#ஜோதிராவ்_பூலே
#சாவித்திரிபூலேஅம்மையார் :
“பள்ளிக்கூடத்திற்குச் செல்கையில் நாம் பள்ளிக்கூடம் நடத்துவதை எதிர்ப்பவர்கள் என் மீது கற்கள், சாணி மற்றும் சேற்றை வீசுகிறார்கள். சேலை பாழாகி விடுகிறது. அந்த சேலையோடு மாணவிகள் முன்னால் சென்று நிற்பதற்கு ஒருமாதிரியாக இருக்கிறது” என்று தனது கணவருக்கு கடிதம் எழுதுகிறார். பதில் கடிதம் வருகிறது. “காலையில் பள்ளிக்குச் செல்லும்போது ஒரு பழைய சேலையைக் கட்டிக்கொள். பள்ளிக்குச் சென்றவுடன் நல்ல சேலையைக் கட்டிக்கொண்டுவிடு. மாலையில் மீண்டும் பழைய சேலையையே கட்டிக் கொண்டு வீட்டுக்குச் செல்” இப்படிப் பதில் எழுதுகிறார் கணவர்.
கடிதம் எழுதியவர் நாட்டின் #முதல்பெண்_ஆசிரியை_சாவித்திரிபாய் பூலே. பதில் எழுதியவர் அவரது கணவர் #ஜோதிராவ்பூலே. ஒரு கட்டத்தில் தொல்லை தாங்காததால் எதிர்ப்பு தெரிவிப்பவர்களில் ஒருவரை நடுரோட்டில் வைத்து அறைகிறார் சாவித்திரி. அதற்குப்பிறகு தான் கற்களை எறிவதும், சாணியை வீசுவதும் அடங்கியது. ஒரு பெண் கல்வி கற்றால், அவரது கணவர் உண்ணும் உணவு புழுக்களாக மாறிவிடும் என்று பயமுறுத்தி வந்த காலக்கட்டத்தில் தனது மனைவியை கல்வி கற்க வைத்ததோடு, ஆசிரியைக்கான பயிற்சியும் பெற வைத்திருக்கிறார் மகாத்மா ஜோதிராவ் பூலே. இருவரும் இணைந்து பெண்களுக்காக தனியாக ஒரு #பள்ளிக்கூடத்தை 1848-ஆம் ஆண்டில் திறக்கிறார்கள். ஆசிரியைப் பணியைத்தானே ஏற்றுக் கொள்கிறார் சாவித்திரி. அப்போதுதான் அவருக்கு மேற்கண்ட அனுபவம் ஏற்பட்டது. சாவித்திரியோடு இணைந்து ஆசிரியைப் பணியை மேற்கொள்கிறார் #பாத்திமாஷேக் என்கிற இஸ்லாமியப் பெண். #இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி பூலேதான்.
#கணவருக்குத்_துணையாக...! பள்ளிக்கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அடங்கவில்லை. பூலேயின் தந்தை கோவிந்தராவை நிர்ப்பந்திக்கிறார்கள். அவரும், எதிர்ப்புக்குள்ளாகும் நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் வீட்டை விட்டு வெளியேறுமாறு பூலேயிடம் சொல்கிறார். அந்தச் சிரமமான நிலையில், எதிர்ப்புகளைத் தாண்டி நாம் நமது பணிகளைத் தொடர வேண்டும் என்று கூறி கணவர் பூலேயை உற்சாகப்படுத்துகிறார் சாவித்திரி.
மராட்டியத்தின் மேற்குப் பகுதியில் உள்ள நய்காவ்ன் என்ற ஊரில் விவசாயக் குடும்பமொன்றில் ஜனவரி 3, 1830 அன்று சாவித்திரி பிறந்தார். அப்போதெல்லாம் இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அப்படித்தான் ஒன்பது வயதிலேயே ஜோதிராவ் பூலேவுக்கு சாவித்திரியைத் திருமணம் செய்து வைத்தனர். பெண் கல்வி மறுக்கப்பட்ட அந்தக் காலத்தில் ஜோதிராவ், தனது மனைவியைப் கல்வி கற்குமாறு ஊக்குவித்தார். இது கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. அப்போது சாவித்திரிக்கும் இருந்த மனோபலம் ஜோதிராவின் உறுதிக்கு வலிமை சேர்த்தது.
ஆபத்தான கட்டத்திலும் தனது உறுதியைத் தளர விடாதவராக இருந்தவர் சாவித்திரி. ஒருமுறை, அவர்கள் வீட்டிற்குள் வாடகைக் கொலைகாரர்கள் ஏறிக் குதிக்கிறார்கள். சத்தம் கேட்டு பூலேயும், சாவித்திரியும் எழுகிறார்கள். நிதானமாக வெளிச்சத்தை அதிகரிக்கும் வகையில் விளக்கை ஏற்றி வைக்கிறார் சாவித்திரி. அவரது நிதானம் ஜோதிராவ் பூலேயின் தைரியத்தை அதிகரிக்கச் செய்கிறது. இறுதியில் கொலைகாரர்கள் மன்னிப்புக் கேட்டுவிட்டு நகர்கிறார்கள்.
#முடிவெட்ட_மாட்டோம்...! அவர் வாழ்ந்த காலத்தில் கணவனை இழந்த பெண்கள் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. கணவனை இழந்து விட்டால் உலகில் கவுரமான வாழ்க்கை இல்லை என்பதால் தற்கொலை செய்து கொண்ட பெண்கள் ஏராளம். மறுமணம் என்பதை நினைத்துப் பார்த்தாலே சமூக விரோதம் என்று முத்திரை குத்தப்படும் காலமது. 1860 ஆம் ஆண்டில் விதவைகளுக்கு மொட்டை அடிப்பதற்கு எதிராக ஒரு வித்தியாசமான போராட்டத்தைத் தொடுக்கிறார் சாவித்திரி. விதவைகளுக்கு மொட்டை அடிக்க மாட்டோம் என்ற போர்க்குரலுடன் முடிதிருத்துபவர்களை அணி திரட்டுகிறார் அவர். அவருடன் பெரும் எண்ணிக்கையில் முடி திருத்துபவர்கள் அணி திரண்டதைப் பார்த்து மிரள்கிறது ஆதிக்க சக்திகள். சமூகப் பிரச்சனைகளில் உறுதியான நிலை எடுத்த சாவித்திரி, சாமான்யனின் பொருளாதார அவலத்தையும் அம்பலப்படுத்துகிறார். “கடன்“ என்கிற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில், கடன் வாங்கிப் பண்டிகை கொண்டாடும் பழக்கத்தைக் கடுமையாகச் சாடுகிறார்.
இதனால் கடன் சுமை கடுமையாக ஏறிவிடுகிறது. தனிமைப்படுத்தப்பட்டு துன்பத்தில் உழல்கிறார்கள். ஒரு கட்டத்தில் இது இப்படித்தான் இருக்கும். இதை மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டு துயரத்திலேயே தங்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள் என்று எழுதுகிறார். சாவித்திரியின் கவிதைகள் இரண்டு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. புரோகிதர் இல்லா திருமணம் சத்யசோதக் சமாஜ் என்ற சமூக-ஆன்மீக அமைப்பொன்றை செப்டம்பர் 24, 1873 அன்று பூலே நிறுவினார். இந்து மதத்தை சீர்திருத்துவதாகச் சொன்ன பிரம்ம சமாஜம், பிரார்த்தன சமாஜம் மற்றும் ஆரிய சமாஜம் ஆகிய அமைப்புகள் பிராமணியம் மற்றும் சடங்குகளைத் தொடர்ந்து பாதுகாக்கவே முயல்கின்றன என்று பூலே உறுதியாகக் கருதினார். முதல் அமைப்பு பிரம்மாவையும், இரண்டாவது பிரார்த்தனையையும் மற்றும் மூன்றாவது ஆரிய அடையாளத்தையும் முன்னிறுத்தின. பூலேயைப் பொறுத்தவரை, உண்மையில் கவனம் செலுத்தினார். இந்த அமைப்பின் மகளிர் பிரிவுத் தலைவராக சாவித்திரி பணியாற்றினார். அந்த அமைப்பின் தலைவராகப் பணியாற்றும் காலத்தில் புரோகிதர் இல்லாமல் திருமணம் செய்து வைக்கும் ஒரு புரட்சிகர முயற்சியில் சாவித்திரி இறங்கினார். டிசம்பர் 25, 1873 அன்று அந்தத் திருமணம் நடந்தது. சிறிய அளவில் எதிர்ப்பு அதற்கு இருந்தது. அதேபோன்ற திருமணம் ஒன்றை மீண்டும் செய்ய முயன்றபோது, புரோகிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பூலே சரியான சமயத்தில் தலையிட்டு காவல்துறையின் உதவி மூலம் அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார்.
அந்தக் காலகட்டத்தில் #புரோகிதர்_இல்லாமல் திருமணம் என்பது கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாததாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கர்ப்பமாக இருந்த நேரத்தில் கணவனை இழந்ததால் தற்கொலை செய்து கொள்ள முயன்ற பிராமணப் பெண் ஒருவரைக் காப்பாற்றிய சாவித்திரி, அவருக்குப் பிறக்கும் குழந்தையைத் தானே தத்து எடுத்துக் கொள்கிறார். யஷ்வந்த் என்று பெயரிட்டு அந்தப் பையனை அவரே வளர்த்து எடுக்கிறார். கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பூலே தம்பதியினர் ஒரு இல்லத்தைத் திறந்து அவர்களைப் பாதுகாத்தனர். இதுவும் ஆதிக்க சக்திகளின் கடும் எதிர்ப்புக்குள்ளாகிறது. தங்கள் இல்லக் குழந்தைகளுக்குத் தானே தாயாக இருந்து வளர்க்கிறார் சாவித்திரி.
#கணவரின்_உடலுக்குக்_கொள்ளி...! 1870களில் மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் கடுமையான பஞ்சம் நிலவியது. இந்தப் பஞ்சத்தில் ஏராளமான குழந்தைகள் அநாதைகளாகினர். அந்தக் குழந்தைகளுக்கு 52 உறைவிடப் பள்ளிகளைத் துவக்குவதில் பூலே தம்பதியினர் குறிப்பிடத்தக்க பங்காற்றினர். குறிப்பாகப் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பில் சாவித்திரி பெரும் கவனம் செலுத்தினார். தனது கணவர் ஜோதிராவ் பூலே 1890ல் இறந்தபோது பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளை உடைக்கும் வகையில், அவரே கணவரின் உடலுக்குத் தீ மூட்டினார். இடுகாட்டிற்குப் பெண்கள் வருவதே அபூர்வம் என்ற நிலையில், கணவரின் இறுதிச்சடங்கில் மனைவியே கொள்ளி வைத்தது மகாராஷ்டிர சமூகத்தில் பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தியது. கணவரின் மறைவுக்குப் பிறகு சத்யசோதக் சமாஜத்தின் தலைமைப் பொறுப்பை சாவித்திரியே ஏற்றுக் கொண்டார். 1893 ஆம் ஆண்டில் சாஸ்வத் என்ற இடத்தில் அந்த அமைப்பின் கூட்டம் நடந்தது. அப்போது தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட சாவித்திரி 1896 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சத்திற்கான நிவாரணப் பணிகளை அரசே முறையாக ஏற்று நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி வெற்றி கண்டார். அடுத்த ஆண்டில் பெரும் கொடிய பிளேக் நோய் புனே நகரைத் தாக்கியது. பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற சாவித்திரியே நேரடி நிவாரண நடவடிக்கைகளில் இறங்கினார். அப்போது அவரையும் பிளேக் நோய் தாக்கியது. மார்ச் 10, 1897 அன்று நோயின் பாதிப்பால் சாவித்திரி மரணமடைந்தார். அவர் மறைந்து 100 ஆண்டுகள் தாண்டிய பிறகும் பெண் குழந்தைகளின் கல்வி என்பது சமூகப் பிரச்சனையாகவே #நீடிக்கிறது.
- ஆனந்குமார் முகநூல் பதிவு, 5.9.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக