பக்கங்கள்

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

பெரியாரும் ஜீவாவும்

வழக்கறிஞர் இரா.அருணாசலம்

 


 

உயிர் இனங்களில்  உயர்வாகக் கருதப்படுவது மனித இனமே. அச்சிறப்பிற்குக் காரணம் மனிதன் பெற்றுள்ள சிந்திக்கும் ஆற்றல் தான்.ஒரு மனிதன் தன்னைப் பற்றியும், தன் குடும்பம், சுற்றம், சமூகம், நாடு, உலகம் என பல்முனைப்புகளில் தன் சிந்தனைகளைச் செலுத்துவது இயல்பாகும். அவற்றுள் சமூகம் மற்றும் உலகம் பற்றிய சிந்தனை முனைப்போடு செயல்படுபவர்களே தலைவர்களாகப் பரிணமிக்க முடியும். அந்த வகையில் வந்த தலைவர்கள்தான் தந்தை பெரியாரும், தோழர் ப.ஜீவானந்தமும்.

சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட காலகட்டத்தில்தான் கம்யூனிஸ்ட் கட்சியும் தோன்றியது என்பது வரலாறு.

சுயமரியாதை சமதர்ம சமுதாயத்தை அமைத்ததற்கான சூழ்நிலையை விளக்கும்போது பெரியார் சொல்கிறார் “ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவுமுள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அந்தப் பணியாய் இருப்பவன். அந்த தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறேதா இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்’’ என்று.

பொதுவுடைமை இயக்கத் தோழர் ப.ஜீவானந்தம், சுயமரியாதை இயக்கத்தில், ஆரம்ப காலத்தில் தன்னை இணைத்துக் கொண்டதைப் பற்றி, “சட்டமறுப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறை மீண்டு வந்த நேரம்; சிறையில் பகத்சிங் தோழர்களுடன் பழகி சமதர்ம உறுதியோடு வெளி வந்திருந்த நான் அன்றையச் சூழ்நிலையில் சமதர்ம பிரச்சாரத்திற்கு சுயமரியாதை இயக்கத்தைப் பயன்படுத்துவது மிக மிகத் தேவை என்ற முடிவில் ஈ.வெ.ரா சமதர்மதிட்டத்தை முழு மூச்சோடு ஆதரித்தேன்’’ என்கிறார்.

ஈரோடு சமதர்ம திட்ட மாநாட்டிற்கு ஜீவா சென்றிருக்கிறார். அங்கு தோழர் ம.சிங்காரவேலரின் பேச்சைக் கேட்டிருக்கிறார். புரட்சிகரமாக சமதர்ம முழக்கம் புதுமையிலும் புதுமையாக இருந்தது என்று ஜீவா எழுதுகிறார். அதன் பின்னர் மாநாடுகள், கூட்டங்கள் என்று  பெரியாருடன் பணியாற்றியது நினைவு கூறத்தக்கது. “ஜீவா சுயமரியாதைப் பிரச்சாரம் செய்த காலத்தில் அது மிக மிகக் கஷ்டம். அந்த மாதிரி கஷ்டத்திலும் பிரச்சாரம் செய்வதில் எனக்கு உதவியாக இருந்தார்.’’ என்றார் பெரியார். தொண்டறம் செய்பவர்களை பெரியார் என்றுமே மறந்ததில்லை. அதற்கு எடுத்துக் காட்டு ஜீவா குடும்பத்தின் மீது அவர் காட்டிய பரிவும் பாசமும் என்பதை ஜீவா மூத்த மகள் திருமணத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஜீவாவின் துணைவியார் திருமதி பத்மாவதி அம்மையார் தன் பெண்ணுக்கு மாப்பிள்ளைத் தேடி பெரியாரிடம் சென்றபோது திராவிடர் கழகக் குடும்பத்தைச் சார்ந்த ஒரு தோழரையே (இக்கட்டு ரையாளர்) மணமகனாகத் தேர்ந்தெடுத்து திருச்சி பெரியார் மாளிகையில் தன் பொறுப்பில் மணவிழாவை நடத்தி வைத்தார். அப்போது  (1967) அய்யா, “நான் மணமகன் வீட்டுக்காரன். இன்றைய தினம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நான் நிகழ்ச்சிக்கு சொந்தக்காரனாகவும் உரிமைக் காரனாகவும் இருந்து உங்களை வரவேற்கிறேன். இந்நிகழ்ச்சிக்கு நானே தலைமை ஏற்று நடத்த வேண்டிய பொறுப்பில் இருக்கிறேன்.’’ என்று பேசினார்.

தந்தை பெரியாருக்கு பின்னரும் ஜீவாவின் குடும்பத்தை மறவாமல் தமிழர் தலைவர் ஆசிரியர் ஜீவாவின் இளைய மகள் மற்றும் மகன் ஆகியோரின் திருமணங்கள் பெரியார் திடல் இராதா மன்றத்தில் கட்டணமின்றி சீரும் சிறப்புடன் நடைபெற துணையாக இருந்ததை நெஞ்சார நினைத்து உளமகிழ நன்றி  சொல்லுவது எம் கடமை.

நூல்கள் படிப்பதில் ஜீவா பல தமிழ்ச் சான்றோர்களின் படைப்புகளைப் படிப்பதோடு வெளிநாட்டு அறிஞர் பெருமக்களின் நூல்களையும் கற்றுத் தேர்ந்தவர். படித்த நூல்களின் கருத்துகளை உள்வாங்கியும் மேற்கோள் காட்டியும் மணிக்கணக்காக மேடைதோறும் முழங்கி வந்தார்.

பெரியார் எதனை எதிர்த்து கண்டனம் செய்வாரோ அவற்றை முழுமையாகப் படித்தப் பின்னரே அப்பணியில் ஈடுபடுவார் என்பதற்கு எடுத்துக்காட்டு கந்தபுராணம், மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களை ஒன்று விடாமல் படித்தறிந்தார் என்பதுதான்.

பெரியார் ஒரு சுயசிந்தனைவாதி. அவரே ஓர் இயக்கம் அவர் ஒரு சித்தாந்தம். அய்யாவை படிப்பதும் ஆய்வு செய்வதும் அறிஞர் பெருமக்களின் கடமை. மற்றவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத செய்திகளை எழுதியிருக்கிறார். இன்றைய உலகத்தில் அவர் கூறிய பல கருத்துக்கள் நடைமுறையில் வந்திருப்பதைக் காண முடிகிறது.

மொழியின் நடைக்காகவோ சொற்களின் அலங்காரத்திற்காகவோ அவர் படிப்பதில்லை. சமுதாய சீரழிவுக்கு எந்த சொல்  எழுத்து காரணமாக இருக்கிறதோ அதை ஆழமாகப் படித்தார். சீரழிவை தடுப்பதற்கும் ஒழிப்பதற்குமான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டார்.

பெரியார்  ஜீவா அன்பர்கள்

பெரியார் அவர்களின் தன்மான இயக்கத்தின் தளபதியாகவும் அவரது வலது கையாகவும் விளங்கியவர், ஜீவா தனிப்பட்ட முறையில் பெரியார் மீது பேரன்பும் அதேபோல் ஜீவாவின் மீது பெரியார் பேரன்பும் கடைசி வரை குறையாமல் இருந்தது. (‘தாமரை’  ஜீவா மலர் 1963)

ஒத்த சிந்தனை  ஒருமித்தக் கருத்து

மனித வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் முக்கிய நிகழ்வு என்றும் புனிதமானதும் என்றும் நிலவும் கருத்தை பெரியார் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அவருடைய விமர்சன நூல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளும் நோக்கில் 21.11.1934இல் இராபர்ட்சன்பேட்டையில் ஒரு திருமண வாழ்த்தில் ஜீவா பேசுகிறார். திருமணம் தற்கால நிலையில் ஓர் அவசியமான கேடாக இருக்கிறது. சுயமரியாதைக்காரர் களாயிருப்போர் தாலியறுப்பு இயக்கமொன்று ஆரம்பிக்க வேண்டியது பெண்டிர் சரிநிகர் சமமானவர் என்பதை ஸ்தாபிக்கும். திராவிடர் கழகம் பெரியார் திடலிலும் (14.4.2015) மற்ற இடங்களிலும் தாலி அகற்றும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளதை இங்கு பதிவு செய்ய வேண்டும்.

சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்

1926இல் வ.வே.சு.அய்யர் சேரன்மாதேவியில் பரத்வாஜ் ஆசிரமம் தொடங்கி பிராமண மாணவர்களுக்கு மட்டும் ஒரு தனி இடத்தில் உணவு பரிமாறும்படி செய்தார். அதைக் கண்டித்து குருகுலப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போராட்டத்தில் பெரியாருடன் ஜீவாவும் வரதராஜுலு நாயுடுவும் கலந்து கொண்டார்கள்.

நான் ஏன் நாத்திகன் ஆனேன்

தோழர் பகத்சிங் எழுதிய, ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ என்ற நூலை ஜீவா மொழிபெயர்த்து பெரியார் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி, ‘உண்மை விளக்கம் பிரஸ்’ மூலம் வெளியிட்டார். அதற்காக இந்தியன் பினல்கோட் 124ஏ செக்ஷன்படி இராஜத் துரோகம் குற்றம்சாட்டி இருவரையும் சிறையில் அடைத்தனர். நாத்திகத்தைப் பரப்புவதில் பெரியாருக்குத் துணையாக ஜீவா இருந்திருக்கிறார் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

ஜீவா எழுதிய பாடல்கள் பலவும் பெரியாரின் பேச்சுகளுக்குப் பரப்புரையாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.

கொள்ளைச் சிரிப்பு வந்ததே - குப்பன்

குழவிக் கல் சாமியென்று கும்பிட்டபோது

மடமையுற்ற வாழ்க்கையே மடங்கள் தந்ததாலே

கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் என்பதில்லையே

பெண்ணுரிமை

பெண்ணுரிமைக்காக பெண் ஏன் அடிமையானாள் என்று கேள்வி கேட்டு அதற்குத் தீர்வும் சொல்லியிருக்கிறார் பெரியார். பெண்கள் எந்தெந்த காரணங்களால் அடிமைப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டுச் சுதந்தரமாக வாழ முடியும் என்பதை எடுத்துக் காட்டவுமான கருத்தையும் எழுதியிருக்கிறார். ஜீவா அவர்களின் பெண்ணுரிமையைப் பற்றிய கருத்தும் பெரியாரைப் பின்பற்றியே அமைந்திருந்தது.

காந்திக்கு எதிர்ப்பு

காந்தியின் வர்ணாசிரம கொள்கை ஆதரவுக்கு பெரியாரும் ஜீவாவும் வன்மையாகக் கண்டனம் தெரிவித்தார்கள் என்பது உண்மை.

ஒரு சமயம் காந்தியை சந்தித்தபோது, பார்ப்பன எதிர்ப்பு பற்றிய சர்ச்சையில் காந்தி ஏன் பார்ப்பனர்களில் நல்லவரே இல்லையா? கோபாலகிருஷ்ண கோகலே இருக்கிறாரே என்று சொல்ல, மகாத்மாவாகிய தங்களுக்கே ஒருவர் தானே நல்லவராகத் தெரிகிறார். சாதாரண எங்களுக்கு அதுகூடத் தெரியவில்லை என்ற பொருள்படக் கூறி காந்தியின் பிற்போக்குத் தன்மையை வெளிப்படுத்தினார்.

ஜீவா 1926இல் காரைக்குடி அருகில் சிராவயலில் ஓர் ஆசிரமத்தை நடத்தி வந்தார். அப்போது ஒரு நாள் காந்தியார் அந்த ஆசிரமத்திற்குச் சென்றுள்ளார். அப்போதுதான் ஜீவா நீங்கள்தான் தாய்நாட்டின் சொத்து என்ற கருத்தை வெளிப்படுத்தினார். அங்கு வருகை தந்த காந்திக்கு அளித்த வரவேற்பு வாசகத்தில் வர்ணாசிரம தர்மத்தைக் கண்டித்து ஜீவா எழுதியிருந்தார். அதன் பின்னர் நாங்குனேரியில் சில நண்பர்களுடன் ஜீவா காந்தியைச் சந்தித்தார்.

குணத்திற்கும் கருமத்திற்கும் தக்கபடி நான்கு வர்ணங்கள் பற்றி பேசும்போது சாத்வீகத் தன்மையிலும் நன்னெறி ஒழுக்கத்திலும் சிறந்தவரான நீங்கள் ஒரு பிராமணன் அல்லவா என்ற வினாவுக்கு நான் நல்ல வைசியன். தீய ஒழுக்கங்கள் உடைய பிராமணன் கெட்ட பிராமணன் என்ற காந்தியின் விளக்கத்தைக் கேட்ட ஜீவாவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் முனைப்புக் காட்டினார்.

சுயமரியாதை இயக்கத்தின் மீது விமர்சனம்

காங்கிரஸ் எதிர்ப்பு, காந்தி வர்ணாசிரம எதிர்ப்பு, பெண்ணுரிமைக் குரல், ஜாதி, மத ஒழிப்பு, பொதுவுடைமைக்கு வரவேற்பு என பல்வேறு முனைப்புகளில் பெரியாரும் ஜீவாவும் ஒன்றுபட்டு செயல்பட்டனர்.1935இல் நடைபெற்ற திருத்துறைப்பூண்டி சுயமரியாதை மாநாட்டில் தான் ஜீவா அவர்கள் பெரியாருடன் மாறுபட்டு பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதற்குக் காரணமாக இருந்தது ஜஸ்டிஸ் கட்சியை பெரியார் ஆதரித்ததுதான்.

1935-_37இல் பெரியார் சமதர்மப் பிரச்சாரத்தில் சற்று தீவிரம் குறைந்து போன சூழ்நிலை. அதற்கு பெரியார் பேசுகிறார் நான் இரஷ்யாவுக்குப் போவதற்கு முன்பே பொதுவுடைமைத் தத்துவத்தைச் சுயமரியாதை இயக்கத்துடன் கலந்து பேசி வந்தது உண்மைதான். ஆனால் சர்க்காரால் பொதுவுடைமைக் கொள்கைகள் சட்ட விரோதமானது என்று தீர்மானித்து நமது சுயமரியாதை இயக்கத்தையே அடக்கி ஒடுக்கி ஒழித்துவிட வேண்டும் என்று கருதி இருக்கிறார்கள் என்று உணர்ந்த பிறகு எனக்குப் புத்திசாலித்தனமாகச் சில காரியம் செய்ய வேண்டியதாக ஏற்பட்டு விட்டது. அதுதான் பொதுவுடைமைப் பிரச்சாரம் நிறுத்திக் கொள்ள வேண்டியது என்பதாக ஆகிவிட்டது. (‘குடிஅரசு’_29.3.1936) இப்படி வெளிப்படையாகப் பேசும் தலைவர்களைப் பார்ப்பது அரிது. அதனால்தான் அவர் பெரியார்.

ஜீவா வாழ்க்கையில் திருத்துறைப்பூண்டி மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஜீவா சுயமரியாதை இயக்கத்திலிருந்து வெளியேறினார். ஆனாலும் பிற்காலத்தில் பெரியாரின் பெருந்தொண்டை போற்றிப் பாராட்டி பேசியுள்ளார். “இன்றைய  தினம் பெரியார் அவர்களுடைய பெரிய சமூகச் சேவையெல்லாம் கண்டபிறகு தமிழ்நாட்டின் தலைவர் பெரியார் என்று மனப்பூர்வமாக மட்டுமல்ல, அறிவுப்பூர்வமாக  சரித்திரத்தின் நடைமுறையிலே. கண்ட உண்மையின் பூர்வமாக பெரியார் அவர்களுக்கு ஈடு இணையாக யாரும் இல்லை. இப்படிப்பட்ட ஒரு கட்சி உலக சரித்திரத்திலே இந்தியாவிலே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அதிலே உழைத்து வந்திருக்கிறார்.’’ என்று ஜீவா பேசினார். (பெரம்பூர் செம்பியம் பொதுக்கூட்டத்தில் 23.11.1951 அன்று ஜீவா பேசியது ‘விடுதலை’ _ 27.11.1953 பக்.3)

காலங்கள் மாறலாம்; கொள்கைகள் மாறாது. அணிகள் வேறுபடும்; பணிகள் தொடரும். பகுத்தறிவு சமதர்மத்தை முன்னெடுத்துச் சென்ற தந்தை பெரியாரையும் அவருக்குத் துணையாக  தளபதியாக இருந்த தோழர் ஜீவாவையும் நினைவு கூர்வோம். அவர்கள் விட்டுச் சென்ற பணியைத் தொடர்வோம். வாழ்க பெரியார்,  ஜீவா புகழ்!
- உண்மை இதழ், 16-31.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக