பக்கங்கள்

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

புரட்சிக் கருத்துகள்கூட போதை உளறல்களே! - எதிர்வினை (101)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (101)

2022 மற்றவர்கள் ஜூன் 1-15 2022

புரட்சிக் கருத்துகள்கூட போதை உளறல்களே!
நேயன்

ஜாதிக்கு எதிராகவோ, பெண்ணுரிமைக்கு ஆதரவாகவோ, பார்ப்பனர்களைக் கண்டித்தோ பாரதி பாடிய சில வரிகள்கூட, சந்தர்ப்ப நிர்ப்பந்தத்தாலும், போதை உச்சமடைந்த தாலுமாகும்!
“ஒரு தகர டப்பாவிலிருந்து ஒரு லேகியத்தை ஆளுக்கு ஓர் எலுமிச்சங்காயளவு எடுத்து வாயில் போட்டனர். ‘அது என்ன?’ என்று கேட்டேன். ‘அது மோட்சத்திற்குப் போகும் மருந்து’ என்றார் மாமா(பாரதி). ‘பாவிகளா, எலுமிச்சங்காயளவா?’ என்றேன். ‘உனக்குப் பயந்துதான் இச்சிறிய அளவு கொள்கிறோம்’ என்றார் மாமா’’ என்று வ.உ.சி வருத்தப்பட்டிருக்கிறார். ( ‘வ.உ.சி.யும் பாரதியும்’ _ நூல்)
இப்படிப்பட்ட போதை ஆசாமியான பாரதி, போதையின் உச்சத்தில் பலவற்றை உளறியும் இருக்கிறார்.
“இந்தியாவிலுள்ள முஸ்லிம், கிறித்துவர் அனை வரும் ஹிந்துக்களே!’’ என்று பாரதி சொன்னதற்கு, ‘ஹிந்துக்கள்’ என்ற சொல்லை இந்தியாவில் பிறந்தவர்கள் என்ற அர்த்தத்தில் சொல்லி யிருக்கிறார். அதை ஒரு சமயச் சொல்லாகச் சொல்லவில்லை’’ என்று விளக்கம் கூறுகிறார்கள் பாரதியின் வழக்குரைஞர்கள்.
“சதுர் வேதங்கள் மெய்யான சாஸ்திரங்கள்
எனுமிவற்றால் இவ்வுண்மை விளங்க
கூறும் துப்பான மதத்தினையே ஹிந்து
மதமெனப் புவியோர் சொல்லுவாரே!
அருமையுறு பொருள்களெல்லாம் மிக அரிதாய்
தனைச்சாரும் அன்பர்க்கிங்கு
பெருமையுறு வாழ்வளிக்கும் நற்றுணையாம்
ஹிந்து மதப் பெற்றி தன்னை
கருதியதன் சொற்படியிங் கொழுகாத
மக்களெல்லாம் கவலை யென்னும்
ஒரு நரகக் குழியதனில் வீழ்ந்து தவித்
தழிகின்றார் ஓய்விலாமே’’
என்கிறார் பாரதி. இந்துமத நெறிகளைப் பின்பற்றாததால்தான் மக்கள் துன்பத்தில் வீழ்ந்து கிடக்கின்றனர் என்கிறார். அதே பாரதி,
“தீயினைக் கும்பிடும் பார்ப்பார் – நித்தம்
திக்கை வணங்கும் துலுக்கர்
கோயிற் சிலுவையின் முன்னே – நின்று
கும்பிடும் ஏசு மதத்தார்
யாரும் பணிந்திடும் தெய்வம் – பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று – இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.’’
இந்த இரண்டில் பாரதியின் நிலைப்பாடு எது? மத நல்லிணக்கம் பேசும் அதே பாரதி இந்து மதமே உயர்ந்தது, கிறித்துவர்களால் இந்து மதம் அழிகிறது என்கிறார்! இந்த இரட்டை நிலைப்பாட்டிற்குப் பெயர் என்ன?
இந்தியையும் சமஸ்கிருதத்தையும் உயர்த்திப் பிடித்த பாரதி, இந்தி தேசிய மொழியாக வரவேண்டும் என்று ஒரு கட்டத்திலும், சமஸ்கிருதம் தேசிய மொழியாக வரவேண்டும் என்று இன்னொரு கட்டத்திலும் கூறியுள்ளார். இதைத்தான் இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கூறுகிறது என்று ஒப்பிட்டுக் காட்டுகிறோம்.
ஆனால், இந்த உண்மையை மறைத்து பாரதி வழக்குரைஞர்கள் எப்படி முட்டுக் கொடுக்கிறார்கள் தெரியுமா?
எடுத்துக்காட்டாக, ஜாகர் என்பவர் கூறுவதைக் கீழே படியுங்கள்.
“ஒரே நேரத்தில் தேசியக் கவிஞனாகவும், மாநிலக் கவிஞனாகவும் இயங்கி வந்த பாரதி, தேசிய மொழியாக ஆங்கிலம் வருவதை விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் ‘இந்தி’யை பொதுப் பாஷையாக்க வேண்டும் எனக் கூறும் பாரதி, இன்னொரு கட்டத்தில் ‘சமஸ்கிருதத்தை’ பொது பாஷையாக்க வேண்டும் எனக் கூறுகிறான். இதற்குப் பலமான அரசியல் பின்னணி உண்டு. இந்திய தேசிய அரசியலில் காந்தியின் செல்வாக்கு ஓங்கி இருந்த கட்டத்தில், இந்தியைத் தேசிய மொழி ஆக்க வேண்டும் எனும் காந்தியின் குரலை வழிமொழிகிறான். பின்னர் காந்தியிடம் வேறுபட்டு, அரவிந்தரின் ஆளுமைக்குள் வந்தபின் அரவிந்தருக்குப் பிடித்தமான சமஸ்கிருதத்தை பொதுப் பாஷையாக்க வேண்டுமென்கிறான்.
இன்னொரு விசயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். மேற்கூறிய செயல்கள் யாவும் அறிவு நிலைப்பட்டதல்ல உணர்ச்சி நிலைப்பட்டவை. இவை, தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பாரதிக்கு இருந்த பற்றை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.’’
இந்த வாதத்தில் ஏதாவது நேர்மை இருக்கிறதா? தேசியக் கவி, மாநிலக் கவி என்பதெல்லாம்இவர்கள் கொடுத்துக்கொண்ட பட்டங்கள். எந்தத் தகுதியில் பாரதி தேசியக் கவி? எந்த வகையில் மாநிலக் கவி? இதுவே விவாதத்திற்குரியது. தேசியக் கவி என்றால், ஆங்கிலம் வரக்கூடாது என்று ஏன் கூறவேண்டும்? இந்தி பொதுப்பாஷை என்பது எதன் அடிப்படையில்? ஆயிரக்கணக்கான மக்கள் மட்டுமே பேசும் சமஸ்கிருதம் எப்படி இந்தியாவின் தேசிய மொழியாக முடியும்? இதில் என்ன நேர்மையுள்ளது? பாரதி, காந்தியை ஆதரிப்பதற்கும், அரவிந்தரை ஏற்றுக் கொள்வதற்கும், இந்தியாவின் தேசிய மொழியாக இந்தியும், சமஸ்கிருதமும் வரவேண்டும் என்பதற்கும் என்ன தொடர்பு உள்ளது?
பாரதியின் விருப்பு வெறுப்புக்கு ஏற்பத்தான் இந்தியாவின் தேசிய மொழி தீர்மானிக்கப்பட வேண்டுமா?
இதைவிட நகைப்பிற்குரிய வாதம் என்னவென்றால் பாரதியின் செயல்கள் அறிவு வயப்பட்டதல்லவாம்; உணர்ச்சி வயப்பட்டதாம். இதன்மூலம் பாரதிக்கு இருந்த தமிழ்ப் பற்றும் சமஸ்கிருதப் பற்றும் வெளிப்படுகிறதாம். சமஸ்கிருதப் பற்று வெளிப்படுகிறது என்பது சரி. தேசிய மொழியாக இந்தியும் சமஸ்கிருதமும் வரவேண்டும் என்பதில் தமிழ்ப்பற்று எப்படி வெளிப்படும்?
எல்லாம் ஒரே உளறல். இப்படிப்பட்ட உளறல் பேர்வழிகள்தான் பாரதியை தேசிய கவியாக்கியவர்கள்; முற்போக்குவாதியாய்க் காட்டி முட்டுக் கொடுப்பவர்கள்.
ஆக, பாரதியின் தேசியக் கவி பிம்பம் ஒரு புனைவு, கட்டமைப்பு, கற்பனை என்பதே உண்மை. ஜாகர் போன்றவர்களால் முட்டுக் கொடுத்து நிலைநிறுத்தப்படுபவை.
மேற்படி ஜாகர், பொதுவுடைமை இயக்கத்தவரின் தப்பான மதிப்பீட்டிற்குக் கூட இதேபோல முட்டுக் கொடுக்கிறார்.
“ஒரு பொருளை அல்லது ஒரு பிரச்சினையை எப்படி அணுக வேண்டும் என்பதை ஒழுங்குபடுத்தி, ஒரு கட்டுக்கோப்பான தளத்தில் இயங்கச் செய்த பெருமை பொருள்முதல் வாதத்திற்கு உண்டு. அதனடிப்படையிலேயே மார்க்சியர்கள் அணுகியுள்ளனர்’’ என்கிறார்.
பொருள்முதல்வாதத்தின் சிறப்பு பற்றி ஜாகர் கூறுவது மிகச் சரி. ஆனால், அந்த அடிப்படை-யில் பாரதியை பொதுவுடைமைவாதிகள் அணுகி, ஆய்ந்துள்ளனர் என்பது தவறு.
மேற்கண்ட பொருள்முதல்வாத வரையறைப்-படி பாரதியின் படைப்புகளைப் படிக்கும் எவரும், அவரை ஓர் சனாதனவாதி, சந்தர்ப்பவாதி, முற்போக்குப் போர்வையில் ஆரிய, சமஸ்கிருத ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றவர், விருப்பு, வெறுப்புகளுடன் செயல்பட்டவர், பொதுவுடைமை எதிர்ப்பாளர், புரட்சியையும் விரும்பாதவர் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். அப்படியிருக்க பாரதியை முற்போக்காளராய், புரட்சியாளராய், பொதுவுடைமைவாதியாய் பொதுவுடைமை இயக்கத்தினர் காட்டுகிறார்கள் என்றால் அது தன் நெஞ்சறிய பொய்யுரைப்பது என்பதாகும்.
பொருள்முதல்வாத வரையறைப்படி பாரதியைப் பகுத்தாய்ந்து, பட்டியல் இட்டு, அவரை சமதர்மவாதியாய், முற்போக்காளராய், புரட்சியாளராய் நிலைநிறுத்திக் காட்டத் தயாரா? என்று நான் சவால் விட்டுக் கூற விரும்புகிறேன். அப்படி அவர்கள் பட்டியல் இட்டால் நான் அவர்களுடன் விவாதித்து உண்மையை உலகுக்கு உறுதி செய்யத் தயாராய் உள்ளேன்.
(தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக