பார்ப்பனர் பற்றி மார்க்ஸ்
நம்முடைய சமுதாய இழிநிலையைக் காரல் மார்க்ஸ்கூட தெளிவாகப்படம் பிடித்துக் காட்டுகிறார் பாருங்கள். இந்தப் புத்தகம் ‘டாஷ் கேப்பிடல்’ என்ற மார்க்ஸின் புத்தகம். இதில் 241ஆவது பக்கத்தில்,
“இந்தியாவில் பசுவைத் தெய்வமாக நினைக்கும் மூடநம்பிக்கை உள்ளது. பார்ப்பானுக்காகவும், பசுவுக்காகவும் உயிரைக் கொடுத்தாலும் கொடுக்கலாம்.
அவனுக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்று மனுநீதி கூறுகிறது”.
எனப் பெரியார் சொல்லவில்லை. நாங்கள் சொல்லவில்லை. காரல் மார்க்ஸ் சொல்லியிருக்கிறார்! அதுதான் மிக முக்கியம்.
எழுதி வைத்தது என்ன?
புராணங்களுக்கு மதிப்பு ஏற்பட்டதற்குக் காரணம் என்னவென்றால் அவைகள் எவ்வளவு ஆபாசமாகவும் காட்டுமிராண்டித் தனமாகவும் எழுதி இருந்தாலும். முதலிலும் கடைசியிலும் “இப்புராணத்தைப் படித்தோருக்கு மோட்சம், படிக்க வைத்தோருக்கு மோட்சம், கேட்டோருக்கு மோட்சம், கேட்டவரைக் கண்டோருக்கு மோட்சம், கண்டவரைக் கண்டால் மோட்சம் கிடைப்பதுடன் வாழ்க்கையில் பணமும் பொருளும் சேருமென்றும் செத்த பிறகு இராஜாவாய் பிரபுவாய் மறுஜென்மம் எடுக்கப்படும்” என்றும் எழுதி வைத்ததே காரணமாகும்.
குடி அரசு தொகுதி 10, ப: 37
தந்தை பெரியார் பொன்மொழிகள்
மனிதச் சமுதாயத்தில் பிறவியால் மனிதனுக்கு மேம்பட்டவன் என்று எவனும் இருக்கக் கூடாது. அவனை ஒழித்துவிட்டு நாம் தூக்குப்போட்டுக் கொண்டாலும் பரவாயில்லை. எங்களுடைய லட்சியம் எதைச் செய்தாவது, என்ன செய்தாவது மனிதனை மனிதனாக்க வேண்டும் என்பது தான்.
குடி அரசு தொகுதி 25, ப: 184
ஜாதிக்கென்று தொழில்செய்வதால்தானே ஈன ஜாதி, இழி ஜாதி என்ற சொல்ல வாய்ப்பேற்படுகிறது. அந்த மாதிரி ஈன ஜாதி, இழி ஜாதி என்று சொல்வதற்கான வேலையை நீ செய்யாதே! நீ செய்து தொலைத்தாலும் உன் மக்களைச் செய்ய விடாதே. எல்லாத் தொழிலையும் எல்லோரும் செய்ய வேண்டிய நிலை ஏற்படட்டும்.
குடி அரசு தொகுதி 11, ப: 24
வாய்ப்பினால் மாத்திரம் தொழிலாளிகளல்லாமல் பிறவியினால், சட்டத்தினால், சாஸ்திரங்களால், கடவுள்களால், கடவுள் சிருஷ்டியினால் நாங்கள் தொழிலாளி களாக ஆக்கப்பட்டவர்கள் - அப்படிப்பட்ட தொழிலாளிகள்தான் திராவிடர்கள்.
குடி அரசு தொகுதி 4, ப: 100
ஜாதி காரணமாகப் பாடுபடாமல் கடவுளையும், மோட்சத்தையும் காட்டி ஊரார் உழைப்பில் வயிறு வளர்க்கும்படியான சவுகரியம் இருக்கும்போது பலாத்காரத்துக்கோ அல்லது தண்டனைக்கோ அல்லாமல் எவனாவது ஜாதி ஒழியச் சம்மதிப்பானா?
குடி அரசு தொகுதி 11, ப: 104
பெரியாரால் படித்தோம்
வகுப்புவாரி அரசாணை செல்லாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தபோது தந்தை பெரியார் வெகுண்டு எழுந்ததால்தான் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் இன்று பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்தன 69 விழுக்காட்டில். இன்று நீட் தேர்வு கோர்ட்டில் இருக்கிறது என்று சொல்வதைக் கேட்டுப் பேசாமல் இருந்தால் மருத்துவக் கல்வி படிக்கலாம் என்று இருக்கிற ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கழுத்தில் சுருக்குக் கயிறு உள்ளது.
குலக்கல்வித் திட்டத்தை ஒழிக்கப் பெட்ரோலும், தீப்பந்தமும் ஏந்தச் சொன்ன பெரியாரால்தான் இன்று நாம் படித்தோம். மருத்துவராகப் போகின்றோமா, மண்ணாகப் போகின்றோமா நம் கையில்தான் இருக்கிறது.
கறுப்புச்சட்டை
கறுப்புச்சட்டை ஒரு படையமைப்பின் சின்னமல்ல; அது இழிவின் அறிகுறி. இழிவிற்காக அவமானப்படுகிறோம்; துக்கப்படுகிறோம்; அதைப்போக்கிக் கொள்ள முடிவு செய்துவிட்டோம் என்பதன் அறிகுறி.
குடி அரசு தொகுதி 5, ப: 231
- தொகுப்பு க.பழநிசாமி
தெ.புதுப்பட்டி
- விடுதலை ஞாயிறு மலர், 7.10.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக