பக்கங்கள்

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

ஏழை நாடா?



பணம் கோயில்களிலே நகை யாய், வாகனமாய் நிலமாய் முடங் கிக் கிடக்கிறது. இந்த முடக்கு வாதம் தீர்ந்தால் முடிவுறும் வறுமை, கொடுமை, இல்லாமை என்பனவெல்லாம். இது எதை உணர்த்துகிறது. இந்த நாடு ஏழை என்பதையா? எப்படி ஏழை என்று கூற முடியும் இந்நாட்டை? தில்லைக் கூத்தரின் தங்கஓடு வேய்ந்த சன்னிதானத்தையும், வரதரின் வயிர நாமத்தையும் காஞ்சிகாமாட்சியின் வைடூரியக் கற்களையும், அரங்கநாதரின் அற்புத இரத்தினங்களையும் வேங்கடத்தானின் பத்து இலட்சம் பெறும் வைரமுடியையும் காணும்போதும், கேட்கும் போதும் - அதிலும் இந்தத் திரவியம் எவ்வித நலனுமின்றி மூலையில் முடங்கிக் கிடக்கிறது. ஒரு சில சாமி (ஆசாமி)கள் உல்லாச வாழ்வைக் கருதி என்பதை அறிந்த பிறகு இந்த நாட்டை ஏழைநாடென்று எவராவது கூற முடியுமா? பொருளில்லையா இந்த நாட்டில்? இருக்கிறது. யாரிடம் பொருள் உளது? மதத்தின் பெயரால் கோயிலாகவும், வாகனமாகவும், ஆண்டவர் சொத்தாகவும் அடைந்து கிடக்கிறது. அந்த பொருள் பிறவி முதலாளிகளைக் (ஆரியரை) கொழுக்க வைக்கப் பயன்படுகிறது.

பரமன் பேரால் உள்ள பணம் அதிர்வெடிக்கும், அலங்கார ஆர்ப்பாட்டப் பூசைக்கும், தேருக்கும் திருவிழாவிற்கும் உபயோகமாகிறது. அநாவசியமாக, அர்த்தமற்று இது நீதியா? முறையா? என்று கண்டிக்கிறோம் இதில் தவறென்ன?

செல்வமிக்க இந்த நாட்டில் வறுமையால் வதங்கி வெளிநாடு செல்லும் தோழர்கள் இந்த நாட்டை வாழ்த்தியிருப்பர் என்றா நினைக்கிறீர்கள்? துக்கம் நெஞ்சையடைக்கக் கண்ணீரைக் கடல் நீரிலே கலக்கி, அந்தக் கதியற்றவர்கள் இந்நாட்டைப் பார்த்து, அளவற்ற செல்வம் உன்னிடம் இருந்தென்ன? நாங்கள் அனாதை கள்தானே! வற்றாத நதிகள் இங்கே பாய்ந்தென்ன? எங்கள் வாழ்க் கைப் பாலைவனம்தானே! நஞ்சையும் புஞ்சையும் இருந்தென்ன?  நாங்கள் பஞ்சைகள்தானே! பணமிருந்தென்ன? பராரிகள்தானே நாங்கள்! ஒரு கவளம் சோறில்லாது ஓடுகிறோம் நாட்டை விட்டு, தங்க ஓடு வேய்ந்த கோயில் உள்ள தில்லையான் (சிதம்பரம் நடராசர்) வாழும் இந்த நாட்டில் வதியும் நாங்கள்! செல்வமுண்டு இந்த நாட்டில், ஈசனைப் போற்றியேத்தும் மக்களிடம், நாங்கள் வாழ வழி செய்யாமல் எங்களை வெளிநாட்டிற்குப் போகச் செய்யும் திருநாடே! அரசியலை ஆங்கிலேயனிடமும் ஆத்மார்த் தத்தை ஆரியனிடமும், வாணிபத்தை வடநாட்டானிடமும் ஒப்படைத்து விட்டுக் கிடக்கும் ஏ அடிமை நாடே! சோறில்லை எங்களுக்கு, சொர்ணம் விளையும் இந்த நாட்டில், எங்களை இக்கதியில் விடும் நீ இருந்தென்ன? போயென்ன? அக்ரமத்துக்கு இடமளித்து அனாதைகளைத் துரத்துகிறாய் அறிவிழந்து. ஏ அறிவிழந்த நாடே! நீ அழிந்து படு! அழிந்து படு என்று தான் சபித் திருப்பர்; தம் நெஞ்சக் குமுறலைக் கொட்டியிருப்பர்.

சொற்பொழிவு, குடந்தை - (1948)

 - விடுதலை நாளேடு, 15 .9 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக