பக்கங்கள்

புதன், 3 பிப்ரவரி, 2021

தமிழ்ச் சூழல்: சமூக நீதி - வ.உ.சி. (சமூக நீதி வளர்ந்த வரலாறு)


* வீ.அரசு

பல்வேறு ஆட்சியாளர்கள், பல்வேறு மொழி, பல்வேறு சமயங்கள், பல்வேறு பண்பாடுகள் என்று இருந்த நிலப்பகுதியை, பிரித்தானியர்கள் அவர்களது அதிகாரத்தின் கீழ், படிப்படியாக ஒருங்கிணைத்து, இந்தியா என்ற நாடு உருவாக வழி கண்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியா என்ற அடையாளம் முழுமை பெறுகிறது. இவ்வாறு கட்டமைக்கப்பட்ட இந்த நிலப்பகுதியில் வர்க்க முரண்கள் மட்டுமின்றி ஜாதிய முரண்கள் வலுவாக செயல்படத் தொடங்கின. முடியரசு காலங் களில் தொழிற்பட்ட ஜாதி முரண்களின் தன்மை பிரித்தானியர் காலங்களில் மேலும் கூர்மைப்பட்டது. நவீன சமூகத்தில் உருவான கல்வியறிவு, பிரித்தானியர் செய்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகியவை ஜாதியச் செயல்பாடுகளை நவீனத்துவமாக்கியது. இக்கொடுமையைக் கண்டு ஜாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி பெறும் சூழல் உருவானது. இதன் முன்னோடியாக ஜோதிராவ் கோவிந்தராவ் புலே (1827-1890) செயல்பட்டார். பார்ப்பனியம் எனும் ஜாதிய வடிவம் செயல்படும் பல்வேறு கூறுகளை புலே அம்பலப்படுத்தினார். தமிழ்ச் சூழலிலும் இக்காலத்தில் வடலூர் சி.இராமலிங்கன் எனும் வள்ளலார் (1823-1874) மனிதாபிமானக் கண்ணோட்டம் சார்ந்து, தமது இறுதிக் காலங்களில் ஜாதி குறித்த விமரி சனங்களை முன் வைத்தார். அத்திப்பாக்கம் வெங்கடா சலனார் (1800-1897) எனும் பெரியவர் ‘இந்துமத ஆசார ஆபாச தரிசினி' எனும் நூலை 1882 இல் எழுதினார். இந்து மதம் குறித்த முதல் விமரிசன நூலாக இதனைக் கருதமுடியும். 1878 முதல் 1888 வரை செயல்பட்ட சென்னை இலௌகிக சங்கத்தினர் சமயம், ஜாதி குறித்த விமரிசனங்களை முன் வைத்தனர். இந்த மரபில் அயோத்திதாசரும் (1845-1914) செயல்பட்டார்.

மேற்குறித்த மனிதர்கள் முன் னெடுத்த கருத்துநிலை சார்ந்து 'சமூக நீதி' எனும் கருத்தாக்கம் உருப்பெறத் தொடங்கியது. நிலப் பரப்பில் வாழும் பல்வேறு மக்களும் பல கூறுகளிலும் முரணின்றி வாழ வேண்டும். அவ் வாறு இல்லையெனில் அங்கு 'சமூக நீதி'யின் தேவை வருகிறது. முரண்கள் பொருளாதாரரீதியாக இருந்தால் அங்கு சமத்துவம் தேவைப்படுகிறது. இதனை பத்தொன்பதாம் நூற்றாண் டில் உருவான மார்க்சியத் தத்துவம் உலகிற்கு வழங்கியது. ஜாதிய சமூக மாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்திய நிலப் பகுதியில், ஜாதிய முரண்களை ஒழித்து எல்லோரும் சமம் எனும் சமூக நீதியை உருவாக்கும் தேவையும் முன்னிலைப்பட்டது. இதனைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்குறித்தப் பெரியவர்கள் முன்னெ டுத்தனர். இந்த சமூக நீதி என்பது இருபதாம் நூற் றாண்டில் புதிய அரசியல் சக்தியாக வடிவம் பெற்றது. இதில் இரண்டு மனிதர்கள், முதன்மையாக, தமது வாழ்வை சமூக நீதி உருவாக்கத் திற்காக அர்ப் பணித்தனர். ஒருவர் பீம்ராவ் அம் பேத்கர் (1891-1956). இன்னொருவர் ஈ.வெ.ராமசாமி எனும் பெரியார் (1879-1973). இவ்விருவரும் இன்றைய சூழலில் பெரிதும் பேசுபொருளாகியுள்ளனர்.

தமிழ்ச் சமூகத்தின் இருபதாம் நூற்றாண்டு அர சியல் களம் என்பது சமூக நீதியை முதன்மைப்படுத்தும் நீதிக்கட்சி (1916), தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (1917), சென்னை மாகாண சங்கம் (1917), சுயமரியாதை இயக்கம் (1925), திராவிடர் கழகம் (1944), திராவிட முன்னேற்றக் கழகம் (1949) ஆகியவை உருப்பெற்று செயல்படத் தொடங்கின. இதனை குறியீட்டு வடிவில் ‘திராவிடர் இயக்கம்' என்று அழைக்கிறோம். இதில் சென்னை மாகாண சங்கம் அதன் அமைப்பு அடிப்படையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தது. காங்கிரஸ் அமைப்பு என்பது சமூக நீதியை முதன்மைப்படுத்தும் ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்' என்பதை ஏற்றுக்கொண்ட அமைப்பு இல்லை. ஆனால், அதற்குள் உருவான சென்னை மாகாண சங்கம் வகுப்புரிமையை முன்னெடுப்பதை, ‘பிரா மணர் அல்லாதார் நலன் சார்ந்த அமைப்பு' என்று அறிவித்துக் கொண்டது. வகுப்புரிமையை மறுக்கும் இயக்கத்திற்குள் வகுப்புரிமை கோரும் அமைப்பாக உருவானது. பிராமணர் அல்லாதார் அமைப்பாகக் கருதப்பட்ட நீதிக்கட்சிக்கு எதிரான அமைப்பாகவும் சென்னை மாகாண சங்கம் அடையாளப்படுத்தப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான சமூகநீதி இயக்கம், அதன் நடைமுறையில் வகுப்புவாரி உரிமையை முன்னெடுத்தது. இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ச் சூழலில் உருவான அரசியல் இயக்கங்கள், வகுப்புரிமை எனும் அரசியல் செயல்பாட்டை மீறிச்செயல்படும் வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்த சூழல் உருப்பெற்று விட்டது. இதற்கு முதன்மையான காரணம், பார்ப்பனியம் நவீன சமூக இயங்கு திசையில் அனைத்து அதிகாரங்களையும் பண்பாட்டு வடிவில் முன்னெடுக்கும் சூழல் உருப் பெற்றிருந்தது. குறிப்பாக, அரசு சார்ந்த அலுவலக நிர்வாகங்கள், வழக்கு மன்றங்கள் ஆகியவற்றில் பார்ப்பனர்கள் 98 விழுக்காடு இடம் பெற்றனர். இத்தன்மையை இடதுசாரி கருத்துநிலையாளர்கள் தங்கள் பேசுபொருளாக எடுக்கவில்லை. காங்கிரஸ் அமைப்பிலும் பார்ப்பனியம் அதிகார சக்தியாக செயல்பட்டது. இந்தப் பின்புலத்தில், காங்கிரஸ் தலைவர்கள் சிலர், அதற்குள் பார்ப்பனர் அல்லாதார் அதிகாரத்திற்கான ஒரு வெளியை உருவாக்க முயன்றனர். இந்தப் பின்புலத்தில் உருவான சென்னை மாகாண சங்கம் குறித்த திரு. வி. கல்யாண சுந்தர முதலியார் (1883-1953) அவர்களின் சொற்களை இங்கு நினைவுபடுத்திக்கொள்வோம்.

"காங்கிரசின் நோக்கத்துக்கு முரண்படாத வகை யில் தென்னாட்டு பிராமணரல்லாதார் நலனை நாடுவ தென்று உறுதி செய்யப்பட்டது. திவான்பகதூர் கேசவப்பிள்ளை தலைவராகவும் லாட் கோவிந்ததாஸ், சல்லா குருசாமி செட்டியார், ஈ.வெ. இராமசாமி நாயக்கர், நாகை பக்கிரிசாமிப்பிள்ளை, சிறீல்லாக் ஜோசப் முதலியோர் உதவித் தலைவராகவும் தெரிந் தெடுக்கப்பட்டனர். அமைச்சராக தி.வி. கோபாலசாமி முதலியாரும், குருசாமி நாயுடும், டாக்டர் வரதராஜலு நாயுடுவும், சர்க்கரைச் செட்டியாரும், யானும் தெரிந்தெடுக்கப்பட்டோம். காரியங்கள் பெரிதும் தி.வி. கோபாலசாமி முதலியாரால் கவனிக்கப்பட்டு வந்தன. சென்னை மாகாண சங்கக் கொள்கை தென்னாடு முழுவதும் பரவ வரதராஜலுவால் பிரச்சாரஞ் செய்யப் பட்டது.”

சென்னை மாகாண சங்கத் தோற்றம், 'ஜஸ்டிஸ்' கட்சிக்கு இடியாயிற்று. அக்கட்சி கொதித்தது; எரிந்தது. அக்கட்சிப் பத்திரிகைகள் சென்னை மாகாண சங்கத்தைக் கண்டபடி தூற்றத் தொடங்கின. 'ஜஸ்டிஸ் கட்சியார் சென்னை மாகாண சங்கம், பிராமணர் ஏவுதலால், அவர்தம் அடிமைகளால் காணப்பட்ட தென்று முழங்கினர்.

இதன் மூலம் காங்கிரசைச் சேர்ந்த பலர் பார்ப்பனர் அல்லாதார் நலத்திற்கு அமைப்பு ரீதியாகச் செயல்படுவது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த அழுத்தம், நீதிக்கட்சியால் இவர்களுக்குள் ஏற்பட்டது. இதன் மூலம் தமிழ்ச் சூழலில் ‘பார்ப்பனர் அல்லாதார்' எனும் கருத்து நிலை வலுப்பெற்றிருப்பதை அறிய முடிகிறது. தமிழ்ச் சமூகத்தின் இயங்குதளம் சார்ந்த பார்வையில், இவ்வகையான அரசியல் கருத்து நிலை உருப்பெறுவது, 'சமூகநீதி' சார்ந்த கருத்தாக்கத் தின் வடிவமாக இதனைக் கருத முடியும். புலே, அயோத்திதாசர், சீர்திருத்த சைவர்கள், திராவிடக் கருத்து நிலை என்ற தொடர் நிகழ்வாக இதனைப் புரிந்து கொள்ள முடியும். இதனைத் தமிழ்ச் சூழலில் பெரும் சக்தியாக பெரியார் கட்டமைத்தார்.

இந்தப் பின்புலத்தில் வ. உ. சிதம்பரம் பிள்ளை , (1872-1936) எனும் அரசியல் செயற்பாட்டாளரைப் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் அமைப்பிலி ருந்து வெளியேறி, மீண்டும் காங்கிரஸ் அமைப்பில் செயல்பட விரும்புவதாக அவர் பதிவு செய்கிறார்.

"கல்கத்தா நகரத்தில் நடந்த விசேஷ காங்கிரஸ் மகாநாட்டில் என் தேசியக் கோட்பாடுகளுக்கு முற் றிலும் மாறான கோட்பாடுகள் அடங்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. உடனே யான் சென்னைக்கு வந்து, திலகர் சுயாட்சி சங்கத்தின் விசேஷ கூட்டம், ஒன்றைக்கூட்டி மேற்கண்ட விசேஷக் காங்கிரஸ் மகாநாட்டில் தீர்மானங்களை எல் லாம் கண்டித்து தீர்மானங்களை நிறைவேற்றப் பத்திரிகைகளில் பிர சுரித்து விட்டு யான் காங்கிரசினின்று விலகி இதுகாறும் ஒடுங்கி இருந் தேன். என் கோட்பாடுகளுக்கு மாறான நீதி ஸ்தல பஹிஸ்காரம், கலாசாலை பஹிஸ்காரம், சட்டசபை பஹிஸ்காரம் முதலிய பஹிஸ்காரங் களெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நீங்கிக் காங்கிரஸ் மகாசபை, தனது கல்கத்தா விசேஷ மகாநாட்டிற்கு முன்னிருந்த நிலைமைக்கு வந்து விட்டபடியால் யான் திரும்பிக் காங் கிரசில் புகலாம் என்று நினைத்தேன். என்னைப் போல காங்கிரசை விட்டு விலகி நின்ற எனது பிராமணரல்லாத சகோதரர்களில் உண்மையான தேசாபிமானிகள் சிலர் கோவை நகரில் ஒரு விசேஷ மகாநாடு கூட்டிப் பிராமணரல் லாதார்களுடைய தேச சேவைக்குக் காங்கிரஸ் மகா சபையைக் கைப்பற்றி ஒரு கருவியாக உபயோகித்தல் இன்றியமையாதென்று தீர்மானித்தார்கள். எனக்கும் என் தேசத்திற்கும் நல்ல காலம் பிறந்து விட்டதென்று கருதினேன். சென்ற பல ஆண்டுகளாக ஒடுக்கியிருந்த யான் எவ்வாறு வெளிவருவதென்று சிந்தித்துக் கனன்று கொண்டிருந்தேன்.” (191-192: 2002).

நன்றி:

நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம், ஜனவரி 2021

(தொடரும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக