நேயன்
கால்டுவெல் அவர்களின் ஆய்வு நூலான ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலின் முதல் பதிப்பு 1856ஆம் ஆண்டிலேயே வெளிவந்தது. அதன் இரண்டாம் பதிப்பும் பாரதியின் காலத்திலேயே 1915ஆம் ஆண்டில் வெளிவந்தது. அப்படி இருந்தும், பாரதி கால்டுவெல் அவர்களின் நூலைப் பற்றி எங்குமே குறிப்பிடாதது மோசடியாகும்.
பாரதி போன்ற சமஸ்கிருதப் பற்றுக் கொண்ட பார்ப்பனப் பண்டிதர்களைக் பற்றி கால்டுவெல் கூறியதாவது.
“திராவிட மொழிகள் வடஇந்திய மொழிகளி-லிருந்து பற்பல இயல்புகளில் வேறுபடுகின்றன. அவ்வாறிருந்தும் அத்திராவிட மொழிகள், வடஇந்திய மொழிகளைப் போலவே, சமசுகிருதத்திலிருந்து பிறந்தவையாகச் சமசுகிருதப் பண்டிதர்களால் கருதப்பட்டன. தாங்கள் அறிந்த எப்பொருளுக்கும் பார்ப்பன மூலம் கற்பிக்கும் இயல்பினர் அப்பண்டிதர்கள்.’’ (ஆதாரம்: கால்டுவெல், திராவிடம், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்)
1915இல் சூலைத் திங்களில் ‘ஞானபானு’ என்னும் இதழில் பாரதியார் தமிழில் எழுத்துக் குறை என்னும் தலைப்பில் “சமஸ்கிருதத்தில் க, ச, ட, த, ப, ற போன்ற வல்லின எழுத்துகளுக்கு வர்க்க - எழுத்துகள் இருப்பதுபோல், தமிழில் வர்க்க எழுத்துகள் இல்லாததால், தமிழில் எழுத்துக் குறையுள்ளது’’ என்கிறார். (ஆதாரம்: வ.உ.சியும் பாரதியும், ஆ.இரா. வேங்கடாசலபதி)
ஒரு மொழியிலுள்ள ஒலிகள், அதற்குண்டான குறியீடுகள் மற்ற மொழியில் இல்லாதிருந்தால், அது அம்மொழியின் குறைபாடு ஆகாது. ஏனெனில், ஒலிப்பு, ஒலிக்குறியீடு என்பவை அம்மொழிக்கே உரிய இயற்கையான இயல்புகள் ஆகும். ஆகவே சமசுகிருத வர்க்க எழுத்துகள் தமிழில் இல்லை என்று பாரதியார் குறைபட்டுக் கொள்வது ஏற்புடையது ஆகாது.
பாரதியின் இக்கூற்றை அறிஞர் வ.உ.சி. அவர்கள் 1915 செப்டம்பர்த் திங்களில் அதே ‘ஞானபானு’ ஏட்டில் கடுமையாக மறுத்துக் கூறியுள்ளார். “தமிழில் எழுத்துக் குறை என்று சொல்லுபவர்கள் பெரும்பாலும் சமசுகிருதச் சார்புடையவராகவும் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படிக்காதவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் தமிழுக்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியம் என்னும் உன்னத நூலையும், அதற்குப் பின் எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, திருக்குறள் முதலிய இலக்கிய நூல்களையும் கட்டாயம் படிக்க வேண்டும்’’ என்கிறார். (ஆதாரம்: வ.உ.சியும் பாரதியும், ஆ.இரா. வேங்கடாசலபதி)
தமிழில் எழுத்துப் பற்றாக்குறை என்பதைக் காரணம் காட்டி, அதையே வாய்ப்பாகக் கருதி, வேண்டுமென்றே தமிழில் வடமொழிச் சொற்களை அளவுக்கு அதிகமாகக் கலந்து எழுத ஆரம்பித்தார் பாரதியார். இதை அவருடைய பிற்கால எழுத்துகளில் காணலாம்.
“மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பங்களூர், திருச்சினாப்பள்ளி, தஞ்சாவூர், புதுச்சேரி, கும்பகோணம் இத்யாதி ஷேத்ரங்களில் வஸிக்கும் இங்கிலிஷ் பிராமணர்களுக்குள்ளே ஸந்தியா வந்தனம் எவ்வளவு சொற்பம்? தீர்த்தபானம் கூட நடக்கத்தான் செய்கிறது. ராமராமா, இந்த ரிஷிகளெல்லாரும் என்ன பிராயச்சித்தம் பண்ணுகிறார்கள்? என் மாப்பிள்ளை ரங்கூனில் நித்ய கர்மானுஷ்டங்கள் தவறாமல் நடத்தி வருகிறானென்று கேள்வி. அவன் வந்தால் ஜாதிப்ரஷ்டன் தானே? ப்ராயச்சித்தம் பண்ணினால் கூட நான் சேர்த்துக் கொள்ள மாட்டேன்.’’ (ஆதாரம்: பாரதி தமிழ், புதூரன்)
இது 1917 சூன் 21இல் ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் ‘ப்ராயச் சித்தம்’ என்னும் தலைப்பில் பாரதியார் எழுதிய கதையின் ஒரு பகுதி. (பாரதியார் தன் பெயரைக் கூட ஸி. ஸுப்பிரமணிய பாரதி என்றே எழுதி உள்ளார்.)
பாரதியாருக்குத் தமிழ் இலக்கணத்தில் ஈடுபாடு இல்லை என்பதைப் பற்றி அவருடைய நண்பர் வ.ரா. குறிப்பிடுவதாவது.
“தமிழ்ப் பண்டிதர் பதவிக்குப் பாரதியாரிடமிருந்த இலட்சணங்கள் விநோதமானவை. எட்டயபுர சமஸ்தான வித்வான்கள் அளித்த பாரதி என்ற பட்டமொன்றே முதல்தரமான இலட்சணம் என்றே எண்ணுகிறேன். தமிழ்ப் பண்டிதர்கள் நன்னூல் (இலக்கண) சூத்திரங்களைத் தலைகீழாய்ச் சொல்ல முடியுமே, அந்தச் சாமர்த்தியம் பாரதியாருக்குக் கொஞ்சங்கூடக் கிடையாது. நன்னூலை அவர் பார்த்திருப்பார் என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். அதைப் படித்து நெட்டுருப் பண்ணியிருப்பாரா என்பது சந்தேகம்தான்.
தோன்றல், திரிதல், கெடுதல் விகாரம்
மூன்றும் மொழி மூவிடத்து மாகும்
இந்தச் சூத்திரத்தைப் பாரதியார் எப்படி-யெல்லாமோ கேலி செய்வார். நன்னூல் தற்போது இருக்கிற நிலையில் பாரதியாருக்குத் துளிக்கூடப் பிடித்தம் இருந்ததில்லை. நன்னூலிலே இவ்வளவு வெறுப்புக் கொண்ட பாரதியார் எவ்வாறு தமிழ்ப் பண்டிதர் உத்யோகம் பார்த்தார் என்பது குறித்து ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது.’’ (ஆதாரம்: வ.ரா. _ மகாகவி பாரதியார்)
ஒருமுறை எட்டயபுரம் பள்ளியில் மாலை நேரத்தில் திருக்குறளைப் பற்றிப் பேச பாரதியாரை அழைத்திருந்தனர். பாரதியாரும் ஒப்புக் கொண்டு பேசவந்தார். அங்கு ‘உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி’ என்று மாரியைப் பற்றியே இருபது நிமிடங்கள் கையைக் காலை ஆட்டிப் பாடிக்கொண்டு இருந்தார். தலைமை வகித்தவர் திருக்குறளைக் குறித்துப் பேசும்படி கூறினார். “நான் குறள் படித்து வெகு காலம் ஆகிவிட்டது. அது வெகு நல்ல நூல். இரண்டொரு அடி நினைப்பிருக்கிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லையாம். ஆகா, எவ்வளவு உண்மை! (ஆதாரம்: கவிக்குயில் பாரதியார் _ சுத்தானந்த பாரதி) என்று கூறி விட்டு கூட்டம் முடிந்து விட்டதாகப் பாரதியே அறிவித்து விட்டு வெளியேறி விட்டார் என்று சுத்தானந்த பாரதி கூறியுள்ளார்.
இந்தியாவின் பொதுமொழியாக இந்திதான் வரவேண்டும் என்று முதன் முதலில் சொன்னவர் பாரதியே! 1906இலேயே இக்கருத்தை இவர் வலியுறுத்தியுள்ளார். 15.12.1906 “இந்தியா’’ வார ஏட்டில் ‘இந்தி பாஷைப் பக்கம்’ என்னும் தலைப்பில் இவர் கூறுவதாவது: “தமிழர்களாகிய நாம் ஹிந்தி பாஷையிலே பயிற்சி பெறுதல் மிகவும் அவசியமாகும். தமிழ்ப் பாஷையே நமக்குப் பிரதானமாய் இருக்க ஹிந்திப் பாஷையை அப்பியஸிக்க என்ன அவசியம் இருக்கிறது என்று (என்பதை?) சொல்லுகின்றோம். இந்தியா பலவித பிரிவுகளுடையதாய் இருந்த போதிலும் உண்மையிலே ஒன்றாய் இருப்பதற்கிணங்க அதிலுள்ள வெவ்வேறு நாடுகளிலே வெவ்வேறு பாஷைகளிருந்த போதிலும் முழுமைக்கும் ஒரு பொது பாஷை வேண்டும். தமிழர்கள் தமிழும், ஹிந்தியும், தெலுங்கர் தெலுங்கும் ஹிந்தியும், பெங்காளத்தார் பெங்காளியும் இந்தியும் என இவ்வாறே எல்லா வகுப்பினரும் அறிந்திருப்-பார்களானால் நமக்குப் பொதுப்பாஷை ஒன்றிருக்கும். தமிழர், தெலுங்கர் முதலானவர்கள் கூடச் சிறிது பிரயாசையின் பேரில் ஹிந்தியைக் கற்றுக் கொள்ளலாம்.’’ (ஆதாரம்: பாரதி தரிசனம், சி.எஸ்.சுப்பிரமணியம்)
(தொடரும்...)
- உண்மை இதழ், செப்டம்பர் 16 - 30 .2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக