நேயன்
பரிதிமாற் கலைஞர் என்கிற சூரிய நாராயண சாஸ்திரியார் தான் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார். ஆனால் 99.9 சதவீதம் ஆரியப் பார்ப்பனர்கள் அதை ஏற்கவில்லையே இன்றளவும் ஏற்கவில்லையே. செம்மொழி என்ற வார்த்தை எங்கிருந்தாலும் அதைச் செதுக்கி எடுக்கிறார்கள்; மறைத்துப் பதுக்குகிறார்கள். இதுதானே நடைமுறை. ஒரு சூரிய நாராயண சாஸ்திரியாருக்காக ஆரியப் பார்ப்பனர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ள முடியுமா?
உ.வே.சா.தமிழ்ப் பணியாற்றினார் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு அவர் ஆரியப் பற்று அதிகம் பெற்று விளங்கினார் என்பதும் உண்மை.
தமிழர் மரபு என்னும் தலைப்பில் 1941ஆம் ஆண்டு வானொலியில் பேசிய உ.வே.சா. “ஓர் ஏழை வேலைக்காரனைப் பார்த்துச் சோறு தின்றாயா? என்று கேட்கலாம். ஆனால் ஒரு கனவானைப் பார்த்து அவ்வாறு கேட்டுவிடக்கூடாது. “போஜனம் ஆயிற்றா?’’ என்றே வினவிடல் வேண்டும். அதுதான் தமிழ் மரபு’’ என்றும்,
அந்தணர்களைப் பார்க்கும்போது, “நிவேதினம் ஆயிற்றா?’’ என்றும், துறவிகளிடம், “பிட்சை ஆயிற்றா?’’ என்று வினவ வேண்டும் என்கிறார்.
(ஆதாரம் : உ.வே.சா. தமிழர் மரபு, செந்தமிழ்ச்செல்வி, 1941, சிலம்பு. க. பரல் உ.)
இதுதான் தமிழ்ப் பற்றா? தமிழை உயர்த்துவது இதுதானா?
தமிழ் என்பது வேலைக்காரனிடம் பேசப்பட வேண்டும். உயர்நிலையில் உள்ளவர்களிடமும், ஆரியப் பார்ப்பனர்களிடமும் சமஸ்கிருதத்தில் பேச வேண்டும் என்கிறார்.
அவர்தான் பேசினார் என்றால் அதை அப்படியே தணிக்கை செய்யாது வானொலி ஒலி பரப்பியது. காரணம் இவரும் அவாள், அவர்களும் அவாள்கள். இதைத் தவிர வேறு என்ன?
உ.வே. சாமிநாத அய்யரின் இந்த உரையைக் கண்டித்து, கி.ஆ.பெ. விஸ்வநாதம் அவர்கள் “எது தமிழ் மரபு’’? என்னும் தலைப்பில் செந்தமிழ்ச் செல்வியிலே கட்டுரை எழுதினார்.
பாரதியாரின் தமிழ் பற்றை பார்ப்போம். பாரதியார் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த போதிலும் தன்னுடைய மூதாதையர்களின் மொழியாகிய ஆரிய மொழியான சமஸ்கிருதத்தை உயர்ந்த மொழி என்பதோடு அதைத் தெய்வ மொழியாகவும் கூறுகிறார்.
“நம் முன்னோர்கள் அவர்களைப் பின்பற்றி நாமுங்கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது.அதைத் தெய்வ பாஷையென்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா. அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷை என்கிறோம்,’’
இந்தியாவிலுள்ள மொழிகள் யாவும் சமசுகிருத மொழியோடு கலந்த பிறகே மேன்மை பெற்றதாகப் பாரதி கருதுகிறார். தமிழுக்கு முறையான இலக்கணம் இல்லாதிருந்ததாகவும், ஆரியர்கள் இலக்கணம் வகுத்ததாகவும் பாரதி கூறுவதாவது:
“தமிழ் பாஷைக்கோ , இலக்கணம் முதல் முதலாக அகஸ்தியராலும், அவருடைய சிஷ்யராகிய திரணதூமாக்கி (தொல்காப்பியர்) என்ற ஆரிய முனிவராலுமே சமைத்துக் கொடுக்கப்பட்டதென்பதும் மெய்யே. அதனின்றும் தமிழ் இலக்கணம் பெரும்பாலும் சமஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கிறதென்பதும் மெய்யே’’ என்கிறார் பாரதியார்.
இந்தியாவிலுள்ள அனைத்துச் செல்வங்களையும் ‘ஆரிய ஸம்பத்து’ என்கிறார் பாரதியார். “நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு, நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம், நமது ஸங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில்முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள் இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ஆரிய ஸம்பத்து. காளிதாசன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாஷையிலேயே துளஸிதாசர் செய்திருக்கும் ராமாயணம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி - இவையனைத்துக்கும் பொதுப் பெயராவது ஆர்ய ஸம்பத்து. தஞ்சாவூர்க் கோயில், திருமலை நாயக்கர் மஹால், தியாகையர் கீர்த்தனங்கள், எல்லோராவிலுள்ள குகைக்கோயில், ஆக்ராவிலுள்ள தாஜ் மஹால், சரப சாஸ்திரியின் புல்லாங்குழல் - இவை அனைத்துக்கும் பொதுப் பெயர் ஆர்ய ஸம்பத்து.’’
இதில் திருக்குறள், சிலப்பதிகாரம், ஆண்டாள் திருமொழி, முதலிய தமிழ் இலக்கியங்களை ஆரியச் செல்வம் என்கிறார் பாரதி. மேலும் பௌத்தர்களின் எல்லோரா ஓவியங்கள், தஞ்சை மராட்டியர்களின் தஞ்சை மகால், சாஜகானின் தாஜ்மகால் முதலியவற்றையும் ‘ஆரியச் செல்வம்’ என்கிறார். மற்றவர்களின் உழைப்பில் விளைந்த கலை, இலக்கியம் முதலியவற்றை ஆரியச் செல்வமாகப் பாரதி உரிமை கொண்டாடுவது அவரின் அளவு கடந்த ஆரிய வெறியைக் காட்டுவதாகவே அமைகின்றது.
‘உலகில் உள்ள எல்லா நாகரிகங்களுக்கும் மூலமாக இருப்பது ஆரிய நாகரிகமே’ என்கிறார் பாரதியார்.
“அய்ரோப்பாவிலும், ஆசியாவிலும், பிற இடங்களிலும் காணப்படும் நாகரிகங்களுக்கெல்லாம் முந்தியதும் பெரும்பான்மை மூலாதாரமுமாக நிற்பது ஆரிய நாகரிகம். அதாவது பழைய சமஸ்கிருத நூல்களிலே சித்தரிக்கப்பட்டு விளங்குவது. இந்த ஆரிய நாகரிகத்துக்குச் சமமான பழமை கொண்டது தமிழருடைய நாகரிகம் என்று கருதுவதற்குப் பல விதமான சாஷ்யங்களிருக்கின்றன’’ என்கிறார் பாரதியார். ஆகவே தமிழர் நாகரிகம் ஆரியத்தை விட உயர்ந்த நாகரிகம் என்று கூறுவதற்கு இவருக்கு மனம் வரவில்லை. தமிழர் நாகரிகம், ஆரிய நாகரிகத்திற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்தாகும்.
“செந்தமிழ் நாடெனும் போதினிலே யின்பத்
தேன்வந்து பாயுது காதினிலே’’
என்ற பாடல்
நண்பர்களுடைய வேண்டுதலாலும், கட்டாயத்தாலும்தான், “செந்தமிழ் நாடெனும் போதினிலே’’என்ற பாடலையும், ‘யாமறிந்த மொழிகளிலே’’ என்ற பாடலையும் எழுதினார், இந்தப் பாடல்களுக்காக அவருக்கு மதுரைத் தமிழ்ச் சங்கம் பரிசாக ரூ.100 அளித்தது.
பாரதியார் பரிசுப் போட்டிக்காகவே மேலே கண்ட பாடலை எழுதினார். போட்டியில் பரிசுப் பெறுவதற்காக தான் தமிழைச் சிறப்பித்து எழுதினரே தவிர, தமிழின் மீது உள்ள பற்றால் அல்ல. தமிழையும் தமிழ்நாட்டையும் மிகவும் உயர்வாக எழுதுகிறார். ஆனால் அதே ஆண்டில் தனிப்பட்ட முறையில் ‘சுதேச கீதங்கள்’’ என்னும் தலைப்பில் தமிழ்த்தாய் கூறுவதாக
“ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வதியன் கண்டு மகிழ்ந்து - நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்.
மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்ட நல்அன்பொடு நித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளினுள்ளே - உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்.’’
என்று பாரதி கூறுகிறார். இங்குத் தமிழுக்கு இலக்கணம் இல்லாதிருந்தது போலவும், ஆரியப் பார்ப்பனர்கள்தான் இலக்கணம் வகுத்துக் கொடுத்தது போலவும் பாரதி கூறுவது வேடிக்கையாக உள்ளது. மேலும் அவர் ஆரியம்தான் உயர்ந்த மொழி என்றும் கூறுகின்றார்.
(தொடரும்)
-, உண்மை இதழ் ,ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15.2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக