தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையால் மாணவர் பருவம் முதலே ஈர்க்கப்பட்டு மேடைகளில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர். தாம் ஏற்றுக் கொண்டக் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்து, அதனை எல்லா வகையிலும் நடைமுறைப்படுத்த முயன்று, சிலவற்றை நடைமுறையும் படுத்தியவர் நாவலர் ஆவார். அவருடைய பிறந்த தினமான ஜூலை 11 ஆம் தேதி நூற்றாண்டு பிறந்தநாள் அதனை ஒட்டியச் சில நினைவுகள்
சென்னை பெரியார் திடலில் 31.12.99 அன்று நடைபெற்ற பெரியார் புத்தாயிரமாவது ஆண்டு விழாவில் ஆற்றிய உரை வீச்சு.
ஏசு பிறந்தாரா? இறந்தாரா? என்பது எவருக்கும் தெரியவில்லை என்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பெரியார் புத்தாயிரமாவது ஆண்டு விழாவில் அ.தி.மு.க. அவைத் தலைவர் டாக்டர் நாவலர் கேள்வி எழுப்பினார்.
கி.வீரமணி அவர்கள் சொன்னார்கள்
முதலில் உங்கள் அனைவருக்கும் பெரியார் புத்தாயிரம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் உள்ளபடியே நான் பூரிப்பும், பெருமையும் கொள்கின்றேன் இந்த விழாவினுடைய சிறப்புக்குரிய நோக்கத்தை எனக்கு முன்னால் பேசிய நண்பர் கி.வீரமணி அவர்கள் உங்களுக்கு சுருக்கமாகவும், விளக்கமாகவும் சொல்லியிருக்கின்றார்கள். நாம் பெரியார் அவர்களுடைய புத்தாயிரமாவது ஆண்டைக் கொண்டாடுவதன் மூலம் அவருடைய கொள்கைகள் கோட்பாடுகள், குறிக்கோள்கள் மனித சமுதாயத்தை வாழ வைப்பதற்காக அவர்கள் எடுத்துச் சொன்ன அறிவுரைகள், கருத்துரைகள் ஆகியவைகள் எல்லாம் அடுத்தடுத்து வருகின்ற ஆண்டுகளிலேயும், அடுத்தடுத்து வருகின்ற நூற்றாண்டு விழாக்களிலேயும் அது பரவ வேண்டும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் இந்த விழாவை ஏற்பாடு செய்வது மட்டுமல்லாமல், பகுத்தறிவு குடும்பங்களைச் சார்ந்த அத்துணை பேரும், ஒன்றாக இணைந்து தங்களுடைய மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்கிற வகையில் இந்த விழாவை இந்த ஆண்டு ஏற்பாடு செய்திருப்பது மிக, மிக போற்றுதலுக்குரிய ஒன்றாகும்.
செவிக்கும், வயிற்றுக்கும் உணவு உண்டு
‘செவிக்கு உணவு இல்லாதபொழுதுதான் சிறிது வயிற்றுக்கு ஈயப்படும்’ என்று வள்ளுவப் பெருந்தகையார் குறிப்பிட்டார். இங்கு செவிக்கும் உணவு உண்டு. வயிற்றுக்கும் உணவு உண்டு - என்ற முறையில் நண்பர் கி.வீரமணி அவர்கள் இந்த விருந்தினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
ஆண்டுதோறும் பெரியார் விழா
பெரியாருடைய கருத்துகள் நாடெங்கும் பரவி, மனித சமுதாயம் நல்ல நோக்கத்தின் அடிப்படையில் இந்த விழா இங்கே கொண்டாடப்படுகின்றது என்றும், இப்படிப்பட்ட விழாக்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பெரும் முயற்சியில் ஈடுபடுவோம் என்றும் நண்பர் கி.வீரமணி அவர்கள் தன்னுடைய முன்னுரையிலே எடுத்து சொல்லியிருப்பதையும் பாராட்ட வேண்டிய ஒன்று.
பம்பரமாகச் சுற்றி...
அது மட்டுமல்ல, பெரியாருடைய பேச்சுகளை எல்லாம் ஒலி நாடாக்களாக ஆக்கி அவற்றில் பத்து ஒலி நாடாக்களை உருவாக்கி - அவற்றை வெளியிடுகின்ற விழாவாகவும் இந்த விழா ஏற்பாடு செய்து எல்லோரும் மகிழ்ச்சி தரத்தக்க வகையில் நண்பர் து.மா.பெரியசாமி அவர்கள் இதை செய்திருக்கிறார்கள். அவர் மாணவப் பருவ காலத்திலிருந்தே பகுத்தறிவு இயக்கத்திலே நீங்காப் பற்றும், தணியா ஆர்வமும் கொண்டு, அரும்பணி ஆற்றி வருகிறவர் ஆவார். அவர் 1944ஆம் ஆண்டிலிருந்தே நன்கறிவேன். அவர் எப்பொழுதும் பம்பரமாகச் சுற்றிச் சுற்றிச் சுழன்று திருச்சி மாவட்ட பகுதிகளில் கழகத்தின் பகுத்தறிவு கருத்துகளைப் பரப்புகின்ற பணியில் நம்முடைய நேரத்தையும், நினைப்பையும், உழைப்பையும், ஆற்றலையும் சிறப்பாகப் பயன்படுத்தி வருகின்ற ஓரு நல்ல நண்பராவார்.
பெரியார் கருத்துகள் இளைய தலைமுறையினருக்கு...
அவருடைய முயற்சியில் இந்த ஒலி நாடாக்கள் வெளிவருவது மிக, மிக பாராட்டுதலுக்குரிய ஒன்று நாங்கள் எல்லாம் பெரியாரோடு இருந்து அவருடைய குரல் கேட்டு - அவருடைய பேச்சு வன்மையை எல்லாம் அறிந்து நாங்கள் எல்லாம் மகிழ்ந்திருக்கிறோம். இந்த தலைமுறையினர் தந்தை பெரியார் அவர்களுடைய அழுத்தந் திருத்தமான கருத்துகளைக் கேட்க வாய்ப்பில்லாத நிலையில் ஆக அறிவியல் தொழில் நுட்ப உதவியின் பேரிலே ஒலி நாடாக்களைத் தயாரித்திருப்பதன் காரணமாக - பெரியாருடைய கருத்துகளை இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் இந்த ஒலிநாடாக்களை உருவாக்கித் தந்திருப்பது மிக மிகப் பாராட்டுக்குரிய ஒன்று.
கிட்டத்தட்ட 250, 300 ஒலிநாடாக்கள் வெளிவரும் என்று அவர்கள் சொல்லியது உள்ளபடியே எதிர்காலப் பரம்பரையினருக்குப் பயன்படக் கூடிய ஒன்றாகும். ஆக, பெரியாருடைய கருத்துகள் உலகெங்கும் பரவுவது என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் பெரியார் புத்தாயிரமென்ற இந்த விழாவைக் கொண்டாடுகின்றோம்.
காலக் கணக்கீடு தேவை
உள்ளபடியே காலக் கணக்கீடு தேவைப்படுகிறது. மனித சமுதாயத்திற்கு வரலாற்று நிகழ்ச்சிகளை அறிய அவை எவ்வப்பொழுது நடைபெற்றது? எங்கெங்கு நடைபெற்றது? யார் யாரால் நடைபெற்றது என்பதைத் தெரிந்து கொள்ள, வரலாற்றுச் செய்திகளை அறிய, வரலாற்றுத் தன்மைகள் எப்பொழுது ஆரம்பித்தது, எப்பொழுது முடிந்தது? என்பதை அறிந்து கொள்ள இதற்கெல்லாம் காலக் கணக்கீடு தேவைப்படுகிறது. ஆக, ஆண்டுக் கணக்கு, நாள் கணக்குத் தேவைப்படுகிறது.
ஆண்டுப் பிறப்பு வேறுபடுகிறது
இந்த ஆண்டு முறை கணக்குகள் நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம் வேறுபட்டுக் கொண்டே போயிருக்கிறது. ஆக ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு ஆண்டு உண்டு தமிழர்களுக்கென்று ஓர் ஆண்டு உண்டு. அது ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி என்று உண்டு தெலுங்கர்களுக்கு என்று ஓர் ஆண்டு பிறப்பு உண்டு. கேரள மக்களுக்கு கொல்லம் ஆண்டு என்று உண்டு. இஸ்லாமியர்களுக்கு என்று ஓர் ஆண்டு உண்டு. ஆக உலகெங்கும் பரவலாக ஆகி, எல்லோருக்கும் பழக்கப்பட்டு, எல்லோரும் ஏற்றுக் கொள்கின்ற அளவுக்கு கிறித்துவை அடிப்படையாக வைத்து கி.பி. 2000 என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. உள்ளபடியே வரலாற்றை எல்லாம் புரட்டிப் புரட்டிப் பார்த்தால் கிறித்து எப்பொழுது பிறந்தார் என்று யாருக்கும் தெரிவதில்லை.
ஏசு பிறந்ததும், மறைந்ததும் தெரியாது
ஏசு எப்பொழுது மறைந்தார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை (கைதட்டல்). அதை அவர்களே ஒத்துக் கொள்கிறா£கள்.
கிறித்து பிறந்ததும் யாருக்கும் தெரியாது. முதலில் ‘மாஸ் ஆப் தி கிரைசஸ்’ என்று வைத்தார்கள். நாளடைவில் அது கிறிஸ்துமஸ் என்று ஆகிவிட்டது.
பகுத்தறிவாளர் கூட்டம் எல்லாம் இங்கு ஒன்றாக நாம் சேர்ந்திருக்கிற மாதிரி டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் என்று கொண்டாடுகின்றார்கள். அப்பொழுது தான் அவர் பிறக்கிறார் என்று சொல்கின்றார்கள்.
ஜனவரி 1ஆம் தேதி எதை ஒட்டி வருகிறது? பிறந்த நாளை ஒட்டி வருகிறதா? அல்லது வேறு எதையாவது ஒட்டி வருகிறதா என்று தெரியவில்லை.
ஏசு இறந்துவிட்டதாக அவர்கள் ஏற்பதில்லை
ஆனால், சொல்லுகின்ற பொழுது பி.சி. என்று சொல்லுகிறார்கள். அதாவது பிஃபோர் கிரைஸ்ட் என்பது அவர் இறப்பதற்கு முன்னாலேயா? அல்லது ஏசு பிறப்பதற்கு முன்னாலேயா? கிரைஸ்ட் என்று இருக்கிறது ‘பிஃபோர் தி டெத் ஆஃப் தி கிரைஸ்’ என்று இல்லை அல்லது ‘ஆஃப்டர் தி டெத் ஆஃப் தி (ஏ.டி.) கிரைஸ்ட்’ என்று சொல்லவில்லை. ஆக கிறிஸ்தவர்கள் ஏசு இறந்துவிட்டதாக அவர்கள் ஒத்துக் கொள்வதே இல்லை.
(தொடரும்)
உண்மை இதழ், ஜூன் 16- ஜூலை 15 .2020
(நாவலர் நூற்றாண்டு பிறந்தநாள் ஜூலை 11)
ஏசு வருவார், வருவார்?
கிறிஸ்து ஏழாம் நாள் உயிர் பெற்றுவிட்டார். ஏசு கிறிஸ்து வருவார், வருவார் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே தவிர வரத்தான் போகிறார் என்றும் சொல்வதில்லை (கைதட்டல்). அவர் இறந்ததாகவும் சொல்லவில்லை. ஆனால் எல்லா கிறிஸ்தவர்களும் ஏ.டி., ஏ.டி. என்பதை மட்டும் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர் இறந்ததாகவும் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
உலகின் முதன்முதலில் கரிக்கோரி என்பவர்தான் காலண்டரைக் கண்டுபிடித்தார். ஆங்கிலக் காலண்டர் உலகெங்கும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது.
காலண்டருக்கும் ஒரு ஸ்டேண்டர்டு
இந்த வகையிலே இரண்டாயிரமாவது ஆண்டை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். உலகத்தில் சில ஸ்டேண்டர்டு என்பது இருக்கிறது. பிளேடு என்றால், இப்படித்தான் இருக்கும் என்று வைத்திருக்கின்றான். சைக்கிள் டயர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வைத்திருக்கின்றான். காருக்கு டயர் என்றால் இந்த அளவுக்குத்தான் இருக்க வேண்டுமென்று உலகம் முழுக்க ஒரு ஸ்டேண்டர்டு வைத்திருக்கின்றான். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஸ்டேண்டர்டு இருக்கிற மாதிரி காலெண்டருக்கும் ஒரு ஸ்டேண்டர்டு வைத்திருக்கின்றார்கள். அந்த ஸ்டேண்டர்டை வைத்துத்தான் உலகம் முழுவதும் 2000மாவது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.
2000 ஆண்டை கொண்டாடுகின்றோம்
இருபத்தி ஓராம் நூற்றாண்டு 2001இல் ஜனவரி 1ஆம் தேதி தான் ஆரம்பிக்கின்றது. இது 2000ஆம் ஆண்டின் துவக்க விழா நடைபெறுகிறது. இந்த நூற்றாண்டின் கடைசி விழா இதுதான். இந்த நுற்றாண்டின் கடைசி டான்ஸ் என்று அவனவன் போட்டுக் கொண்டிருக்கின்றான். ஆனால் 2000, 3000 என்பதெல்லாம் கொண்டாடுவதற்குரிய ஆண்டுகள் எப்படி 50ஆம் ஆண்டு பொன் விழா, 60ஆம் ஆண்டு மணி விழா, 75ஆம் ஆண்டு பவள விழா, நூற்றாண்டு விழா, இருநூறாவது ஆண்டு விழா, ஆயிரமாவது ஆண்டு விழா என்று கொண்டாடுகின்ற பழக்கத்தை ஒட்டி 2000 என்கின்ற அந்த எண்ணிக்கையின் அடிப்படையிலே, அதற்கு இருக்கின்ற சிறப்பின் அடிப்படையின் தன்மையிலே எங்குப் பார்த்தாலும் கொண்டாடுகின்றோம்.
2000ஆம் ஆண்டு கொண்டாடுகின்ற நிலையில் நண்பர் கி.வீரமணி அவர்கள் பெரியார் புத்தாயிரமாவது ஆண்டு விழா என்று கொண்டாடுகின்றார்.
மனித சமுதாயம் பயன்பெற வேண்டும்
தந்தை பெரியார் கருத்துகள் பரப்பப்பட வேண்டும். அதன் மூலம் மனித சமுதாயம் வாழ வேண்டும் மனித சமுதாயம் எதை, எதை ஏற்க வேண்டுமென்று சொல்லி தந்தை பெரியார் அவர்கள் எதை எல்லாம் வாழ்நாள் முழுக்க சொல்லி வந்தார்களோ அந்தக் கருத்துக்கு ஆக்கம் தரவேண்டும், ஊக்கம் தர வேண்டும். அதைப் பரவலாக்க வேண்டும். அதன் மூலம் மனித சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் பலன் பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலே இப்படிப்பட்ட விழாக்களைக் கொண்டாடுவது மிக, மிக பாராட்டுதலுக்குரிய ஒன்று.
உள்ளபடியே பகுத்தறிவு இயக்கத்தைப் பரப்புவது என்பது எளிதானதல்ல. ஒவ்வொருத்தரும் நம்பி விட்டார்கள் என்றால் அதை முறியடிப்பது கஷ்டம் (சிரிப்பு) ஆறாவது அறிவு இருந்தால்தான் ஆராய்ச்சி போய்க் கொண்டிருக்குமே தவிர, நம்புகிறேன் என்று சொல்லிவிட்டான் என்றால் அதன் பிறகு என்ன செய்ய முடியும்?
ஆராய்பவர்களால்தான் ஏற்க முடியும்
பகுத்தறிவு இயக்கம் பரவவில்லையே, பரவவில்லையே என்று சொன்னால் பரவாது. அதை ஏற்க திட உள்ளம் வேண்டும். உறுதியான உள்ளம் வேண்டும். ஆக எது மூடநம்பிக்கை? எது குருட்டுப் பழக்க வழக்கம்? அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் என்ன என்பதை கூர்ந்து ஆராய்ந்து பார்த்து, பகுத்து உணர்கின்ற தன்மை யாருக்கு ஏற்படுகிறதோ அவர்கள் தான் ஏற்றுக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் பொறுக்கி எடுத்துக் கொள்வார்களே தவிர, நீங்கள் ஒரே அடியாக ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆக நம்புகிறேன் என்று சொல்கிறவனிடம் போய் காரண காரியம் சொல்லி திருத்த முடியாது.
வரும் காலத்திற்கு பெரியார் கருத்துகளே!
ஆனால், பகுத்தறிவு கருத்துகள் மெல்ல மெல்லத் தான் பரவும். ஆனால் இந்த கருத்துகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும் என்பது உறுதி. கி.வீரமணி அவர்கள் சொல்லியது மாதிரி, பெரியார் கொள்கைகள் உலகம் முழுவதும் தழுவப்படுகின்ற அளவுக்கு, உலகத்தில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்கின்ற அளவிற்கு அமையும் என்றார்கள்.
எல்லா நாடுகளிலும், பகுத்தறிவாளர்கள் இருக்கின்றார்கள். எல்லா நாடுகளிலும் பகுத்தறிவு அமைப்புகள் இருக்கின்றன. எல்லாம் ஒன்றுபடுத்தி அவர்களுடைய உறுதுணை நமக்கிருக்க, நமக்கிருக்கின்ற உறுதுணை அவர்களுக்கு இருக்க, எல்லோரும் ஒன்றுபட ஒரு சூழ்நிலை இருக்கிறது என்பதை அருமை நண்பர் கி.வீரமணி அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். எதிர்காலத்தில் அதற்கான நல்ல சூழ்நிலைகள் வளர வேண்டும்.
பெரியார் வாழ்நாள் முழுக்கப் பாடுபட்டார்
ஆனால், பெரியார் அவர்கள் அறிவுக்கு மதிப்புத் தர வேண்டும் ஆற்றலுக்கு மதிப்புத் தரவேண்டும். உழைப்புக்கு மதிப்புத் தர வேண்டும். உண்மைக்கு மதிப்புத் தரவேண்டும். ஒழுக்கத்திற்கு மதிப்புத் தர வேண்டும், பண்புக்கு மதிப்புத் தர வேண்டும். மனிதனுக்கு மதிப்புத் தரவேண்டும். மனித முயற்சிக்கு ஊக்கம் தர வேண்டும், மனித முயற்சியினால் நடைபெறுகின்ற செயல்களுக்குப் பாராட்டுத் தர வேண்டும் என்கின்ற அடிப்படையிலேதான் தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய வாழ்நாள் முழுக்கப் பாடுபட்டார்.
மனிதன் ஏ.கே.47, பீரங்கி, அணுகுண்டுகளை கண்டுபிடித்து விட்டான். கடவுள்கள் கைகளில் சூலாயுதமும், சக்ரா யுதமும் இருக்கின்றதே. கடவுள்களால் என்ன பயன் என பகுத்தறிய வேண்டியுள்ளது
மாடு சிந்தித்துக் கொண்டு நிற்குமா?
மனிதன்தான் சிந்திக்கின்ற அறிவைப் படைத்தவன். மற்ற விலங்கினங்கள், பறவையினங்கள், ஊர்வன, பறப்பன, நீந்துவன போன்றவைகள் சிந்திக்காது. சூழ்நிலைகள் பொறுத்து, இயற்கைத் தன்மை அடிப்படையிலே தங்களுடைய குணங்களையும், தங்களுடைய தன்மைகளையும் அவைகள் பெற்றுள்ளன.
மாடு உட்கார்ந்து சிந்திக்கும் என்று சொல்லவே முடியாது. ஆடு சிந்திக்கும் என்று சொல்லவே முடியாது. ஒரு மாடு வீட்டுக்குப் பக்கத்திலே ஒரு மணி நேரமாக நின்று கொண்டிருக்கின்றதே அது என்ன சிந்தித்துக் கொண்டிருக்கின்றதா என்று எவனும் கேட்கமாட்டான். அது நாத்திகன் வீட்டு மாடாயிற்றே அதனால் சிந்தித்துக் கொண்டிருக்கின்றதா என்று எவனும் கேட்கமாட்டான். நாத்திகன் தான் சிந்திப்பானே தவிர மாடு சிந்திக்காது.
இரு வகையான தன்மைகள்
எது சரி? எது தப்பு என்று சிந்திக்கின்ற அறிவு மனிதனுக்குத்தான் உண்டு. உலகில் இயற்கையின் தன்மையில் இருவகையான தன்மைகள் உண்டு. வெப்பமும் உண்டு. குளிர்ச்சியும் உண்டு. நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. கொடுமையும் உண்டு. நலம் பயக்கின்ற தன்மையும் உண்டு. ஆக, பொய்யும் உண்டு உண்மையும் உண்டு. அந்த இரு வேறு தன்மைகளில் எது தப்பு? எது சரி என்று மனிதனால் மட்டும்தான் சிந்திக்க முடியும்.
செய்ய வேண்டியவைகள் எவை எவை? செய்யக் கூடாதவைகள் எவை எவை? செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருப்பதும் தவறு. செய்யக்கூடாததை செய்வதும் தவறு.
அறிவுடையாருக்கு எல்லாம் உண்டு
அறிவுடையார் எல்லாம் உடையார் என்றார் வள்ளுவர். அறிவுடையவர்கள் தான் எல்லாவற்றிற்கும் உரிமை உடையவர்கள் ஆவார்கள். அறிவற்றவர்கள் எதுவும் இல்லாதவர்களாகத்தான் - ஆவார்கள் என்று சொன்னார்கள். ஒருவருக்கு நூற்றுக்கு நூறு அறிவு இருப்பதில்லை . எழுபது பங்கு, எண்பது பங்கு இருந்தால் பேரறிவாளி.
மூளையின் பயன்பாடு பத்து இலட்சம்
நம்முடைய மூளையை நீங்கள் பார்த்தால்கூட நரம்பியல் மருத்துவர்கள் சொன்னார்கள் பெரிய அறிவாளிகள் என்று சொல்லப்படுபவர்களில் அவர்களுடைய மூளையில் உள்ள நரம்புகள் எவ்வளவு பயன்படுகிறது என்று சொன்னால் பத்து இலட்சத்தில் ஒரு பகுதிதான் பயன்படுகிறது என்று சொன்னார்கள். மற்ற செல்கள் எல்லாம் பயன்படாமல் அப்படியே இருக்கிறது. மூளையைப் பயன்படுத்தாமல் ரொம்ப பேர் இருக்கின்றான். ஏன் அநாவசியமாக பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றான்.
எருமை - காபி கொண்டுவா!
மூளையைப் பயன்படுத்தாதவனை எருமை என்று தான் சொல்லுகிறான், கழுதை என்றுதான் சொல்லுகிறான். நான் ஒரு வீட்டிற்குப் போயிருந்தேன். வீட்டுக்காரர் கேட்டார் - காபி சாப்பிடுகிறீர்களா என்று. கொடுங்கள் என்று சொன்னேன். எருமைண்ணு கூப்பிட்டார். (சிரிப்பு) எருமை இங்கு எப்படி வரும் என்று நினைத்தேன். ஓர் ஆள் வந்து நின்றார். போய் காபி எடுத்துக்கொண்டுவா என்று சொன்னார். ஏங்க அப்படிச் சொன்னீர்கள் - என்று கேட்டேன். எருமைக்கு எவ்வளவு அறிவு இருக்கிறதோ அவ்வளவு
அறிவுதான் இவனுக்கும் இருக்கிறது என்று அவர் சொன்னார். அதனால் இவனை எருமை என்றுதான் கூப்பிடுவது வழக்கம் என்று சொன்னார்.
கி.வீரமணி அவர்கள் சொன்னார்கள்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் சொன்னார். ‘ஆவதறிவார் அறிவுடையார்’ என்று. அதைத்தான் நண்பர் கி.வீரமணி அவர்கள் சொன்னார்கள். பின்னால் என்னென்ன ஆகும் என்பதை அறிந்து அறிவியல் துறையிலே, தொழில் நுட்பத்துறையிலே, வாழ்வியல் துறையிலே பகுத்தறிவு தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள் என்பதை விளக்கமாகக் கூறினார்.
(தொடரும்)
உண்மை இதழ் ஜூலை16- ஆகஸ்ட் 15. 20
உண்மை என்ன?
ஆண் - பெண் சேர்க்கை இல்லாமலே கூட குழந்தைகள் பெறமுடியும் என்று அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.
“எப்பொருள் யார், யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு’’ என்று வள்ளுவர் சொன்னார். ஆகையால் சொன்னதையும் அப்படியே நம்பிவிடாதே அதை ஆராய்ந்து பார்த்து அதனுடைய உண்மையான பொருளை கண்டறியுங்கள் என்று சொன்னார்.
இந்த ரிஷி சொன்னார். முனிவர் சொன்னார். ஆண்டவன் சொன்னான் புரோகிதர் சொன்னார். மகரிஷி சொன்னார். காவி வேட்டி சாமியார் சொன்னார். வெள்ளை வேட்டி சாமியார் சொன்னார். இதை எல்லாம் அவன் சொன்னால், இவன் சொன்னான் என்று சொல்லாமல் ஒருவன் சொன்னதில் உண்மையான தன்மை என்ன என்பதை கண்டறிய வேண்டும் என்று வள்ளுவர் சொன்னார்.
மெய்ப்பொருள் காணுங்கள்
அடுத்து ‘எப்பொருள் எத்தன்மையாயினும்’ என்று சொன்னார். குரானில் இருப்பதினால் அதை நம்புகிறேன். பைபிளில் இருப்பதினால் அதை நம்புகிறேன். பகவத் கீதையில் இருப்பதால் அப்படியே நம்புகிறேன். தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்விய பிரபந்தம், பெரிய புராணத்தில் இருப்பதால் அப்படியே நம்பக்கூடாது. ஆகவே எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று சொன்னார்.
‘குடிஅரசை’ பார்க்காதவர்கள்
இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் வாழ்நாள் முழுக்க சொன்னார். பச்சை அட்டை ‘குடிஅரசு’ ஏட்டிலே 1924, 25லே கூட அதில் முதல் பக்கத்தில் ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு என்ற குறள் தான் இருக்கும் இதை பெரியார் அவர்கள் போட்டு வைத்திருப்பார் பல பேர் ‘குடிஅரசு’ இதழையே பார்த்திருக்கமாட்டார்கள்.
பெரியார் கருத்தை ஏற்கிறார்கள்
ஆனால் தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளை அறிந்தோ, அறியாமலோ புரிந்தோ புரியாமலோ விரும்பியோ, விரும்பாமலோ, ஏற்றுக் கொண்டோ, அல்லது ஏற்றுக் கொள்ளாமலோ அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டு வருகிறார்கள் என்பது மட்டும் உண்மை. (பலத்த கைதட்டல்)
ஒலி பெருக்கியை ஆண்டவனா - கண்டுபிடித்தான்?
ஒலி பெருக்கியை ஆண்டவனா உண்டாக்கினான்? காரை ஆண்டவனா உண்டாக்கினான்? விமானத்தை ஆண்டவனா உண்டாக்கினான்? நாம் பார்க்கின்ற அத்துணை பொருளும் மனிதனுடைய அறிவு ஆற்றல், ஆராய்ச்சி தன்மையினுடைய விளைவாக வந்ததே தவிர, 5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏன் ஒலி பெருக்கி கண்டுபிடிக்கவில்லை.
துப்பாக்கி முனையில் விமானக் கடத்தல்
இன்றைக்கு எவ்வளவோ ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஏ.கே.47 என்ற துப்பாக்கியை வைத்துதான் விமானத்தையே கடத்தியிருக்கின்றான் (சிரிப்பு) நல்ல வேளையாக இன்று மாலை. ஒரு செய்தி வந்தது. இந்திய-அரசு மூன்று கைதிகளை விடுதலை செய்வதாக அறிவித்ததன் காரணமாக 155 பயணிகள் விடுவிக்கப்பட்டார்கள் என்ற செய்தி வெளி வந்துள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்
முதலில் கடத்தல்காரர்களை காரில் ஏற்றி அனுப்பிவிட்டார்கள். (சிரிப்பு). அதன் பிறகு பயணிகளை விமானத்திலிருந்து இறக்கி, தனி விமானம் மூலம் பயணிகளை இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். ஆக பயணிகளையும், விமானங்களையும் கடத்துவதற்குக்கூட இரண்டு ஆயுதங்கள் பயன்பட்டிருக்கிறது.
கடவுள் கையில் சூலாயுதம்
இன்னமும் நமது பரம சிவன் கடவுள் சூலம் தானே வைத்திருக்கின்றான். (சிரிப்பு- கை தட்டல்) ஏ.கே. 47 வந்து விட்டது. போபர்ஸ் பீரங்கி எல்லாம் வந்துவிட்டது. அணுகுண்டு எல்லாம் வந்து விட்டது. ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கு ஏவுகணைகளை விடுகின்றான். நாம் அய்ந்து அணுகுண்டுகளை வெடித்தால், பாகிஸ்தான்காரனும் - மூன்று அணுகுண்டுகளை வெடித்துக் காட்டுகின்றேன் என்று செய்கின்றான்.
இவ்வாறு குண்டுகள் வந்ததற்குப் பிறகும் கடவுள் கைகளில் சூலாயுதமும், வேலாயுதமும் தானே இருக்கின்றது. (சிரிப்பு) கடவுள் சக்ர ஆயுதத்தை இன்னும் வைத்துக் கொண்டிருக்கின்றான். காட்டுமிராண்டி காலத்திலே மனிதன் கண்டுபிடித்து கடவுள் கைகளில் கொடுத்த ஆயுதங்கள் எல்லாம் இவைகள் (சிரிப்பு). அதற்குப் பிறகு ‘கடவுள்கள்’ திருந்தவே இல்லை . (கைதட்டல்). கடவுள் படிக்கவில்லை. பள்ளிக்கூடத்திற்கும் போகவில்லை. கல்லூரிக்கும் போகவில்லை. ஆனால் சூலாயுதத்தை மட்டும் வைத்திருக்கின்றான். சிவபெருமான் புலித்தோலை - இடுப்பிலே கட்டிக்கொண்டு, யானைத்தோலைப் போர்த்திக் கொண்டு - தான் இருக்கின்றான். அன்றைக்கு காட்டுமிராண்டி காலத்தில் வேறு இல்லை. பஞ்சு நூலை கோர்க்கவா கற்றுக் கொண்டான்?
மனிதனானான்
மனிதன் குரங்கு மாதிரி - தான் இருந்தான். டார்வின் தான் கண்டுபிடித்தார். மனிதன் வாலுள்ள குரங்காக இருந்தான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வால் போய், - நாலு காலில் நடந்தவன் பிறகு இரண்டு காலில் நடந்து, பிறகு கூனி நடந்து அதன் - பிறகு நிமிர்ந்து இரண்டு கால்களால் நடந்தான் கொஞ்சம், கொஞ்சமாக சில பழக்கங்களை விட்டு இப்பொழுது மனிதனாகியிருக்கின்றான்.
பென்சிலின் -கண்டுபிடித்தது கடவுளா?
ஒரு மனிதன் பென்சிலின் கண்டுபிடித்து உலகத்திற்கு எவ்வளவு பெரிய நன்மைகளை செய்திருக்கின்றான். ஆபரேசன் செய்வதற்கு மயக்க மருந்து கண்டுபிடித்தவன் உலகத்திற்கு எவ்வளவு நன்மை செய்திருக்கின்றான்.
உடலில் ஒரு பகுதியில் ஆபரேசன் செய்ய வேண்டுமென்றால் அந்த இடத்தில் மட்டும் மயக்க ஊசியைப் போட்டு ஆபரேசன் செய்து விடுகின்றான். நாம் முழித்துக் கொண்டு, பேசிக் கொண்டிருந்தால் கூட ஊசி போட்டு மறுத்துப் போக வைத்து வலியே இல்லாது ஆபரேசன் செய்துவிடுகிறார்களே (கை தட்டல்) இவைகளை எல்லாம் கடவுளா கண்டுபிடித்தது.
குண்டூசியால் எவ்வளவு பயன்!
ஒன்றுமில்லை. குண்டூசி கண்டுபிடித்தவன் உலகத்திற்கு எவ்வளவு பெரிய நன்மைகளை - செய்திருக்-கிறான். இரண்டு தாள்களை ஒன்றோடு ஒன்று சேர்க்க வேண்டுமென்றால் அதை - குண்டூசியால் குத்தி சேர்க்க - முடியும் என்று கண்டுபிடித்தான். அந்த குண்டூசி எவ்வளவு பயன்பட்டிருக்கிறது.
அவன் செய்த நன்மைகளை இந்த காவி வேட்டி கட்டியவன் எவனாவது செய்தானா? ஆனால் அதை அத்துணை பேரும் அனுபவிக்கிறார்கள். (சிரிப்பு).
சிரமங்களைக் குறைத்து
அறிவியல் வளர, வளர அறிவியல் கண்டுபிடிப்புகள் வளர, வளர அதைத் தொழில் நுட்ப இயலாக மாற்றி மனிதன் தன்னுடைய - அறிவுத் திறமையினால் - இப்படிப்பட்ட பயன்படுகின்ற பொருள்களை உள்ள படியே மனித சமுதாயத்திற்குப் பயன்படுகின்ற பொருள்களை, மனித சமுதாயத்தின் நேரத்தைக் குறைத்து, உழைப்பைக் குறைத்து சிரமங்களைக் குறைத்து எளிதான வாழ்வை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.
20-ஆம் நூற்றாண்டில் தொழில் நுட்ப வளர்ச்சி
அறிவியல் என்பது உள்ள படியே இருக்கின்ற பண்புகளைக் கண்டுபிடித்துச் சொல்லும். இருக்கின்ற இரும்புக்கு என்ன பண்பு என்பதை விஞ்ஞானம் (கண்டுபிடித்துச் சொல்லும். செம்புக்கு என்ன பண்புண்டு, மின்சாரத்திற்கு என்ன பண்பு உண்டு என்பதை விஞ்ஞானம் கண்டுபிடித்துச் சொல்லும் அதைப் பொறுத்திப் பார்த்து பொருள்களினுடைய நுட்பத்தோடு சேர்ப்பது டெக்னாலஜிதான். இருபதாம் நூற்றாண்டிலேதான் தொழில் நுட்பம் வளர்ந்து இன்றைக்கு கணினி அளவுக்கு வந்து நின்றிருக்கின்றது.
செவ்வாய்க்கோள் செல்லும் மனிதன்?
விண்வெளியில் உள்ள செவ்வாய்க் கோளுக்கு மனிதன் சொல்லக்கூடிய அளவிற்குக் கண்டுபிடித்திருக்கின்றான். அறிவியலினுடைய அடிப்படைத் தன்மைகளை அய்ன்ஸ்டீன் போன்றவர்கள், கலிலியோ போன்றவர்கள், கோபர்நிகோலஸ் போன்றவர்கள், எல்லாம் கண்டுபிடித்து, கண்டுபிடித்துத்தர அதனை தொழில்நுட்ப அறிஞர்கள் பொருள்களாக மாற்றி, மாற்றிக் கண்டுபிடித்தனர். இப்படித்தான் தொலைபேசி, தொலைக்காட்சி, புகை வண்டி, கார், விமானத்தைக் கண்டுபிடித்தனர்.
11,000 பேர் ஒரிசாவில் இறந்தவர்கள்- நாத்திகர்களா?
எதையும் விரைவாக அறிந்துகொள்ள மனிதனுடைய முயற்சிதான் பயன்பட்டிருக்கின்றது.
ஒரிசாவிலே வெள்ளம் வந்து பதினோராயிரம் பேர் செத்துப் போனார்கள். அவர்கள் அத்துணை பேருமா நாத்திகர்கள்? (சிரிப்பு). அவனவன் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டு விட்டு பிரார்த்தனை செய்யாமலா இருந்தான்?
அமெரிக்காவிற்கு அருகிலே விமானத்தில் சென்றவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் விமானம் நொறுங்கி செத்தார்கள் என்று இருக்கின்றது.
பக்தியைவிட புத்தி முக்கியம்
இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார். மனிதனுக்கு பக்தியை விட புத்தியே முக்கியம் என்று சொன்னார். பக்தியின் மூலமாக மனிதர்களை மடையர்களாக ஆக்கிவிட்டார்கள் என்று சொன்னார். பக்தி இல்லை என்றால் நான் மட்டும்தான் கெட்டுப்போவேன். ஆக என்ன முக்கியம் என்று சொன்னால் ஒழுக்கம் முக்கியம் என்று சொன்னார்.
ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே கெடும்
ஒழுக்கம் இல்லாவிட்டால் ஊரே கெடும். ஒழுக்கம் - இல்லாவிட்டால் குடும்பமே கெடும் என்று சொன்னார். ஒழுக்கம் இல்லாவிட்டால் உலகமே கெடும் என்று சொன்னார். அய்ந்து பேருக்கு ஒழுக்கம் இல்லாததால் தானே விமானக் கடத்தலே நடைபெற்றது (கை தட்டல்). ஒழுங்கு என்பதில் இருந்து வந்ததுதான் ஒழுக்கம்.
மனித சமுதாயத்திற்கு எது பண்பு என்று கேட்டால் ஒழுக்கம் என்று வள்ளுவர் சொன்னார். ஒருவன் மூன்று எம்.ஏ., படித்திருந்தாலும் அவனுக்கு மனித பண்பு இல்லாவிட்டால், ஒழுக்கம் இல்லாவிட்டால் அவன் மரத்திற்குச் சமம் என்று வள்ளுவப் பெருந்தகை சொன்னார்.
பெரியார் கருத்துகளை யார் ஏற்கிறார்கள்
தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளை ஒரு மனிதன் அறிந்தோ, அறியாமலோ ஏற்றுக் கொள்கின்றான். மனிதன் பண்பட்ட அடிப்படையில், மனிதன் மானமுள்ளவனாக வாழ வேண்டும் என்ற தன்மையில் எடுத்துச் சொன்னார். நம்முடைய நாட்டிலே இருக்கின்ற வேதங்கள், புராணங்கள், -இதிகாசங்கள், கதைகள் எல்லாம் நம்முடைய. மானத்தை, மரியாதையை இழக்கச் செய்து நம்மைக் கூலிகளாய், அடிமைகளாய் இருந்த நிலைமையிலிருந்து மாறி, மானுட சமுதாயத்தை மானமுள்ள சமுதாயமாக மாற்றுவது என்னுடைய வேலை; அறிவுடைய சமுதாயத்தை உருவாக்குவது என்னுடைய கொள்கை என்று, சொன்னார்.
(தொடரும்)
மானம் பெரிதா? சோறு பெரிதா?
சிலர் நம்முடைய நாட்டிலேகூட மானம் பெரிதா? _ சோறு பெரிதா? என்று - கேட்கின்றார்கள். மானம் அவ்வளவு பெரிதல்ல, சோறு தான் பெரிது என்று சொல்கின்றவர்களும் இருக்கின்றார்கள் (கை தட்டல்).
ஆக மனித முயற்சியினால் தான் உலகம் வளர்ந்து கொண்டு வருகின்றது. அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி பெரியாருடைய கொள்கைகளுக்கு, கோட்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றன. ஆகவேதான் அறிந்தும், அறியாமலும் அத்துணை பேரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
சன்னதிக்கு மட்டும் தீவட்டி எதற்கு?
இன்றைக்கு மின்சார விளக்கைப் பயன்படுத்துகின்றான். காரைப் பயன்படுத்துகின்றான். ஆனால் கடவுள் சன்னதியிடம் மட்டும் தீவட்டி எடுத்துக் கொண்டு போகின்றான் (கை தட்டல்). அங்கே மட்டும் எதற்கு தீவட்டி? அது காட்டு மிராண்டி கண்டுபிடித்தது.
இன்றைக்கு எதற்கு கொண்டு சட்டி?
தந்தை பெரியார் ஒரு முறை சொன்னார். ஒருவன் செத்தவுடன் பிணத்தைச் சுமந்து கொண்டு செல்கின்றார்கள். எதற்குக் கூட செல்கின்றவன் நெருப்புச் சட்டியை எடுத்துக் கொண்டு போகின்றான்?
ஒரு காலத்திலே நெருப்பு கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்தது. தீப்பெட்டி கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு வீட்டில் அடுப்பு எரிந்து கொண்டிருக்கும். - இன்னொரு அடுப்பு பற்ற வைக்க வேண்டுமானால் எரிகின்ற அடுப்பிலிருந்து ஒரு நெருப்பை எடுத்து அடுத்த அடுப்புக்குப் பற்ற வைப்பார்கள்.
ஆக, தீயை உண்டாக்க முடியாத காலத்தில் சுடுகாட்டில் நெருப்பு கிடைக்காது என்கிற காரணத்தினாலே வீட்டிலே இருந்து நெருப்பை சட்டியில் வைத்து தூக்கிக் கொண்டு போனான்.
தந்தை பெரியார் கேட்-டார். “இப்பொழுது எதற்கு நெருப்பைத் தூக்கிக் - கொண்டு போகின்றாய்?’’’ என்று கேட்டார் (சிரிப்பு - கை தட்டல்). இப்பொழுது தான் தீப்பெட்டி வந்திருக்கிறது பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கிழித்துப் பிணத்தின்மீது வைக்க வேண்டியது தானே? தீப்பெட்டியைக் கண்டுபிடித்த பிறகும் ஏன் கொண்டு சட்டி தூக்குகிறாய் என்று பெரியார் கேட்டார் (சிரிப்பு, கை தட்டல்). அறிவு இருக்கிறதா உனக்கு என்று கேட்டார்.
கடவுள் இதுவரை வரவில்லையே!
பெரியாரிடம் ஒருவர் வந்து கேட்டார், “இப்படி கடவுள் இல்லை, இல்லை என்று சொல்லிக்கொண்டு வருகிறீர்களே - திடீர்னு கடவுள் ஒரு நாள் வந்து உங்கள் முன்னால் நின்று நான் இருக்கிறேனே என்று கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?’’ என்று கேட்டார். பெரியார் அப்பொழுது சொன்னார்,
“அப்படி கடவுள் என் முன்னால் தோன்றினார் என்றால் இருக்கிறார் என்று சொல்லி விட்டுப் போகின்றேன்’’ (சிரிப்பு - கை தட்டல்).
“ஆக, கடவுள் இருந்து நான் இல்லை என்றா சொல்லுகின்றேன்? இது வரையிலும் அவர் வரவில்லையே, அதனால் இல்லை என்று - சொல்லுகின்றேன்’’ என்று சொன்னார்.
நம் நாடு அறிவுடைய நாடுதான்
நம்முடைய நாடு அறிவு பெற்ற நாடுதான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே திருக்குறளும், தொல்காப்பியமும் வந்து விட்டது. பேசினான் என்பதைச் சொல்ல 46 சொற்கள் உள்ளன. உரைத்தான் சொன்னான், பேசினான், கதறினான், இயம்பினான் என்று இப்படி 46 சொற்கள் உள்ளன. இதற்கு இலக்கணம் வகுத்து இது எழுவாய், பயனிலை. இது உயிர், மெய், சந்தி, விகாரம் என்று கண்டுபிடித்தான் என்றால் இவற்றை எல்லாம் எத்துணை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே கண்டுபிடித்திருக்க வேண்டும்?
1999-ஆம் நூற்றாண்டிலிருந்து 2000 ஆம் நூற்றாண்டு வரைக்கும் விஞ்ஞானம் வேகமாக வளர்ந்திருக்கின்றது. இருபதாம் நூற்றாண்டி-லிருந்து இருபத்தி ஓராம் நூற்றாண்டு இன்னும் வேகமாக வளர்ந்திருக்கின்றது.
இன்றைக்கு அறிவு மழுங்கியிருக்கிறதே?
ஆனால், இலக்கணம், ஒரு சொல் வருவதற்குகிட்டத்தட்ட 100 ஆண்டுகள் ஆகியிருக்கின்றது. மற்ற நாட்டுக்கு இந்த நாடு அறிவைக் கற்றுக் கொடுத்தது. இன்றைக்கு அறிவு மழுங்கிக் கிடக்கிறது. முதன் முதலில் குமரிக் கண்டத்தில் தான் உயிர் தோன்றிற்று என்றும், உயிர் தோன்றுவதற்கான தட்ப, வெப்பநிலை அங்கு தான் இருந்தது என்றும், பழங்காலத்து மக்கள் புழங்கிய பொருள்கள், இந்து மாக்கடலில்-தான் அதிகம் - கிடைத்தன என்றும், ஆரம்ப காலத்தினுடைய தன்மைகள் அங்கு-தான் இருந்திருக்க முடியும் என்றும் பல்வேறு மேல்நாட்டு அறிஞர்களும், வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள். இதுதான் தென்னாட்டு நாகரிகமாக ஆகியிருக்கிறது. இதுதான் மொகசஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகமாக ஆகியிருக்கிறது. பிறகு சுமேரிய நாகரிகமாக மாறி, பிறகு - அரபு நாகரிகமாக மாறி, பிறகு கிரேக்க நாகரிகமாக, ரோம் நாகரிகமாக ஆகியிருக்கிறது. பிறகு மாறி அய்ரோப்பிய கண்டம் பூராவும் பரவி, நாகரிகமும், பண்பாடும், அறிவுத் தன்மையும் பரவின என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகின்றார்கள்.
பலவித நாகரிகங்கள்
குமரி நாகரிகம் 7000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லுகின்றார்கள். தென்னாட்டு திராவிட நாகரிகம் 5000 ஆண்டு-களுக்கு முற்பட்டது என்று சொல்கிறார்கள். 4500 ஆண்டுகளுக்கு முற்பட்டது மொகஞ்ச-தாரோ நாகரிகம். -- 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது சுமேரியர் நாகரிகம்.- 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது அரேபிய நாகரிகம் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது- எகிப்து நாகரிகம். 2500ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்டது கிரேக்க நாகரிகம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ரோம் நாகரிகம்.
ஸ்பெயின் நாட்டு திராவிடன்
திராவிடன் நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே -_ எம்.ஏ., படித்துக் கொண்டிருந்த பொழுது ஃபாதர் ஹீராஸ் மொகஞ்சதாரோ சொற்பொழிவாற்ற அங்கே மூன்று நாள்கள் வந்தார். அப்பொழுது அவருக்கு வயது 80 இருக்கும். கண்கூட சரியாகத் -தெரியாது. வெள்ளை வெளேர் என்று பெரியார்மாதிரி தாடி வைத்திருப்பார். அவர் மூன்றாவது நாள் கடைசியில் பேசி முடிக்கும் பொழுது ஒன்றைச் சொன்னார். இதுவரை நான் ஃபாதர் ஹீராசாகப் பேசவில்லை. ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த ஒரு திராவிடன் பேசுகிறேன் என்று சொன்னார். அதற்கு பல காரணங்கள் சொன்னார். உலகத்தில் முதன் முதலில் எண் 10 என்பதைக் கண்டுபிடித்தவன் தமிழன் தான் என்று சொன்னார்
வாரத்திற்கு ஏன் 7 நாள்கள்?
அது ஏன் 13 வரை போக வில்லை? அல்லது அது 8 வரை நின்றிருக்கலாம் அல்லவா? செல்பேசி எண் 10 என்பதை யார் கண்டுபிடித் யார்? எங்கிருந்து? எங்கு பரவியது? கோடி; பத்து ஆயிரம், இலட்சம், கோடி, பத்து கோடி என்ற ஆரம்ப எண்ணைக் கண்டுபிடித்தது இங்குதான். வாரத்திற்கு ஏன் 7 நாள்கள் என்று இருக்க வேண்டும்? வாரத்திற்கு 10 நாள்கள் இருக்கலாமா இல்லையா? வாரத்திற்கு
30 நாள்கள் இருக்கலாமா? இல்லையா? அந்த அய்டி யாவும் இங்கிருந்து தான் போனது என்று அவர் சொன்னார்.
சூரியனை வைத்து ஆண்டு கணக்கீடு
திங்களை வைத்து, சந்திரனை வைத்து, மாதத்தை வைத்து கணக்கிடுவது இங்கிருந்து-தான் போனது என்று சொன்னார். அதனால்தான் வாரத்திற்கும் திங்கள் என்று எழுதுகின்றான். மாதத்திற்கும் திங்கள் - என்று எழுதுகின்றான். திங்களை வைத்து, சந்திரனை வைத்து மாதத்தைக் கணக்கிடுவது இங்கிருந்துதான் போனது என்று சொன்னார்.
கோள்களின் பெயர்களே-கிழமைகளுக்கும்
அதே மாதிரி கோள்களுக்குள்ள பெயரைத்தான் திங்கட்கிழமை, செவ்வாய்க் கிழமை, புதன்கிழமை என்று சொன்னார். சங்க இலக்கியங்களில்கூட ஞாயிறு, திங்கள், புதன் என்ற பெயர்கள் இருக்கின்றன. திராவிடர்களின் ஞாயிற்றுக் கிழமையை சண்டே என்றும், திங்கள் கிழமையை மூண்டே என்றும் வெள் ளைக்காரர்கள் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லுகின்றார்கள்.
நம்முடைய அறிவு வீழ்வதற்குக் காரணம் என்னவென்றால், வேதம், இதிகாசம், புராணம் இவைகள் தாம்.
வீரமணி சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்
அறிவைப் பயன்படுத்தியதால்தான் ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகள் வளர்ந்தன. - நமது நாடும் அறிவைப்- பயன்படுத்தி வளர வேண்டும் என்பதற்காகத்-தான் பெரியார் அவர்கள் அறிவுக்கு மதிப்புத் தாருங்கள், அதற்கு ஆக்கம் தாருங்கள் என்றெல்லாம் எடுத்துச் சொன்னார்கள்.
அத்தகைய கருத்துகளைப் பயன்படுத்த இந்த நாள் ஓர் எழுச்சி தரும் நாளாக அமைய வேண்டும் -_ என்பதற்காகத்தான் பெரியார் புத்தாயிரம் விழாவைக் - கொண்டாட அருமை நண்பர் வீரமணி அவர்கள். சிறப்பாக இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள்.
வேறு வகையில் போகும் நாடு பாழ்படும்
படிக்க முடியாவிட்டாலும், ஆராய முடியாவிட்டாலும் சொற்களைக் கேட்டு சிந்திக்க வேண்டும் என்று எடுத்துச் சொன்னார். ஆக பகுத்தறிவு நெறிதான் பண்பட்ட நெறி, பயன்படுத்தக் கூடிய நெறி, நேரத்தை வீணாக்காத நெறி, மனிதனுடைய நேரத்தையும், உழைப்பையும் பயன்படுத்து-வதற்குரிய நெறி. வேறு வகையில் போகுமேயானால் நாடு பாழ்படும். சமுதாயம் பாழ்படும். அதை எல்லாம் நீக்குவதற்கு பெரியாருடைய கொள்கைகள் பரவுதல் வேண்டும். பெரியார் புத்தாயிரம் பொலிவுமிக்க ஆயிரமாக..... ஆக பல்வேறு பழக்க வழக்கங்கள், குருட்டு நம்பிக்கைகளை அறிவியல், தொழில் நுட்பக் கருத்துகள் தூள் தூளாக்கி வருகின்றன. பல்வேறு புராணக் கருத்துகள் எல்லாம் தானாக மடிந்து கொண்டு வருகின்றன. எதிர்காலம் பெரியாருடைய புத்தாயிரம் பொலிவு மிக்க ஆயிரமாக, அறிவுமிக்க ஆயிரமாக,- ஆற்றலுக்கு மதிப்புத்தருகிற ஆயிரமாக, மனிதத் தன்மையை வளர்க்கின்ற ஆயிரமாக விளங்கும்.
வாழ்நாளில் ஒருவர் பெறக்கூடியது
வாழ்நாளில் ஒருவர் பெறக்கூடியது எது என்று கேட்டால் மிக்க மகிழ்ச்சியோடு இருக்கக் கற்றுக் கொள்ளுதல். இன்பமான முடிவைக் காணுகின்ற அளவுக்கு ஒவ்வொன்றும் நடக்க வேண்டும். அந்த நிலை எய்த வேண்டும் என்பதற்காகத்தான் பெரியார் அவர்கள் தன்னுடைய உழைப்பைச் செலுத்தினார்கள்.
பெரியார் அவர்கள் 95 வயது வரை நாடு, நகரம், பட்டித் தொட்டி எங்கும் சுற்றிச் சுழன்று வந்து இந்த நாட்டு மக்களுக்கு அறிவை உருவாக்கி அவர்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கருதினார். நாம் ஒன்றுபட வேண்டும்
ஆண்டுதோறும் பெரியார் பெயரால் புத்தாயிரத்தை உண்டாக்கி இத்தகைய கருத்துகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் தர வேண்டும். அந்த வகையிலே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களை நான் மிக, மிகப் பாராட்டுகின்றேன். அந்த அளவுக்குப் பாடுபட நாம் அனைவரும் ஒன்றுபடுதல் வேண்டும்.
வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சி வேண்டும்;
விசை ஒடிந்த தேகத்தில் வலிமை வேண்டும்;
சூழ்ச்சிதனை, வஞ்சகத்தை பொறாமைதனை தொகையாக நிறுத்தி தூள் தூளாக்குகின்ற காட்சி மிக வேண்டும்; கடல் போல் செந்தமிழ் பெருக்க வேண்டும்
கீழ்ச் செயல்கள் விட வேண்டும்; பெரியார்தம் புகழ் சொல்லி வாழ்த்த வேண்டும், வேண்டும்;
அறிஞர் அண்ணா புகழ் சொல்லி வாழ்த்த வேண்டும் என்று கூறி விடைபெறுகின்றேன்.
இவ்வாறு டாக்டர் - நாவலர் உரையாற்றினார்.
- உண்மை இதழ் செப்டம்பர்16 - 30 .2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக