பக்கங்கள்

வியாழன், 25 அக்டோபர், 2018

தினமலரின் மூன்று கடிதங்கள் திமிர் அடங்கவில்லை என்பதற்கான அடையாளமே!



தினமலர் எனும் பார்ப்பன ஏடு கடந்த ஒரு வாரத்தில் திராவிடர் கழகத்தையும், அதன் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களையும் பற்றி மூன்று கடிதங்களை வெளியிட்டுள்ளது.

அரைத்த மாவையே அரைப்பது என்ப தற்கு அட்சரம் பிறழாமல் எடுத்துக்காட்டாக இந்தக் கடிதங்கள் நூற்றுக்கு நூறு துல்லிய மாகப் பொருந்தும். ஏற்கெனவே பதில் சொல்லப்பட்டது என்றாலும் மூடனும் முதலையும் கொண்டது விடான் என்பது தெரிந்திருந்தாலும் வாசகர்கள் தெளிவு பெறவே மீண்டும் நாம் எழுத நேர்கிறது.

(1.) தினமலர் கேள்வி

கடவுள் நம்பிக்கைகளே இல்லாத திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் போவது  என்ற பிரச்சினையில் தலையிடுவானேன்?

நமது பதில்

கடவுள் இல்லை என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை. அனைவருக்கும் அர்ச்சகர் உரிமை வேண்டும் என்பது மனித உரிமை; கொள்கைக்கும், உரிமைக்கும் உள்ள வேறுபாட்டினை அறிவு என்ற ஒன்று இருந்தால் சிந்தித்துப் பார்க்கலாம்.

தாழ்த்தப்பட்டவர்களும் நாடார்களும் கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்ற கூட திராவிடர் கழகம் பாடுபட்டு வெற்றி பெற்றுள்ளதே.

கோயிலில் தமிழில் வழிபாட்டு உரிமை வேண்டும் என்பதற்காகவும், திராவிடர் கழகம் குரல் கொடுத்து வந்துள்ளதே, தமிழ்வழி பாட்டு உரிமை கூடாது என்பதற்குக் கூறப்படும் காரணம் என்ன? சமஸ்கிருதம் தேவபாஷை, தமிழ் நீஷப்பாஷை என்று கூறப்படும் காரணம்தானே.

தமிழைக் கேவலப்படுத்தும்போது, கடவுள் நம்பிக்கை இல்லாத திராவிடர் கழகம் வழிபாட்டு உரிமை பற்றிப் பேசக்கூடாதா? மாநாடு நடத்தக்கூடாதா?

கடவுள் நம்பிக்கை இல்லாத திராவிடர் கழகம் இவற்றில் தலையிடக்கூடாது என்றால் கடவுள் நம்பிக்கையுள்ள தினமலர் கூட்டம் இதற்காக போராடாதது ஏன்?

கடவுள் படைப்பில் எல்லோரும் சமம் என்று கூறி விட்டு, குறிப்பிட்ட கோயிலுக்குள் பெண்கள் போகக் கூடாது என்பது கடவுளையே அவமதிக்கும் காரியம் இல்லையா?

கண்ணனூர் பகவதியம்மனின்  மாத விடாயை முன்னிறுத்தி விழா எடுக்கும் நிலையில் மாத விடாயை காரணம் காட்டி, அய்யப்பன் கோயிலுக்குள் வழிபடப் போகக்கூடாது என்பது இந்துமதத்திற்குள் நெளியும் முரண் பாடல்லவா!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்காகக்கூட தந்தை பெரியார் அவர்கள் மறைவிற்குப் பிறகு அன்னை மணியம்மையாரும், கி.வீரமணி அவர்களும் போராடிக்கொண்டு வந்த நிலையில், இப்பொழுது அதில் வெற்றியும் கிடைத் துள்ளதே! அர்ச்சகர் பயிற்சி பெற்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் மதுரை தல்லாக்குளம் அய்யப்பன் கோயிலில் அர்ச்சகராக்கப்பட்டுள்ளாரே! - இதுபற்றி தினமலர் கூறுவது என்ன?

தாழ்த்தப்பட்டோர் அர்ச்சகரானால் கோயிலும், கடவுளும் தீட்டுப்பட்டு விடும், சாமி செத்து விடும் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று வைகனாச ஆகமங்களை எடுத்துக் காட்டி வாதாடியவர்கள் யார்? 13 பேர் வழக்கு தொடுத்தார்களே அவர்கள் அத்தனைப் பேரும் பார்ப்பனர்கள் தானே.

தாழ்த்தப்பட்டவர்களை இந்து என்று ஒரு பக்கத்தில் கூறிக்  கொண்டு, தேவைப் படும் பொழுது இந்துக்களே ஒன்று சேர்வீர் என்று அழைப்புக் கொடுத்துக் கொண்டே, கோயிலுக்குள் அந்த இந்துக்களான தாழ்த்தப்பட்டவர்கள் அர்ச்சகராக அரு கதையற்றவர்கள் - அது இந்துக்களின் ஆகமத்துக்கு விரோதமானது என்றே தினமலர் கூட்டம் இன்றும் நியாயப் படுத்தும் போது பார்ப்பனர்கள் பற்றி விடுதலை எழுதினால், திராவிடர் கழகத் தலைவர் பேசினால், அது குற்றம் என்று கூறுவதிலிருந்து இன்று வரை பார்ப்பனர்கள் திருந்தவில்லை என்பது தெரியவில்லையா?

கடவுள் நம்பிக்கை இல்லாத தி.க.வினர் இதற்காகக் குரல் கொடுக்கக் கூடாது என்பது தினமலர்களின் கருத்தானால், தாழ்த்தப் பட்டவர்களை இந்துக்கள் என்று கூறும் தினமலர் அவர்களுக்காகக் குரல் கொடுக் காதது ஏன்? நாங்களும் தாழ்த்தப்பட்ட வர்களை அனுமதிக்க மாட்டோம் - நீங்களும் அதற்காகக் குரல் கொடுக்கக் கூடாது என்று தினமலர் எழுதுவது பார்ப்பனர்களின் ஜாதித் திமிர் இன்னும் தறிகெட்டு நிற்கிறது என்று தானே பொருள்!

தாழ்த்தப்பட்டவர்களுக்கும்,  பிற்படுத்தப் பட்டவர்களுக்கும், திராவிடர் கழக இடஒதுக்கீட்டு கோரினால்  பகுத்தறிவாளர் களுக்கும் மட்டும்தான் அது தேவை என்றா குரல் கொடுக்க முடியுமா?

(2) தினமலர் கேள்வி

பார்ப்பனர்கள் என்று சொல்லித் திட்டுகிறார்கள் தி.க.வினர்.

நமது பதில்:

பார்ப்பனர்களைப் பார்ப்பனர்கள் என்று சொல்லாமல் வேறு எப்படிதான் சொல்ல முடியும்? இப்படிஅவர்கள் சொல்லுவதன் நோக்கம் என்ன தெரியுமா? பிராமணன் என்று சொல்ல வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றனர் என்று பொருள்.

பார்ப்பனன் பிராமணர் என்றால் பார்ப்பனர் அல்லாதார் தங்களை சூத்திரன் என்று ஒப்புக் கொண்டதாகத் தானே பொருள். பிராமணன் என்றால் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் -வைதிகமாக இருந்தாலும், லௌகீகமாக இருந்தாலும் மூடனாயிருந்தாலும் பிராமணனே மேலான தெய்வம் (மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் 317) என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.  சூத்திரன் என்றால் விபசாரி மகன் (மனுதர்மம் அத்தியாயம் 8, சுலோகம் 415), என்று நாங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று தினமலர் கூறுகிறது என்றால் -தினமலரின் பூணூல் ஆணவம் இன்னும் கொக்கரிக்கிறது என்றுதானே பொருள்.

பார்ப்பான் என்பதுதானே தமிழ்ச்சொல்- 'பார்ப்பன மாந்தர்காள்' பகர்வது கேண் மின் என்று கபிலர் கூறவில்லையா? பார்ப்பான் பிறப்பொழுக்கம் என்று திருவள்ளுவர் சொல்லவில்லையா? 'சூத்திரனுக்கொரு நீதி, தண்டச் சோறுண் ணும் பார்ப்பானுக்கொரு நீதி, சாத்திரம் சொல்லிடு மாயின் சாத்திர மன்று சதி என்று கண்டோம்' என்று பார்ப்பன பாரதி கூறிட வில்லையா?

(3) தினமலர் கேள்வி

பிராமணர் -அறிவு ஜீவிகளாம்.

நமது பதில்: பார்ப்பனர் அறிவு ஜீவிகள் என்று தினமலர் இன்றைக்கும் எழுதுகிறது என்றால் இவர்கள் சுலபத்தில் அடங்கமாட்டார்கள் - அடக்கப்பட வேண்டும். பார்ப்பன எதிர்ப்பு இதுபோதாது என்ற உணர்ச்சியைத் தானே இது ஏற்படுத்தும்? மறைந்த காஞ்சி சங்க ராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிகூட பார்ப்பனர்தாம் - அவரின் அறிவு ஜீவிதம் எதற்குப் பயன்பட்டது என்று உலகிற்கே தெரியுமே! காஞ்சிபுரம் மச்சேந்திரநாதர் கோயில் அர்ச்சகர் தேவநாதனை எந்தப்பட்டியலில் சேர்ப்பதாக உத்தேசம்?

(4) தினமலர் கேள்வி

பூணூலைப் பிராமணர்கள் மட்டும்தானா போடுகிறார்கள்?

நமது பதில்:

மனுதர்ம சாஸ்திரப்படி சூத்திரர்களுக்கு பூணூல் அணியும் உரிமை கிடையாது. அப்படி பூணூலை சூத்திரன் அணிந்தால் சூத்திரனின் அங்கங்களை வெட்டி விட வேண்டும். (மனுதர்மம், அத்தியாயம் -9, சுலோகம் 224)

இதற்கெல்லாம் தினமலர் என்ன பதில் சொல்லப்போகிறது? மனுதர்மம் எப்பொழுதோ எழுதியது என்பதுதான் அவாளின் சமாதானம் என்றால், அந்த மனுதர்மத்தை தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் எரித்தது போல தினமலர் கூட்டம் நாள் குறித்து தீ வைத்துச் சாம்பலாக்கத் தயார்தானா?

திருப்பதி ஏழுமலையானுக்கும் திருப்பரங் குன்றம் முருகனுக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் தங்கப் பூணூல் அணிவித்தது, சிரீங்கம் ரெங்கநாதனுக்கும் ஜீயர் தங்கப் பூணூலும் அணிவித்ததும் - எந்த அடிப்படை? கடவளும் பார்ப்பானும் ஒரே ஜாதியா? உள்நோக்கம் புரிகிறதா?

(5) தினமலர் கேள்வி

ஜாதிக்கலவரம் பிராமணர்களாலா உண்டாகிறது?

நமது பதில்:

ஜாதியின் மூல ஊற்று இந்துமதம் - வேதம்- இதிகாசங்கள் - சாஸ்திரங்கள் இந்து மதத்தில் ஜாதி அமைப்பு என்பது ஏணிப்படி முறை (GRADED IN EQUALITY) என்றார் அண்ணல் அம்பேத்கர்.

நோயை ஒழிக்க அதன் மூலக்கிருமியை ஒழித்தாக வேண்டும் -இதற்கு காரணமான பார்ப்பனர்கள் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டாமா? சங்கரமடத்தில் ஒரு தாழ்த்தப் பட்டவர் சங்கராச்சாரியாக வரட்டும்; கோயில் களில் அர்ச்சகர்களாக அதிகமான வகையில் தாழ்த்தப் பட்டவர்கள் அர்ச்சகர்களாக வரட்டும் - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்கு பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்ற திருத்தம் வரட்டும் - சங்கராச்சாரியார் ஜாதி ஒழிக என்று ஒரே ஒரு முறை உதிர்க்கட்டும். ஜாதிவேர் அறுகிறதா இல்லையா? என்று அப்புறம் சொல் லுங்கள்.

யார் யார் அருகில் பழகுகிறார்களோ, குடியிருக் கிறார்களோ, வேலை செய்கிறார் களோ அவர்களிடை யேதான் சச்சரவு களும் வரும்.  சேரிகளுக்கும் - அக்ர காரத்துக்கும் இடையே உள்ள தூரத்தைக் கணக்கிட்டால் இதற்கான காரணமும் எளிதில் விளங்கும். சுடுகாட்டில் கூட ஜாதி அடிப்படையில் தான் இருக்க வேண்டும் (மதுரை பேட்டி, 1982) என்று கூறும் சங்கராச்சாரி பற்றி தினமலர் என்ன கூறுகிறது.

(6) தினமலர் கேள்வி

பார்ப்பன எதிர்ப்பு இனி செல்லாது!

நமது பதில்: இப்படி சொல்லுவதன் அர்த்தம் என்ன? நாங்கள் ஜாதி ஆணவத்துடன்தான் இருப்போம் - உங்களால் என்ன செய்ய முடியும் என்று சவால் விடுவதாகத்தானே அர்த்தம். நாடு ஆஸ்திகர்கள் வாழத்தகுதி இழந்து விட்டது. மகா புருஷர்கள் எல்லாம் வெளிநாடு செல்லத் திட்ட மிட்டுள்ளனர் என்று ராஜாஜி அவர்களை எழுத வைத்த பெரியார் பூமி இது-இந்த சவால்கள் எல்லாம் இங்கு வேண்டாம்!

234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையில் பார்ப்பனர் ஒரே ஒருவர்தானே- இதுதான் பெரியார் பூமி நினைவிருக்கட்டும்!

(7) தினமலர் கேள்வி

தி.க.தலைவர் வீரமணிக்காக தினமலர் பக்கங்களை வீணடிக்க வேண்டாம்.....

நமது பதில்:

அடேயப்பா, எவ்வளவு பெரிய மனசு! தினமலர் களையும், சங்கரமடங்களையும், விஜயபாரதங்களையும், துக்ளக்குகளை யும் நோக்கி விடுதலையும், அதன் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் ஏவும் கணைகளின் தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் ஒரு பாதுகாப்பு எண்ணத்துடன் இப்படி சரண் அடைந் திருக்கிறது தினமலர்.

கடைசி பூணூல் உள்ள வரை, சங்கரமடங்களில் தாழ்த்தப்பட்டவர் அமரும் வரை, கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், சமத்துவ நிலை உருவாகும் வரை வேதங்களும், மனுசாஸ்திரங்களும், மகாபாரதங்களும், இராமயணங்களும், ஆட்டம் போடும் வரை, பார்ப்பன எதிர்ப்பு என்பது தவிர்க்கப்பட முடியாது -  ஆமாம் தவிர்க்கப்படவே முடியாது!

எங்கள் கைகளில் இருக்க  வேண்டிய ஆயுதங்களை முடிவு செய்வது நமது எதிரிகள்தானே!

குறிப்பு: பார்ப்பனர்களுக்கு சர் சிபி ராமசாமி அய்யர் கூறிய (1946) அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது. அதனை ஒரு முறை தினமலர் மட்டுமல்ல - பார்ப்ப னர்கள் அனைவரும் படிக்கட்டும்!

இன்னொன்று பார்ப்பனர்கள் பற்றி எழுதும்போது தினமலரின் ரத்தம் கொதிப்பது -ஏன்? 'அந்த உணர்வு'தானே காரணம்!

- விடுதலை ஞாயிறு மலர், 13.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக