கோவையைச் சேர்ந்த கு.வெ.கிருஷ்ணசாமி அவர்கள்தான் நமது ஆசான்! மலையாளப் பெருங்கவிஞர் குமரன் ஆசான் அவர்களின் படைப்புகள்மீது தீராக் காதல் கொண்டு, தம் பெயரையே ஆசான் என்று மாற்றிக் கொண்டவர்.
அவர் எழுதிய நூல்கள் மொழி உரிமை, ஜாதி உருவாக்கம், பாவேந்தர், பெரியார், குமரன் ஆசான், ஈழத் தமிழர் உரிமைப் போர்; சாகுமகராஜ், மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம், Gora’s Positive Etheism and firewill, Thiruvalluvar on Learning and Wisdom உள்ளிட்ட நூல்களை உருவாக்கிய சிற்பி!
உலகப் புகழ் பெற்ற அறிவியல் - நாத்திக சிந்தனையாளரான ரிச்சர்ட் டாக்கின்ஸ் அவர்களால் எழுதப்பட்டு உலகையே உலுக்கி எடுத்த நூலான “The God Delusion” என்னும் ஆங்கில நூலை “கடவுள் ஒரு பொய் நம்பிக்கை’’ எனும் தலைப்பில் மிக அரும்பாடுபட்டு, அழகுத் தமிழில் அவர் மொழியாக்கம் செய்தது _- அவருக்குள் அடங்கிக் கிடந்த பேராற்றல் செல்வத்தை உலகுக்கு வெளிப்படுத்தியது. காலம் சொல்லிக் கொண்டேயிருக்கும்; நாத்திக உலகம் இந்த மானுட அருந்தொண்டுக்காக ஒரு முக்கியமான இடத்தை அளித்துக்கொண்டும் இருக்கும்.
அருப்புக்கோட்டை டி.கே. கைலாசம் அறக்கட்டளை சார்பில் அவர் ஆற்றிய உரை ‘மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம்!’ எனும் ஆய்வு நூலாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உரைக்காக “பெரியார் பேருரையாளர்’’ எனும் பட்டம் வழங்கப்பட்டது. நமது Think-Tank ஆசான் என்று நமது ஆசிரியர் குறிப்பிடுவார்கள்.
பத்து ஆண்டு காலமாக பெரியார் திடலிலேயே தங்கி, இயக்க ஏடுகளுக்குக் கட்டுரைகளை வழங்கி, தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு மாணிக்கத் தூணாக ஒளி வீசினார்.
‘விடுதலை’ குழுமத்தின் மூத்த சகோதரராக விளங்கி வழிகாட்டிய அந்த நந்தா விளக்கு, சற்றும் எதிர்பாராத விதமாக திடீர் என்று தன் மூச்சைத் துறந்துவிட்டது இதே நாளில் (22.10.2010) அதுவும் பெரியார் திடலிலேயே!
வாழ்ந்தால் அவர் போல் வாழவேண்டும் என்று ஆசைப் படுவோம்!
- உண்மை இதழ், 16-31.10.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக