• தோற்றம் : 31.07.1874
• மறைவு : 13.02.1950
மதங்களைக் கடந்தது தமிழ் என நிரூபித் துக்காட்டும் வகையில் வாழ்க்கையில் தமிழ்த் தொண்டு சிறக்க வாழ்ந்தவர். பாவலர் என அன்புடன் அனைவராலும் அழைக்கப்பெற்ற வர் செய்குதம்பிப் பாவலர்.
அக்காலத்து திருவிதாங்கூர் சமஸ்தானமாக வும் இன்றைய நாகர்கோவில் மாவட்டமாகவும் விளங்கக் கூடிய தமிழகத்தின் தென்கோடிப் பகுதியான கோட்டாறு எனும் ஊரில் இஸ்லா மிய சமூகத்தில் பிறந்தவர். தந்தை பக்கீர் மீரான் சாகிபு. தாயார் ஆமீனா. சிறுவயதில் அரபு மொழி கற்க பள்ளிக்கு அனுப்பப்பட்ட செய்கு தம்பி அங்கிருந்த ஆசிரியர் களைத் தன் இணை யற்ற அறிவாற்றலால் வியக்க வைத்தார்.
குரானை அவர் கற்ற வேகத்தைக் கண்டு தேர்வில்லாமலே அவரை இரண்டாம் வகுப்புக்கு மாற்றினர். அதே ஆண்டில் மூன்றாவது வகுப்புக்கும் பின் நான்காம் வகுப்புக்கும் மாற்றப்பட்டார். பின் தமிழின் பால் ஆர்வம் கொண்டு அவ்வூரில் வாழ்ந்த சங்கர நாராயண அண்ணாவி என்பவரிடம் நன்னூல், இலக்கண விளக்கம், வீரச்சோழியம், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களைக் கற்றார்.
தமிழில் தன்னிகரற்ற புலமையும் பெற்ற பாவலர் சென்னைக்கு வந்தார். கம்பராமாயணம், சீறாப்புராணம் பற்றி சொற்பொழிவுகள் ஆற்றினார்.
இச்சமயத்தில்தான் அவர்காலத்தில் வாழ்ந்த இராமலிங்க அடிகளாரின் பால் ஈர்ப்புக்கொண்டு இஸ்லாமியராக இருந்தும் சைவ நெறி பயின்றார். வரலாற்றுச் சிறப்புமிக்க அருட்பா மருட்பா வழக்கில் வள்ளலாருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் தீர்ப்புக் கூறப்பட்ட பின்னும் அறிஞர்கள் சபையில் அந்த வாதம் தொடர்ந்து கொண்டிருந்தது. வள்ளலார் மற்றும் நாவலர் இறந்த பின்பும் இந்த மோதல் தமிழ் அறிஞர்கள் மத்தியில் தொடர்ந்து கொண்டிருந்தது.
திரு.வி.க. மற்றும் கதிரைவேற்பிள்ளை ஆகியோர் ஒரு பொது அரங்கில் அருட்பாவைக் கடுமையாக எதிர்த்து அதில் இலக்கணப் பிழைகள் இருப்பதாகக் கூறி அதனை நிராகரிக்க முற்பட்டபோது பாவலர் மேடையில் ஏறி தன் நுண்ணிய இலக்கணப் பார்வையைக் கொண்டு ஆய்ந்து அகழ்ந்து வள்ளலார் எழுதியது அருட்பாதான் என விளக்கிக்கூறிய போது அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.
அதன்பின்னரே அந்த சர்ச்சை முடிவுக்கு வந்து வள்ளலாரை அனைவரும் ஏற்கத் துவங்கினர். இவர் எழுதிய நூல்களில் சம்சுத்தாசின் கோவை, நபிகள் நாயக மான்மிய மஞ்சரி, கல்லத்து நாயகம், இன்னிசைப் பாமாலை, திருக்கோட்டாற்றுப் பதிற்றுப் பத்தந்தாதி, திருநாகூர் திரிபந்தாதி, நீதிவெண்பா போன்றவை குறிப்பிட்டத்தக்கவை.
நினைத்த மாத்திரத்தில் தேர்ந்த கவிபுனையும் ஆற்றல் மிக்கவர். சதாவதானம் எனும் அரிய கலையை அவர் பலமேடைகளில் நிகழ்த்திய காரணத்தால் சதாவதானி செய்கு தம்பிப் பாவலர் என்றே அழைக்கப்பட்டார். அவரை நினைவு கூர்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக