பக்கங்கள்

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

'தினமலரே' புரிஞ்சுண்டுதோ?



'தமிழகத்தில் ஜாதியை, தன் காலத்தில் ஒழிக்கவே முடியாது' என்பதை, மறை முகமாக தன் அமைப்பினருக்கு உணர்த்தும் வகையில், திராவிடர் கழகத் தலைவரும், 'விடுதலை' நாளிதழ் ஆசிரியருமான, கி.வீரமணி பேச்சு:

ஜாதியை ஒழித்து, சமத்துவத்தை சமைப்பது தான், திராவிடர் கழகத்தின் கொள்கை, அதை சாதிக்கும் வரை, நம் போராட்டம் தொடரும். அந்த சாதனை நிறைவேறும் கால கட்டத்தில் நாங்கள் இல்லாமல் போனால், இளைஞர்களே... நீங்கள் அந்த லட்சியக் கொடியை உயர்த்திப் பிடித்து, சாதித்து காட்டுங்கள்.

'தினமலர்' 8.9.2019 பக்கம் 6

திராவிடர் கழகத் தலைவர் கூறியது உண்மைதான். இதில் 'தினமலர்' என்ன குறையைக் கண்டு பிடித்து விட்டதாம்?

ஜாதி ஒழிய வேண்டும் என்கிறதா? கூடாது என்கிறதா? முதலில் அதற்குப் பதில் சொல்லட்டும்.

ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகாலமாக ஆரிய நச்சு நோயால் ஏற்பட்ட ஜாதிப்பாம்பானது ஒரு நூற்றாண்டுக் காலத்தில் எவ்வளவோ நசுக்கப்பட்டுள்ளது. ஆணிவேரும் ஆட்டம் கண்டுள்ளது.

ஏன், 'தினமலர்' கிருஷ்ணமூர்த்திகள் கூட மொட்டையாகத் தான் பெயரைப் போடும் நிலை ஏற்பட்டுள்ளது. அய்யர் வா(ளை)லை ஒட்ட நறுக்கிக் கொண்டது ஏன்? அய்யரைப் போட்டுக்கொள்ள வெட்கப்படும்படி செய்தது யார்? தந்தை பெரியார் தானே - இயக்கம் திராவிடர் கழகம் தானே!

அந்த அளவுக்கு வீரமணிக்கு வெற்றிதானே! சட்டப்பூர்வ மாகவே ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு.

அது இன்றைக்கு நடைபெறவில்லை. அந்த அடிப்படையில் தான் திராவிடர் கழகத் தலைவர் சொல்லுகிறார். போராடுவோம் - வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு  இருக்கிறது.

இதில் தோல்வி என்ற பேச்சுக்கு இடம் ஏது? ஜாதி ஒழிக்கப் பட வேண்டும் என்பது மனிதப்பண்பும், மனிதநேயமும், மனிதத்துவமும், உரிமையும் விரும்புவோர் கூறும் கருத்து.

இதில் 'தினமலர்' எந்த இடத்தில் நிற்கிறது என்பதை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லட்டுமே பார்க்கலாம்.

காலரா ஒழியவில்லை, ஒழியவில்லை, அம்மை ஒழிய வில்லை, ஒழியவில்லை, எய்ட்ஸ் ஒழியவில்லை, ஒழிய வில்லை என்று ஒருவன் மகிழ்ச்சியில் கூத்தாடுவானானால் - அவன் கடைந்தெடுத்த மனநோயாளியும், மனுதர்மத்தின் ஆசை நாயகனுமே ஆவான்.

என்ன இன மலரே புரிஞ்சுண்டுதோ?

- கருஞ்சட்டை

- விடுதலை நாளேடு, 12.9.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக