அம்பேத்கரை உயர்வாகப் பாராட்டிய அய்யா பெரியார்!
நேயன்
பெரியார் ஒப்புக்கொண்டவர் சிலர்தான். பெரியார் ஒருவரை அல்லது ஒன்றைப் பாராட்டுகிறார் என்றால் அதன் உள்பொருள் ஆயிரம்! அதன் சிறப்பும் அதிகம்! அவர் பாராட்டு மக்கள் நலன் சார்ந்து மனிதநேயம் சார்ந்தே இருக்கும்! புத்தர், வள்ளுவர் வரிசையில் அம்பேத்கரும் இடம் பெறுகிறார்.
1891இல் பிறந்த அம்பேத்கரை ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக மாற்றி, இந்தியா முழுமைக்கும் அறிமுகப்படுத்தியது ‘மகத்’ போராட்டமே. 1927 டிசம்பரில் சவுதார் குளத்தில் ஒடுக்கப்பட்டோரையும் குடிநீர் எடுக்க வைக்கும் போராட்டம் அது. இதற்கான உந்துதல் 1924இல் தந்தை பெரியார் வைக்கத்தில் நடத்திய போராட்டம் என்று அம்பேத்கர் வரலாற்றை வடித்த தனஞ்சய்கீர் சொல்லும்போது,
“தீண்டப்படாத வகுப்பினரின் போராட்டம் தொடர்பாக ஈடு இணையற்ற நிகழ்ச்சி 1925இல் நடைபெற்றது. திருவிதாங்கூர் ராஜ்யத்தில் வைக்கத்தில் சில வீதிகளில் தீண்டப்படாதவர்கள் நுழையக் கூடாது என்று தடுக்கப்பட்டிருந்தனர். இந்த வீதிகளில் நடப்பதற்கான உரிமையை நிலைநாட்டிய பார்ப்பனர் அல்லாதார் தலைவரான ராமசாமி நாயக்கரின் தலைமையில் சத்தியாகிரகப் போராட்டம் நடந்தது. அந்தப் அறப்போராட்டம் விளைவித்த சிந்தனைத் தாக்கமும், தன்னுரிமை உணர்ச்சிப் பெருக்கமும் பரவலாக மிகப்பெரிய விளைவை எற்படுத்தின. இதனால் வைதீக இந்துக்களும்கூட ஓரளவு சமத்துவ உரிமை உணர்வையும் பெருந்தன்மையையும் பெற்றதால் தீண்டப்படாதவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்த வீதிகளைத் திறந்துவிட்டனர்.
அதே நேரத்தில் மற்றொரு நிகழ்ச்சியும் நடைபெற்றது. பொறுப்புள்ள சாதி இந்துக்களையும் சுயமரியாதை உணர்வுள்ள தீண்டப்படாதவர்களையும் இந்நிகழ்ச்சி உலுக்கியது. 1926 மார்ச் மாதம் சென்னையில் முருகேசன் என்கிற தீண்டப்படாதவர், இந்துக் கோயிலினுள் நுழையக் கூடாது என்ற தடையை மீறியதற்காக கைது செய்யப்பட்டு கோயிலின் புனிதத்தைக் கெடுத்தார் என்பதற்காகத் தண்டிக்கப்பட்டார்.
அம்பேத்கர் இந்த நிகழ்ச்சியைக் கூர்ந்து கவனித்து வந்தார். மகத் சத்தியாகிரகம் தொடங்கவிருந்தபோது எழுதிய ஆசிரியவுரை ஒன்றில் வைக்கம் சத்தியாக்கிரகம் பற்றி நெஞ்சம் நெகிழ்ந்து அவர் எழுதினார். அவை குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் இனி நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளுக்கு இவை முன்னோடிகள். (டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, தனஞ்சய் கீர் தமிழில் க.முகிலன் பக்.87_88)
பெரியார் ஆதரவு:
அமராவதி கோயில் நுழைவுப் போராட்டத்துக்கான இறுதி முடிவு (1927 நவம்பர்), சவுதார் குளத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டம் (1927 டிசம்பர்), பார்வதி கோயில் நுழைவு (1929 அக்டோபர்), நாசிக்கில் உள்ள காலாராம் கோயில் நுழைவு (1930 மார்ச்) என அம்பேத்கர் முன்னெடுத்த போராட்டங்களுக்கு தூண்டுதலாக தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டம் இருந்துள்ளது. இந்தப் போராட்டங்களை அம்பேத்கர் தொடங்கியதுமே தந்தை பெரியார் அதனைக் கவனித்து ஆதரிக்கத் தொடங்கினார்.
தந்தை பெரியார் பேசியது 1929 ஜூலையில், அதற்கு ஈரண்டு மாதங்களுக்கு முன்னதாக மே மாதத்தில் நடந்த மாநாட்டில், “வேறொரு மதத்தில் சேர்ந்துவிடலாம்’’ என்று அம்பேத்கர் அறிவித்திருந்தார். அதாவது, அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நேர்க்கோட்டுக்கு 1930களில் வந்து சேர்ந்தார்கள். தீண்டாமையை உடலில் இருந்து துடைக்க வேண்டுமானால் மதம் மாறப் போகிறார்கள் என்பதால், ‘தீண்டாமை விலக்கு’ என்ற ஆயுதத்தை காந்தியும் காங்கிரசும் எடுத்தது. அதனை அம்பேத்கரும் தந்தை பெரியாரும் கடுமையாக எதிர்த்தனர்.
அம்பேத்கரின் தனித்தொகுதி நிலைப்பாட்டை பெரியார் முழுமையாக ஏற்றுக்கொண்டார். எம்.சி.ராஜா போன்றவர்கள் அம்பேத்கரின் எண்ணத்தை பின்வாங்கினாலும் தந்தை பெரியார் ஆதரித்தார். தனித் தொகுதி வராவிட்டால், நாட்டில் தொடர்ந்து வகுப்புக் கலவரங்கள் நடக்கும் என்று தந்தை பெரியார் எச்சரித்தார்.
உண்மையில், தாழ்த்தப்பட்ட சமூக சமத்துவம் பெற வேண்டுமானால், அவர்கள் இந்துக்களினின்றும் பிரிந்து தங்கள் கால் பலத்தில் நின்றுகொண்டே கிளர்ச்சி செய்தால்தான் முடியும்.’’ என்றார் பெரியார்.
(‘குடிஅரசு’, 17.7.1932)
வைக்கத்தில் சில வீதிகளில் தீண்டப்படாதவர்கள் நுழையக் கூடாது என்று தடுக்கப்பட்டிருந்தனர். இந்த வீதிகளில் நடப்பதற்கான உரிமையை நிலைநாட்டிய பார்ப்பனர் அல்லாதார் தலைவரான ராமசாமி நாயக்கரின் தலைமையில் சத்தியாகிரகப் போராட்டம் நடந்தது.
‘குடிஅரசில்’ பெரியார் ஈ.வெ.ரா வெளியிட்ட கீழ்க்கண்டவற்றை படித்தால், அவர் தாழ்த்தப்பட்டோரையும், அம்பேத்கரையும் எந்த அளவிற்கு நேசித்தார் என்பதை அறியலாம்!
* வகுப்புப் பிரச்சினை முடிவு தாழ்த்தப்பட்டோருக்கு இரட்டைத் தொகுதிகள் (‘குடிஅரசு’, 21.8.1932)
* டாக்டர் அம்பேத்கர் வெற்றி, காந்தியார் பணிவு (‘குடிஅரசு’, 2.10.1932)
* ஒப்பந்தத்தை ஆதரித்ததேன்? டாக்டர் அம்பேத்கர் விளக்கம் (‘குடிஅரசு’, 2.10.1932)
* புனா ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு _ ஒப்பந்தம் மாற்றப்பட வேண்டும் _ சென்னை தாழ்த்தப்பட்டோர் கூட்டத் தீர்மானம் (‘குடிஅரசு’, 23.10.1932)
* டாக்டர் அம்பேத்கர் அபிப்பிராயம் (‘குடிஅரசு’, 19.2.1933)
* அம்பேத்கரும் இந்து மதமும் (‘குடிஅரசு’, 27.10.1935)
* ஜாதியொழிய வேண்டும் -_ அம்பேத்கர் உரைகள்
* மதம் மாறுதல் (‘குடிஅரசு’, 17.11.1935)
* டாக்டர் அம்பேத்கர் கூறுவது உண்மையே, ஆனால், எம்மதத்திலும் சேராதிருங்கள். (‘குடிஅரசு’, 17.11.1935)
* சபாஷ் அம்பேத்கர் (‘குடிஅரசு’, 20.10.1935)
* காங்கிரஸ் பணக்காரர்கள் கட்சி. ஆதி திராவிடர்களுக்கு காங்கிரசில் திட்டம் கிடையாது. டாக்டர் அம்பேத்கர் விளக்கம். (‘குடிஅரசு’, 31.1.1937)
* டாக்டர் அம்பேத்கர் அறிக்கை (‘குடிஅரசு’, 25.4.1937)
* தைரியசாலி யார்?
* சென்னை மாகாண தாழ்த்தப்பட்ட மக்கட்கோர் வேண்டுகோள் (‘குடிஅரசு’, 6.9.1936)
* ஜாதியை ஒழிக்க வழி _ நூல் விளம்பரம் (‘குடிஅரசு’, 6.12.1936)
* டாக்டர் அம்பேத்கர் வெற்றி. காந்தியார் பணிவு. ஒப்பந்த விபரம் (‘குடிஅரசு’, 2.10.1932)
* ஒப்பந்தத்தை ஆதரித்ததேன். டாக்டர் அம்பேத்கர் விளக்கம். (‘குடிஅரசு’, 2.10.1932)
* அம்பேத்கரின் வெடிகுண்டு. ஆலயப் பிரவேசம் சுயமரியாதைக்கு விரோதம். வருணாச்சிரமம் ஒழியாவிட்டால் வேறு மதத்திற்குப் போய்விடுவோம். (‘குடிஅரசு’, 19.2.1933)
* அம்பேத்கரும் காந்தியும் (‘குடிஅரசு’, 19.2.1933)
* வட்ட மேஜை மாநாட்டு முடிவு (‘குடிஅரசு’, 25.1.1931)
* சோறுபோட்டு உதை வாங்கிய கதை.
* அம்பேத்கர் கொடுத்த அடி (‘குடிஅரசு’, 30.9.1944)
* அம்பேத்கர் பெரியார் சந்திப்பு (‘குடிஅரசு’, 30.9.1944)
* டாக்டர் அம்பேத்கர் (‘குடிஅரசு’, 30.9.1944)
* தோழர் அம்பேத்கருக்கு புத்தி வந்ததா? வீர.சு.ப.வீரையா (‘குடிஅரசு’, 24.11.1935)
* முடிவை மாற்ற வேண்டாம். டாக்டர் அம்பேத்கருக்கு ராமசாமி தந்தி. (‘குடிஅரசு’, 20.10.1935)
* டாக்டர் அம்பேத்கருக்கு ஆதரவு. திருநெல்வேலியில் கூட்டம். (‘குடிஅரசு’, 17.11.1935)
* ஹிந்து மதம் தொத்து வியாதி _ டாக்டர் அம்பேத்கர் கருத்து (‘குடிஅரசு’, 12.1.1936)
* டாக்டர் அம்பேத்கருக்கு ஆதரவு _ சென்னை ஆதிதிராவிடர் கூட்டம் (‘குடிஅரசு’, 10.11.1935)
* ஹிந்து சமூகத்தினால் எமக்கு நன்மையில்லை. சமத்துவம் கொடுக்கும் எந்த மதத்திலாவது சேருங்கள். அம்பேத்கர் பிரசங்கம். (‘குடிஅரசு’, 27.10.1935)
இப்படி அம்பேத்கர் குறித்த செய்திக் குவியலாக ‘குடிஅரசு’ம், ‘விடுதலை’யும் இருக்கிறது. செய்தியாக வெளியிடுவது மட்டுமல்ல அதற்கு தன்னுடைய தார்மீக ஆதரவு உண்டு என்பதையும் வலியுறுத்தி வந்தார்.
(தொடரும்...)
- உண்மை இதழ், 2.16-28.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக