பக்கங்கள்

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

பாரதியும் பொதுவுடைமையும் - எதிர்வினை (93)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (93)

பிப்ரவரி 1-15,2022

பாரதியும் பொதுவுடைமையும்

நேயன்

 

 

பாரதி பொதுவுடைமைவாதி என்று, பொதுவுடைமைவாதிகளே தூக்கிப் பிடிப்பது-தான் வியப்புக்குரியது; நகைப்புக்குரியது.

நூறு மனிதர்களில் ஒரே ஒருவன்தான் பொதுநலத்தைப் பற்றிச் சிந்திக்கிறான். ஆயிரத்தில் ஒருவன்தான் தன்னைப்போலவே பிறருக்கும் உணர்வுண்டு என்று எண்ணுகிறான். பத்தாயிரத்தில் ஒருவன்தான் எல்லோரும் சமம்,  எல்லோரும் பொது என்கிற உணர்வு கொள்கிறான். அப்படி பத்தாயிரத்தில் ஒருவன்தான் பொதுவுடைமைவாதியாக உருவாகிறான். அப்படிப்பட்ட பொதுவுடை-மைவாதிகளே சிலவற்றில் தவறான புரிதல் கொண்டுள்ளதை வரலாறு நெடுகக் காண முடியும்.

குறிப்பாக இந்தியாவில் மண்ணுக்கேற்ற மார்க்சியம் பேசியவர் பெரியார். ஆனால், பெரியார் ஒரு வறட்டுச் சித்தாந்தி என்றும். அவருக்குச் சரியான பொருளியல் பார்வை இல்லை என்றும். வருணபேதம் வர்க்கபேதம் ஒழிந்தால் சரியாகிவிடும் என்றும் பல்லாண்டு காலம் நம்பியும் பேசியும் வந்தனர். ஆனால், தந்தை பெரியார் சமதர்மமும், பொதுவுடை-மையுமே இந்த மண்ணுக்கு ஏற்றது என்பதை இப்போது புரிந்து கொண்டுவிட்டனர்.

அதேபோல், பாரதி பாடிய சில புரட்சி வரிகளைப் பிடித்துக் கொண்டு, அவரை புரட்சியாளர் போல், பொதுவுடைமைவாதி போல், சமதர்மவாதி போல் காட்டிப் பாராட்டி வருகின்றனர். உண்மையான புரட்சிவாதியான பாரதிதாசன் அவர்களைப் புறக்கணித்து வருகின்றனர்.

இவர்கள் பிடித்துக்கொண்டு நிற்கும் சில புரட்சி வரிகள் கூட சில காரணங்களுக்காக எழுதப்பட்டவை என்பதை இதற்கு முன் விளக்கிவிட்டேன். தமிழை உயர்த்திப் பாடியது, மீசை வைத்தது எல்லாம் தேவைக்கும், சூழலுக்கும், நிர்ப்பந்தத்திற்குமாகவே செய்யப்-பட்டவை என்பதை வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு தெளிவுபடுத்தியுள்ளேன்.

மேலும், அவர் ஒவ்வொன்றிலும் தொடக்க காலத்தில் புரட்சியாளராகவும், முற்போக்கு-வாதியாகவும் இருப்பவரைப் போல் எழுதி-விட்டு, இறுதிக் காலத்தில் அதற்கு முற்றிலும் எதிராக, பிற்போக்கான நிலையில், ஆரிய இனவுணர்வுடனும், சமஸ்கிருத வெறியுடனும் பிற மத வெறுப்புடனும், வருணாஸ்ரமப் பற்றுடனும், பெண்ணடிமைச் சிந்தனையுடனும் எழுதினார் என்பதை ஏராளமான எடுத்துக்காட்டுகளுடன் இதுவரை விளக்கி எழுதிவிட்டேன்.

உண்மை இப்படியிருக்க, அரைகுறையாக சில வரிகளை எடுத்துக்கொண்டு, ஆகா, ஓகோ என்ற பாரதியை யுகப்புரட்சிக் கவியாகக் காட்டுகிறார்கள். பொதுவுடைமைவாதிகள் இந்தப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். பாரதியின் எழுத்துகளை முழுமையாகப் படித்துவிட்டு, சீர்தூக்கிப் பாராட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, பாரதி பொது-வுடைமைவாதியா? புரட்சியில் ஆர்வங் கொண்டவரா? என்பதை விளக்க விரும்புகிறேன்.

புரட்சிக்கு அஞ்சியவர் பாரதி

30.6.1906இல் ‘ருஷ்யாவில் மறுபடியும் ராஜாங்கப் புரட்சி’ என்று தலைப்பிட்டு,

“ருஷ்யாவில் மறுபடியும் ராஜாங்கப் புரட்சிச் சின்னங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஜார் சக்கரவர்த்தியின் அநீதிச் சிங்காதனம் சிதைந்து கொடுங்கோன்மை துண்டு துண்டாகக் கழிவு பெற்று வரும் ருஷ்யாவில் அமைதி நிலைக்க இடமில்லை. சில இடங்களில் நிலச் சேனையுடன் சேனைக்காரர்களும், ராணுவமும் கலகம் தொடங்கி, தொழிலாளிகள் கூட்டமும் சேர்ந்து விடுகின்றனர்’’ என்று எழுதிய பாரதி, 7.7.1906ஆம் நாள்,

“சென்ற வாரம் ருஷ்யாவைப் பற்றி எழுதிய குறிப்பிலே அத்தேசமானது ஒரு பெரிய ராஜாங்கப் புரட்சியேற்படும் (நிலையிலுள்ளது) என்று தெரிவித்தோம். அதற்கப்பால் வந்து கொண்டிருக்கும் தந்திகள் நமது அச்சத்தை ஊர்ஜிதப்படுத்தி விட்டன. கைகலப்புகள் தொடங்கிவிட்டனவென்றால் ராஜாங்கம் எத்தனை தூரம் அமைதி கெட்ட நிலையிலிருக்க வேண்டுமென்பதை எளிதாய் ஊகித்து அறிந்து கொள்ளலாம்’’ என்று எழுதுகிறார்.

கொடுங்கோன்மைக்கு எதிராய் ரஷ்யாவில் நடத்தப்பட்ட புரட்சியை ‘கலகம்’ என்று எழுதியதோடு, அதைக் கண்டு அச்சப்படுவதாக எழுதியுள்ளார். உண்மையான ஒரு புரட்சியாளன் புரட்சியைக் கண்டு அச்சப்-படுவானா? அச்சப்படுகின்றவன் புரட்சி-யாளனாவானா?

‘அநீதி அழிந்து கொண்டிருப்பதற்கான அடையாளம் தெரிகிறது’ என்று கூறும் பாரதி அதற்கும் மகிழ்ச்சிதானே அடைய வேண்டும்? ஏன் அச்சப்படுகிறார்? அவர் புரட்சிவழியில், பல உயிர்களை இழந்து சமத்துவம் அடைவதை அறவே விரும்பவில்லை. பாரதியின் கொள்கையும், தீர்வும் வேறு. அதை கீழே படிக்கும்போது அறியலாம்.

1906இல் ரஷ்யாவில் போல்ஷ்விக்குகள் நடத்திய புரட்சியைப் பற்றி எழுதும்போது,

“இப்பொழுது மறுபடியும் பெரும் கலகம் தொடங்கி விட்டது. ருஷ்ய சக்ரவர்த்தியின் சிங்காதனம் இதுவரை எந்தக் காலத்திலும் ஆடாதவாறு அத்தனை பலமாக இருக்க, இப்போது ஆடத் தொடங்கிவிட்டது. பிரதம மந்திரியின் வீட்டை, வீட்டின் விருந்தின்போது வெடிகுண்டு எறியப்பட்டதும், சைன்யத் தலைவர்கள் கொலையுண்டதும், ராஜ  விரோதிகள் பகிரங்கமாக விளம்பரங்கள் பிரசுரிப்பதும், எங்கே பார்த்தாலும் தொழில்கள் நிறுத்தப்படுவதும், துருப்புகளிலே ராஜாங்கத்-தாருக்கு விரோதமாகக் கலகங்கள் எழுப்புவதும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்கள் மாய்வதும் ஆகிய கொடூர விஷயங்களைப் பற்றித் தந்திகள் வந்த வண்ணமாக-வேயிருக்கின்றன’’ என்கிறார்.

அதேபோல், லெனின் செய்த புரட்சியையும் பாரதி கண்டிக்கிறார்.

“கொலையாலும் கொள்ளையாலும் அன்பையும் சமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர் தம்மைத் தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன்’’ என்று கூறிவிட்டு, இதற்கடுத்த வரியிலேயே பாரதி கூறுகிறார்:

“இதற்கு நாம் என்ன செய்வோம்! கொலையாளிகளை அழிக்க, கொலையைத்-தானே கைக்கொள்ளும்படி நேருகிறது; அநியாயம் செய்வோரை அநியாயத்தாலேதான் அடக்கும்படி நேரிடுகிறது என்று ஸ்ரீமான் லெனின் சொல்கிறார். இது முற்றிலும் தவறான கொள்கை.

கொலை கொலையை வளர்க்குமே ஒழிய, அதை நீக்க வல்லதாகாது. பாவத்தைப் புண்ணியத்தாலேதான் வெல்ல வேண்டும்… கொலையையும், கொள்ளையையும், அன்பினாலும், ஈகையாலும்தான் மாற்ற முடியும். இதுதான் கடைசி வரை கைகூடிவரக்கூடிய மருந்து. மற்றது போலி மருந்து.’’

“லெனின் வழி சரியான வழி இல்லை. முக்கியமாக நாம் இந்தியாவிலே இருக்கிறோமாதலால் இந்தியாவின் ஸாத்தியா ஸாத்தியங்களைக் கருதியேதாம் யோசனை செய்ய வேண்டும். முதலாவது இந்தியாவிலுள்ள நிலஸ்வான்களும், முதலாளிகளும் அய்ரோப்பிய முதலாளிகள் நிலஸ்வான்களைப் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குரூர சித்தமும் பூண்டோரல்லர். இவர்-களுடைய உடைமைகளைப் பிடுங்க வேண்டு-மென்றால் நியாயமாகாது. அதற்கு நம் தேசத்திலுள்ள ஏழைகள் அதிகமாக விரும்ப மாட்டார்கள். எனவே, கொள்கைகளுடன் கொலைகளும், சண்டைகளும், பலாத்காரங்-களுமில்லாமல் ஏழைகளுடைய பசி தீர்ப்பதற்குரிய வழியைத் தான் நாம் தேடிக் கண்டுபிடித்து அனுஷ்டிக்க முயலவேண்டும்’’ என்கிறார்.

ஆக, புரட்சியின் மூலம் சமதர்மத்தை உருவாக்கக் கூடாது. மாறாக, பிரபுக்களிடம் பிச்சை பெற்று ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற தர்மகர்த்தா முறையை ஆதரிக்கிறார்.

அதற்கு கடயத்தில் நடந்த நிகழ்வை எடுத்துக்காட்டாகக் கூறுகிறார்.

(தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக