பக்கங்கள்

வெள்ளி, 12 அக்டோபர், 2018

வள்ளலார்



‘வள்ளலார்’ என்று உள்ளம் உருக ஏற்றிப்  போற்றப்படும் வடலூர் இராமலிங்க அடிகளார்  1823இல் அக்டோபர் 5 அன்று கடலூர் மாவட்டம், மருதூரில் பிறந்தவர். தொடக்கத்தில் திருவொற்றியூர் சிவன்மீதும், கந்தக் கோட்டம் முருகன்மீதும், சிதம்பரம் நடராசன் மீதும் பாமாலை சூட்டிய -_ சராசரி பக்தராக இருந்த இராமலிங்க அடிகள், பார்ப்பனீயத்தின் சூதுகளை, புனை சுருட்டுகளை, மோசடிகளைக் கண்டு _ அவற்றினின்று முற்றாக விலகி ஆன்மீகவாதிகளுக்குத் தனிப் பாதை காட்டினார்.

உருவ வழிபாட்டை மெச்சிப் பாடிய அடிகள் காலத்தால் முதிர்ச்சி அடைந்த பருவத்தில் உருவ வழிபாட்டை வெறுத்து, தன்னால் வடலூரில் உருவாக்கப்பட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் வெறும் ஜோதியை ஏற்றி வைத்தார். தன்னால் உருவாக்கப்பட்ட அமைப்புகளின் பெயரில் இடம் பெற்றிருந்த வேத என்ற சொல்லைத் தூக்கி எறிந்தார்.

ஏழைகளுக்கு அன்னம் படைக்க அவர் மூட்டிய அடுப்பின் நெருப்பு இதுவரை அணையவில்லை என்பதிலிருந்து அடிகளாரின் அருள் உள்ளத்தை, பசிப்பிணியைப் போக்கும் அறவுள்ளத்தை, மனித நேயத்தின் அடர்த்தியை உணர முடியும்.

அடிகள் ஏன் வடலூர் வந்தார்?

சிதம்பரம் நடராசரைப் பற்றிப் பாடல்கள் எழுதி உருகிய வள்ளலார், நடராசனை நேரில் பக்கம் சென்று தரிசிக்க விரும்பினார். தீட்சதர்கள் தடுத்தனர். வள்ளலார் மருண்டார்! இதற்கு எதிராக சிதம்பரம் தலமொன்றை உண்டாக்கி, அங்கே நடராசனை வரவழைப்பேன் என்று சூளுரைத்தார் _ அதுதான் வடலூரில் அவர் நிறுவியதாகும். பிற்காலத்தில் அந்த உருவ வழிபாட்டையும் வெறுத்தார். ‘அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை’ என்கிற சன்மார்க்கத்தைத் தந்தார்.

இன்னார், இன்ன ஜாதியார்தான் உள்ளே சென்று வழிபடலாம் எனும் ஆரியப் பார்ப்பன முறைக்கு மாறாக வடலூரில் அவரால் தொடங்கப்பட்ட (1870) ஞானசபையில் ஏற்றப்பட்ட ஜோதியை யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று வணங்கலாம் என்று அறிவித்து, அதுவரை உருவ வழிபாடு என்பதன்மூலம் சமூகத்தில் பிறவி முதலாளித்துவ ஆட்டம் போட்ட பார்ப்பனியத்துக்குச் சாவு மணி அடித்தார்.

1873 அக்டோபர் 22இல் சித்தி வளாகத்தில் சன்மார்க்கக் கொடியை ஏற்றி உரையாற்றுகையில் தன் உள்ளத்தை முழுமையாகத் திறந்து காட்டினார்.

“நாம் முன் பார்த்தும், கேட்டும் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழு உக்குறியின்றித் தெய்வத்தை இன்னபடி என்றும் தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்துவிட்டார்கள்... இதுபோல் சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் லட்சியம் வைக்கவேண்டாம்“- என்று வெளிப்படையாகக் கூறிவிட்டாரே!

பெருநெறி பிடித்தொழுக வேண்டும், மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும் என்று மதத்தினை பேய்க்கு ஒப்பிட்டு அதனை வெருட்டுவதன் அவசியத்தை எளிமையாக எடுத்துரைத்தார். மதத்திற்கு எதிரான ஒரு நெறியை அவர் பெருநெறி என்று விளித்தது விவேகமானது, வெகுவாகப் பாராட்டுதலுக்குரியது.

மதத்தால் மனிதருக்குள் குடிபுகுந்திருக்கும் வெறி  சமூக நல்வாழ்வு நெறிக்கு எதிரானது என்பதை தமது ஆறாம் திருமுறையில் அலசி எடுக்கிறார். மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களின் நீதி நூலுக்கு வடலூர் வள்ளலார் அளித்த சாற்றுக் கவியில், வேதநாயகம் எழுதியுள்ள நீதி நூலுக்கு முன் மனுநீதி உள்ளிட்டவை எல்லாம் வெறும் கயிற்று நூல்களே என்று கூறுகிறார்.

சமஸ்கிருதம் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி (மாத்ரு) என்றால் தமிழ், மொழிகளுக்கெல்லாம் தந்தை மொழி (பித்ரு) என்று சங்கராச்சாரியாருடன் நேருக்கு நேர் வாதிட்டவர் அவர். தந்தை பெரியார் கருத்துகளோடு இணைந்தவைகளாக வள்ளலார் சிந்தனைகள் பல அமைந்ததால் வடலூரும்  ஈரோடும் என்ற ஒரு நூலையே வெளியிட்டார் திருக்குறளார் வீ. முனுசாமி அவர்கள். மனுதர்மம், வருணதர்மம்,  ஆசாரம், ஆகமம் சாத்திரம் என்னும் சகதியில் உருண்டு புரண்டு கிடந்த இவர், பிற்காலத்தில் தெளிவு பெற்று, இந்தப் பார்ப்பனீயப் பாழும் சாக்கடையிலிருந்து, தாம் வெளியேறியது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் கரை சேர கருத்து சூடத்தை வழங்கிய ஒப்பிலா மணியாக ஒளி வீசினார்.

சாதியிலே, மதங்களிலே

சமய நெறிகளிலே

சாத்திரச் சந்தடிகளிலே

கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானத்து

அலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணே நீர்

அழிதல் அழகல்லவே!

என்று உலக மக்களுக்கே கூட ஒளிப்பாதை காட்டினார். உருவ வழிபாடு செய்து கடந்த மக்கள் மந்தையிலே ஒளி வழிபாடு என்ற உருவமற்ற ஒன்றை வெளிச்சமாகக் காட்டி ஆயிரம் ஆயிரம் காட்டுவிலங்காண்டித் தனத்திற்கு  மூடு விழா நடத்தினார் _ அந்தவகையிலே அது அக்கால கட்டத்திலும் புரட்சிதான். அதைக்கூடப் பொறுக்க மாட்டாமல்தான் அவரது மரணம் ஒரு சதிப் பின்னலில் நிகழ்ந்திருக்கிறது. அவர்தம் மரணம் கூட மர்மமானதுதான் _ ஜோதியாகிவிட்டார் என்பதெல்லாம் ஏமாற்று வேலை.

வள்ளலார் காலத்தில் தென்னார்க்காடு (கடலூர்) மாவட்ட ஆட்சியாளராக விளங்கிய கார்ஸ்டியன் என்பவர், “புராணம், சாத்திரம் முதலியவற்றை அவர் கண்டித்ததைப் பொறுக்காத சமயவாதிகள் கற்பூரத்தை இட்டு அவர் எலும்புகூட கிட்டாவண்ணம் எரித்துவிட்டனர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படியெல்லாம் கடைசிக் காலத்தில் சீர்திருத்தப் போர்வையில் பார்ப்பனியத்தை வீழ்த்தும் விவேகியாக அவர் கிளம்பிய நிலையில் வள்ளலார் ஜோதியாகிவிட்டார் என்று ஒரு கதையைக் கட்டினார்கள். தங்களின் எதிராளிகளைச் சூழ்ச்சியால் கொன்ற வரலாறு என்பது பார்ப்பனியத்துக்கே உரித்தானது  என்ற வரலாற்றை சற்று அசை போட்டால், இராமலிங்கனாரின் மர்ம மறைவிற்கும் காரணம் புரியாமல் போகாது.

எந்த உருவ வழிபாடு கூடாது _ ஒளி வழிபாடு தான் தேவை என்று அருள் பிரகாசர் செயல்படுத்தினாரோ, அவர் உருவாக்கிய சத்தியஞான சபையிலே பார்ப்பனப் புரோகிதன் உள்ளே புகுந்து, இந்து மத உருவ  வழிபாடுகளை நடத்தி, வள்ளலாரின் வேட்கையைச் சுட்டுப் பொசுக்கினான். நீண்டகால போராட்டத்திற்குப்பிறகே மானமிகு கலைஞர் ஆட்சியில் அந்தப் புரட்டன் வெளியே தள்ளப்பட்டு அடிகளாரின் ஆசை நிறைவேற்றப்பட்டது. ஹிந்து மகா சமுத்திரத்திற்குள் மூழ்கி முத்தெடுக்க முனைந்திருக்கும் சோ ராமசாமி போன்ற பார்ப்பனர்கள், இராமலிங்கனாரின் கடைசி காலச் சிந்தனைகளைக் காயடித்து தொடக்கத்தில் அவர் கூறியதை எடுத்துக்காட்டி வழக்கம்போல வரலாற்று உண்மைகளுக்குமேல்  காவிச்சாயம் பூசக் கிளம்பியுள்ளனர்.

துக்ளக் சோ இருந்த போது கூட குறுக்குசால் ஓட்ட முயன்ற ராமலிங்கத்தின் புலமையும், அறிவும் பலரையும், கவரத் தொடங்கியது. ‘மனுமுறை கண்ட வாசகம்’ என்ற நூலையும் அவர் எழுதினார் (‘துக்ளக்’, 22.9.2010). இதே மனு நூலைப் பற்றி பிற்காலத்தில் வடலூரார் என்ன எழுதியுள்ளார்? என்பதை விளக்கி ‘விடுதலை’ பதிலடி கொடுத்தது.

மயிலாடுதுறை முன்ஷீப் வேதநாயகம் பிள்ளை (18.26.-1889) எழுதிய நீதி நூலுக்கு இராமலிங்கனார் கொடுத்த சாற்றுக் கவியில் மனு நூலைப்பற்றி என்ன சொல்கிறார்?

வேதநாயகம் படைத்த இந்த நீதி நூலுக்கு முன் மனுநீதி எல்லாம் வெறும் கயிற்று நூலே என்று பாடியுள்ளாரே! இதற்குப்பிறகும் ‘சோ’க்கள் கயிறு திரிப்பதை என்னென்பது!

- உ.வை.க.அரசன்

- உண்மை இதழ், 1-15.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக