ந.ஆனந்தம்
புத்தமதம் பிற மதங்களிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. அம்மதம், தம் உபதேசங்களை ‘கடவுள் இட்ட கட்டளை’ என்று சொல்வதில்லை. எந்தச் சடங்குகளையும் செய்யும்படி கூறவில்லை. புத்தமதம் ஒழுக்கத்தை மட்டுமே வலியுறுத்துகிறது. ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்தால் மக்கள் அமைதியாகவும், விவேகமாகவும் வாழ முடியும் என்கிறது. ஆழ்ந்த சிந்தனையாலும், தொலைநோக்குப் பார்வையாலும், ஞானத்தினாலும், செயல்பாடுகளின் மூலமாகவும் நாம் மனக்கவலைகளையும், துன்பத்தையும் வெற்றி கொள்ளலாம் என்று போதிக்கிறது.
புத்தமதத்தின் பிரதான அறிவுரை என்னவென்றால், ஒவ்வொரு மனிதனும் மெய் காண்பதில் மிகுந்த ஆர்வமுடையவராக இருக்க வேண்டும். மூன்று விதமான ஆசைகளை வெற்றி கொள்ள வேண்டும். உடல் உணர்வுகளுக்கு இன்பம் அளிக்க விரும்புவது முதலாவது ஆசை. தான் இறந்த பின்னரும் இவ்வுலகில் வாழ விரும்புவது இரண்டாவது ஆசை. சொத்து சேர்க்க விரும்புவது மூன்றாவது ஆசை. இம் மூன்று ஆசைகளையும். கட்டுப்படுத்துவதில் வெற்றி கொண்டால் இவ்வுலகில் மகிழ்வாக வாழலாம். ஏனெனில், அதன் மூலம் மனிதன் மேலான ஞானம் பெறுகிறான்; மன அமைதி பெறுகிறான்;
சித்தார்த்த கவுதம புத்தர் (கி.மு 560-480) மனிதன் இவ்வுலகில் நல்வாழ்வு வாழ எண்வழிப் பாதையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார். அவர் வலியுறுத்திய எண் வழிப்பாதை எம்மாதிரியான வாழ்க்கை வழிமுறையைப் போதிக்கிறது என்பதனை பார்ப்போம்.
சிறப்பான எண் வழிப்பாதை
1. சரியான பார்வை - மரபுவழி நம்பிக்கைகளையும், மூடநம்பிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு மெய் காணுதல்
2. சரியான நோக்கம்- - சுயநலத்தைத் தவிர்த்து பிறருக்கு உதவுதல், நியாயத்தை நிலை நாட்டல் போன்றவைகளை நோக்கமாகக் கொள்ளல்.
3. சரியான பேச்சு.
4. சரியான நடத்தை.
5. சரியான வாழ்க்கை - பிற மனிதர்களுடன் சுமூகமான வாழ்வு நடத்துதல்.
6. சரியான முயற்சி - பல கஷ்டங்களுக்கிடையே தன்னலமற்ற வாழ்வு வாழ தொடர்ந்து முயற்சித்தல்.
7. சரியான மனப்பான்மை - தன்னுடைய சிந்தனைகளில் தன்னலச் சிந்தனைகள் எழாவண்ணம் கவனமாக இருத்தல்.
8. சரியான மகிழ்ச்சி - மக்களுக்குத் தீமை பயக்காமல் மகிழ்ச்சியை உண்டாக்கும் யாவற்றிலும் மகிழ்ச்சி காணுதல்.
எண்வழிப்பாதை கடவுள் பற்றி எதையும் கூறவில்லை. கடவுளைத் திருப்திப்படுத்த பிரார்த்தனை செய்யவோ, சடங்குகளைச் செய்யவோ, மிருகங்களைப் பலியிடச் சொல்லவோ புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றோ சொல்லவில்லை. சுய சிந்தனைக்கும் ஒழுக்கத்திற்கும், நடத்தைக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. அவற்றையே வலியுறுத்துகிறது.
புத்தர் மறு உலகம், கடவுள், மறுபிறவி பற்றி எதுவும் சொல்ல மறுத்துவிட்டார். அவைகள் பற்றிச் சொல்லப்படுபவை யாவும் மனிதனின் கற்பனைதான் அவைகளில் கவனம் செலுத்துவது மனிதனுக்கு நன்மையைத் தராது. தீமையே பயக்கும் என்றார். ஏனெனில் அவை பற்றிய கற்பனைக் கருத்துகள் ‘இவ்வுலக வாழ்வைச் செம்மையாக வாழ வேண்டும்’ என்ற அடிப்படை இலக்கையே புறக்கணிக்கச் செய்துவிடும் என்றார்.
தம்மபதம் புத்தமதக் கோட்பாடுகளை விளக்கும் புத்தகம். இது 26 அத்தியாயத்தையும், 423 செய்யுள்வரிகளையும் கொண்டது. தம்மபதம் ஒழுக்கம் பற்றி நேரடியாகப் பேசுகிறது. எச்செயல் சரியானது, எது தவறானது என்று பிரித்து உணரச் செய்கிறது. எது உயர்வான வாழ்வு என்று போதிக்கிறது.
தம்மபதம் அன்பையும், அறிவையும், ஒழுக்கமான வாழ்வையும் வலியுறுத்துகிறது சுயநலத்தைக் கட்டுப்படுத்தும்படி கூறுகிறது. ஒரு சில அத்தியாயங்களின் கருத்துகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எடுத்துக்காட்டாக, முதல் அத்தியாயம் வெறுப்பு பற்றியும், அன்பு பற்றியும் விவாதிக்கிறது. வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது. வெறுப்பை அன்பால் மட்டுமே வெற்றி கொள்ள முடியும். அதுவே, என்றும் நிலையான சாசுவதமான விதி என்கிறது. மேலும், நாம் சக மனிதர்களுடன் இணக்கமாக வாழப் பிறந்தோம். இணக்கமாக வாழ மனிதனுக்கு அன்பு, சகிப்புத் தன்மை போன்ற பண்புகள் அவசியம் என்கிறது.
மூன்றாவது அத்தியாயம் மனம் பற்றி விமர்சனம் செய்கிறது. மனம் எப்பொழுதும் ஊசலாடிக் கொண்டே இருக்கும். அதைக் கட்டுப்படுத்துவது கஷ்டமானது. ஞானமுள்ள மனிதன் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்கிறான். கட்டுப்படுத்தாதவன் உண்மையை உணரமாட்டான். ஞானத்தைப் பெறமாட்டான். தவறாக வழிகாட்டப்பட்ட மனம் அவனுக்கே பெறும் தீமை பயக்கும்.
எட்டாவது அத்தியாயம் பண்பான வாழ்வு பற்றி விவாதிக்கிறது. நேர்மையான மனிதனின் மதிப்பு, வணங்குபவனை விடவும், அன்பளிப்பு கொடுப்பவனைவிட மிக உயர்ந்தது. மேலும் அறியாமையைக் கண்டிக்கிறது. ஆழ்ந்த சிந்தனை செய்யாது அறியாமையில் உழன்று நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட, ஒரு நாளேனும் ஆழ்ந்த சிந்தனை செய்து ஞானத்துடன் வாழ்வது மேலானது என்கிறது.
பத்தாவது அத்தியாயத்தில் நம்பிக்கை, நற்பண்பு, ஊக்கம், ஆழ்ந்த சிந்தனை தொலைநோக்குப் பார்வை, ஞானம், செயல்பாடுகள் முதலியவைகளால் துன்பங்களை வெற்றி கொள்ளலாம் என்கிறது.
தம்மபதம் சோம்பேறியாக வாழ்வதிலிருந்தும், கவனமின்றியும், முன்யோசனை இன்றியும் வாழ்வதிலிருந்து விடுபடுமாறு வேண்டுகோள் விடுகிறது. சிற்றின்ப ஆசை பெருவெறுப்பு, கோபம் போன்ற தீய உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்கிறது. சுயநலத்தைக் கட்டுப்படுத்துவது மேலான வெற்றி என்கிறது.
இவ்வாறு, தம்மபதம் எச்செயல்கள் சரியானவை, எவை தவறானவை, தீயவை என்பதைப் பிரித்துணர உதவுகிறது. இவ்வுலகில் பண்பான, அறிவான வாழ்வை வாழக் கடை ப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைக் கூறுகிறது.
மேலும், புத்தர் காசியில் ஆற்றிய நெறிமுறை விளக்கப் பேருரை, சிறப்பான உரையாகும். இறைச்சி, மீன் உண்பதை விலக்குவதும், நிர்வாணமாகத் திரிவதும், தலைமுடியால் சடைபோட்டுக் கொள்வதும், தலையை மொட்டை போடுவதும், முரட்டுத் துணிகளை அணிவதும், தீயில் உயிர்பலி கொடுப்பதும் மனிதனைத் தூய்மையாக்காது.
வேதங்களைப் படிப்பதும், புரோகிதர்களுக்கு பணம் அளிப்பதும், உயிர்ப்பலி கொடுப்பதும், பல்வேறு வகையில் உடலை வருத்திக் கொள்வதும் மனிதனைத் தூய்மையாக்காது.
கோபம், மது அருந்துவது, முரட்டுப் பிடிவாதம் மதவெறி, இனவெறி, வஞ்சகம், பொறாமை, தற்புகழ்ச்சி, பிறரை இகழ்வது, கர்வம், தீயநோக்கம் முதலியவை தூய்மையற்றவை.
புத்தர் தன்னுடைய சீடர்களுக்கு அறிவுரை கூறும் போது, இன்பம் காணும் விசயத்திலும், தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் விசயத்திலும் உச்ச எல்லைக்கும் செல்லாமல், மத்திய பாதையைக் கடைப் பிடிக்குமாறு சொன்னார்.
புத்தருடைய போதனைகள் இந்தியத்துணைக் கண்டத்தில் கி.மு.அய்ந்தாம் நூற்றாண்டு முதல் மெதுவாகப் பரவியது. கி.மு.மூன்றாம் நூற்றாண்டு அசோகச் சக்ரவர்த்தி புத்தருடைய போதனைகளைப் பெரிய அளவில் பரப்பினார். அசோகருடைய ஈடுபாடான முயற்சியால் புத்தருடைய போதனைகள் இந்தியாவெங்கும் பரவின. அண்டைய நாடுகள் பரவின. புத்தருடைய போதனைகள் எல்லோராலும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டன.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டு சில புத்தமதத் தொண்டர்கள் எடுத்த தவறான நடவடிக்கைகள் புத்தமதத்திற்கு கேடானதாக அமைந்துவிட்டன. அக்காலகட்டத்தில் சில புத்தமதத் துறவிகள் புத்தமதக் கோட்பாடுகளை வெகுஜன மக்களிடம் கொண்டு செல்ல விரும்பினார்கள். அந்த இலக்கை எட்ட, புத்தர் சிலைகளை பல இடங்களில் நிறுவினார்கள். புத்தரைக் கடவுளின் அவதாரம் என்று சொன்னார்கள். இத்தவறான தகவல் மக்கள் புத்தரைக் கடவுளாகவும், மீட்பாளராகவும் பார்க்கும்படி செய்து விட்டது. இவ்வாறு, சில தவறான செயல்பாடுகள் புத்தருடைய அடிப்படைக் கோட்பாடுகளை சிதைத்துவிட்டன. படிப்படியாக, புத்தரின் சிலை வழிபாடும், பிரார்த்தனைகளும் சடங்குகளும் புத்த மதத்தின் அங்கமாக ஆகிவிட்டன. இவை யாவும் புத்தரின் போதனைகளுக்கு முற்றிலும் எதிரானவை.
புத்தர் தன்னை தெய்வீக சக்தி கொண்டவர் என்றோ, தெய்வீக அருள் பெற்றவன் என்றோ சொல்லவேயில்லை. தான் ஒரு சாதாரணமான மனிதன் என்று அடிக்கடி சொன்னார். ஆனால், அறிவான மனிதன் என்றார். உண்மை இவ்வாறு இருக்க புத்தரை கடவுளின் அவதாரம் என்று சொல்வதை அவரின் போதனைகளைப் பின்பற்றுவோர்களில் பலர் எதிர்த்தார்கள். அவ்வாறு சொல்வதே தவறு என்றார்கள். புத்த மதம் மஹாயானா, ஹீனயானா என்று இரண்டாகப் பிரிவுற்றதற்கு இக்கருத்து வேறுபாடும் ஒரு காரணமாகும். மஹாயானா பிரிவு புத்தருக்கு தெய்வாம்சம் கற்பிக்கிறது. ஹீனயானா பிரிவு அவ்வாறு கற்பிப்பதில்லை. அவரை அறிவான, ஞானமான மனிதர் என்று மட்டுமே கூறுகிறது.
(தொடரும்)
- உண்மை இதழ் ஜூலை 16-ஆகஸ்ட் 15.20
ந.ஆனந்தம்
கி.பி.ஏழாம் நூற்றாண்டு முதல் புத்தமதம் மெதுவாக சீர்கேடடையத் தொடங்கியது. இதற்கு, மக்கள் சுய சிந்தனையை உதாசீனப்படுத்தியது தான் முக்கிய காரணம் இக்காலகட்டத்தில் ஒரு சாரார் புத்தமதக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பதையே கஷ்டமாகக் கருதினர். அறிவு பூர்வமாகச் சிந்தித்து, அதன் முடிவிற்கேற்ப செயல்படுவது மனிதனது கடமை என்பதையே மறந்தனர். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். அதுபோல, பிரார்த்தனைகளுக்கும், சடங்குகளுக்கும் ஆர்வம் காட்டினர். ஏனெனில் அவற்றைச் செய்வது எளிதாக இருந்தது. இதன் விளைவாக, புத்தமதம் பிரார்த்தனைகளும், சடங்குகளும் நிறைந்த மதமாக மாறியது. புத்தரின் போதனைகளுக்கு முற்றிலும் முரண்பட்டதாக மாறியது.
புத்தமதம் இந்தியாவில் மாறுபட்ட பிரச்சினையை எதிர் கொண்டது. கி.பி.இரண்டாம் நூற்றாண்டு, இந்தோ ஆரியர்களும், புரோகிதர்களும் புத்தமதத்தின் தாக்கத்தால் தங்களுடைய செல்வாக்கு பாதிக்கப்படுதைக் கண்டனர். புத்தமதம் மனித சமத்துவத்தை வலியுறுத்தியது. பிறப்பால் எவரும் உயர்ந்தவரும் அல்ல; தாழ்ந்தவரும் அல்ல என்றது. இச்சமத்துவக் கருத்து தங்களுடைய செல்வாக்கை அழிக்கும் என்று உணர்ந்தனர். ஆகவே, இந்தோ ஆரியர்களும், புரோகிதர்களும் தங்களது ஆதிக்கத்தையும், உயர்ஜாதித் தன்மையையும் நிலை நாட்ட புத்தமதத்தை அழிக்கத் திட்டமிட்டனர். மிகத்தந்திரமாக செயல்பட்டனர். தாங்கள் அனைவரும் புத்தமத தத்துவத்தையும், கோட்பாடுகளையும் ஏற்பதுபோல் நடித்தனர். அதை நிரூபிப்பதற்கு புத்தரை இந்து மதத்தின் ஒரு கடவுளாக ஏற்றுக்கொண்டனர். புத்தர் விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் என்றனர். புத்தமதத்தின் அஹிம்சை, புலால் புறக்கணிப்பு போன்ற சில கோட்பாடுகளை ஏற்றனர். புத்தமதத்திற்கும் தங்களது வேத மதத்திற்குமுள்ள வித்தியாசத்தை தெளிவற்றதாக்கிவிட்டனர்.
புத்தமதத்தைப் பின்பற்றுபவர்களை வேத, பார்ப்பன மதத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பார்ப்பனர்கள் தங்கள் கோவில்களில் ஆடம்பரமாக விழாக்கள் நடத்தினார்கள். நிறைய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். இவைகள் இந்திய மக்களை ஈர்த்தன. வேத, பார்ப்பன மதத்தில் சேர ஆரம்பித்தார்கள். எனினும் இந்தோ ஆரியர்களும், புரோகிதர்களும் தங்களுடைய தலைமைப் பொறுப்பையும், சிறப்புரிமைகள் காப்பாற்றுவதில் முனைப்பாக இருந்தனர். அதற்காக தந்திரமாக பிரித்தாளும் கொள்கையை செயல்படுத்தினர்.
பிறப்பின், தொழிலின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு கற்பித்து, மக்களை வருணங்களாகப் பிரித்தனர். இந்தோ ஆரியர்களும், புரோகிதர்களும் தாங்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்றும், தங்களை பிராமண வருணம் என்று சொல்லிக் கொண்டார்கள் படைப் பணி செய்வோர்கள் சத்திரிய வருணம் என்றனர். விவசாயம், தொழில், வியாபாரம் செய்தோர் வைசியர் வருணம் என்றனர். பிற வேலைகள் செய்தோரை சூத்திர வருணம் என்றனர். உரிமைகளை இறங்கு வரிசையில் அளித்தனர். சூத்திரர்களுக்கு மிக குறைந்த உரிமைகளே அளித்தனர். இந்த அநீநிதியை வைசியர்களும், சூத்திரர்களும் ஏற்கச் செய்வதற்காக, ஜாதீய சமூக அமைப்பு கடவுளின் ஏற்பாடு என்றனர். பிறப்பில் பேதம் கற்பிப்பதே தவறு என்று அறிந்திருந்தும், பகட்டுக்கும், பசப்பு வார்த்தைகளுக்கும் மதிமயங்கி வேத பார்ப்பன மதத்தில் ஏராளமான மக்கள் சேர்ந்தனர். இதனால், புத்தமதம் வலுவிழந்தது. பார்ப்பனர்கள் மனித சமத்துவத்தைப் போதித்த சமண, புத்த மதங்களை எதிரிகளாகக் கருதினர். அம்மதங்களை அழிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டனர். தங்களது அரசியல் அதிகாரத்தாலும், வஞ்சகத்தாலும், வன்முறைகளாலும் அம்மதங்களுக்கு பொதுமக்களிடம் இருந்த மதிப்பைக் குறைத்தனர். இறுதியாக, முஸ்லீம்களின் வெற்றி புத்தமதத்திற்கு மரண அடி கொடுத்தது. இவ்வாறு புத்தமதம் இந்தியாவில் மறைந்தது.
இந்திய மக்கள் புத்தரின் போதனைகளைப் புறக்கணித்தது ஒரு மாபெரும் தவறாகும். வரலாற்றுப் பிழையாகும். ஏனெனில், அதிலிருந்து படிப்படியாக இந்திய சமூகத்தில் அதிகமான சதவீத மக்கள் தொகை கொண்ட வைசிய, சூத்திர வருணத்தார் தங்களுடைய சுதந்திரத்தை இழந்தனர். தங்களின் அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளை இழந்தனர். அனைத்து அதிகாரங்களும் மிகக் குறைந்த மக்கள் தொகையுடைய ஆரியப்பார்ப்பனர்களிடமும், க்ஷத்திரியர்களிடமும் சேர்ந்தது. அவர்கள் பொது நலம் பாராது, சுய நலத்துடன் செயல்பட்டனர். அரசின், மதத்தின் செயல்பாடுகளை தங்களுடைய உயர்ந்த அந்தஸ்தையும், நலனையும் பாதுகாப்பதற்காகவே பயன்படுத்தினர். பார்ப்பனர்கள் பூஜை, சடங்குகள், புரோகிதம் செய்யும் வேலையைத் தங்களது பிரத்தியேக உரிமையாக்கிக் கொண்டார்கள். இவ்வுரிமையைப் பயன்படுத்தி பார்ப்பனர் அல்லாதரை பல்வேறு சடங்குகளையும், பூஜைகளையும் செய்யுமாறு செய்து அவர்களது செல்வத்தை அபகரித்துக் கொண்டார்கள். பார்ப்பனர்கள் பயனுள்ள காரியம் எதுவும் செய்யாமல் செல்வாக்கோடும் வளமோடும் வாழ்ந்தார்கள். பெரும்பான்மை மக்கள் (வைசிய, சூத்திர வருணத்தார்) அறியாமையிலும், வறுமையிலும் உழன்றனர். இவ்வாறு நாட்டின் பூர்வகுடி மக்கள் அடிப்படை உரிமைகள் அற்றவர்களாக ஆக்கப்பட்டனர். இதுதான் புத்தரின் போதனைகளைப் புறக்கணித்ததன் பலனாகும்.
ஜாதியின் தாக்கத்தால், பிறப்பின் அடிப்படையில் சகமனிதர்களை உயர்வென்றும், தாழ்வென்றும் நினைக்கும் மனநிலை பரவியது. கி.பி.பத்தாம் நூற்றாண்டில் ஜாதியம் வேரூன்றியது. நூற்றுக்கணக்கான உப ஜாதிகள் உருவாகின. ஜாதிக் கொடுமைகள் எங்கும் பரவின. இதன் உளவியல் தாக்கம் மிக மோசமானது. மனிதநேய சிந்தனை எழாமல் செய்தது. மக்களை விதியை நம்பச் செய்தது. தன்னம்பிக்கையை இழக்கச் செய்தது. முயற்சியின்மையைப் புகுத்தியது. மக்களை மனிதநேயமற்றவர்களாக, இரக்கமற்றவர்களாக ஆக்கியது. பொதுநலச் சிந்தனை எழாமல் செய்தது. சமூக ஒற்றுமையை அழித்தது. இக்காரணங்களால், இந்திய சமுதாயம் செயலற்றதாக மலட்டுத்தன்மையானதாக மாறியது. இதுதான், இந்திய மக்கள் ஆரிய, வேத மதத்தில் சேர்ந்ததற்கான பரிசாகும்!
இத்தேக்க நிலை கி.பி. பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் தான் மாற்றம் கண்டது. அந்த இருநூறு ஆண்டுகளில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார் ஜாதிக் கொடுமைகளைக் கண்டனர். பார்ப்பனர்கள் முன் நிறுத்திய மனு நீதிச்சட்டம் ஜாதியின் அடிப்படையில் உரிமைகளையும், தண்டனையையும் வழங்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர். அநீதியான அச்சட்டத்தைத் தூக்கி எறிந்தார்கள். மனித சமத்துவக் கோட்பாட்டை செயல்படுத்தினார்கள். சமத்துவத்தின் அடிப்படையில் பொதுச்சட்டங்களை நிறைவேற்றி செயல்படுத்தினார்கள். அனைத்து ஜாதியினர்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி அளித்தார்கள். மதம், ஜாதியின் பெயரால் நடைமுறையில் இருந்த பல மூடப் பழக்க வழக்கங்களையும், சம்பிரதாயங்களையும் சட்டத்தின் மூலம் ஒழித்தார்கள். இச் செயல்பாடுகளால் இந்திய சமுதாயத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. மக்கள் சுதந்திர உணர்வு பெற்றனர். கல்வி பரவலாக்கப்பட்டதால் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டது.
எனினும், இன்றும் ஜாதியத்தின் தாக்கமும், பார்ப்பன இந்து மதத்தின் தாக்கமும் தொடர்கிறது. இன்றும், இந்திய சமுதாயத்தில் பெரும்பான்மையான மக்கள் சிலை வழிபாடு, ஜாதியம், பார்ப்பனீய சடங்குகள் போன்றவைகளில் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். இந்து மதத்தின் பெயரால் பசு வழிபாடு, ஜோதிடம், வாஸ்து போன்ற பல மூடநம்பிக்கைகளுக்கு மக்கள் அடிமைகளாக இருக்கின்றனர். இவர்களின் மனநிலையை எப்படி மாற்றுவது என்பதே இந்திய சமுதாயத்தின் இன்றைய முக்கிய பிரச்சினையாகும்.
மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட மக்களை அறிவு பூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் சிந்திக்கத் தூண்டுவது தான் சரியான தீர்வாகும். முதலாவதாக, மக்கள் தங்களது அனைத்து நம்பிக்கைகளையும், மத நம்பிக்கைகள் உள்பட யாவற்றையும் கேள்விக்குட்படுத்தும்படி ஊக்குவிக்க வேண்டும். எதையும் ஆய்வு செய்யத் தூண்ட வேண்டும். ஆய்வின் மூலம் மக்கள் ‘மெய்மை’ உணர்வார்கள். அவர்களுடைய மனநிலையில் நல்ல மாறுதல்கள் ஏற்படும். இக்கருத்தைத் தான் சிந்தனையாளர்களும், தத்துவவாதிகளும் கூறுகிறார்கள். மொத்தத்தில் மக்கள் மனதில் அறிவியல் மனப்பான்மையை உண்டாக்க வேண்டும் என்கிறார்கள். இதைத்தான் புத்தரும் சொன்னார். அவரின் போதனைகளும், புத்தமதக் கோட்பாடுகளும் எச்சமுதாயமும் விழிப்புணர்வு பெறவும், உயிர்ப்போடு செயல்படவும் நல் வழிகாட்டிகளாகும். இதுவே, புத்தரின், புத்த மதத்தின் சிறப்பாகும்.
- உண்மை இதழ், ஆகஸ்ட் 16 -செப்டம்பர் 15 .2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக