பக்கங்கள்

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

தமிழ்ச் சூழல்: சமூக நீதி - வ.உ.சி.- 2


* வீ.அரசு

நேற்றைய (3.2.2021) தொடர்ச்சி...

வ.உ.சி இதில் கல்கத்தா காங்கிரஸ் என்று குறிப் பிடுவது 1917இல் அன்னிபெசண்ட் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆகும். அன்னிபெசண்ட் குறித்து கருத்து நிலையில் முரண்பட்டிருந்த வ. உ.சி, அந்த மாநாட்டு நிகழ்வுகள் அவரை அந்த அமைப்பி லிருந்து செயல்படுவதைத் தவிர்க்க ஏதுவாயிற்று. 1917இல் தொடங்கி 1926 வரை இவ்வகையான மன நிலையில் இருந்தார். இந்தச் சூழலில் 1917இல் உருவாக்கப்பட்ட சென்னை மாகாண சங்கம் சேர்ந்த காங்கிரஸ்காரர்களால் கோவை மாநாடு 1927இல் கூட்டப்பட்டது. அதில் வ.உ.சி பங்கேற்றார். இதற்கு முன் 1919 இல் ஈரோட்டில் சென்னை மாகாண சங்கத்தின் இரண்டாம் ஆண்டு மாநாடு நடைபெற்றது. இதில் வ.உ.சி. பங்கேற்றார். 1920இல் திருநெல்வேலியில் நடைபெற்ற இருபத்தாறாவது. சென்னை மாநில அரசியல் மாநாட்டில் பங்கேற்றார். அதில் அரசு வேலை வாய்ப்புகளில் பார்ப்பனர் அல்லாதாருக்கு உரிய வாய்ப்பு வழங்குதல் தொடர்பான தீர்மானத்தை வ.உ.சி. கொண்டு வந்தார். (‘இந்து’ ஜூன் 25, 1920-224; 1995). இந்த மாநிலத்தில் தற்பொழுதைய நிலைமை யைக் கவனத்தில் கொண்டு, அரசு பொது வேலைகளி லும், கவுரவ உத்தியோகங்களிலும் பிராமணரல்லாத சமூகங்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப் படவேண்டும் (224-225: 1995) என்பது வ.உ.சி. கொண்டு வந்த தீர்மானம் ஆகும். 1927 ஜூலையில் கோவையில் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டில் வ.உ.சி ஆங்கிலத்தில் ஆற்றிய உரை 'இந்தியன் காலாண்டு ரிஜிட்டர் - ஜூலை - டிசம்பர் இதழில் வெளிவந்துள்ளது. அதன் மொழியாக்கம் பின் வருமாறு அமைகிறது (225:1995).இதில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை முழுமையாக வ.உ.சி. ஆதரிப் பதை அறியமுடிகிறது. “காங்கிரஸ் அமைப்பாளர்கள், பிராமணரல்லாதவர்கள். ஆனால் இப்பொழுது அதிகாரம் பிராமணர்களிடம் உள்ளது. இப்பொழுது எடுக்கப்படும் நடவடிக்கை அந்த அதிகாரத்தை மீட்டுக் கொள்வதற்காகத்தான், சுய ஆட்சிக்காகப் பாடுபடும் பிராமணரல்லாத சிறந்த தேசபக்தர்கள் காங்கிரசில் உள்ளனர். இந்தச் சிறந்த பிராமணரல்லா தவர்களுடன், நீதிக் கட்சியின் பிராமணரல்லாதவர் களும் இணைந்து சுய ஆட்சிக்கு பாடுபட்டால், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் களத்தில் இருந்து காங்கிரஸ் விலகி நிற்காது. இந்தியாவில் பல்வேறு வகுப்புகளும் சமூகங்களும் இருக்கின்ற வரையில் அவர்கள் அனைவரும் காங்கிரசில் கண்டிப்பாக சேர வேண்டும்” (225:1995).

மேற்குறித்த வ.உ.சியின் கருத்து நிலைப் பின்புலத் தில் சேலத்தில் 1927 இல் நடைபெற்ற காங்கிரஸ் அரசியல் மாநாட்டில் வ.உ.சி. நிகழ்த்திய தலைமை உரை அமைந்தது. அந்த உரையே 5.11.1927 இல் 'எனது பெருஞ்சொல்' எனும் தலைப்பில் சிறு வெளியீடாக வந்தது. இதில் வ.உ.சி.யின் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் எனும் கருத்துநிலை முழுமையாகப் பதிவாகி யுள்ளது.

1917இல் தொடங்கி, தொடர்ச்சியாக வ.உ.சி. பார்ப் பனர் அல்லாதாருக்கான சமூக நீதியான வகுப்புவாரி உரிமையை முன்னெடுத்து வந்துள்ளதை மேற்குறித்த பல்வேறு செய்திகளின் அடிப்படையில் நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது. இந்தப் பின்புலத்தில் அவருக்கு பெரியாரோடு கருத்துநிலையில் உடன்பாடு உருப்பெற்றதை நாம் விளங்கிக்கொள்ள முடியும், சமூக நீதிக்காக காங்கிரஸ் மாநாடுகளில் தொடர்ச்சி யாக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானங்களைக் கொண்டுவந்த காங்கிரஸ்காரரான பெரியார், அது அங்கு ஏற்றுக் கொள்ளாத நிலையில் 1925இல் சுயமரி யாதை இயக்கத்தை உருவாக்குகிறார். இதே காலங் களில் இவ்வகையான கருத்துநிலைக்கு உடன்பாடு உடைய காங்கிரஸ்காரராக வ.உ.சி செயல்பட்டார் என்பதை அவரது சொற்கள் உறுதிப்படுத்துகின்றன. பெரியார் வெளியேறினார். வ.உ.சி. காங்கிரஸ் அமைப் பிற்குள் இருந்தே அதைப் பேசினார். இவ்வகையான கருத்துநிலை, தமிழ்ச் சூழலில் உருவான 'சமூகநீதி' அரசியல் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இதில் பெரியாரும் வ.உ.சியும் உடன்பட்ட கருத்து நிலையாளர்களாக வெவ்வேறு அமைப்புகள் சார்ந்து செயல்பட்டனர். வ.உ.சி.யின் இந்த வகையான அணுகுமுறை, தமிழ்ச் சமூகப் பொது வெளியில் பரவலாக அறியப்படவில்லை என்றே கருத முடியும்

வ.உ.சியின் தொடக்ககால அரசியல் கருத்துநிலை வெளிப்பாடும், அவரது பிற்கால சமூகநீதி சார்ந்த கருத்து நிலைகளின் வெளிப்படும் கருத்து நிலைக்கு உடன்பட்டதாகவே அமைகிறது. இதனை அவரது 'சுதேசாபிமானம்' கட்டுரை மூலம் அறிய முடிகிறது. 1906 இல் 'விவேக பாநு' எனும் இதழில் அவர் எழுதிய கட்டுரை இது.

"சுதேசத்தார் ஒன்று சேர்வதற்கும் ஒற்றுமையாக இருப்பதற்கும் முக்கிய தடைகள் ஜாதியபிமானம் மதாபிமானங்களே, உலகத்தில் தாழ்ந்த நிலைமைய டைந்த ஒவ்வொரு தேசத்தின் சரித்திரத்தையும் கவனிப்போமாயின் சுதேசத்தாருக்குள் ஜாதி பேதம் மதபேதம் ஏற்பட்டுச் சுதேச ஒற்றுமைகளையும் பேதப் படுத்தி சுதேச நிலைமையும் பேதப்படுத்தினதாகத் தெரியவரும். சுதேசத்தாரெல்லோருக்கும் பொது வாயத் தோர் நன்மைகளைப் பயக்கும் செயல்களைச் செய்ய வேண்டுங்கால் சுதேசத்தார். ஒவ்வொருவரும் அவரவர்க்குள் நிகழா நிற்கும் சொந்த வேற்றுமை களைப் பாராட்டல் கூடாது.” (44-45: 1989). இவ்வகை யில் வ.உ.சி. எனும் ஆளுமை சமூக முரண்கள் குறித்தப் பார்வையுடையவராகவும் அதனைப் பற்றிய புரிதலில் அவருக்கேயுரிய தனித்த பார்வையுடைய வராகவும் வாழ்ந்தார் என்பதைப் புரிந்து கொள்ள இயலுகிறது. இதன் ஒரு பரிமாணமாக 1917இல் தொடங்கி, அவர் முன்னெடுத்த பார்ப்பனர் அல்லா தார் நலன் சார்ந்த சமூக நீதி அரசியல் ஆகும். இதனை அவரது இறுதிக்காலம் வரை, தமது கருத்து நிலை யாகக் கொண்டிருந்தார் என்பதை 'குடிஅரசு' இதழில் வெளிவந்துள்ள தமிழர் முன்னேற வழி' (17.5.1936) என்ற அவரது விண்ணப்பம் ஒன்றின் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. 1936 நவம்பர் 18இல் மறைந்த வ.உ.சி. அதே ஆண்டு மே மாதத்தில் செய்துள்ள பதிவு இது. அது பின்வருமாறு அமைகிறது.

"திருச்சியில் 3.5.1936இல் கூடிய பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுக்குத் தூத்துக்குடியிலிருக்கும் தேசாபிமானி வ.உ.சிதம்பரம் பிள்ளை செய்த விண்ணப்பம்... பார்ப் பனரல்லாத சகோதரர்களே! ஜாதி வேற்றுமை, மத வேற்றுமை, கட்சி வேற்றுமை, கோட்பாட்டு வேற் றுமை முதலியவற்றை எல்லாம் விடுத்து, நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பார்ப்பனரல்லாதார்கள் சமூகத்தை முன்னிலைக்கும் நன்னிலைக்கும் கொண்டு வருவீர்களாக” (175: 2006).

'எனது பெருஞ்சொல்' எனும் வ.உ.சியின் சொற்பொழிவை மேற்குறித்த வரலாற்றுப் பின் புலத்தில் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.. வ.உ.சி. காங்கிரஸ் இயக்கத்தினரால் புறக்கணிக்கப்பட்டார் என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் செய்தி. இதற்கான காரணம் வ.உ.சி. கொண்டிருந்த ‘சமூக நீதி' குறித்த கருத்துநிலைதான் என்பதை ம.பொ.சிவ ஞானம் (19061995) அவர்களின் பதிவைக் கீழே கொடுக்கிறேன்.

“பிராமணர் - பிராமணரல்லாதார் என்ற வகுப்பு வாதப் பூசல் விடுதலைப் பாசறையையே பிளவுபடுத்தி விடுமோ என்ற அச்சம் அந்நாளில் வ. உ.சியைப் போன்ற பிராமணரல்லாத தேசபக்தர்களுக்கு இருந் தது. அதனால் நீதிக்கட்சி கோரிய வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத்தைத் தவிர்க்க முடியாத ஒன்றாகக் கருதி வ.உ.சி. அதனை ஆதரித்தார். இதனாற்றான் அன்று தமிழ்நாட்டு காங்கிரசில் முன்னணியில் இருந்த பெருந்தலைவர்கள் வ.உ.சியை - வகுப்புவாதியாகக் கருதும் நிலைமை ஏற்பட்டது. தேசத்துரோகி என்று கூட வருணித்துப் பிரச்சாரம் செய்தனர்” (166: 2006).

வ.உ.சியின் 'எனது பெருஞ்சொல்' எனும் சொற் பொழிவை அச்சிட்டுப் பரப்புரை செய்யும் நண்பர் களைப் பெரிதும் வாழ்த்தி வரவேற்கிறேன். அந்த சொற்பொழிவை, தமிழ்ச் சூழலில் உருவான 'சமூக நீதி' எனும் கருத்துநிலை சார்ந்து புரிந்து கொள்ள எனது இந்தப் பதிவு உதவும் என்று நம்புகிறேன். இந்தப் பதிவைச் செய்ய வாய்ப்பளித்த நண்பர்களுக்கு எனது நன்றி. இந்தப் பதிவை எழுதுவதற்கு எனது பெயரை பரிந்துரை செய்த, வணக்கத்திற்குரிய தோழர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களுக்கும் நன்றியுடையேன்.

சான்றாதார நூல்கள்

1) அரசு. மா.ரா. (தொகுப்பு, (1989) வ.உ.சி. கட்டுரைகள் சென்னை.

2) சம்பத் ஆர். என் மணி. பெ.சு. (1995), நவ பாரதச் சிற்பிகள் - வ.உ. சிதம்பரம் பிள்ளை மொழியாக்கம் பெ.சு.மணி, பப்ளிகேஷன் டிவிஷன், செய்தி ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய அரசு.

3) ஜோதிராவ் புலே (1999). நாகரிகம் படைத்த பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பார்ப்பனியம் என்னும் திரைமறைவில் நிலவும் அடிமைத் தனம், தமிழில்: சிங்கராயர் சவுத் விஷன், சென்னை-2.

4) அரசு, வீ. (தொகுப்பு) (2002), வ.உசி. நூல் திரட்டு (பதின்மூன்று நூல்கள்), புதுமைப்பித்தன் பதிப்பகம், சென்னை -83.

5) கல்யாண சுந்தர முதலியார், திரு. வி. (2003), திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (திரு.வி.க.வின் தன் வரலாறு), பதிப்பு: அ. நாகலிங்கம், பூம்புகார் பதிப்பகம் சென்னை - 108.

6) அருணன் (2006) வ.உ.சி கடைசி காலத்தில் தடம் மாறினாரா? வசந்தம் வெளியீட்டகம், மதுரை.

7) அரசு. வீ. (பதிப்பு) (2013) அத்திப்பாக்கம் அ. வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு, இந்து மதம் - ஆதிக்க ஜாதிகள் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரா கத் தொழிற்பட்ட வரலாறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். சென்னை -98.

நன்றி:

நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம், ஜனவரி 2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக