிப்போக”

 

“நால்வருண ஆச்சிரம ஆசாரம் முதலாம்

நவின்றகலைச் சரிதம் எல்லாம் பிள்ளை விளையாட்டே”

 

“இயல்வேதா கமங்கள் புராணங்கள் இதிகாசம்

இவைமுதலா இந்திரசாலம் கடையாய் உழைப்பர்

மயலொருநூல் மாத்திரந்தான் சாலமென அறிந்தார்

மகனே நூல் அனைத்தும் சாலமென அறிக.”

 

“உலகறி வேதாகமத்தைப் பொய்யெனக் கண்டுணர்வாய்”

“சாதி சமயங்களிலே வீதிபல வகுத்த

சாத்திரக் குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்று”

“மதத்திலே சமய வழக்கிலே மாயை

மருட்டிலே இருட்டிலே மறவா

மதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது

கழிக்கின்றார்.”

 

“மதமெனும் பேய் பிடித்தாட ஆடுகின்றோர்

தோத்திரஞ் செய்து ஆங்காங்கே தொழுகின்றார்”

 

சாதிவெறி கொண்டலைகின்ற சழக்கர்களைப் பார்த்து,

“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்

அலைந் தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே’’

 

“வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்

வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்!

பெட்டிமேல் பெட்டிவைத்து ஆள்கின்றீர் வயிற்றுப்

பெட்டியை நிரப்பிக்கொண்டு ஒட்டிஉள் இருந்தீர்

பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்

பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்

எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டி போல் கிளைத்தீர்

எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே.”

 

“வேதாகமங்கள் என்று வீண்வாகம் ஆடுகின்றீர்

வேதாகமத்தின் விளைவறியீர் சூதராகச்

சொன்ன அலால் உண்மை வெளித்தோன்ற உரைத்தல் இலை

என்ன பயனோ இவை”

 

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்

வாடினேன் பசியினால் இளைத்தே

வீடுதோறும் இரந்தும்பசி அறாது அயர்ந்த

வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்.

நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்

நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்

ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு

இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்”

 

“முயன்றுலகில் பயன் அடையா மூடமதம் அனைத்தும்

முடுகி அழிந்திடவும் ஒரு மோசமும் இல்லாதே

இயன்றவொரு சன்மார்க்கம் எங்கும் நிலைபெறவும்

முன் உள மார்க்கங்கள் யாவும் முடிந்தன

மன் உள சுத்த சன்மார்க்கம் சிறந்தது’’

 

“சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே

சத்திய சுத்த சன்மார்க்க

வீதியில் உமைத்தான் நிறுவுதல் உண்மை

விளம்பினேன் வம்மினோ விரைந்தே.”

 

“எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்

தம்முயிர்போ லெண்ணி யுள்ளே

யொத்துரிமை யுடையவராய் உவக்கின்றார்”

இவையெல்லாம் வள்ளல்பெருமான் பாடிய ஜாதி ஒழிப்பு, உயிர்நேயம், சமத்துவம், மூடநம்பிக்கை எதிர்ப்பு, மத எதிர்ப்புக் கருத்துடைய பாடல்கள். பாரதிக்கு முன்னமே பாடப்பட்டவை.

வள்ளல் பெருமான் இறந்து 8 ஆண்டுகள் கழித்தே பாரதி பிறக்கிறார். 1921 வரை உயிர் வாழ்கிறார். பாரதி பாடல்கள் பாடுவதற்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளலார் இப்படிப்பட்ட புரட்சிக் கருத்துகளைப் பாடியிருக்கும்போது, பாரதி புரட்சிக் கருத்துகளை இன்னும் தீவிரமாகப் பாடியிருக்க வேண்டும்.

பாரதியின் காலத்தவரான பெரியார்  புரட்சிக் கருத்துகள் பலவற்றை உறுதியாக, தெளிவாக, தீவிரமாகக் கூறியிருக்கும்போது பாரதிக்கு மட்டும் காலம் தடையாக இருந்தது என்பது பிதற்றல்வாதம் அல்லவா?

23 வயதே வாழ்ந்த பகத்சிங், பாரதி வாழ்ந்த காலத்திலே ஜாதி, மதத்தை எதிர்த்து சமத்துவம், பொதுவுடைமை பற்றி இன்றைக்கும் பொருந்தும் _ என்றைக்கும் பொருந்தும் கருத்துகளைக் கூறியிருக்கும்போது, பாரதிக்கு முற்போக்குப் புரட்சிக் கருத்துகளைக் கூற காலந்தான் தடையாக இருந்ததா? இப்படி வலிய வரிந்துகட்டி வக்காலத்து வாங்குவதை-விட கேவலம், கீழ்த்தரம் வேறு உண்டா?

இன்னும் ஆழமாகச் சொல்வதென்றால், பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க முடியும் என்றிருந்த காலச் சூழலில், படிக்க வாய்ப்பில்லாத பார்ப்பனர் அல்லாதார் இவ்வளவு விழிப்புடன் கருத்துகளைக் கூறியிருக்கும்போது படித்த பரம்பரையில் பிறந்து, காசி வரைச் சென்று படித்து, பத்திரிகையாளராயும் பணியாற்றிய பாரதி புரட்சி கருத்துகளைக் கூற முடியாமைக்கு காலத் தடை என்பது எவ்வளவு பெரிய அபத்தவாதம்!

பாரதி வாழ்ந்த காலத்தில்தான், பஞ்சாபில், “கத்தார்’’ இயக்க இளைஞர்கள் புரட்சியாளர்-களாய், போராளிகளாய் களம் இறங்கினர். அவர்களுக்கு மட்டும் காலம் தடையில்லையா? பாரதிக்கு மட்டும்தான் காலம் தடையா?

கத்தார் கட்சி மதச்சார்பற்ற கொள்கை மற்றும் ஜனநாயகக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது. வேத சனாதனத்தை மீட்க முயன்ற ‘ஆரிய சமாஜம்’ உருவாக்கப்பட்ட இடத்தில்தான் கத்தார் கட்சியும் உருவானது.

“நாங்கள் பஞ்சாபிகளோ, சீக்கியர்களோ அல்ல. நாட்டுப் பற்றுதான் எங்கள் மதம்’’ என்று கத்தார் கட்சி கூறியது.

இங்கே மதம் ஒதுக்கப்பட்டு நாட்டுப் பற்று  ஓங்கி நின்றது. ஆனால், சிவத்தம்பிகள் தூக்கிப் பிடிக்கும் பாரதியின் நாட்டுப் பற்று சனாதன, இந்து ராஷ்டிரா உணர்வோடு வெளிப்பட்டது. சனாதனமும் இந்து ராஷ்டிரமும் இந்திய விடுதலைக்கு எப்படி உதவும்? எனவே, பாரதி விரும்பியது இந்திய விடுதலை அல்ல. இந்துத்வா விடுதலை என்பதே உண்மை! மதக் கோட்பாட்டின் அடிப்படையில் புரட்சியும், முற்போக்கும், விடுதலையும் என்பது மோசடி அல்லாமல் வேறில்லை!

இந்த வழக்குரைஞர்கள் வைக்கும் அடுத்த வாதம் என்ன தெரியுமா?

எளிய மக்களுக்கும் ஏற்ற வகையில் எளிய கவிதைகளைப் படைத்தவர் பாரதி. அதற்காக அவரை உயர்த்திப் பிடிக்கலாம் என்கின்றனர்.

நான் முன்னமே சுட்டிக்காட்டிய உத்தர-நல்லூர் நங்கை, சித்தர்கள் மற்றும் எண்ணற்ற நாட்டுப்புறப் பாடகர்கள் பாடாததையா பாரதி பாடிவிட்டார்?

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாவலர் வரதராசன் போன்றோர் பாடாத பாமரப் பாடல்களா? புரட்சிக்கவிஞரின் புரட்சி வரிகள் அத்தனையும் பாமர மக்களுக்குப் பளிச்சென்று புரியும் வகையல்லவா?

பாரதிக்கென்று உறுதியான புரட்சிக் கொள்கை உண்டா?  அவர் பேசிய பெண்ணியம், சமத்துவம், தமிழ் ஆதரவு எல்லாம் பாரதி ஒரு சந்தர்ப்பவாதி என்பதன் அடையாளங்களே தவிர, அவரது முற்போக்கு இலக்கின் அடையாளங்கள் அல்ல. அவரின் உள்ளார்ந்த உறுதியான கொள்கை என்பதே சனாதனம், வர்ணாஸ்ரமம், அகண்ட பாரதம், இந்து ராஷ்டிரம்தான்! ஆரிய மேலாண்மை, சமஸ்கிருத  ஆதிக்கம்தான்!

“சித்திரச் சோலைகளே!

உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே!

முன்னர் எத்தனை தோழர்கள்

ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே!’’

என்ற பாரதிதாசனின் பாடல் வரிக்கு இணையான வரிகள் பாரதியிடம் உண்டா?

உலகத்தின் மாபெரும் ரஷ்யப் புரட்சியை, மாகாளி கருணையால் கடைக்கண் பார்வையால் நிகழ்ந்தது என்று கொச்சைப்படுத்தியவர்தானே இந்தப் பாரதி!

தமிழர்க்கு உரிய இலங்கைத் தீவை சிங்களத் தீவு என்று பாடி தமிழர்க்கு எதிராய் வரலாற்றைத் திரித்த மோசடிக் கவிஞர் தானே பாரதி!

இந்திய அரசியல் சாசன சிற்பி அம்பேத்கர் பிறந்த நாளில் அவருக்கு மரியாதையின்றி, பாரதிக்குச் சிலை திறக்கிறது ஆர்.எஸ்.எஸ். கூட்டம் என்பதிலிருந்து புரியவில்லையா _ பாரதி யாருக்கான ஆள் என்பது?

(தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக