மஞ்சை வசந்தன்
பிறப்பு
செங்கற்பட்டு மாவட்டத்தில் கோழிப்பாளையம் என்ற சிற்றூரில், 1859ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் நாள் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சீனிவாசன். இவரது தந்தையின் பெயர் இரட்டைமலை. எனவே, இரட்டைமலை சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சமுதாயமே, மிகவும் ஏழ்மையிலும், வறுமையிலும் வாடும் சமுதாயம்தான். அதிலும் இவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடிய குடும்பம்.
கல்வி
இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் கல்வி முதலில் திண்ணையில்தான் தொடங்கியது. ஜாதி இந்துக்களுக்கான அத்திண்ணைப் பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டபோது, இவர் பிற மாணவர்களிடம் சேராமல் தள்ளி உட்கார்ந்து பாடங்களைக் கேட்டார். இந்த அளவிற்கு வேறு எந்த ஊரிலும் அனுமதியில்லை. விதிவிலக்காக, அபூர்வமாக அந்த ஊரில் உள்ள சில நல்லவர்கள் இவருக்கு அந்த வாய்ப்பை அளித்தனர்.
அடுத்து, பள்ளிப்படிப்பை கோயம்புத்தூரில் தொடர்ந்தார் இவர். அதைப்பற்றி இவரே தம்முடைய ‘ஜீவிய சரித்திர சுருக்கம்’ என்பதில் கூறியுள்ளார்.
“கோயம்புத்தூர் கலாசாலையில் நான் வசித்தபோது, சுமார் 400 பிள்ளைகளில் 10 பேர்கள் தவிர, மற்றவர்கள் பிராமணப் பிள்ளைகள். ஜாதி கோட்பாடுகள் மிகக் கடினமாய் கவனிக்கப்பட்டன. மற்ற பிள்ளைகளோடு சிநேகிதத்தால் (பழகினால்) ஜாதி, குடும்பம், இருப்பிடம் முதலானவை தெரிந்துகொண்டால், அவர்கள் தாழ்வாக என்னை நடத்துவார்கள் என்று பயந்து, பள்ளிக்கு வெளியே எங்கேனும் வாசித்துக் கொண்டிருந்துவிட்டு, பள்ளி ஆரம்ப மணி அடித்த பிறகு வகுப்புக்குள் போவேன். வகுப்பு கலையும்போது, என்னை மாணவர்கள் எட்டாதபடி வீட்டுக்குக் கடுகென நடந்து சேருவேன். மற்றப் பிள்ளைகளோடு விளையாடக் கூடாமையான கொடுமையை நினைத்து, மனங்கலங்கி எண்ணி எண்ணி இந்த இடுக்கத்தை எப்படி மேற்கொள்வதென்று யோசிப்பேன்...’’ என்று தன் பள்ளிப் படிப்பின் அவலம்பற்றி அழாத குறையாகக் கூறியுள்ளார் சீனிவாசன்.
ஆக, தம்மை யார் என்று அறியாத வகையில், மற்ற மாணவர்கள் கண்டுபிடித்துவிடாத வகையில் அவர் ஒரு பள்ளியில் படித்து முடிப்பதென்பது என்ன சாதாரண காரியமா? நித்தம் நித்தம் அவர் செத்துப் பிழைப்பது போன்ற ஒரு கள்ள வாழ்க்கையே அவரது கல்வி வாழ்க்கையாக அமைந்தது என்றால், அந்தப் பிஞ்சு உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும்!
அக்காலத்தில், தாழ்த்தப்பட்டவர்களில் ஓரிருவர் கல்வி கற்றார்கள் என்றால், இப்படிப்பட்ட இன்னல்களையும், இழிவுகளையும், இடர்ப்பாடுகளையும் ஏற்றுத்தான்.
பணி
1822--ஆம் ஆண்டு நீலகிரியில் இருந்த ஓர் ஆங்கிலேய வர்த்தக நிறுவனத்தில் கணக்கராக வேலைக்குச் சேர்ந்தார். இங்குதான் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். இந்திய நாட்டு நிறுவனம் எதிலும் அவர் வேலைக்குச் சேர இயலவில்லை. ஜாதி பாராத ஆங்கிலேய நிறுவனத்தில்தான், அவரால் பணியில் சேர முடிந்திருக்கிறது. அந்த அளவிற்கு கல்வி வேலை வாய்ப்புகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அறவே மறுக்கப்பட்ட காலம் அது. என்றாலும், அவருக்கு அதில் ஒரு நன்மை இருந்தது.
ஆங்கில நிறுவனத்தில், மனித உரிமைகளோடு வாழும் ஒரு வாய்ப்பைப் பெற்றார். செயலும், சிந்தனைகளும் விடுதலை பெற்ற ஓர் உணர்வு அவருக்கு ஏற்பட்டது. “தியோசாபிகல் சொசைட்டியை’’ நிறுவிய பிளாவட்ஸ்கி அம்மையார் மற்றும் ஆல்காட் என்ற இருவரையும் சந்திக்கும் வாய்ப்பும் இங்கு இவருக்குக் கிடைத்தது.
1884 இல் சென்னை அடையாறில் இச்சொசைட்டியின் ஆண்டுவிழா நடைபெற்றபோது, இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் அதில் கலந்துகொண்டார். அதிலும் ஒரு சிறப்பு என்னவென்றால், அச்சங்கத்தில் அவர் ஓர் உறுப்பினராகவும் சேர்க்கப்பட்டார். அந்த விழாவிற்கு, இந்தியா முழுமையிலிருந்தும் வந்திருந்த முதன்மை மனிதர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு, அவருக்குக் கிடைத்தது. இந்தியாவில் அரசியல் இயக்கம் ஒன்றைத் தொடங்குவது குறித்து அப்போது கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இதுபற்றி இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் -”ஷெட்யூல்டு இன மக்கள் வேண்டுவது சமுதாய விடுதலை. மனிதனை மனிதனாக மதிக்கும் உரிமை குறிப்பாக இந்திய நாட்டில், இந்தியனாய் வாழ்கின்ற மனிதர்களிடையே, அதே நாட்டில் வாழ்கின்ற இந்தியனைப் பார்த்துக் கேட்கும் விடுதலை. சமூகப் பொருளாதார தகுதியைப் பெறாத நாட்டில் அரசியல் விடுதலை தேவையா? காங்கிரஸ் தேவையா? எனவே, ஷெட்யூல்டு இன மக்களின் முன்னேற்றமான வாழ்விற்கு எவ்விதமான திட்டமும் இல்லாத இந்த ‘அரசியல் அமைப்பில்’ எனக்கு நம்பிக்கையில்லை’’ என்று ஆணியடித்தாற் போன்ற, முதன்மையான கருத்தை வெளியிட்டார்.
திருமணம்
1887-ஆம் ஆண்டு அரங்கநாயகி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் 1890 முதல் சென்னையிலேயே தங்கி வாழத் தொடங்கினார்.
திராவிட மகாசன சபை
1891இல் சென்னை மற்றும் செங்கற்பட்டு பகுதிகளில் வாழ்ந்த ‘பறையர்’ (ஆதிதிராவிடர்) இன மக்களில் கல்வியும், அறிவும், வளர்ச்சியும் விழிப்புணர்வும் பெற்றவர்கள் ஒன்று சேர்ந்து, “திராவிட மகாஜன சபை’’ என்ற அமைப்பை உருவாக்கினர். ஆதிதிராவிடர் மக்களுக்கென்று உருவாக்கப்பட்ட முதல் அமைப்பு இதுவாகும்.
1891ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த அமைப்பின் முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்குத் தேவையான முதன்மை முயற்சிகளை இரட்டைமலை சீனிவாசன் அவர்களும், பண்டிதமணி சி.அயோத்தியதாஸ் (அயோத்தி தாச பண்டிதர்) அவர்களும் மேற்கொண்டனர். இந்த மாநாட்டில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
“கல்வி கற்கக்கூடிய வாய்ப்புகளுக்கு உள்ள சமூகத் தடைகளை நீக்கவேண்டும். கிராம ஒன்றியங்கள், நகராட்சிகள் ஆகியவற்றில் பிரதிநிதித்துவம் தரவேண்டும். முன்சீப், மணியக்காரர் வேலைகள் தரப்படவேண்டும். இந்துக்கள் பணிபுரியும் நீதிமன்றங்களில் செல்வதற்குள்ள தடைகள் நீக்கப்படவேண்டும். பொதுநீர் நிலைகளில் தண்ணீர் எடுப்பதற்கு உள்ள தடைகளையும் நீக்கவேண்டும். ‘பறையர்’ என்று கேவலப்படுத்தும் நோக்கில் சொல்வதோ, பறையர்க்கு இழிவான சிறு பணிகளைத் தருதலோ கூடாது.’’
இத்தீர்மானங்களை அக்காலத்தில் நிறைவேற்றுவது என்பது சிந்தித்துக்கூட பார்க்க முடியாத அரிய செயலாகும். அந்த அளவிற்குக் கொடுமைகளும், அடக்குமுறைகளும், ஆதிக்கமும் உச்சநிலையில் இருந்த காலம் அது. அது மாத்திரம் அல்ல, இப்படிப்பட்ட உரிமைகளைக் கேட்கவேண்டும் என்ற விழிப்பும், துணிவும் அக்காலத்தில் தாழ்த்தப்பட்டோர் மத்தியில் வந்ததே வியப்பிற்குரிய ஒன்றாகும்.
‘பறையன்’ பத்திரிகை
இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் 1893-இல் நான்கு பக்கங்களைக் கொண்ட ‘பறையன்’ என்ற மாதாந்திரப் பத்திரிகையைத் தொடங்கினார்.
19 ஆம் நூற்றாண்டிலே பத்திரிகை நடத்துகின்ற துணிவும், ஆற்றலும் அவருக்கு இருந்ததோடு, அதற்கு விழிப்பூட்டும் ஒரு பெயரையும் இட்டு, அப்பத்திரிகையை, ஏழு ஆண்டுகள் நடத்திய பெருமையும் அவருக்குக் கிடைத்தது.
ஆரிய ஆதிக்க எதிர்ப்பு
அய்.சி.எஸ் என்று அழைக்கப்பட்ட அத்தேர்வு இலண்டனில் மட்டும்தான் நடத்தப்பட்டது. அத்தேர்வு தொடர்ந்து இலண்டனிலே நடத்தப்பட வேண்டும் என்றார் இரட்டைமலைசீனிவாசன் அவர்கள் எடுத்துரைத்தார்.
ஆரியப் பார்ப்பனர்கள், அய்.சி.எஸ். தேர்வை இந்தியாவிலும் நடத்தவேண்டும் என்று ஆங்கில ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
பறையர் மகாசன சபை
‘பறையர் மகாசன சபை’ சார்பில் 1893 டிசம்பரில் சென்னையில் கூட்டம் ஒன்றைக் கூட்டி, அக்கூட்டத்தின் தீர்மானமாக, 3412 பேர் கையொப்பம் இட்ட மனு ஒன்றினை, ஜெனரல் சர்ஜாஜ் - செஸ்னி என்ற பாராளுமன்ற உறுப்பினர்மூலம் பிரிட்டிஷ் மக்களவையில் சமர்ப்பித்தார்.
செங்கற்பட்டு மாவட்டத்தில் தர்காஸ் நிலத்தைத் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தரவேண்டும் என்கின்ற கோரிக்கையை இவர் எழுப்பினார். 1894-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிலப் போராட்டம் ஒன்றினை இவர் நடத்தினார். தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாட்டிற்கு நிலச் சீர்திருத்தமும் தேவை என்ற சிந்தனையை இவர் முதன்முதலில் உருவாக்கினார். பிற்காலத்தில் வந்த நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு இதுவே வழிகோலியது.
தாழ்த்தப்பட்டோர் மாநாடு
1895 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், சென்னை விக்டோரியா மண்டபத்தில், தாழ்த்தப்பட்ட மக்களின் மாநாடு ஒன்றினைக் கூட்டினார். வருவாய்த் துறை சார்ந்த அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகங்கள், கிராம அஞ்சல் நிலையங்கள் போன்றவற்றில் தாழ்த்தப்பட்டவர்களைப் புறக்கணிப்பதாகவும், தரம் தாழ்த்தி நடத்துவதாகவும் அம்மாநாட்டில் கண்டனம் தெரிவித்தார். மேல்ஜாதிக்காரர்கள், தாழ்த்தப்பட்டவர்களை இழிவாக நடத்துவதையும் கண்டித்தார்.
கவர்னர் மாளிகையில் காலடி வைத்தார்
1895-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் நாள் இந்தியாவின் அப்போதைய கவர்னர் ஜெனரல் எல்ஜின்பிரபு சென்னைக்கு வந்தார். அவர் கவர்னர் மாளிகையில் தங்கியிருந்தார். அதை அறிந்த இவர், ‘பறையன் மகாஜன சபை’ சார்பில் அவரைச் சந்தித்துக் கோரிக்கை மனு கொடுத்தார்.
கவர்னர் ஜெனரல் மாளிகைக்குள் ஒரு தாழ்த்தப்பட்டவர் செல்வது என்பது கற்பனைக்குக்கூட வராத ஒன்றாக இருந்த காலத்தில், அதையும் செய்து காட்டினார். அந்த அனுபவத்தை அவரே விவரித்தும் இருந்தார்.
“நாங்கள் நேராகக் கட்டடத்திற்கு முன்புறம் சென்று வண்டிகளை விட்டு இறங்கி, கவர்னர் மாளிகைக்குள் சென்றோம். அங்கே இதற்குமுன் இவ்வின மக்கள் செல்லாத காரணத்தால், தலைமைச் செயலாளர் அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இம்மாளிகையில் ஆங்கிலோ - இந்தியர்கள், முகம்மதியர்கள், கிறித்துவர்கள் எட்டு எட்டுப் பேர்கள் கும்பல் கும்பலாக நின்றுகொண்டு காத்திருந்தார்கள். நாங்களும் கும்பலாகச் சேர்ந்து நின்றோம். எங்களைக் கண்ட மற்றச் சமூகத்தைச் சார்ந்தவர்கள் வெறுப்பும், சினமும் கொண்டவர்களாகத் தோன்றினார்கள். அவர்களோடு எங்களையும் சமமாக, ஒரு சமூகத்தவராக அங்கீகரித்து தக்க சமாதான நல்மொழி கூறினார் எல்ஜின் பிரபு’’ என்று அன்றைய நிகழ்வை உணர்வுப்பூர்வமாகப் படம் பிடித்தாற்போல் விளக்கினார்.
1900-இல் இரட்டை மலை சீனிவாசன் அவர்கள் வெளிநாடு சென்றார். தென்னாப்பிரிக்காவில் 20 ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது காந்தியாரோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. காந்தியாருக்கு இவர் திருக்குறள் கற்றுக் கொடுத்ததோடு, தமிழில் கையொப்பம் இடவும் கற்றுக்கொடுத்தார்.
சட்டமன்றச் சாதனை
1923-இல் சென்னை மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டார். அப்போது நீதிக்கட்சி ஆட்சி நடந்தது.
இரட்டைமலை சீனிவாசன்அவர்கள், தனது மனைவி ரங்கநாயகி ஆலோசனைப்படி 1924 இல் தீண்டாமையை தடைச்செய்யும் சட்டமியற்றத் தீர்மானம் கொண்டுவந்தார்.
இத்தீர்மானத்தை அரசு ஏற்றுக்கொண்டு, 1925-இல் ஓர் அரசாணை வெளியிட்டது.
வட்டமேஜை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன்
1928--1929-இல் லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டிற்கு, இந்தியாவிலிருந்து தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதியாக, டாக்டர் அம்பேத்கரையும், இவரையும் இந்திய அரசு தேர்வு செய்து அனுப்பியது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டதுபற்றியும், அங்கு நடந்த நிகழ்வுகள்பற்றியும் இரட்டைமலை சீனிவாசன் அவர்களே விளக்குகிறார்கள்.
“சர்வ கட்சி மகாசபை என்னும் வட்டமேஜை மாநாட்டிற்கு என்னையும், டாக்டர் அம்பேத்கரையும் தேர்வு செய்து அழைத்திருந்தார்கள். நாங்கள் இருவரும் நகமும், சதையுமாக இருந்து உழைத்தோம். 1928--1929 ஆம் ஆண்டுகளில் நடந்த மகாசபைக்கு நாங்கள் இருவரும் சென்றிருந்தோம். 1930 ஆம் ஆண்டு டாக்டர் மட்டும் மகாசபைக்குப் போனார். என் ஆலோசனையைக் கேட்க இந்தியா இராஜப் பிரதிநிதி கமிட்டிக்கு (Viceroys Conssolative Committee) என்னை அழைத்துக் கொண்டார்கள். என்று கூறும் அவர், அங்கு நடந்த நிகழ்வு ஒன்றையும் விளக்குகிறார்.
“ஜார்ஜ் மன்னரையும், இராணியையும் காணும் பொருட்டு, வின்சர் காஸ்சல் (Windsor Castle) என்னும் ராஜ மாளிகைச் சபைக்கு இந்தியப் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டார்கள். என்னுடன் சக்கரவர்த்தி, சக்கரவர்த்தினி இருவரும் கைகுலுக்கி உபசரித்தார்கள். இப்படியாக மூன்று தடவை நடந்தது. ராஜா மாளிகையில் சிற்றுண்டியும் பரிமாறப்பட்டது. பின்னுமோர் தடவை மன்னரிடம் சம்பாஷிக்க (பேச) நேர்ந்தது. தீண்டாமை என்றால் என்னவென்று மன்னர் வினவினார். ‘மேல்ஜாதியான் என்போன் கீழ்ஜாதியான் தெருவில் விழுந்துவிட்டால் மேல்ஜாதியான் தூக்கிவிடமாட்டான்’ என்று நான் கூறியபோது, மன்னர் திடுக்கிட்டு அசந்து நின்று, “அவ்விதம் நடக்க என் ராஜ்ஜியத்தில் விடவே மாட்டேன்’’ என்றார். மன்னர் மாளிகைக்குள் பிரவேசிக்கவும் மன்னரோடு கைகுலுக்கி பேசவுமுண்டான பாக்கியம் நமது சமூகத்தைப் பொருந்தியதல்லவா. இதர சமூகத்தோடு நம்மையும் சமமாக மன்னவர் நடத்தியதனால் ஆங்கிலேய அரசாட்சி எவ்வளவு அன்பும், அருமையானதென்றும் நம் இனம் முன்னேறவுஞ் செய்ததென்றும் விளங்குகிறது என்று வரலாற்று முக்கியம் வாய்ந்த நிகழ்வை பாமரத் தமிழில் விளக்கியுள்ளார்.
“தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியல் அதிகாரம் கொடுக்கப்பட்டால்தான் தீண்டாமை என்னும் கொடிய பழக்கம் ஒழியும். சட்டசபையில் எங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளித்தால்தான் எங்கள் இலட்சியங்களை அடைய நாங்கள் போராட முடியும். வயது வந்தோருக்கு வாக்குரிமை வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை’’ என்று அந்த மாநாட்டில் தன் சமூகத்திற்குரிய கோரிக்கைகளை முன்வைத்தார்.
சொத்துள்ளவருக்கும், படிப்புள்ளவருக்கும் மட்டுமே வாக்குரிமை என்ற அந்தக் காலத்தில், தன் இனம் முன்னுக்கு வரவேண்டும் என்றால், வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்று ஆணையிடப்படவேண்டும் என்ற மிக முக்கியமான கோரிக்கையை அவர் முன் வைத்தார்.
அரசியல் அதிகாரத்தைப் பெறாத எந்தச் சமுதாயமும் முன்னுக்கு வர இயலாது என்பது ஆழமான உண்மை. அதை நுட்பமாக அறிந்து, அதைக் கோரிக்கையாக வைத்தார். அக்காலத்தில் இந்த அளவிற்கு விழிப்போடு சிந்திப்பது என்பதும், சிந்தித்து எடுத்த முடிவுகளைச் செயல்படுத்துவது என்பதும், அதுவும் அயல்நாட்டிற்குச் சென்று உலகையே ஆண்டு கொண்டிருந்த ஆட்சியாளர்களிடம் அது குறித்துக் கோரிக்கை வைப்பது என்பதும் வியப்புக்குரிய அரிய செயல்களாகும்.
பட்டங்கள்
ஆங்கில ஆட்சியாளர்கள் இவருக்கு 1926-இல் ராவ்சாஹிப் பட்டமும், 1930-இல் ராவ்பகதூர் பட்டத்தையும், 1936-இல் திவான் பகதூர் பட்டத்தையும் வழங்கினர். இவர் ஆங்கில ஆட்சிக்கு ஆதரவாக நின்றது ஜாதி இந்துக்களின் கொடுமைகளைவிட, ஆங்கில ஆட்சியின் ஆதிக்கம் சிறப்பானது என்று எண்ணியே. மேலும், ஓரளவிற்காவது தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய நன்மைகளை ஆங்கில ஆட்சியாளர்களிடமிருந்தே பெற முடியும் என்று நம்பினார். அவரது எண்ணத்திலும் நம்பிக்கையிலும் உண்மையில்லாமல் இல்லை. இதைத்தான் தந்தை பெரியாரும் சொன்னார் என்பதை முன்னமே கூறினேன். இவரது ஆங்கில ஆட்சி ஆதரவு தன்னலத்தில் எழுந்தது அல்ல. தன் சமுதாய நலனை முன்னிறுத்தி எழுந்ததாகும். 19-ஆம் நூற்றாண்டில், தீண்டப்படாத சமுதாயத்தில் பிறந்து இவ்வளவு சாதித்தார் என்றால், அவரது திறமைக்கும், பெருமைக்கும் அளவே இல்லை.
இத்தகு பெருமைக்குரிய இந்த மாமனிதரின் 80-ஆவது பிறந்த நாளில் எம்.சி.ராஜா, திரு.வி.க., ராஜாஜி போன்றோர் கலந்துகொண்டனர். விழிப்பும், எழுச்சியும், போர்க்குணமும், அறிவு நுட்பமும் நிறைந்த இரட்டைமலை சீனிவாசன் 1945 செப்டம்பர் 18-ஆம் நாள் தனது 85 ஆவது வயதில் இறந்துபட்டார்.
வாழ்க இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் புகழ்!
- உண்மை இதழ், ஜூன் 16- ஜூலை 15 .2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக